தயவுப் பாக்கள்
(மகோபதேசத்தில் கூறியுள்ள “தயவு” என்னும் சொல்லின் அடிப்படையில் எழுந்தவை)
சுவாமி சரவணானந்தா.
முன்னுரை வழங்கிய நாள் 14.8.1983.
தயவு என்ற சொல் பலரும் அறிந்ததும். பழக்கத்தில் இருக்கின்றதுமாம். கடவுள் இயல் உண்மையைக் குறிக்கும் இச் சொல்லுக்கு. அருள், கருணை, அன்பு, இரக்கம் முதலிய பொருள்தான் வழக்கத்தில் உள்ளது. ஆனால். இதன் இயற்கையுண்மை நிலையும். இயற்கை விளக்க இயல்பும், இயற்கை இன்ப அனுபவப் பேறும் மிகமிகப் பொருத்தமாய் அமைந்திருப்பதைத் திருவருளாலே இத்தருணம் காண்கின்றோம்.
கடவுள் உண்மையை வழங்க வந்த பலவாகிய காரண கற்பனைச் சொற்களிலே, நம் வள்ளற்பெருமான் அருளியுள்ள “அருட்பெருஞ்ஜோதி” சிறந்த ஒன்றாய் எவர்க்கும் நல் இன்ப வாழ்வுக்கு உதவுவதாய் உள்ளதாம். இதன் உண்மை விளக்கம், இது அனாதி இயற்கையாய் எல்லாம் வல்லதாய் தோற்றரிதாய் விளங்கும் பேரருட்பெருஞ்ஜோதி நிலையாகும். இந்த அருள் ஒளி அகநின்று செயல்படுத்துகின்ற ஒப்பற்ற ஒரு பெரும் அருட்சக்தியால் புறத்தே மாபிரபஞ்சக் காரியங்கள் எல்லாம் இடையறாது நடந்து கொண்டேயுள்ளனவாம். இதனால் விளையவுள்ளது இறை இன்ப நித்தியானந்த வாழ்வேயாகும்.
தோற்றமும், மாற்றமும், மறைவும் உள்ள புற நிலையிலிருந்து அழியா இன்ப வாழ்வு பெறல் அரிதாகும். நித்திய நிலையான அகத்திருந்து தயவைப் பெருக்கிக் கொண்டு அருளியல் வாழ்வு மேற்கொண்டால், அழியா இன்ப வாழ்வில் தழைத்திடலாம் என்பது அருட்பிரகாச வள்ளலார் அனுபவம். இப்படி அகமிருந்தோங்கும் அருட்பேரின்ப வாழ்வுக்கு இன்று இத்தயவு திருவருளால் வெளியாக்கப் பெற்றுள்ளது.
அகம், புறம் எங்கும் நிறைந்த ஒன்றாகிய “அருட்பெருஞ்ஜோதி” ஆண்டவர் உண்மையை உணர்த்துகின்றது இத் தயவு என்ற ஒரு சொல். முதலில் இதன் நிறையுண்மையைக் கண்டு தெளிவோம். ஆறறிவுக்கு அப்பாற்பட்டு விளங்கும் அளப்பரிய அகல்வான் நிறைவடிவம், நம் அருட்பேரிறை வடிவமாகும் என்றும், அது தகர ஆகாசப் பேருரு என்றும் தமிழ் மெய்ந்நிலை கண்டார் குறித்துள்ளனர். ஆகவே ‘த’ கடவுட் பேரொளிப் பெருவுருவம் எனலாம். அந்த இறை அனுபவம் வழங்கப் படற்கென்றே அக்கடவுள் தானே, ஓர் ஆன்ம சிற்றுரு வடிவமாய், இம் மனித பிறப்புருவின் தலைநடு திகழ் சிதாகாச அல்லது தகராகாச வெளியில் தய என வெளிப்பட்டு விளங்குகின்றார். இத்தயா நிலை நின்றே, உயிர், உணர்வு, உடல் கொண்டு சூழ் உலகில் வாழ்ந்து மனித வாழ்வில் நித்தியானந்த அனுபவம் பெற அக்கடவுள் இத் தோற்றங் கொண்டுள்ளார். அகத்தின் தொடர்பாக விரிந்து சூழ்ந்துள்ள ஐந்தியல் பிரபஞ்சக் காரியப்பாடுகளைக் குறிக்கவே, ‘தய’ வுடன் வகர மெய்யுடன் கூடிய உகரம் சேர்த்து தயவு இரண்டற்ற ஒரு சொல்லாய்க் கொள்ளப்பட்டது.
சத்திய ஞான விசாரத்தால் அருட்பெருஞ்ஜோதியைக் கண்டு, கலந்து, நிற்க உபாயம் செய்யப்பட்டுள்ளது. அது அருள் உடல், உயிர் உள்ளொளி நிலையிற் சேர்ப்பது. அங்கிருந்து தயவு செயல்படுவது. நம் தயவு ஆலயத்து பரோபகார செயல் முறையாகும். வள்ளற் பெருமானின் திருவருட்பாவின் உள்ளுறை பொருளைக் கண்டு. அகநின்று அனகமாக வாழ ஒரு துணைக் கருவியாய் அமைவதே இத்தயவுப் பாக்கள். அருட்பிரகாச திரிதேக சித்திக்கு “தயவு’ தான் உதவியுள்ளது என்பதை அவர்தம் வாக்காலே உணர்கின்றோம்.
தயவு ஒளி கொண்டு வாழும் முறை
அருட்பெருஞ்ஜோதியின் உண்மை நம் அனுபவத்தின் பொருட்டு ஒவ்வொரு பக்குவ ஆன்மாவிலிருந்து வெளிப்படவுள்ளது. உண்மையில் ஒன்றான கடவுளே தனித்தனி ஓர் ஒரு ஆன்ம சிற்றுருவம் கொண்டு பலவாய்த் தோற்றுகின்றார். இப்படித்தான் பேரம்பலத்தும். சிற்றம்பலத்தும். ஏகமாய் அநேகமாய் விளங்கல், நம் அனுபவத்திற்கேயாம். சிற்சபையில் கடவுட் காட்சியைக் கண்டு மகிழ்வுற்று அதிலே அமிழ்ந்து போவதே அன்று முடிவாகக் கருதப்பட்டது. அம்முடிவு வாழ்வல்ல, முடிவுமல்ல. ஏனென்றால் அது நம் இறை இயல்நிலையே. தேக நிலையினின்று சென்று அடையக் கருதியதே அபக்குவ மயக்க நிலையே ஆம். ஆகவே அந்நிலைநின்றே தயானந்தமாய் வாழ்ந்து கொண்டிருப்பதே ஓர் ஆன்மாவுக்கு அந்தமிலா ஆனந்தமாகும்.
மேற்படி அனக சுத்த சன்மார்க்க உண்மை எல்லாம் சிறிது சிறிதாக நாற்பது ஆண்டுகளாக வள்ளல் ஒளியை உள்ளங் கொண்டு பலவகை செய்யுள் வெளியிடற்கு எனைக் கருவியாய்க் கொண்டது அருட்பெருந்தயவு. அப்படி வெளியான முதல் தயவுப்பா, தயாவிளக்க மாலையின் முதற் செய்யுளாக அமைந்தது. அம்மாலை 100 பாக்கொண்டு அந்தாதி முறையில் 1942ல் எழுதப் பெற்றது. இத் தயா விளக்க மாலைதான் 1978ல் வள்ளலார் வெள்ளணி விழாவின் போது சிற்றுரை விளக்கத்துடன் சின்மயபுரம் தயவு ஆலயத்தில் வெளியிடப் பெற்றுள்ளது. இவ்வாலயம் அன்று அகத்தேயுணர்ந்து ஓதப்பெற்ற பாசுரங்கட்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளதை இன்று கண்டு கண்டு வியக்கின்றோம்.
1943 ஆகஸ்டு திங்கள் முதல் நாள் சுபானு ஆண்டு ஆடி மாதம் 17ம் தேதி. ஆடி அமாவாசை தினத்தே கடக நடுப் பூசத்தொருபாதத்தில் சூரியன். குரு, சந்திரன் இணைந்து விளங்கினது. இவ் அண்டக் காட்சிக்கு ஒப்ப நம் பிண்ட தலை நடுக் காற்குளமாம் பூசத்தும். சுத்த. பிரணவ. ஞான தேக அடையாளம் வெளிப்பட்டது. இந் நிகழ்வு, முன்னோர் எதிர்பார்த்திருந்த கலி முடியும் காலமாகும். இச் சம்பவம். நம் வள்ளல் மூலம். மரணமில்லாப் பேரின்ப. திரிதேக சித்திக் குறிப்பாக ஏற்பட்டு விட்டதாம். இதனால், அந்த பழையதாகிய கலிமுதலாம் சதுர்யுகக் கணக்கு இனித் தொடரா வண்ணம் ஆணை பெறப்பட்டுள்ளது. இனி எப்போதும் அளவு கடந்த நெடுங்காலம் சுத்த சன்மார்க்கமே தழைத்தோங்கும் என திருவருளால் உணர்த்தப் பெறுகின்றோம்.
இத் தயா ஜோதிபதியின் தூண்டலால் அருள் ஆணைப்படி தயவுப் பாக்கள் பல தொடர்ந்து ஆக்கப் பெற்றன. அந்த செய்யுள்களின் தொகுப்பில் ஒரு பகுதி நம் சன்மார்க்க சீலர் திருநிறை நா.மகாலிங்கம் அவர்களின் விழைவுப்படி ஒரு நூலாக இப்போது வெளியாக்கப் பெறுகின்றது.
இதற்கு முன் அருட்பெருஞ்ஜோதி அகவல், அருள்விளக்க மாலை, நடராஜபதி மாலை, ஞான சரியை, திருவடிப் புகழ்ச்சி, திருப்பள்ளி எழுச்சி. அட்டகம், இங்கிதமாலை இவைகளுக்கு விளக்க உரையும் சத்திய ஞானசபை, வள்ளலார் கண்ட ஒருமை வாழ்வு, தனித்தலைமைப் பெருங்கடவுள். மாயை, அருளறிவியல் முதலிய உரைநடை நூல்களும் தயாபதியின் திருவுளப்படி, அச்சிடப் பெற்று வெளியாக்கப் பெற்றன. மற்றும் உள்ள உரைநடை நூல்களும் கூட்டி வைக்கும் பொழுது வெளியிடப்பெறும்.
தயவின் மூலம் புதிய நெறியாம் வள்ளல் சன்மார்க்கம் நன்கு உலகமெங்கும் தழைக்கும் என்பது உண்மை. பலநெறிகளில் உள்ளீடாய் மறைந்து இருக்கின்ற ஒன்றான உண்மையை வெளியாக்குகின்றது இத்தயவு விளக்கம். இதனால் முன்னோர் முடிந்த குறிக்கோளையும் அதற்கும் மேற்பட்ட எல்லோர்க்கும் பெருநலம் பயக்கும் பேரின்ப வாழ்வையும் இவ்வுலகுக்கு கொண்டு வருவது இத்தயா நெறிமுறை ஒன்றேயாகும்.
தயவே கடவுள் பெருவடிவமும். மனிதனில் தலைநடுசிற்ஜோதி வடிவமும் ஆம். இச்சிற்றொளியினின்றே தகரஞான விளக்கமும். யகர உயிர் விளக்கமும். வுகர உடற்செயல் விளக்கமும் கொண்டதாய் தயா இன்ப வாழ்வில் சிற்சபை, பொற்சபையுடன் திகழவைப்பதாகும். அருட்பெருஞ்ஜோதி கடவுள் அனுபவம் பெற உதவுவது இத் தயவுப் பாக்கள். எல்லோருக்கும் பொதுவானது. சமய மதங்களின் முதலுக்கும் முதலாய், முடிவுக்கும் முடிவாய் மக்கள் சமுதாயம் முழுமைக்கும் நல்லின்ப வாழ்வு பெறச் செய்வதாயுள்ளது இத் தயவு.
ஓங்குக தயவு உலகெங்கும்.
இராமலிங்க வள்ளலார்க்கு இறவாமை நல்கிய ஏன்ற ஒரு மொழி தயவே ஆம்
இது பெருமானின் சிறு போதே வெளியான இங்கிதமாலை 55-வது செய்யுளில் இங்கிதமாகவே குறிக்கப் பெற்றுள்ளதை இச் சமயம், அம்மாலைக்கு வெளியிடப் பெற்ற அருள் உரை நூலில் காணலாம். அச் செய்யுள் இதோ –
வான்தோய் பொழில்சூழ் ஒற்றியுள்ளீர்
வருந்தா தணைவே னோவென்றேன்
ஊன்தோய் உடற்கென் றார்தெரிய
உரைப்பீர் என்றேன் ஓஇதுதான்
சான்றோர் உமது மரபுஓர்ந்து
தரித்த பேர்க்குத் தகாதென்றே
ஏன்றோர் மொழிதந் தருள்கின்றார்
இதுதான் சேடி என்னேடீ
இதன் இங்கித உண்மையை சென்ற ஆண்டு தைப்பூச நாளில் வெளியிடப் பெறுள்ள “இங்கித மாலை அருள் உரை” நூலில் கண்டு கொள்ளலாம். ஏற்றிங்கிதம் உறுவீர்களாக.
14.8.1983
திண்டுக்கல்
Write a comment