Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
பாடல்கள் 76-80 உரையுடன்

தயா விளக்க மாலை

சுவாமி சரவணானந்தா
பாடல்கள் 76-80 உரையுடன்
ஏலமிக் குடைய ஏரலங் கல்லீ
தென்ன நான் இசைக்கிறே னல்ல
ஞாலமே லவர்க்கு நல்லருள் மார்க்க
நாட்டமுண் டாவதற் கென்றே
ஓலமாய்க் கூவு மொருமுறை யீடா
யுரைசெய நேர்ந்தது விதனைச்
சீலமா ரொழுக்கஞ் செகமிசை செழிக்கச்
செய்திடத் தரித்தருள் தேவே. பாடல்.76.
உரை.
நன்மணமும் எழிலும் கொண்ட மாலை என்று இதனை நான் கூற மாட்டேன். ஆனாலும் இது ஒரு கூப்பாடாக இருப்பினும் உலகவர்க்கு அருள் நெறியில் பற்று உண்டாக உரைக்கும் ஒரு முறையீடாக இருக்கலாம். ஆதலின், இதனை அணிந்து கொண்டு, இதன் மூலம் தயாவொழுக்கம் பரவத் தயை புரிவாயாக.
தேவருந் தேடிக் கண்டிலாச் செல்வ
சிறியனே னுள்ளமாந் தளியில்
ஏவருங் காணக் கண்டு கொண்டுள்ளேன்
இனிகலி கடுகியோ டிடவே
மேவருஞ் சுத்த தயாவொழுக்கந்தான்
மேதினி மிசை விரைந் தோங்க
பாவரும் படிச்செய் தாக்குவித் தணிந்து
பண்புறத் திகழ்வையென் பரனே. பாடல்.77
உரை.
எத்தத் தேவராலும் தேடிக் காண்பரிய தயா ஜோதிப் பரம்பொருளை, என் போன்றார் எவரும் காணத் தயை நிறை உள்ளக் கோயிலில் காண்கின்றேன். இவ்வுண்மையை வெளியிட்டு, தயாவொழுக்கத்தை பிறர் உளத்திருந்து ஓங்கச் செய்ய, இந்த அலங்கலைக் கொண்டு நின்னை அலங்கரிக்கின்றேன்.
பண்ணது கொண்டு விசைப்பதற் கான
பாடலீ தல்லவென் றாலும்
மண்ணது மகழ வருமென துரிமை
வள்ளலே யுன்னுடை வரவைக்
கண்ணது காண கருத்தது கனியக்
கருணைசேர் தயாவொழுக் கத்தால்
எண்ணது வற்ற யாவருங் காண
இசைக்குமிம் மாலையேற் பாயே. பாடல்.78.
உரை.
எண்ணற்ற மக்கள் (ஆம் கடவுளைப் பற்றிய எண்ணத் தொடர்பு அற்ற மக்கள்), தயை நிரம்பிய ஒழுக்கத்தால் அக விழிப்புண்டாகி, உன்னைக் கண்டு மகிழச் செய்ய வேண்டும் என்றே இதனை வனைந்து விட்டேன். இது இசைக்கு இசை யாப்பா வென்று தள்ளிவிட வேண்டாம். வள்ளலே, நீ உலகறியத் தோற்றுவதைக் கண்டு உலகம் உய்ய, இதை ஏற்றருள்வாய்.
இசையுடன் பொருந்து மினியசொல் லாலே
இயலுற வமைந்ததன் றெனினும்
நசையுட னிந்த நானிலத் தவர்கள்
நற்றயா வொழுக்கமே நாடி
வசையற வாழ வரந்தரு முனது
வாய்மையை மகிதலத் தெவரும்
விசையுற வுணர்ந்து விழைவுடன் மேவ
மிலைந்தரு ளிதனையுங் கொண்டே. பாடல்.79.
உரை.
இயற்கையாய் பண்ணிறை சொற்களால் ஆன மாலை இதுவல்ல என்றாலும், இச்சையில் வாழ்கின்ற உலகவர் எல்லாம்கூட, தயாவொழுக்கத்தால் மகிழ்ச்சியோடு ஒத்து வாழ வரம் நல்கும். உனது தொடர்பு கொள்ள, இது உதவுமென்றே இதனை வழங்குகின்றேன். விரைந்தேற்று நீயும் வழங்கி வாழ்த்திடுக உலகை.
அருளது தானே யடைவதற் கான
அரும்பொரு ளாகுமென் றிந்த
இருளது செறிந்த இன்னலே நிறைந்த
இல்லுடை யவர்களே யாரும்
மருளது அறவே மகிழ்வொடு கண்டு
மாதயா வொழுக்கமே பூண்டு
பொருளது வான அருளது பொருந்தப்
புணருமிம் மாலையும் பூணே. பாடல்.80.
உரை.
இருள் நிறையுலகில் இன்னலில் களித்துள்ள இல்லறத்தவர்கள் எல்லம் கூட மாதயா வொழுக்கம் பூண்டு, மருளற்று, அருளையே குறிக்கோளாய்க் கொண்டு வாழற்கு இசைப்பாய் என் வாழ்வே. அருளே நமக்குத் தேவையான நற் பொருளும் வாழ்வும் தரும் பரம்பொருள் என்று உலகம் ஏற்று மகிழட்டும்.