திருவாடானையில் ஒரு வள்ளலார் பக்தருக்கு அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர்
நிகழ்த்திக் காட்டிய அதிசயம்..
ஐயாத்துரை என்பது அவரது பெயர். பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்ற பின் தனது குடும்பத்தாருடன் திருவாடானையில் வசித்து வந்தார்.
வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியிலும், திரு அருட்பாவிலும், தீவிர நாட்டமுடையவர். வடலூருக்கு வருடந்தோறும் தைப்பூசத்திற்கு தனது குடும்பத்துடன் வந்திருந்து, பசியாற்றும் பணியில் ஈடுபடுவார்.
அருட்பெருஞ் ஜோதி அகவலுக்கு திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகள் எழுதிய உரை நடையினைப் படித்தபின் சுவாமிகளைப் பார்ப்பதற்கு அவர் திண்டுக்கல்லுக்குச் சென்றார். அங்கு சுவாமிகளின் அருளுரையினைக் கேட்டார்.
சுவாமிகள் எழுதிய பல நூல்களைப் படித்து, வள்ளல் பெருமான் வகுத்தளித்த சுத்த சன்மார்க்கம் குறித்து பல்வேறு ஆன்மீகக் கூட்டங்களில், வள்ளலாரின் நெறியினைப் பரப்பி வந்தார்.
அவரது சகோதரர் பெயர் திரு ஜோதி முருகன். அவர் ராமநாதபுரத்தில் வள்ளலார் யுனிவெர்சல் மிஷன் ட்ரஸ்ட் வைத்து நடத்தி வந்தார்.
ஜீவகாருண்யப் பணி புரிவதிலும், திருவாடானையில் சுத்த சன்மார்க்கத்தை தெரியாதவர்களுக்கும் பரப்புவதிலும் திரு ஐயாத்துரை, மிக்க ஆர்வம் காட்டி வந்தார்.
திருவாடானையில் உள்ள ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் கூட்டங்களில் எல்லாம், வள்ளலாரின் நெறியினை அவர் பரப்பி வந்தார்.
சுத்த சன்மார்க்கத்திற்கும், வள்ளலாரின் நெறியினை அவர் தமிழ் நாட்டின் பல இடங்களிலும் பரப்பி வந்த காரணத்தால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நடைபெற்ற தயவு ஆலய ஆண்டு விழாவில், திரு ஐயாத்துரை, சுவாமி சரவணானந்தா அவர்களால் நற்சான்று வழங்கப் பட்டார்.
தீவிர நாட்டமுடைய இந்த அன்பருக்கு, அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர், தனது திருவிளையாட்டினை நடத்திக் காட்ட விரும்பினார்.
அவர் சுத்த சன்மார்க்கக் கருத்துக்கள் எழுதி வைத்திருக்கும் நோட்டுப் புத்தகத்தில், ஒரு நாள், அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் தனது திருவடிகளைப் பதித்தார்.
சாதாரணமாக நோட்டுப் புத்தகத்தில் கால் சுவட்டினை யாரும் பதிக்க முடியாது.-- பதியாது என்பது தான் அனைவரும் அறிந்த உண்மை.
ஆனால் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் அவர் பால் கொண்ட கருணையினை அவர் அறியும் வண்ணம், தனது இரு திருவடிகளைப் பதித்து அங்கீகாரம் அளித்தார்.
நோட்டுப் புத்தகத்தில் திருவடிகள் ;பதிந்த இடம் மட்டும் பள்ளமாகக் காட்சி அளித்தது.
எதேச்சையாக நோட்டுப் புத்தகத்தைத் திறந்து பார்த்தபோது திரு ஐயாத்துரை தனது கண்களையே நம்பவில்லை. ஆனால் ஆண்டவரின் திருவடி தமது நோட்டுப் புத்தகத்தில் பதிந்திருந்ததை பார்த்து மிகவும் புளகாங்கிதமடைந்தார்.
தன் தம்பி ஜோதிமுருகனிடம், தனது மக்களிடமும் இந்த அதிசயக் காட்சியினை அவர் காண்பித்து ஆண்டவரின் கருணையினை வியந்தார்.
அந்தக் காட்சி நெடு நாட்கள் அந்த நோட்டுப் புத்தகத்திலிருந்து மறையவே இல்லை. 1998ஆம் ஆண்டில் அவர் இறைவனின் திருவடிகளை அடைந்தார்.
மேற்கண்ட அதிசயத்தினை நேரில் கண்ட அவரது வாரிசுதார்கள் ஒருவர் மானாமதுரையிலும், மற்றொருவர் மதுரையிலும் வசிக்கின்றனர்..
மானாமதுரையில் வசிக்கும் அவரது மகள் 3 கி.மீ.தூரத்தில் உள்ள மூங்கில் ஊரணி என்ற கிராமத்தில் ஞான சபையினைக் கட்டும் பணியினை நிறைவு செய்யும் நிலையில் உள்ளார்.
மதுரையில் வசிக்கும் அவரது மகன், வள்ளலார்ஸ்பேஸில் பணி புரிகின்றார்.
ஆனால் நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது ...