தயா விளக்க மாலை
சுவாமி சரவணானந்தா
பாடல்கள் 52-55 உரையுடன்
மெய்யுறும் இறவா வியன்முடி வொன்றே
மேதினி யோர்குறிக் கொள்ள
கையுறுங் கருணைக் கனியென வெனக்கு
காட்சிசேர் நல்லனு பவத்தை
செய்யுறத் தருவாய் சேர்ந்தவ ரெவர்க்குஞ்
செந்நிலை யிதுவெனத் தெளிய
ஐயுறல் ஒழித்து அருளறி வளித்து
ஆர்கொளச் செய்திடு வாயே. பாடல்.52.
உரை.
நித்திய சத்திய மெய்ந்நிலையே சிறந்த குறிக்கோள் நிலையாய்க் கொண்டு உலகவர் எல்லாம் அடைய இசைவிப்பாய். இவ்வனுபவத்தை உள்ளங்கை நெல்லிக்கனிபோல இவ்வுலகிலே யான் பெறுவதோடு, சூழ்நரும் ஐயம்திரிபறக் கண்டு கொள்ளவும் கருணை பாலித் தருள்வாய். ‘உள்ளம் கைக்கனி’ என்பது கடவுளான்மாவைக் கண்டு அனுபவப் பொருளாக, வாழ்வாகப் பெறுவதே.
இடுவது சோறு இரப்பவர் தமக்கு
இம்மையே துன்பமு மிறப்பும்
படுவது மில்லாப் பகரொணா னந்த
பரநிலை வாழ்விலே படிந்து
தொடுவதுந் தொட்டு நிற்பவர்க் கென்றுஞ்
சொல்லருந் தூய்மையே நிறைந்த
சுடுவதுந் தண்ணென் றிடுவது மில்லாச்
சுகவுரு வாவதுஞ் சோறே. பாடல்.53.
உரை.
ஜீவ தயவோடு பிறர்க்கு உண்டி வழங்கி, உயிர் விளக்கம் செய்வது சிறந்த செயலாகும். இச் செயலால் முடிந்த முடிவாய்க் கிடைக்கவுள்ளது, சுத்த சுகானந்த முத்தி சித்தி வாழ்வே. சோறு என்பதற்கு, அன்னம் என்றும் முத்தி என்றும் இரு பொருள் இங்கு அமையும். ஆதியில் அன்னமாயிருக்கும் ஆன்மாவுக்கு முடிவில் அன்னம் சுகம்சேர் அஞ்சுகம் என்னும் ஆனந்த வாழ்வு சித்திப்பதாம். இம்மை இப்பிறப்பில்தானே, மிகச் சூடும் குளிர்ச்சியுமில்லா சொல்லரும் ஆனந்த வடிவம், இம்முத்தி சித்தி வடிவம்.
சோறதே பெரும்பே றாமென மதித்துச்
சுகித்திட வுண்டுபின் சோம்பி
சேறதே கிடந்து செவ்விவீண் கழிக்குஞ்
சினைமகி போற்றிளைப் பேனை
மாறதே யில்லா வளப்பெருங் கருணை
வலத்தினி லென்னையே யெடுத்துக்
கூறுதற் கரிய குருவடி வெனக்கே
கொடுத்திதை யணிந்துகொள் வாயே. பாடல்.54.
உரை.
இன்னமும் அபக்குவ வசத்தால் சோற்றாசையால், மிக உண்டி ஏற்றுப்பின், சேற்றிலே புரண்டு கொண்டு கிடக்கும் சூலுற்ற எருமையைப் போல் காலத்தை வீண்போக்கி வருகின்ற அடியேனை, நினது நிறை கருணையால் மேனிலை சேர்த்து, சொல்லரும் தயாகுரு வடிவம் வழங்கி வாழ்விப்பாய். அத்தோடு இம் மாலையையும் நீயே அணிந்து கொண்டு காண்போர்க்கும் கழிபேருவகை வாழ்வருள்வாய்.
இதையணி வதற்கு நினையலா லிந்த
எழிற்பிர பஞ்சமே லெவரும்
கதையினிற்கூட காண்பதற் கில்லை
கருணைசேர் கடிமணங் கொண்ட
சுதைமலர் நீயென் னுளத்திருந் துதவத்
தொடுத்தனன் சுடர்செயிம் மாலை
சிதைவிலா தணிந்து திகழ்ந்திடென் னுள்ளே
சித்தெலாம் வெளிப்படற் கின்றே. பாடல்.55.
உரை.
இம் மாலையை ஏற்று சூடிக் கொள்ளற்கு உனையல்லால் இந்த மாபிரபஞ்சத்தில் யாருமே இல்லை. கற்பனைக் கதைகளிலும் கூட இதற்குரியார் பிறர் இல்லை என்பது உண்மை. நீயே, அருள் மணத்தேன் கமழும் தெய்வ தயாமலரை என் உளத்திருந்தே தருவித்துக் கொடுக்க, யானும் அம்மலர்களையே இப்படி இம்மாலையாய் விளங்கத் தொடுத்துள்ளேன். இது என்றும் சிதைவுறாதிலங்க. நீயே அணிந்து கொண்டு, சித்தி இன்ப வாழ்வு ஓங்கத் துலங்குதல் வேண்டும்.
Content Ref: Dhayavilakka maalai
Write a comment