Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
16-20 பாடல்கள் உரையுடன்

தயா விளக்க மாலை
சரவணானந்தா
16-20 பாடல்கள்
நிறையொளி நிலவும் நீண்மணிப் பொதுவில்
நேருற நின்றனைக் கண்டே
குறையொளி கொண்ட குளிர்மதி சூடுங்
குருவெனக் கும்பிட லாமே
மறையொளி காட்டா மாநிலைமேலே
மன்னிய வென்னுடை மன்னே
கறையொளி கண்டங் கருணையின் குறியாய்க்
கருத்துறக் கண்டு கொண்டேனே. பாடல்.16.
உரை
உண்மையில் தயாஜோதி மயமாய் விளங்குவது நமது தயவு ஆலயமே ! இங்கு நம் எதிரில் காண்பது நம் தயா ஒளிப் பரம்பொருளே ! இதனை முன்னர் குறைமதி (பிறை) சூடிய (சிவ) குருவாகக் கொண்டு வணங்கினதுண்டு. வேதாகம அறிவுக்கு எட்டாத இம் மேனிலையில் விளங்கும் இந்நித்திய ஜோதியே கருணை கடவுளின் (நீலகண்டத்தின்) கற்பனையாகக் காண்கின்றேன்.
கண்டதுன் அருளே கொண்டதுன் தயவே
களிபெறக் கலந்துநிற் பதுதான்
தொண்டதுன் அடிக்குச் சூழ்ந்துநான் புரியத்
துணிந்தனன் துணிந்தவென் றனக்கு
பண்டதுன் னடியார்ப் பாங்கரிற் சேர்த்து
பரிவுடன் பழகிடச் செய்க
கொண்டதுன் பணியே கோரிநிற் கின்றேன்
குறைவிலாக் குணமலை மிசையே. பாடல்.17.
உரை
தயாகுணமே நிலையான ஒரு மலையாக இருக்கின்றது. அதன் மேல் நிற்கின்றேன் இப்போது. இந்நிலையுற்றிருப்பது உன் திருவருளாலே. அதுவே தயவு ஆக சூழப் பெற்றுள்ளேன். இங்கிருந்த வண்ணம் அனகமாகவே ஆருயிர்கட்கு அன்பு செய்து இன்பளிக்க வேண்டுகின்றேன். இந்த அனகானந்த வாழ்விலே என்றும் தழைத்திடச் செய்வாயாக.
மலைமிசை யொளிரும் மாசறு மணியே
மாலிலா மனத்தவர்க்(கு) ஆலின்
இலைமிசை துயின்று இன்னருட் சுகமி`
தியல் பெறக் காண்கவென் றிசைத்தாய்
அலைமிசை யலரும் அலர்மிசை அமரும்
அயனுரு வாய்அறி வருளித்
தலைமிசை தயவுத் தனிப்பெரு முடியை
தரித்தனை தலைவவென் றனக்கே பாடல் 18.
உரை
அக அண்ணாமலை மேலே மிளிர்கின்றது மாசற்ற தயாபெருஞ் ஜோதி. மால் இல்லா, மாயா மயக்க உணர்ச்சி இல்லாதவர்க்கு மேற்படி ஒளிக்காட்சியையே, ஆலிலை மேல் பள்ளி கொண்டு, சுக நித்திரையில் இருக்கும் திருமாலாக உணர்த்திற்றாம். மேலும் அவ்வொளியை, நீர் அலையின் மேல் மலர்ந்த, மலரின் மேல் அமர்ந்த பிரமனும் ஆவன் என உணர்த்தினாய். அவை எல்லாம் இப்போது தயவு என்னும் ஒரு திருமுடியாக எனக்கே அணிவித்துள்ளாய்.
தரித்தனை யெனக்கு நின்னருட் பெயரே
தனித்தற் யெப்பெயர் தாமும்
பிரித்தனை யாகில் எம்மருட் பெயரே
பீடுறக் காட்டியே பிறங்கும்
விரித்தெனைக் கண்டு விரைந்தெனைக் கொண்டு
விளங்குக விளக்குக வென்றாய்
வரித்தெனைக் கொள்வாய் வள்ளலே யென்றேன்
வந்தனை வந்தனம் நினக்கே. பாடல்.19.
உரை.
நின் உண்மை அருள் ஒளியே நானாகி விரிந்துள்ளேன் இங்கு. இதனால், என்போன்றோர்க்கிடும் பெயர் ஒவ்வொன்றும், அப் பதியுண்மையையே குறிக்கும் என அறிகின்றேன். ஆகவே புற உடம்பு உயிர் நிலைகளைக் கடந்து உள்ளூற நோக்கினால் விளங்குவது கடவுள் உண்மை ஒன்றேயாய்க் காண்பாய் என்கின்றார். அப்படிக் கண்டு கலந்து கொள்வாய் என நின்ற போது, முன் தோன்றினாய் – வணக்கம் நினக்கு.
வந்தனம் என்று வந்தெனுட் புகுந்து
மாயம தாகினை மன்னே
மந்தணப் பொருளாய் மறைந்துநின் றிங்கே
மறுகிடச் செய்வது மழகோ
அந்தணர் பரவ அந்தழன் மேனி
அன்றுகொண் டாயிது தருணம்
உந்தனல் லருட்பே ரொளியுரு வென்னில்
ஒருதய வாய்வெளிப் படுத்தே. பாடல்.20.
உரை.
இதோ வந்தேன் எனச் சொல்லி நெருங்கி வந்து நீ என்னுட் புகுந்து மறைந்து விட்டாயே ! இப்படி மறை பொருளாய் இருந்து கொண்டு என்னை வருந்தச் செய்தல் சரியா ! உள்ளத்தில் அன்புடையோர் அந்தணர். அவர்கள் தொழுதேத்திட முன்பு செந்தழல் வண்ண சிவஜோதியாய்த் தோற்றினாயே. ஆகையால், இது சமயம் நின் பேரருளால் உனது ஒளியுருவை ஒரு தயவுச் சுடர் வண்ணமாய் என்னில் எவரும் கண்டு கொள்ள வெளிப்படுத்துவாயாக.
Content Ref: Dhayaa vilakka maalai