Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
திருப்பள்ளி எழுச்சி-(மாணிக்கவாசகரின் திருப்பள்ளி எழுச்சி)

திருப்பள்ளி எழுச்சி.
சுவாமி சரவணானந்தா.
முன்னுரை.
மாணிக்கவாசகரின் திருப்பள்ளி எழுச்சி.
வெளியே நாம் காண்பது பூத ஆகாயம். நம் சிரநடுவில் இருப்பது பரம ஆகாயம்.
இங்குள்ள திருச்சிற்றம்பலத்தின் அருள் அகநிலை அனுபவத்தை மாணிக்கவாசகர் சொல்கிறார்.
இந்த அருள் வாசகமே திருவாசகம். திருவாசகத்தின் பொருள் ஒவ்வொருவரும் அவரவர் பெறுகின்ற அருள் அக அனுபவத்துக்கு ஏற்ப விளங்குகிறது.
அருள் அகவிழிப்பை உண்டுபண்ணுவதுதான் மாணிக்க வாசகரின் திருப்பள்ளியெழுச்சி.
மாணிக்கவாசகரின் திருப்பள்ளி எழுச்சிப் பதிகத்தின் பொருளை விளங்கிக் கொள்வதற்கு வள்ளல் பெருமானின் அருள் அக அனுபவம் உதவி செய்கிறது. அதுதான் சுத்த சன்மார்க்க ஜோதி.
இந்த ஜோதியின் உதயத்தில் திருவாசகத் திருப்பள்ளி எழுச்சியின் கற்பனை வளத்துக்குள் சிக்குண்டிருக்கும் இறைவனைக் காண முடிகிறது.
திருப்பள்ளியெழுச்சி பாடிய இடம் திருப்பெருந்துறை. இது தஞ்சை மாவட்டத்தில் இருக்கிறது. இப்போது அதன் பெயர் ஆவுடையார் கோயில்.
இங்குதான், ஆளுடைய அடிகளான திருவாதவூரர், குருந்த மரத்தடியில் குருவாகத் தோன்றிய இறைவனால் ஆட்கொள்ளப் பட்டார். இது புற உலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி. அருட்பெரும் கடவுள் தான் ஒவ்வொருவர் உள்ளே இருந்து ஒவ்வொன்றையும் உலகில் நடத்தி வருகிறார்.
எனவே எந்த ஒரு முக்கிய நிகழ்ச்சிக்கும் உள்ளே இருக்கும் இறைவனின் அருள் தொடர்பு நிச்சயமாக உண்டு. அருட் பெரியவர்கள் மூலமாக வெளியாகும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் காரணம் அவர்கள் உள்ளே இருந்து செயல்படும் இறைவனின் திருவருளே.
அருளாளர்களால் குறிக்கப்பட்ட எந்த ஒரு நிகழ்ச்சியும் வெளி உலகிலும் நிகழ்ந்திருக்கலாம். அவர்கள் உள்ளமாகிய அகவுலகிலும் நிகழ்ந்திருக்கலாம். எதற்கும் அடிப்படை இறைவனின் திருவருளே.
திருப்பெருந்துறையும் அந்த குருந்த மரத்தடியில் குருவாக வந்த இறைவனிடம் தீட்சை பெற்ற திருவாதவூரரும் அவர் பாடிய திருப்பள்ளி எழுச்சியும், அருள் அக அனுபவத்திற்கு ஆக்கம் தருபவை.
இந்த அருள் அக அனுபவத்தையே “நாடும் பெருந்துறை நான் கண்டு கொண்டபின் கூடும் சிவனது கொய்மலர் சேவடி” எனக் குறிப்பிடுகிறார் சன்மார்க்கத்துக்கு வித்திட்ட ஞானியான திருமூலர்.
திருப்பெருந்துறை என்பது நம் சிரநடுவிலிருக்கும் கடவுட் ஜோதி நிலையம். இதை பிரமரந்திர பெருவெளி என ஞான யோகிகள் சொல்வார்கள்.
இங்குள்ள ஆன்ம பீடத்தில் உருவத்துடன் கூடிய பூத லிங்கம் இல்லை. ஆன்ம நாதரே அருவமாக இருக்கிறார். இந்த உண்மையைக் குறிக்கவே ஆவுடையார் கோவிலில் லிங்கத்தின் பீடமான ஆவுடை மட்டுமே அமைத்திருக்கின்றனர். அதன் மீது லிங்கம் அமைக்கப்படவில்லை.
ஒவ்வொருவருடைய உயிருக்குள்ளும் உயிராக இருப்பவன் இறைவன். அவர், ஒவ்வொருவர் அகத்திலும் மறைந்து இருக்கிறார். அவரை எழுப்பி அவர் துணையுடன் நாம் செயல்பட வேண்டும். அதற்குப் புருவ மத்தியில் மனதை நிறுத்தி தயவுடனும் ஒருமையுடனும் இறைவனுக்கு திருப்பள்ளி எழுச்சி பாடி பரவுதல் வேண்டும்.
திருப்பெருந்துறையில் பாடப்படும் திருப்பள்ளி எழுச்சி எல்லோருக்கும் அக விழிப்பை உண்டு பண்ணும். அருள் ஆற்றலை அடைந்திடச் செய்யும்.
மாணிக்கவாசகர் பாடியுள்ள திருப்பள்ளி எழுச்சி என்ற பதிகத்தின் அடியில் ஒரு குறிப்பு இருக்கிறது. அது “திரோதான சக்தி”.
மாயையின் அறியாமையின் ஒரு கூறாகிய மறைப்பு சக்தியே திரோதான சக்தி. அறியாமையும் மறைப்பு சக்தியும் ஒருவரிடம் பக்குவம் அடையாத நிலையில் இருப்பவை. அவர் பக்குவம் பெற்றபோது அவர் உள்ளே அருள் ஒளி உதயமாகும். அக விளக்கம் ஏற்படும். அப்போது அவரிடம் இருந்த அறியாமையின் ஒரு கூறாகிய மறைப்பு சக்தியும் விலகி விடும். அருட் ஜோதி தோன்றும். இதைத்தான் திருப்பள்ளி எழுச்சி சொல்கிறது.
திருப்பள்ளி எழுச்சி பத்து பாடல்கள் உடையது. இதற்கு பதிகம் என்று பெயர். ‘பா’ வும் ‘பதிக’மும் இறைவனைப் பற்றிய உண்மையைக் காட்டுவன. இது தெய்வத் தமிழ் மொழியின் அமைப்பில் இருக்கும் ஒரு சிறப்பாகும்.
திருப்பள்ளி எழுச்சிப் பதிகத்தில் இருக்கும் பத்துப் பாடல்களிலும் இயற்கையில் நாம் காணும் அழகையும் அதனால் ஏற்படும் செயல்களையும் பக்தர்கள் சித்தர்கள் ஆகியவர்களின் தன்மைகளையும் அவர்கள் அக உணர்வுகளையும் அருள் அனுபவங்களையும் கண்டு அனுபவித்து மகிழலாம்.
திருப்பள்ளி எழுச்சி பாடல்களின் கற்பனை வளமும் கவியின் இனிமையும் கருத்தோவியங்களின் அழகும் நம்மை இன்பத்தில் ஆழ்த்துபவை.
மாணிக்கவாசகரின் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களில் இருக்கும் அருள் அனுபவங்களையும் கவி இன்பத்தையும் சமய தீப ஒளியில் சமயச் செல்வர்கள் கண்டு களிக்கிறார்கள்.
அருட் செல்வர்கள் சமயங் கடந்த நிலையில் இருந்து அருட்ஜோதி வெளியில் அந்தப் பாடல்களில் உள்ள எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடியே கண்டு ஒப்பற்ற இன்பம் அடைகிறார்கள்.
கடவுள் ஒருவரே. அவர் ஜோதி வடிவமானவர். எல்லோருக்கும் உரியவர். ஆதலால் எந்த வேறுபாடும் இல்லாமல் சுத்த அருள் கண்ணாடியின் வழியாக அருட் செல்வர்கள் இறைவனைக் கண்டு இன்புறுகிறார்கள்.
சுத்த சன்மார்க்க வழியில் மாணிக்கவாசகரின் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களுக்கு விளக்கம் காண்போம்.