இன்று இவரைப்பற்றி.....செளராஷ்ட்ரா மேனிலைப்பள்ளி ஆசிரியர் திரு டி.ஆர்.சந்திரசேகர்.
கல்வி நிலையம் மூலம் சுத்த சன்மார்க்கக் கல்வியைப் புகட்டியவர்.
=0=0=0=0=0=0=0=0=0=
திரு டி.ஆர்.சந்திர சேகர், மதுரை செளராஷ்ட்ரா மேனிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்து
கடந்த 2010 மே மாதம் பணி ஓய்வு பெற்றவர். இவர், திருவருட்பிரகாச வள்ளற் பெருமானின்
சுத்த சன்மார்க்கக் கொள்கையில் தீவிர ஈடுபாடு கொண்டவர். பெருமானின் திரு அருட்பா
பாடல்களுக்கு திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் அருள் உரைகளைப் படித்த இவர்,
சுவாமிகளிடம் தயவு சுத்த சன்மார்க்க நெறியினையும் பயின்றார். தான் ஆசிரியப் பணி
புரியும் பள்ளியில், தம்மிடம் பயிலும் மாணவர்களுக்கு பாடம் பயிற்றுவித்ததுடன், கூடுதலாக
சுத்த சன்மார்க்கக் கல்வியையும் புகட்டினார். இவரிடம் கடந்த பல ஆண்டுகளாக சுத்த சன்மார்க்கக்
கல்வி பயின்ற மாணவர்கள் கிட்டத்தட்ட 1,500 பேர், வள்ளற் பெருமானின் நெறியினில் தீவிர ஈடுபாடு
கொண்டு சன்மார்க்க வழியில் நடக்கின்றனர். மதம் இனம் கடந்தது என வள்ளற் பெருமானின் சுத்த
சன்மார்க்கக் கொள்கைகளை இவர் பயிற்றுவித்ததில், புலால் உண்ணும் பல மாணவர்கள், அதனை
வெறுத்து ஒதுக்கினர். அம் மாணவர்களின் பெற்றோர்களையும் இவரது அறிவுரைகள்,
புலால் மறுத்தலுக்கு காரணமாக அமைந்தது.
திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களுக்கு நூற்றாண்டு விழா எடுப்பதில் இவர் தீவிர ஈடுபாடு
கொண்டு, வரும் 25.7.2010 அன்று மதுரை தெப்பக்குளம் மேற்குக் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ மந்
நடன கோபால நாயகி மந்திரில், இந்த நிகழ்ச்சியினை அமைத்து வருகின்றார். மேலும், சுத்த சன்மார்க்க
சங்கக் கூட்டங்களில் கலந்து கொண்டு இவர் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை பரப்பி வருகின்றார். அருகினில்
அவரது மனைவியார் உள்ளார்.