Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
46-50 பாடல்கள் உரையுடன்

தயா விளக்க மாலை
சுவாமி சரவணானந்தா
46 - 50 பாடல்கள் உரையுடன்
அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை
அருட்பெரு மந்திர மொன்றைத்
தெருட்பெரு மறிவால் சேர்ந்துகொள் வீரேல்
சித்தெலாஞ் சேர்ந்தபே ரின்பப்
பொருட்பெரு வாழ்வு பொருந்திட லாகும்
பொய்யல சத்தியம் புகன்றேன்
இருட்பெரு மாயா விடங்கரை விட்டு
எழில்விளக் கொடுவரு வீரே. பாடல்.46.
உரை.
கடவுளின் சொரூப, ரூப சுபாவத்தையுணர்த்தும் ஓர் அருள் மொழியே உண்மை மந்திரமாகும். அதனை, எவர், தன் உள்ளத்தும், உயிரினும், உடலினும் செயல்படக் கொள்கின்றனரோ அவர்க்கு அம்மந்திரத்தின் பொருளான வாழ்வை வழங்கும். “அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை” மந்திரம் வள்ளலார்க்கு அருட்பிரகாச ஆனந்த வாழ்வை நல்கி உள்ளதாம். இது சத்தியம். நாமும் அந்நிலை பெறலாம். இதற்கு நம் சத்விசாரத்தால், இடங்கர் = முதலை அல்லது குடம் போன்ற ஓங்கார மூளைக்கு மேல் வெளிப்பட்டு தயாதீபச் சுடர்போல் நின்று ஒளிரவும், செயல்புரியவும் வேண்டும்.
வருவது எதுவோ வல்வினைப் பயனால்
வறுமைவந் திடுவதோ வன்றி
மருவது வற்ற வாழ்வுவந் திடுமோ
மற்றெது வருவதோ வென்று
வெருவது தவிர்த்து விரைந்துவந் திடுமின்
வினையினால் மெலிந்திடா மிளிரும்
அருவுரு வாகும் அருளொளி வடிவு
அடைந்திவண் வாழ்ந்திட லாமே. பாடல்.47.
உரை.
வரும் காலம் பற்றி எண்ணிக் கொண்டேயிருக்காமலும், ஊழைக்கருதி உழலாமலும், அச்சமும் ஐயமும் நீக்கிவிட்டு விரைவில் வருக இவ் ஆலயச் சந்நிதிக்கு. இங்கு தயவு பெற்றால் எவ்வினையாலும், பிற எதனாலும் பாதிக்கப்படாத அருவுருவ அருட்ஜோதி வடிவம் பெற்றுய்யலாம். அருவுரு – அருவ அருள் உணர்வு – அகம், உருவப் புறத் தோற்றம் அத்துவித நிலை இது அருள் ஒளி உண்மை.
வாழ்ந்திட வேண்டின் மனத்தவா வறுமின்
மதித்திடற் கரியநல் வாழ்வு
சூழ்ந்திடுந் தானே சுத்தசன் மார்க்கத்
துரையெனக் குரைத்தபே ராணை
ஆழ்ந்திடுங் கடலில் அலையுறு வங்கத்
தலமரு மெனதக வன்பீர்
தாழ்ந்திடுவீரே தலைவணங் குவீரே
தயாபெருஞ் ஜோதியார் தாட்கே. பாடல்.48.
உரை.
மனத்தில் ஆசையொழித்து, அருள் ஒளிமயமாகி நின்றால் நல்லின்ப வாழ்வு தானே சூழும். இது சுத்த சன்மார்க்கப் பதியின் ஆணை. ஆழ்கடலில் அலைபட்டுக் கொண்டிருக்கும் கப்பலைப் போல அவலமுறும் உரிமை அன்பர்களே, தயாபெருஞ் ஜோதித் திருவடிக்கு முன் தலைவணங்கித் தாள் பணிந்து தயாநலம் பெற வாரீர்.
ஜோதியார்ந் திடுநற் சுகவெளி தனிலே
சுத்தமாந் திருவுரு தரித்து
ஆதியுமந்த நிலையெலாம் அருளில்
அணிபெற வுணர்த்திநின் றருளும்
வேதியன் றன்னை விழைவுட னடைமின்
வேதியால் நும்முரு பொன்னாய்ப்
பேதியா தென்றும் பிறங்கிடச் செய்வார்
பிழைபடா திதுவவர் மொழியே. பாடல்.49.
உரை.
அகச் சுகவெளியிலே சுத்தபொன் ஒளியுரு தரித்து, ஆதியந்த உண்மை எல்லாம் உணர்த்தி, அருள்கின்றார் நம்பதி. இவரே உண்மை வேதியன். வேதிக்கும் செயலால், மாற்றறியாத் தங்கமாய் மாற்றியருளும் செய்கையால், நம்மை அருட் பொன் வடிவாய் ஆக்கிட உள்ளார். இச் சுத்த வடிவொடு என்றும் விளங்கிடச் செய்வார். இது நம்பதியின் பிழைபடாத அருள் வாக்கு ஆகும்.
இதுநம தண்ணல் என்னுளே யிருந்து
இசைத்திடு கின்றனர் கேண்மின்
பொதுவிலே யன்று புண்ணியர்க் குரைத்த
பொன்மொழி யாகுமீ தறிமின்
வதுவைசெய் கின்ற நாழிகை யிங்கே
வரைவுடை யிரண்டரை யாகும்
அதுவுனக் குரிய அருண்மண வெல்லை
அகிலமெல் லாமதிப் பதுவே. பாடல்.50.
உரை.
நமது அண்ணலார், அன்றே அம்பலத்தில், புண்ணியர்க்காக உரைத்த வாக்கு, “இரண்டரைக் கடிகையில் திருமணம் கூடும்” என்பதாம். அன்று சொன்ன அவ்வாசகம், இன்று என் போன்றார் உள்ளத்திலும், ஒலியாது ஒளிரச் செய்கின்றதை இங்குறுவோர் கேளாது கேட்கலாம். இதனை இனிவரும் உலகம் மிக மதித்துக் கொள்ளப் போவது நிச்சயம்.
Content Ref: Dhayaa vilakka maalai
rameshponvanan
wonderful & i'am enjoying the meenings from swamy saravananda.
Wednesday, May 21, 2008 at 10:47 am by rameshponvanan