தயா விளக்க மாலை முதற் பதிப்பு
சுத்த சன்மார்க்கம்
(ஒரு குறிப்பு)
சரவணானந்தா
ஆண்டு - 1978
சுத்த சன்மார்க்கம் என்பது நம் தயவு நெறியே. இது. பிற எந்த மார்க்கத்தைப் போன்ற, இதுவரை உலகம் அறிந்து, ஓரளவுப் பயன் அடைந்து முடிவில் ஒழிந்து போன, வாழ்வில் நிலவச் செய்யாது மறைந்த ஒன்றல்லவாம். இதில் பெறப்படுவது, மரணமில்லா நித்திய இன்ப வாழ்வுதான், இதற்குச் சிறப்பு வழங்குவதாம். ஆகையால் இது ஓர் அரிய பெரிய புது நெறி முறையாம். இதனைப் பற்றி, ஒரு தெளிவு உரை ஈண்டு விளக்குவது பொருந்தும்.
சுத்த சன்மார்க்கம் – சொற்பொருள் விளக்கம்
மார்க்கம் என்றால் வழி, நெறி, மூலம் முதலியனவாம். சத்துமார்க்கம்தான் சன்மார்க்கம் எனப்படுவது. சத்தாவது. நித்தியமாக, அழிவற்று, நிலைத்த ஆதாரப் பொருளாய் உள்ள ஒன்றாம். ஆகையால், இச் சத்தாகிய சன்மார்க்கம், நித்திய பரம்பொருள் வண்ணமானது என்றால், இதனால் மனிதன் நித்தியத்துவம் அடைந்து வாழ்வதாய் இருக்க வேண்டும் அல்லவா? அப்படி வாழ வைப்பது, உலகறிந்த பழ நெறி எது ஒன்றுமாய் இல்லை. அவற்றின் வழி போனோர் காண்பரிய சத்தில் மறைந்துதான் போய்விட்டார்கள்.
மறையாது, சத்து அகம் கொண்டு வாழ வைக்க வந்துள்ள ஒன்று சுத்த சன்மார்க்கம் ஆம். இது, சுத்தம் என்ற ஒரு சொல்லால் வழங்க வந்துள்ளது. சுத்தம். தூய்மை, மாசின்மை எல்லாம் ஆண்டவர் அருளேயாம். அந்த நித்திய சத்தாம் பரம்பொருள். இந்த அருளாலே தான் என்றென்றும் அகமிருந்த வண்ணம் அனகமாக யாவையும் விளங்கச் செய்து கொண்டேயுள்ளதாம். இதனால் இச் சுத்த சன்மார்க்கம், சத்துண்மை நிலையில் இருந்து அருள் அல்லது தயா இயல் வண்ணமாய், உலகிடை வாழ வகை செய்யவே வந்துள்ளதாம். இப்போது அந்த சத்பரம் பொருள்தான் அருள் ஒளிச் சிற்றணுவாகிய, கடவுள் ஆன்ம வடிவாய் நம் தலை நடுவுள் இருந்து உதவுகின்றதைத் திருவருளாலே உணர்த்தப் பெறுகின்றோம். இதனால், தயவோடு, அருள் செயலோடு அகநிலை நின்று அனகமாக வாழ்வதுதான் அழியா இன்ப நிறை வாழ்வுக்கு வழியாக அறிகின்றோம். அந்த அருளகமிருந்து வாழும் அனக நெறிதான் சுத்த சன்மார்க்கம் என்பது தெளிவு.
உள்ளிருந்து அருளால் வாழ்வதே வாழும் நெறியாய் இருக்க, புறமிருந்து, இறை நிலைக்கு அயலாயிருந்து. அவ்விறை நிலையை அடைய எண்ணிப் புறச் செயலற்றுச் சென்றதே அழிந்து ஒழிந்து போகக் காரணமாயிற்று என அறிகின்றோம். உண்மையில் அந்த அருள் இறைதானே நாம் என்றும். நமது என்றும் விளங்குகின்றதை அறியாமலே இருந்து வந்துள்ளோம் இதுகாறும். அதனால், இறைநிலை அடையச் சென்று வாழ்வற்றுப் போனோம். இப்போது உண்மை உள்ளபடி விளங்குகின்றது. தேக போகப் பற்றற்று, உண்ணின்று வாழ்வதால் அழியாதிலங்கக் கூடியதாய் இருக்கின்றதாம்.
தயவு
சுத்த சன்மார்க்கம் அனக நெறியை இலேசாக அறிந்து செயல்படக் கொண்டு வாழ உதவ வந்துள்ளது இந்தத் “தயவு” என்னும் ஒரு சிறந்த உண்மை நிறைந்த, மந்திரச் சொல்லாக இருக்கின்றது. இதன் மூலம் நாம் தலை நடுச் சோதியில் “தய” எனத் தங்கியிருந்து கொண்டு, வு-கர ஐஞ்சக்தி அருட்கரங்களை, ஐம் பொறி புலன் வழியாய்ச் செயல்படுத்திப் பரோபகரித்துக் கொண்டே வாழ்வோம். இதுதான் தயவு வாழ்வு, சுத்த சன்மார்க்க வாழ்க்கை முறை.
முன் சமய மத சன்மார்க்கங்களில், தீட்சை, உபதேசம் முதலிய சம்பிரதாயங்களால் பெற்ற எதுவும் - மனிதனை இறை இன்ப வாழ்வில் நிலவச் செய்யவில்லை என்பதை நாம் அறிவோம். இத் தருணம் இச் சுத்த சன்மார்க்க அனக நெறியில், ஒருவன் முதல் முதலில் பெறுவது, சத்விசார தயாவொழுக்கத்தால். சிரநடு தயாவொளியில் ஒன்றி, அதுவாகி நிற்பது தான். இவனே சுத்த நெறிக்கு உகந்தவன் ஆவான். இது மந்திர தந்திர உபாயச் சடங்கு முறையால் வருவதன்று. ஒருமையுடன் கூடிய நல்லொழுக்கப் பழக்கத்தால் மட்டுமே வருவது இந்நிலை. இப்படி இவ்வக நிலை பொருந்தி, உ-கர பரோபகாரச் செயலைப் புரிந்து கொண்டிருப்பது இரண்டாம் நிலையாகவும். இறவா இன்ப வாழ்வு நிலையாகவும்., நாளடைவில் அடையப் பெறுவான் எந்த ஒரு சுத்த சன்மார்க்கியும்.
இந்தத் தயா சுத்த சன்மார்க்கத்தை வழங்கவே “தயவுப் பாக்கள்” பலவும் உள்ளிருந்து பெருகி வந்து கொண்டேயுள்ளன. உலகவர் எல்லாம் இவ்வுண்மையை அறிந்து உளம் கொண்டு உலவா இன்ப வாழ்வில் தழைப்பார்களாக.
Write a comment