Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
Poems

தயா விளக்க மாலை
சுவாமி சரவணானந்தா
26 – 30 பாடல்கள் உரையுடன்
என்னுரை யென்னும் படியுள தெதுவோ
என்னுட லுயிருமற் றெல்லாம்
நின்னதாக் கொண்டு நின்றய வாலே
நிகழ்த்துகின் றாயத னாலே
உன்னுடைத் தயவே என்னுடை யுரையா
யொலித்திடக் கண்டுநிற் கின்றேன்
பொன்னுரை கடந்த பொங்கொளிர் மேனிப்
பொது நடம் போற்றிடப் புரியே. பாடல்.26.
உரை.
எனது என்னும் உடல் பொருள் ஆவி முற்றும் நீயே தயவால் ஏற்றுக் கொண்டுள்ளாய். ஆதலின் என்னுடையது என்று சொல்ல எது இருக்கின்றது ! உனது தயவு தான் எனது சொல்லாக வெளிப்படுகின்றது. இச் சொற்களாலே
உனது பொற்ஜோதித் திருவுருவைத் தயா அம்பலத்தே கண்டு துதித்திட தயவு செய்வாயாக.
போற்றிடற் குன்னை புந்தியில் நினைக்க
பொய்படாத் தயவொடு போந்தாய்
ஏற்றிடற் கெழுந்த என்மன மிளகி
யின்னமு தாயெனுட் பெருகி
சாற்றிடற் கரிய தண்ணரு ளுணர்வை
ததும்பிடச் செய்திட லன்றி
தேற்றிடற் குரிய தேமொழி செப்பத்
தேடினுங் கிடைக்கிற திலையே. பாடல்.27.
உரை.
அப்படித் துதித்திடலாம் என்று எண்ணிய எனது உள்ளத்தில் நீயே உண்மைத் தயவொடு எழுந்தருளியுள்ளாய். இது கண்டு நின்ற சமயம் எனது மனம் நெகிழ்ந்து, இன்னமுத மயமாய் நிறைந்து விடுகின்றது. இந் நிலையில் ஏற்ற சொற்களைத் தேடி வழங்க முயன்றாலும் கூடுதில்லையே ! புகலடைந்து நிற்க நீ தரும் சில மொழி கொண்டு வரைந்து விட்டேன்.
கிடைக்கிற பொருளிற் கேடிலா தெதுவோ
கிளத்தெனக் கேட்பினெம் முடைய
படைக்கிற தொழிலே முதலென வுடைய
பண்புறு மைந்தொழில் முழுதும்
இடைக் குறைவின்றி யெங்கணும் விளங்க
இனிதருள் புரிகிற தயவே
தடைக்குறை யாவுந் தவிர்ப்பதென் றிங்கே
தயாவொளி தனையுறு வீரே. பாடல்.28.
உரை.
இவ்வுலகில் நாம் பெறவேண்டிய சிறந்த பொருள் எது என்று என்னைக் கேட்டால் எல்லாம் வல்ல தயவே ! என்று தான் சொல்லுவேன். இந்தத் தயவு தான் இம் மாபிரபஞ்சத்து யாவையும். ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐஞ்செயலால் பக்குவப்படுத்தி, இனிது அருள் புரிந்து நம்மை வாழ்விப்பதாய் உள்ளதாம். ஆதலின் இதனை (தயவை)ச் சார்வீர்களாக.
உறுவது தயவு உயர்பத மாகும்
உலகியற் பதவிக ளெல்லாம்
பெறுவது பெரிய பேறல வெனவே
பிழைபடாக் கண்டன னுமக்கு
நறுமொழி யாலே நானுரைக் கின்றேன்
நண்ணுமின் நண்ணுமி னிங்கே
அறுபத முரலு மணிபொழில் சூழும்
அம்பலத் தேநிறு வுவனே. பாடல்.29.
உரை
நாம் அடையத்தக்கது தயவு எனும் உயர்நிலை வாழ்வு ஒன்றேயாகும். பிற எதனை அடைவதும் பெரிய காரியம் அல்ல. தயவுதான் சிறந்த பதவியாம் என உண்மையாகக் கண்டு, உலகீரே உரைக்கின்றேன். இங்கு வந்து சேருங்கள். இவ் ஆலயத்தே அன்பர்களின் அறுபத நாத இசை, அல்லது தயாபெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி மந்திர ஒலிச் சூழலில் ஆனந்த முற்றிடலாகும்.
அம்பலத் தாடும் அருட்பெருஞ் ஜோதி
ஆண்டவ ரொருவரே நமது
செம்பொரு ளாகும் தெளிந்துவந் தடைமின்
திருவெலாம் பெற்று வாழ்ந் திடலாம்
எம்பல மாகி எழில்தயா ஜோதி
யெனவிசைந் திவணெழுந் தருளி
தம்பதந் தரவே தனிப்பெருங் கருணை
தனித்தயா ஆணைசெய் தாரே. பாடல்.30.
உரை.
நம் மக்களினம் முழுமைக்கும் உரிய ஆண்டவர், இவ் அம்பலத்தாடும் அருட்பெருஞ்ஜோதியே ஆகும். இந்த உண்மையை உணர்ந்து, இங்கு வந்து சேர்ந்து கொண்டால், அருட்செல்வ முதல் யாவும் அடைந்திடலாம். இங்கு எழில் தயா ஜோதியாய் எழுந்தருளி நம்மைத் தம்பத நிலையில் தயவு மயமாய்த் திகழ ஆணை செய்கின்றார்.
Content Ref: Dhaya vilakka maalai.