Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
61-65 பாடல்கள் உரையுடன்.

தயா விளக்க மாலை
சுவாமி சரவணானந்தா
பாடல்கள் 61-65 உரையுடன்
கொள்ளுடன் எள்ளும் வெடித்திடக் கொதிக்குங்
கொடுஞ்சின முகத்தவர் தம்மை
கள்ளுடன் கவினுங் கருணைவான் மதியின்
கனிந்ததண் முகமுடைய வராய்
எள்ளுடன் நல்ல சர்க்கரைப் பாகும்
இணைந்தபோ லின்மொழி கொண்டு
உள்ளுடன் புறமும் உன்னருள் விளக்க
உவந்தணி மாலையீ தேலே. பாடல்.61.
உரை.
அகமும் புறமும் அருள் ஒளி விளங்க இம் மாலையை நீ ஏற்று அணிந்து கொள்ள வேண்டும். அப்படி நீயே அடியனுள் அருள் தன்மையோடு விளங்கினால்தான், தீப்பொறி பறக்கும் கொடுஞ் சினத்தவரை இன்னமுதத் தண்மதி முகத்தவராய் மாற்றிட முடியும். இனிய எள்ளுருண்டையின் சுவை போன்ற இன்மொழியால் இனிக்கப் பேசிப் பிறர்க்கு அன்பு செய்து இன்பளிக்கக் கூடும் நான்.
ஏலுமோ வெனது வாய்மொழி யிந்த
எறிதிரை யன்னவஞ் சூழ்ந்த
மாலுமோ ருலகில் வாழுநர் களுக்கு
வாதனை யற்றதோர் வாழ்வு
நாலுமோர் மூன்றாம் நலிபிறப் பெல்லாம்
ஞாலமே லொழிந்திட ஞானம்
ஆலுமோர் வடிவு அருளுதற் காக
அணைபவர்க் கலங்கலீ தாமே. பாடல்.62.
உரை.
எறிதிரை அன்னவம். பேரலை வீசுகின்ற கடல் சூழ்ந்த இந்த வையகத்தில், எனது வாய் மொழி எடுபடுமா ? இம் மொழி மாலை, மயக்கிலே வாதனையுற்று அவத்தைப் படுகின்ற மக்களுக்கு, ஞான ஒளி வழங்கி, அருளின்ப வடிவேற்று வாழ்வுறச் செய்தற்காகவே இதனைப் புனைகின்றனன். ஆகையால் இது “ஓ” வாக, அருள் வண்ணமாக ஏற்கப்படும் என்பது, முதற்கண் “ஏலும் ஓ” என அமைந்துள்ளதாம்.
அலங்கலைத் தொடுத்து அருட்கலை யுடுத்து
அன்பொடு நினதருட் டிருமுன்
நலங்கொளும் படிக்கு நண்ணிநிற் கின்றேன்
ஞானநல் லமுதருத் திடுவாய்
புலங்கொளும் பொய்யாம் புன்னெறி பொருந்தி
புலையனாய்ப் புழுங்கினே னையோ
மலங்கலைத் தவிர்த்து மாண்புற வாழ்த்தெம்
மாலையோ டெனையு மேற் பாயே. பாடல்.63.
உரை.
இம் மாலையைப் புனைந்து, அருள் ஒளிக் கலையை அகத்தே அணிந்து, நின் சந்நிதியிலே அன்புடன் நிற்கின்றேன். இதுவரை பொய்ப் புலனிச்சை வழி சென்று சென்று அல்லல் பட்டேன். கலக்கமும். நெறி பிறழலும் ஒழித்து, ஞான நல் அமுதம் ஊட்டி, நல்வாழ்வில் என்னை விளங்கச் செய்ய வேண்டுகின்றேன். இவ் வேண்டுகையுடைய இம்மாலையையும் ஏற்று, பிறரும் கண்டுய்ய தயைபுரி.
ஏற்பது இகழ்ச்சி யென்ற வாசகத்தின்
இயலுறு முண்மைகா ணாமல்
மாற்பெறு மதியால் மயங்கிடு கின்ற
மானிகள் மண்ணிலே வருந்தா
காற்பொது வதிலே காட்டிநின் றாடும்
கடவுளே நின்னைகண் டிங்கே
ஏற்பட வாழ்த்தி ஏர்பெற வாழ
இசைக்கவிம் மாலையு மேற்றே. பாடல்.64.
உரை.
ஏற்பது இகழ்ச்சி, என்று சிலர் கருதி வாழ்வில் அவத்தையுறுகின்றார்கள். யாரிடம் ஏற்பது இகழ்ச்சி என்றால் தயவில்லாத, தானே பிறர்க்கு உதவும் குணமில்லதார் பால் ஏற்பதுதான் - தாழ்வு ஆம். தயாபெரும் பதியாகிய தியாகேசரிடத்து வேண்டுவது இழிவல்ல. அவர், நமக்குத் தம்மையே வழங்கி, நித்தியானந்த வாழ்வில் நிலவச் செய்ய உள்ளவர். இவ்வுண்மை அறியா மனோ மயக்கத்தைப் போக்கி மானிடர்களை வாழ்விக்கவே, இத் தயவு ஆலயப் பொதுவிலே திருநடக் காட்சியை வழங்குகின்றாய். இப்படி விளங்கும் உன்னை, ஏனையோரும் கண்டு ஏற்று அனுபவிக்க இம் மாலையையும் ஏற்றுக் கொள்வாய்.
மேற்றிசை கண்ட வியன்மதிப் பிறையின்
மேவிய வுண்மையா தென்று
நாற்றிசை வாழு நம்மவ ரறிய
நவிலுமென் நல்லுரை கேண்மின்
சாற்றிடுஞ் ஜோதி மதியுடன் கூடி
சரியிரண் டரைதினங் கழியப்
போற்றிடுஞ் சுத்த தயாபதி புணரப்
புரிவரிம் மாலையும் புனைந்தே. பாடல்.65.
உரை.
ஆண்டவர் உண்மையை மக்கள் அறிந்து அருள் இன்ப வாழ்வு பெறவே, புறத்தே ஒவ்வொன்றையும் தோற்றுவித்துள்ளார். அந்தி வானிலே தோற்றும் சந்திரப் பிறை, ஒரு பெரிய அக உண்மையை வழங்குகின்றது. அதனை அந்தி வண்ணப் பொன்னார் மேனியன் சென்னியில், அணி பிறையாகக் கற்பனை செய்தனர். இந்த வான் பிறை அமாவாசையின் இரண்டரை நாளளவில் தோற்றிப் பதின்மூன்றாம் நாளில் நிறைமதியாக விளங்குவதாம். இது சுட்டுவது, நம் தலை நடுவுள் திகழ் பிறை வடிவப் பகர பீடத்தின் மேல் ஒளிர் பதின்மூன்றாகிய “தயா பெருஞ் ஜோதி தனிப் பெருந் தயவு”க் கடவுள் பதின்மூன்றெழுத்து மந்திர உண்மையையுணர்த்துவதாம். இது தேக நிலை. 1. ஜீவ நிலை.1. மேல் ஆன்மக் கடவுணிலை ½ ஆக இரண்டரை நிலைக்குமேல் உண்டாகும், கடவுளின்ப வாழ்வு நிலையாம்.
Content Ref: Dhaya vilakka maalai.
2 Comments
sahasranamam
Thanks for your tremendous work and the devotion.
It is a tribute and service to the Vallal Perumaan and to the people who are in search of true wisdom.
Sunday, June 1, 2008 at 02:51 am by sahasranamam
Ramanujam jam
அன்பர்களின் கருத்துரைக்கு நன்றி.
வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை அடியொற்றி, ஏறாத நிலை மேல் ஏற்றி வைத்த "தயவு" என்னும்
மந்திரச் சொல்லின் அடிப்படையில் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் யாத்த "தயா விளக்க மாலை"ப்
பாக்கள்தான் - அன்பர்கள் கண்ணுறுவதெல்லாம்.
பாடல்களுக்கான சுத்த சன்மார்க்கப் பொருளினையும் - அவர்கள் - உரை நடை விளக்கத்துடன் வெளியிட்டுள்ளதால்,
அதில் சொல்லப்பட்ட மெய்ப் பொருள், அனைவராலும் உய்த்துணரப்பட வேண்டிய ஒன்று.
Sunday, June 1, 2008 at 09:29 am by Ramanujam jam