நெற்றிக்கண்
தயவுத் தலைவர் முன்னுரை.
==============================================
“கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு
கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு” (திரு அருட்பா)
நாம் நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணை ஆசாரியர் அனுக்கிரகத்தால் திறக்கப் பெற்றுக் கொள்வது நலம். நெற்றிக் கண்ணைத் திறக்கப் பெற்றுக் கொண்டவனுக்கு எல்லா அனுபவங்களும் பட்டப்பகல் போல் தெரியும். அவன்தான் சுத்த ஞானி. மேற்படி ஞானி தயவோடு ஒரு பிரேதத்தைப் பார்த்த மாத்திரத்தில், பிரேதம் உயிர் பெற்றெழும். மேலும் ஞானிக்கு ஆன்மாக்களினது அபக்குவ பரிபாகத்தால் சினம் தோன்றினால் உட்னே அந்த ஜீவன் பஸ்பமாகி விடுவான். சுத்த ஞானிக்கு மேற்குறித்த அடையாளங்கள் உள.
இந்த நெற்றிக் கண்ணைத் திறப்பதற்கு ஒரு கதவும் பூட்டும் உளது. மேற்படி பூட்டை அருள் என்கிற திறவுகோலைக் கொண்டு திறக்க வேண்டும். அருள் என்பது ஆன்ம இயற்கையாகிய பெருந்தயவு. நாம் தயா வடிவமானால் மேற்படி அனுபவம் நேரும்.
“ஆன்ம வாசமாகிய இந்தத் தேகமாகிய கிருகத்தில் அருட்பிரகாசமாம் தீபத்தை ஏற்றி வைத்து, மருளாகிய அஞ்ஞான இருளைப் போக்கி, பிராண நஷ்டம் இல்லாது என்றும் ஆனந்த மயமாய் இருக்க வேண்டும்.
- திரு அருட் பிரகாச வள்ளலார் –
சுவாமி சரவணானந்தா அவர்களின் முன்னுரை.
பிறவித் தொடரை நீக்கிக் கொண்டு, நிலையான வடிவில் நிலைத்து நின்றொளிர தேகப் பற்றறவும், ஆன்மப் பற்றுண்டாகவும் வேண்டியுள்ளது. இதற்கு - முதலில் இந்த நெற்றிக் கண்ணைப் பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றதாம்.
நெற்றிக் கண் என்பது உப நயனம், ஞானக்கண், ஆன்மக்கண் என்பர். இது உபயம் (இரண்டு) ஆகிய வலது, இடது கண்களுக்கு இடையில் வெளிப்படவுள்ளதால், மூன்றாம் கண்ணென்றும் மொழியப்படும். நாம் பெற்றுள்ள புறக்கட்புலனால் புற உலகக் காட்சியைக் காணலாம். இக் கண்ணால் காணும் காட்சிப் புலனின்பம், மனதில் பதிந்து நின்று நினைவில் வெளிப்படும் தோறும் மனோ வெளியிலும் தோன்றி மறையும். அருட்செயல் உண்மையும் காணச் செய்வது புருவமத்திய ஞான உணர்ச்சிக் கண் என்னும் உபநயனம். இக் கண்ணே மனிதனுக்கு அபயம் அளித்து ஆனந்தம் அருள்வதாம்.
தயாஞான சோதித் தீபம் சிரநடுச் சிற்றம்பலத்தே ஒளிவிட்டிலங்குகிறது. இதனை, அறிந்து அடைய, இரு கண்ணுக்கு இடையுள்ள லலாடத்தில் ஒருமையுடன் இருந்து, உள்நோக்கிப் பாவித்து சிரநடு உணர்ந்து போற்றிப் பணிதல் வேண்டும். இப்படிப் பணிவதால் “தான்” என்ற போத நாசமுண்டாம். அப்போது அவ்வொளியே தானாகி நிற்கலாம். இப்படி அந்த ஞான தீப மயமாகி நின்று தேகப்பற்றற்று தயானந்தம் வளர் செயல் புரிந்து கொண்டு வாழ்வதே இவ்வுபநயனத்தால் பெறும் பெரும் பயனாகும்.
எல்லா மனிதரும் நெற்றிக்கண் பெற்று தயவுடன் வாழ்க !
- தயா நேயன் சரவணானந்தா –
-
நெற்றிக்கண் கதவு திறக்க விண்ணப்பம்
திருக்கதவம் திறவாயோ திரைகளெல்லாம் தவிர்த்தே
திருவருளாம் பெருஞ்ஜோதித் திருவுருக் காட்டாயோ
உருக்கியமு தூற்றெடுத்தென் உடம்புயிரோ டுளமும்
ஒளிமயமே யாக்குறமெய் உணர்ச்சி யருளாயோ
கருக்கருதாத் தனிவடிவோய் நின்னையென்னுட் கலந்தே
கங்குல்பக லின்றியென்றுங் களித்திடச் செய்யாயோ
செருக்கருதா தவர்க்கருளுஞ் சித்திபுரத் தரசே
சித்தசிகா மணியே என்திருநட நாயகனே
(திருவருட்பா)
நெற்றிக்கண் திறத்தலால் அசுத்த உடம்பு சுத்த உடம்பாதல்
நெற்றிக் கண்ணார் ஜோதியிதை
நேய வுறவு கூட்டிற்றால்
சுற்றித் திகழும் சுமையுருவம்
சுட்ட நீறா கின்றதுவே
கற்றை ஜோதி கற்பூரம்
கமழும் உருவம் இதுவாதல்
எற்றை கையோ என்றிங்கே
ஏங்கி யிருத்தல் தவமேயோ ! (தயவுப்பாக்கள்)
குளக்கண் மலர்ந்த ஜோதி மலர்
குளக்கண் திறந்து நோக்கிட்டு
அளக்க லற்று அதுவாகி
அருளோ டகத்தே யிருக்குங்கால்
துளக்க வுடலை யொழிக்கின்றேன்
ஜோதி யுருவந் தரிக்கின்றேன்
இளைத்த காம னுருவத்தை
எரிக்கும் நுதற்கண் இதுவேயோ ! (தயவுப்பாக்கள்)
3 Comments
=======================================
நாம் நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணை ஆசாரியர் அனுக்கிரகத்தால் திறக்கப் பெற்றுக் கொள்வது நலம்.
நெற்றிக் கண்ணைத் திறக்கப் பெற்றுக் கொண்டவனுக்கு எல்லா அனுபவங்களும் பட்டப்பகல் போல் தெரியும். அவன்தான் சுத்த ஞானி. மேற்படி ஞானி தயவோடு ஒரு பிரேதத்தைப் பார்த்த மாத்திரத்தில், பிரேதம் உயிர் பெற்றெழும். மேலும் ஞானிக்கு ஆன்மாக்களினது அபக்குவ பரிபாகத்தால் சினம் தோன்றினால் உட்னே அந்த ஜீவன் பஸ்பமாகி விடுவான்.
சுத்த ஞானிக்கு மேற்குறித்த அடையாளங்கள் உள.
இந்த நெற்றிக் கண்ணைத் திறப்பதற்கு ஒரு கதவும் பூட்டும் உளது. மேற்படி பூட்டை அருள் என்கிற திறவுகோலைக் கொண்டு திறக்க வேண்டும்.
அருள் என்பது ஆன்ம இயற்கையாகிய பெருந்தயவு.
நாம் தயா வடிவமானால் மேற்படி அனுபவம் நேரும்.
“ஆன்ம வாசமாகிய இந்தத் தேகமாகிய கிருகத்தில் அருட்பிரகாசமாம் தீபத்தை ஏற்றி வைத்து, மருளாகிய அஞ்ஞான இருளைப் போக்கி, பிராண நஷ்டம் இல்லாது என்றும் ஆனந்த மயமாய் இருக்க வேண்டும்.
===================================
Who is our guru(ஆசாரியர்) sir? please explain to us?
anbudan,
karthikeyan
“திருவருளே உண்மைக் குரு”
(சுவாமி சரவணானந்தா அவர்கள் அருளியது).
உண்மைக் குருவாக உள்ளவர், உண்மையில் அகநின்று ஒளிரும் அருள் ஒளி வடிவாய்த் திகழ்கின்றவராய் இருக்க வேண்டும். அப்படி இருப்பவர், தம்மைத் தாமே காட்டிக் கொள்ளார் – விளம்பரப்படுத்திக் கொண்டிருக்க மாட்டார். பெயருக்கும், புகழுக்கும், பொருளுக்குமாகப் பிறருக்கு உபதேசம் பண்ணிக் கொண்டும் இரார். ஆகவே, உண்மைக் குருவிலக்கணம் இதுவென அறிந்து இந்தக் குருவை அடைய தயாவொழுக்கத்தோடு இருந்து சத்விசாரம் செய்தல் முறையாகும். அப்படிச் செய்து வந்தால், திருவருளால் ஞானக்கண் திறக்கும், உண்மைக் குருவைக் கண்டு அடையலாம்.
இக் குருவைத்தான் நம் திருவருட் பிரகாச வள்ளல் கண்டு கொண்டிருந்தார். இவர் எவரையும் நாடிச் செல்லவில்லை. மாறாகப் பலர் இவரை நாடி வந்து தத்தம் அனுபவங்களைக் கூறியும் உண்மையைத் தெரிந்து கொண்டும் சென்றனர்.
- எனவே திருவருளே உண்மைக்குரு -
குருவருள் வேண்டுங் குவலயத் தோங்கி குலவுதற்கு
குருவருள் வேண்டுங் குறைவிலா வாழ்க்கை குறுகுதற்கு
குருவருள் வேண்டுங் குணநலஞ் சேர்ந்த குளபதத்தே
குருவருள் வேண்டும் குருவடி வுற்றுக் குலாவுதற்கே.
(தயவுப்பாக்கள்-குருவிலக்கணம்)
சுவாமி சரவணானந்தா அவர்கள் இயற்றிய தயவுப் பாக்களில், குருவிலக்கணம்
என்ற தலைப்பில் வரும் பாக்கள் உண்மைக் குரு யார் என்பதை விளக்குவனவாக உள்ளன. உதாரணத்திற்கு ஒரு பாடலும், அதன் பொருளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பொருள்
இப் பாடலில் நான்கு முறை குருவருள் என்ற சொல் அமைந்துள்ளது. நான்கு கால் சேர்ந்தால் தான் ஒன்றாகி முழுமை பெறும். புறத்தே குருமார்களைத் தேடி அலைந்து, நாடிப் பணி செய்து பெற்றது என்ன ? அவர்கள். தேக உருவ நிலையிலிருந்து ஆன்ம அருவ நிலை பெற்று, மீண்டும் மறைந்து போயினர். இப்போது இறைவன் மறைவுறாது நிலைத்து விளங்கும் குருவாக – அருட் பிரகாசராக - வந்துள்ளார். தனித்தலைமைப் பெரும்பதி அனாதி நித்தியர். மனிதனும் அருட்பக்குவத்தால் இறைவனது தன்மையைப் பெற்றுவிட்டால், இறைவனைப் போல நித்தியமாக வாழலாம். எத்தனை பேர் அருட்பக்குவமுற்று இறைவனின் தன்மையைப் பெற்றாலும், இறைவனின் உண்மை மாறுவதில்லை, மறைவதில்லை. அவர் சதா - தன் உண்மையை வெளிப்படுத்திக் கொண்டும், செயல் படுத்திக் கொண்டும் உள்ளார்.
இறைவன் தன் சித்துச் செயலால் ஒருவரே பலராகத் தோற்றி விளங்குகின்றார். அக நிலையில் ஏகமாக விளங்கும் இறைவன் புற நிலையில் பலராகத் தோன்றி, மறைந்தவர் – இப்போது மறையாது விளங்க வந்து விட்டுள்ளார். அவரது அருட் சித்துச் செயலால் நிறைவாழ்வு நெடுங்காலம் விளங்க, அருள் பாலிக்கப்படுகின்றது. சுத்த சன்மார்க்கிகள் ஆயிரம் ஆயிரம் பேர் தோன்றினாலும், கடவுள் ஒருவரேதான். அவரது அருட் சித்துச் செயல்கள் தடைபட்டுப் போகாது, என்றும் விளங்கவே கடவுள் சிரநடு இடத்தே தோன்றி விளங்குகின்றார். புறத்தேயிருந்து முயன்று உண்மையை உணர்ந்தவர்கள், அயலாக இருந்து வேண்டியவர்கள், அற்பமாக சக்தி சித்திகளைப் பெற்று முடிவில் மறைந்தே போயினார். வள்ளல் வகுத்த நெறியோ அகமிருந்து அனகமாக வெளிப்பட்டு வாழ்வதே ஆகும். அணு அணு தோறும் ஆண்டவர் உண்மை வெளிப்பட்டு விளங்கினாலும், அருட்பக்குவமுற்ற ஒரு ஆன்மாவில் தான் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்கின்றார்.
அருள் விசாரத்தால் கடவுள் உண்மையை உணர்வது – சத் விசார நிலை. இந்நிலை - இலக்கணம் - ஆகும். தயவு நிலை நின்று வாழும் வாழ்வு - இலக்கியம் - ஆகும்.
சத்திய ஞான சபையில் ஜோதியாகக் கண்ட போது அதிலேயே அடங்கி விடுதல் சரியல்ல. இவனும் அவரோடு பிரிவற இருந்து கொண்டு, வழங்கப்பட்ட இடம், பொருள், ஏவல்களைக் கொண்டு, சதா தயவுச் செயல் புரிந்து வரல் வேண்டும். இக்கருத்தை வள்ளல் பெருமான் அகவல் வரிகளில்,
“உலகெலாம் பரவ என்னுளத்து இருந்தே
அலகிலா ஒளிசெய் அருட்பெருஞ் ஜோதி” என்றார்.
மேலும் திருவருட்பாவில் கீழ்க்கண்டவாறு பாடிவைத்துள்ளார்.
“அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுதங்கே
அனுபவ மாகின்றது என்னடி தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திருவருள் உருவமென்று அறியாயோ மகளே
அருளாலே அருளிறை அருள்கின்ற பொழுதங்கு
அனுபவம் ஆகின்றது என்னடி தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
திருநட இன்பமென்று அறியாயோ மகளே” (திருவருட்பா)
சத்திய ஞான சத்விசாரத்தால், இன்று, கடவுளையும், நம்மையும் ஒன்றாக, இரண்டற்ற நிலையில் கண்டு கொண்டுள்ளோம்.