Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
31-35 பாடல்கள் உரையுடன்

தயா விளக்க மாலை
சுவாமி சரவணானந்தா
31 – 35 பாடல்கள் உரையுடன்
செய்தகற் பனைநூல் ஒன்றிலே கூடத்
தெய்வமுந் தெய்வநேர் வழியும்
எய்தலாம் படிக்கண் டிலனிது எவரும்
இனிதறிந் ததுஅத னாலே
நைதலின் றியொரு ஞானநல் லமுத
நல்லுரு நயந்திவண் பெற்று
உய்தலா மிந்த உள்வள ரொளியை
உண்மையி லொன்றிடு வீரே. பாடல்.31.
உரை.
இதுகாறும் வெளியிடப்பட்ட ஒரு நூலிலே கூட உண்மைக் கடவுளையும். அவரை அடையும் நல்வழியையும் கண்டதில்லை. இதனை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்தத் தயா ஞான ஆலயத்தில் உள்வளர் ஒளியைச் சார்ந்து கொள்வீரேயானால், அருள் அமுதம் பெற்று, அழியாதிருந்து கொண்டு இங்கு வாழலாம். இதுவே உய்யும் நெறி.
உண்மையி லுள்ள தொருபொரு ளதுவே
உள்ளிருந் தோங்குவ தறிமின்
எண்மையி லிலங்கு எழிலுரு யாவும்
இந்திர சாலமென் றவற்றில்
பெண்மையா மிச்சை பெரிதுகொண் டுழலேல்
பேசிய வுண்மையி னின்றே
தண்மையோ டிங்கே தயவினில் வாழ்வீர்
சாவையு மொழித்திட லாமே. பாடல்.32.
உரை.
அகத்திலே உண்மையாக உள்ளது தயவு என்னும் ஒரு பொருளே. அதுவே அனகமாக எங்கும் நிறைந்து உள்ளதாம். இதனால், இழிவுடைய புற எழில் தோற்றங்கள் எல்லாம் மாயாசாலம் என உணர்ந்து அவற்றிலே (பெண்மையாம் இச்சை) புலன் அவா கொண்டு உழன்று அவத்தைப்படாது, முன் கூறப்பட்ட உண்மைத் தயவிலே இருந்து வாழ்ந்தால், இறவாமை பெற்று இனிது வாழலாம்.
ஒழித்திட வேண்டு முள்ளொளி யதனை
யொல்லையில் மறைத்தவை யெல்லாம்
கழித்திட வேண்டுங் கற்பனை செய்த
காழ்வினைக் கதைகளை யெல்லாம்
அழித்திட வேண்டு மைம்மலங் களையும்
அருளொளி கொண்டுநின் றிங்கே
பழித்திட வேண்டும் பாழ்நெறி யெவையும்
பாருளோர் பற்றிடா துறவே. பாடல்.33.
உரை.
இங்கு உள்ளொளிர் மெய்ப்பதியை மறைத்துள்ளவற்றை யாவும் விரைவில் ஒழித்து விட வேண்டும். குற்றச் செயலுக்கு ஏதுவான கற்பனைக் கதைகளை எல்லாம் கழித்துத் தீர்க்க வேண்டும். அறியாமையில் சூழ்ந்துள்ள ஐம்மலங்களையும் அழித்துத் தொலைத்திட வேண்டும். தயவருள் ஒளி கொண்டு, பழ நெறிகளின் பிடியினின்று விடுபட்டுய்ய உதவுவாயாக.
துறவறந் தானே தூயதென் றுரைத்துத்
துற்றவை யாவையுந் துறந்து
வறளுற வதங்கி வனமலை களிலே
மறைந்தனர் மறைந்தனர் மண்ணில்
அறமெனப் படுவ தண்ணலார் தமது
அருளென அறிந்திலர் அந்தோ
புறமகம் பொருந்தும் அருளொளி கண்ட
புரையிலா அறம்நல்ல அறமே. பாடல்.34.
உரை.
உண்மையில் அறம் என்கிறார்களே அது என்ன ? (கடவுளின்) இயற்கைத் தன்மை, சுபாவ இயல்பு, தருமம் என்பர். அது அவரது திருவருளேயாம். இவ்வருள் ஒளியே அகம் புறம் எங்கும் நிரம்பியுள்ள கடவுள் அறமாக செயல்பட்டுக் கொண்டுள்ளதாம். இவ்வுண்மையைப் புரிந்து கொள்ளாத, தேகாதி பிரபஞ்சத்தைப் பந்தம் எனக் கருதினோர், திருவருள் வழங்கியுள்ளவற்றைத் துறந்து விட்டு, உயிருடம்பு வாட காட்டிலும் மலைகளிலும் சென்று மறைந்து அப்படியே உலகை விட்டே மறைந்தும் போய்விடுகின்றனர். இதுதான் சிறந்த துறவறமோ ! இல்லை. எங்கும் நிறைந்த அருள் ஒளி கொண்டு வாழ்வதே நல்ல அறநெறியாகும்.
நல்லற மாவதில்லற மென்று
நண்ணுகின் றார்விழி மூடி
பல்லற வீழ்ந்து பதைப்புறு கின்றார்
பயனொரு சிறிதுமே காணாச்
சொல்லறச் சோர்ந்து சொல்லிடாச் செல்வார்
துணைவரைத் துறந்தன ராகி
இல்லற மிதுவோ இறையரு ளில்லத்
தின்னற மிலங்குத லாமே. பாடல்.35.
உரை
இல்லறமே நல்லறம் என்றார் உண்மையை அறிந்தோர். அவர்களின் இல்லம், அருள் ஒளி கொண்ட அகமாகிய ஆன்மாவேயாம். இம்மனை அற வாழ்வுதான் மிகச் சிறந்தது. மற்றபடி ஞானக்கண் திறக்கப் பெறார் ஏற்கும் புற இல்லறப் பிழைப்பில் யாவையும், எவரையும் இழந்து வீண் போகின்றார்கள். உண்மை இல்லறம், ஆன்ம நிலை நின்று வாழ்தலே.
ContentRef: Dhayaa vilakkamalai