திரு அருட்பிரகாச வள்ளலாரின் 187வது அவதார நாள் விழா.
மதுரை மாவட்டம்
சோளவந்தான் சன்மார்க்க சங்கம்.
நாள் 4.10.2009 ஞாயிற்றுக்கிழமை.
இடம்: ஜெனகை மாரியம்மன் கோவில் வளாகம்.
4.10.2009 அன்று, சோளவந்தானில் அமைந்துள்ள ஜெனகை மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள ஜெனகை நாராயணப் பெருமாள் கோவிலின் முன்புள்ள மண்டபத்தில், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் 187வது அவதார தின விழா கொண்டாடப்பட்டது.
அதிகாலையில், சுத்த சன்மார்க்கக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அருட்பெருஞ் ஜோதி அகவல் பாராயணம் செய்யப்பட்டது.
ஏனைய நிகழ்ச்சிகள் காலை 10.00 மணி அளவில் துவங்கின.
மதுரை திருப்பாலையைச் சேர்ந்த திரு ஹரி கோவிந்தன் அவர்கள், கடவுள் வணக்கம் பாடினார்.
திரு மாரியப்பன், தலைவர் (ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்) துவக்க உரையாற்றினார்.
வள்ளற் பெருமான் வகுத்த சுத்த சன்மார்க்க நெறியின் சிறப்பு, ஜீவகாருண்யத்தை அனைத்து உயிர்களிடத்தும் நாம் காண்பிக்க வேண்டும். பிற உயிர்களிடத்து நாம் காட்டும் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டிற்கு வழி வகுக்கும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார் கணியன் பூங்குன்றனா
அமெரிக்க நாட்டின் தற்போதைய ஜனாதிபதி திரு பராக் ஒபாமா கறுப்பர் என்கின்றனர். ஆஸ்திரேலியாவில் இந்தியர்களை கறுப்பு இனத்தவர் என்கின்றனர். இலங்கையில் தமிழர்கள் வாடுகின்றனர். சமீபத்திய நாளிதழ்களைப் பார்த்தால் இவையெல்லாம் தெரியும். யாரும் ஆன்மாவைப் பார்க்காததினால் வரும் விளைவுகளே இவை எல்லாம். வள்ளற் பெருமான் ஒவ்வொரு உயிரினும் உள் விளங்கும் ஆன்மாவை நேசிக்கச் சொன்னார். அகில உலக சகோதரத்துவம் என்பதை வள்ளற் பெருமான் வலியுறுத்தினார். இதுவே மற்றையோருக்கும் அவருக்கும் உள்ள சிறப்பு ஆகும். அவர் சொல்லிச் சென்ற நெறியினை தவறாது பின்பற்றினால், உலகியர் அனனவரையும் அந் நெறி இணைக்கும் எனக் கூறினார்.
சோளவந்தான் சன்மார்க்க சங்கத்திற்கு, அதே ஊரினைச் சேர்ந்த ஸ்ரீ சத்ய சாயி பாபா பக்தர், அன்பர் திரு சேதுரத்தினம் என்பவர் 0.03 (மூன்று) செண்ட் நிலம், ஆஸ்பத்திரிக்கு அருகில் கொடுத்துள்ளார். அவருக்கு சன்மார்க்க சங்கத்தினர் அனைவரும் தமது பாராட்டினைத் தெரிவித்தனர். அவ்விடத்தில் சன்மார்க்க சங்க சபையினைக் கட்டுவதற்கு, இந்தக் கூட்டத்திலேயே ஒரு சிலர், தாம் பொருள் உதவி செய்வதாக சங்கத் தலைவர் திரு மாரியப்பனிடம் உறுதி கூறினர்.
திரு மாணிக்கம் (ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்), மதுரை. வள்ளலார் வருவிக்கவுற்ற நாளின் விசேடம் பற்றி சொற்பொழிவாற்றினார்.
சோளவந்தானில் பிறந்த அரசன் சண்முகனார் என்ற தமிழ் அறிஞர், மகிபாலன் பட்டி என்ற இடத்தில் செந்தமிழ்க் கல்லூரியை நிறுவினார். அங்குதான் தாம் பயின்றதாகக் கூறினார்.
ஏனைய ஞானிகள் அடைந்த நிலையிலிருந்து வள்ளற் பெருமான் வித்தியாசமாக,எல்லா ஆன்மாக்களையும் நேசித்தார். ஜீவகாருண்ய ஒழுக்கத்தை தமது வாழ் நாளில் கடைப்பிடித்தார். ஏறாத நிலைமேலேறினார். இறைவனின் ஐந்தொழிற் காரியப்பாடுகள் செய்யும் சித்தியைப் பெற்றுக் கொண்டார். வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற இந்தத் திருநாள் விழாவில், அவர் சொல்லிச் சென்ற சுத்த சன்மார்க்க நெறியினை அனைவரும் பின்பற்றி, அவர் அடைந்த இறவாப் பெருநிலை (deathlessness) அடைவதற்கு முயற்சிகளை காலந்தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இவ்விழாவில் கலந்து கொள்ள மதுரையில் இருந்து ஊமச்சிகுளம் சன்மார்க்க அன்பர் திரு சந்திர மோஹன், திருப்பாலையிலிருந்து சன்மார்க்க அன்பர் திரு ஹரி கோவிந்தன், நாராயணபுரம் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டி திரு ராமானுஜம், நாராயணபுரம் திருமதி பாக்கிய சந்தான லக்ஷ்மி, மற்றும், திருவேடகம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு சி.பி.ராமு அம்பலம், செக்கானூரணி கிராமத்தினைச் சேர்ந்த திரு ராமசாமி முதலான அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டி திரு ராமானுஜம், தமது உரையில், வள்ளலார் நெறியினைக் கடைப்பிடிக்க அனைவருமே இடம் கொடுத்தும், பண உதவி கொடுத்தும் வள்ளல்களாக மாறி உதவியுள்ளதைப் பாராட்டினார். அடுத்த ஆண்டில் புதிய சன்மார்க்க சங்கத்தில், இவ்விழாவினைக் கொண்டாட அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த விழாவில் 100 பேருக்கும் மேல் சன்மார்க்க அன்பர்களும், சோளவந்தான் கிராமத்தினைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலும் இருந்து வந்து சொற்பொழிவினைக் கேட்டு இன்புற்றனர்.
இறுதியில், ஜோதிப் பாடல் பாடப்பட்டது.