DAEIOU - தயவு
8.8.09, 9.8.09-2 நாட்கள் விழுப்புரத்தில் நடைபெற்ற சுத்த சன்மார்க்க எழுச்சி மாநாடு குறிப்புகள்.

2ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க எழுச்சி மாநாடு.

இடம் – ஜெயம் திருமண மஹால், விழுப்புரம்

நாட்கள்: 8.8.2009 (சனி) மற்றும் 9.8.2009 (ஞாயிறு)

மாநாடு அமைப்பாளர்:

திரு ஜெய. அண்ணாமலை, Ex.M.C., தலைவர், விழுப்புரம் மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க எழுச்சி மாநாட்டுக் குழு.

மேற்காணும் எழுச்சி மாநாடு விழுப்புரம் நகரில் ஜெயம் மஹாலில் நடைபெறுவது குறித்துப் பல இடங்களில், போஸ்டர்கள் ஒட்டி விளம்பரப் படுத்தப்பட்டிருந்தது.

(Sanmarga Flag)

விழா நடைபெற்ற ஜெயம் திருமண மஹால் வரும் வழியில் சன்மார்க்கக் கொடி தோரணம் கட்டப் பட்டிருந்தது.

(Function Spot Jayam Mahal, Viluppuram)

ப்ளெக்ஸ் பேனர்களில் வள்ளலார் அழைக்கிறார் என்ற வகையில் அவர் சொல்லிய தத்துவங்கள் இடம்பெற்றன.

முதல் நாள் இரவிலேயே (7.8.09) தமிழ்நாடு மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து சன்மார்க்க அன்பர்கள் விழா நடைபெற்ற இடத்திற்கு வந்திருந்து, கொடி கட்டும் பணி, பேனர் கட்டும் பணி முதலானவற்றில், தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர்.

திரு ஜெய அண்ணாமலை, வந்த அனைவரையும் வரவேற்று உபசரித்தார்.

அன்று இரவு. பெரும்பாலானோர் அந்த விழா நடைபெறும் திருமண மஹாலிலேயே தங்கி விட்டனர்.

மதுரையிலிருந்து மூத்த சன்மார்க்க அன்பர்கள் திரு ஹரி கோவிந்தன், திரு மாணிக்கம் (ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்),திரு பாலகிருஷ்ணன் (சன்மார்க்க சங்கம். பரம்புப்பட்டி), திரு சுருளி பொம்மு (Addl. Supdt of Police, Rtd) திரு முரளீதரன். அருள் ட்ரஸ்ட் நிறுவனர், திரு ராமானுஜம், மேனேஜிங் ட்ரஸ்டி, வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன், திரு இளங்கோ, (மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் பணிபுரிபவர்), திரு சந்திரமோஹன், ஊமச்சிகுளம், மற்றும் பல அன்பர்கள் முதல் நாளிலும், மறுநாளான (9.8.2009) அன்றும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

மதுரை மாவட்டச் சன்மார்க்க சங்கத் தலைவர் திரு T.R. ஜவஹர்லால் அவர்கள், வள்ளல் பெருமானின் படம் 1,000 பிரிண்ட் செய்து, எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அன்பர்களுக்கு வினியோகம் செய்யும் விதத்தில் அனுப்பி வைத்தார். (அவை, பின்னர் விழா நிகழ்ச்சியின் போது, திரு பாலகிருஷ்ணன் அய்யா மற்றும் திரு சந்திரமோஹன், ராமானுஜம் ஆகியோரால், அனைவருக்கும் வழங்கப் பட்டன. பெருமானே தமக்குள் வந்து விட்டதை அந்தப் படத்தைப் பெற்றுக் கொண்ட சன்மார்க்க அன்பர்கள் உணர்ந்தனர்.)

விழா நிகழ்ச்சிகள் 8.8.2009 அன்று அதிகாலையிலேயே துவங்கின. அருட்பெருஞ் ஜோதி தீபம் ஏற்றி, சென்னையை அடுத்த படப்பை திரு பாலகிருஷ்ணன் அவர்கள் குழுவினரால், அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் ஓதப் பட்டது.

சுமார் 9.30 மணி அளவில், விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகையிலிருந்து புறப்பட்டது. சன்மார்க்கக் கொடியை ஏந்தி, பல அன்பர்கள் இரு சக்கர வாகனங்களில் வலம் வந்தனர், மூத்த சன்மார்க்க அன்பர்கள், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து வந்த அன்பர்கள் சன்மார்க்கக் கொடி ஏந்தி வந்தனர், பள்ளிக் குழந்தைகள், கும்மி, கோலாட்டம் என இந்தச் சன்மார்க்க ஊர்வலம், கண் கொள்ளாக் காட்சியாக, விழுப்புரம் மாவட்டத் தலைநகரின் முக்கியமான தெருக்கள் வழியாக மாநாடு நடைபெறும் ஜெயம் திருமண மஹாலை சுமார் 10.30 மணி அளவில் வந்தடைந்தது.

(Gathering of Sanmarga Members at the function Hall)

பாண்டிச்சேரியைச் சேர்ந்த தயவுமிகு அன்னபூரணி அம்மையார் அவர்கள், திரு அருட்பா பாடல்களை அருமையான இசையுடன் பாடினார். இவர், வடலூரில் வருடந்தோறும் திரு அருட்பா இசை விழாவில் பங்கேற்பவர். சமீபத்தில், இவர் பாடிய திரு அருட்பா பாடல்கள், ஆடியோ கேசட் வடிவில், திருபுவனம் திரு ஆத்மநாதன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. முக்கியமான சன்மார்க்க சங்கக் கூட்டங்களில் பங்கேற்று திரு அருட்பா பாடுவதை தமது அருட் பணியாக இந்த அம்மையார் ஏற்றுச் செயல்பட்டு வருகின்றார்.

(Pondicherry Sanmarga Anbar Dhayavuthiru Annapoorani Music Party katchery)

காலை சுமார் 11.00 மணி அளவில் திரு பூமலை அடிகளார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து ஜே. இராஜ மூர்த்தி அவர்களும், பின்னர் படப்பை திரு பாலகிருஷ்ணன் அவர்கள் உலகம் போற்றும் உத்தமர் வள்ளலார் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினர்.

புதுச்சேரியில் டாக்டராகப் பணிபுரிந்த திரு மே.சு. இளங்கோ அவர்கள், தற்போது சீன மருத்துவப் பல்கலைக் கழகத்தில் பணி புரிகின்றார். அவர், ஆன்ம தரிசனம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். வள்ளலார் அடைந்த நிலை எத்தகையது என்பதை அவர் தமது உரையில் விளக்கினார். அந் நிலையினை அடைவதற்கு மனிதகுலம் முயல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மேலும், தாம் தற்போது பணிபுரியும், சீனா மற்றும் அண்டை நாடுகளான மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியினை தாமே நேரில் சென்று பரப்பி வருவதாக அவர் தெரிவித்தார். வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியின் சிறப்பு அங்குள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாகவும், அதற்கு அங்கெல்லாம் பெரும் வரவேற்பு உள்ளதையும் அவர் தெரிவித்தார்.

சேலம் சன்மார்க்க அன்பரும் வள்ளல் பெருமானின் நெறிகளை தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களிலும், பெங்களூரிலும் மற்றும் பாண்டிச்சேரியிலும் சொற்பெருக் காற்றுபவருமான சேலம் திரு குப்புசாமி அவர்கள், பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். இதுவரை வந்த ஞானிகள் சொல்லிச் சென்ற நெறியினை எல்லாம் தாண்டி, சுத்த சன்மார்க்க நெறியினை வள்ளல் பெருமான் வகுத்துத் தந்தது, ஒரு மகுடம் ஆகும் என்றார். இந் நிலையினை, எந்த ஒரு ஞானியரோ, மகானோ இதற்கு முன்னர் ஒருபோதும் அடைந்ததில்லை என்றார் அவர்.

விழுப்புரத்தை சேர்ந்த இளைஞர் திரு ஆனந்த பாரதி என்பவர்,, நாம் ஏன் சுத்த சன்மார்க்க நெறியினைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது பற்றி சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார்.

திருவண்ணாமலையிலிருந்து வந்திருந்த திரு பாபு சாது தன்னுடன் ஜெர்மன் (Lady) அன்பர் ஒருவரை அழைத்து வந்திருந்தார். அவர், தமிழ் மொழி தெரியாவிடினும், “அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி” என்ற மகா மந்திரத்தை தமிழிலேயே சொல்லி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

தலைமைப் பொறுப்பேற்ற சாது சிவராமனார் அவர்கள், அனைத்திலும் காற்று கலந்திருப்பதைப் பற்றி பேசி, வள்ளல் பெருமான் வகுத்தளித்த சுத்த சன்மார்க்க நெறியினை அனைவரும் வாழ்க்கையில் தவறாது கடைப்பிடிக்க வேண்டும் எனப் பேசினார்.

கடலூரைச் சேர்ந்த திருமதி வாசுகி சாமிக்கண்ணு அவர்கள், உலகமே வணங்கும் வடலூரின் தனிச் சிறப்பு என்பது குறித்து சொற்பொழிவு ஆற்றினார்.

புதுவையைச் சேர்ந்த திரு நா. கோதண்டபாணி அவர்கள், மிகச் சிறப்பாகத் தொகுப்புரை வழங்கினார்.

நடுப்பட்டு பி. புருஷோத்தமன் குழுவினரால், திரு அருட்பா இசை நிகழ்ச்சி பிற்பகல் நடைபெற்றது.

வேட்டவலம் வள்ளலார் திருச்சபை திரு ந. சுப்பிரமணிய பாரதியார் எழுச்சிப் பேருரை ஆற்றினார்.

வடலூர் வள்ளலார் குருகுல தாளாளர் திரு இரா. செல்வராஜ் அவர்கள் தமது உரையில் தமிழ் நாடு அரசு வடலூரில் சாலை மேம்பாட்டிற்காகவும், கழிப்பறைகள் கட்டவும் மற்றும் வடலூரின் சுற்றுப் புறத்தை மேம்படுத்துவதற்காகவும், தற்போது நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகத் தெரிவித்தார்.

பின்னர், வடலூர், திரு அருட்பா இசைச் சங்க செயலாளர் திரு வெ. ராமானுஜம் உரை ஆற்றினார்.

செஞ்சியைச் சேர்ந்த சன்மார்க்கக் குழந்தைகள், கோலாட்டம், கும்மி என திரு அருட்பாப் பாடல்களுக்கு நடனம் ஆடி, அசத்தினர். அவர்களது நடனம், அரங்கில் அமர்ந்திருந்த சன்மார்க்க அன்பர்களின் மனத்தில், அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் திரு நடனத்தின் தாக்கத்தை ஏற்படுத்தின.

விழுப்புரம் D.I.G தனது உரையில், தமது காவல் துறைப் பணியிலும், வள்ளலாரின் பணி புரிவதற்கு, தம்மை இவ் விழாவில் பேசுவதற்காக இங்கு அழைத்து வந்த திரு ஜெய. அண்ணாமலை மற்றும் அவர் சார்ந்த அன்பர்களுக்கு நன்றி கூறினார்.

அழைப்பிதழில் தமது பெயர் இடம் பெறாவிடினும், வள்ளலாருக்காக எடுக்கும் இவ் விழாவில், தாம் பங்கு பெற வேண்டும் என்ற ஒரு ஈர்ப்பு சக்தியின் பால் இங்கு வந்ததாக அவர் கூறினார். இது போன்ற வள்ளலார் மாநாடுகளில் பங்கேற்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றார் அவர்.

நாட்டிலே அமைதி நிலவ வேண்டுமாயின், இன்றைய சமுதாயத்திற்கு மிகவும் தேவைப்படுவது, வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியே என்பதை அவர் எடுத்துச் சொன்னார். முடிவில், 3 சக்கர சைக்கிளை, அவர், ஊனமுற்ற ஒரு அன்பருக்கு வழங்கினார்.

இந்த எழுச்சி மாநாட்டினை ஏற்பாடு செய்த திரு ஜெய அண்ணாமலையின் தந்தையார், வயோதிகராக இருப்பினும் (80 வயது) நேரில் வந்திருந்து, இந்த எழுச்சி மாநாட்டில், கலந்து கொண்டார். திரு ஜெய அண்ணாமலை, தமது குடும்பத்துடன், தம்பியருடன், இவ் விழா நிகழ்ச்சிகளை, அன்பர்களின் ஆதரவுடன் மிகச் சிறப்பாக செய்திருந்தார்.

திரு ஜெய அண்ணாமலை, தமது உரையில், இதுபோன்ற எழுச்சி மாநாடுகள் எதற்கு நடத்த வேண்டும் என தம்மை அனைவரும் கேட்கின்றனர். வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி பரவ ஆரம்பித்து ஆண்டுகள் பல கடந்து விட்டாலும், தொய்வில்லாமல், சுத்த சன்மார்க்க நெறியினை அனைவருக்கும் கொண்டு செல்ல இதுபோன்ற எழுச்சி மாநாடுகள் நடப்பதென்பது, மிகவும் அவசியம்தான் என்பதை வலியுறுத்திப் பேசினார்.


அதன் பின்னர் நாவுக்கரசர் டாக்டர் சோ. சத்திய சீலன் அவர்கள் தலைமையில், வள்ளல் பெருமான் பெரிதும் வலியுறுத்துவது ஜீவகாருண்ய ஒழுக்கமா ? இறை வழிபாடா ? என்ற தலைப்பில் தலைப்புக்கு மூவர் வீதம் பட்டி மன்றம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இறுதியில், வள்ளல் பெருமான் பெரிதும் வலியுறுத்தியது, ஜீவகாருண்யமே என்ற விதத்தில் தனது தீர்ப்பினை நடுவர் டாக்டர் சோ. சத்திய சீலன் வழங்கினார்.

அவர் தமது சொந்த வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடும்போது, தனது தந்தையார் திருச்சி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 50 சன்மார்க்க சங்கங்கள் உருவாவதற்குக் காரணமாயிருந்தார் என்றார். தமக்கும், இந்த பட்டி மன்றத்தில் பேச்சாளராகப் பங்கேற்கும் (தனது தம்பி) திரு ஜோதி ராமகிருஷ்ணாவிற்கும், சன்மார்க்க போதனையினையும் சுத்த சன்மார்க்க நெறியினையும் கற்றுத் தந்தவர் தமது தந்தையார் என்றார்.

வள்ளல் பெருமானின் நெறி தற்போது பொதிகை T.V.யில் பிரதி புதன் கிழமை தோறும் கலை 6.45 மணி முதல் 7.15 மணி வரையில் ஒளிபரப்பப் பட்டுக் கொண்டிருப்பதைக் கூறி வாரம் தோறும் 3 பாடல்களுக்கு தாம் உரை விளக்கம் அளிப்பதாகவும், மழையூர் திரு சதாசிவம் அவர்கள் அந்த 3 பாடல்களையும் உருக்கத்துடன் பாடுவதையும் அவர் அன்பர்களுக்கு தெரிவித்தார். இந் நிகழ்ச்சியினை உலகளாவிய அளவில் 150 நாடுகளில் அன்பர்கள் பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

பொதிகை டி.வி.யில் ஆற்றப் படும், வள்ளல் பெருமான் குறித்த இந்தச் சொற்பொழிவின் மூலம், அவர் வகுத்துத் தந்த சுத்த சன்மார்க்க நெறி உலகம் முழுவதும் பரவ வேண்டுமெனில், இங்கு அரங்கம் நிறைந்திருக்கும் அன்பர்கள், பொதிகை டி.வி. நிலையத்தாருக்கு தெரிவிக்கும் விதத்தில், 0.50 பைசா கார்டில், இந் நிகழ்ச்சியினைத் தொலைக் காட்சியில் மேலும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கையினை தபால் மூலம் பொதிகை டி.வி.நிலையத்தாருக்குத் (Pothigai T.V.) தெரிவிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

பட்டி மன்றத்தின் பேச்சாளர்களின் சொற்பெருக்கும், வாதிட்ட விதமும், அதனை அடுத்து, நடுவரின் தீர்ப்பும், சன்மார்க்க அன்பர்களின் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது.

கூட்ட அரங்கினுக்கு வெளியில், திரு அருட்பா உரை நடை நூல்களும், மூலிகைகளும், திரு அருட்பா ஆடியோ சி.டி.களும் பல அன்பர்களாலும் விற்பனை செய்யப்பட்டன.

திரு அருட்பா தெய்வ இசை அமுதம் ப்ரொஜெக்ட் மூலம் வெளியிடப்பட்ட திரு அருட்பா ஆடியோ சி.டி.கள் விற்பனை செய்யப்பட்டன.

மதுரையிலிருந்து வந்திருந்த சன்மார்க்க அன்பர் திரு இளங்கோ அவர்கள், தாம் கண்ட வள்ளலாரின் தனி நெறி குறித்த புத்தகங்களை விற்பனை செய்ததுடன், வந்திருந்தவர்களில் தம்மிடம் வந்தவர்களுக்கு, மற்ற நெறிக்கும். வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறிக்கும் உள்ள வேற்றுமையை உணர்த்தி, ஒரு பெரிய சொற்பொழிவே நிகழ்த்திக் கொண்டிருந்தார். மிக முக்கியமாக திரு அருட்பாவில் உள்ள கருத்துக்களை அவர் ஆணித்தரமாகத் தெரிவித்ததை அன்பர்கள் அனைவரும் செவிமடுத்துக் கேட்டனர்.

மதுரை அருள் ட்ரஸ்ட் அன்பர் திரு முரளீதரன், தாம் குட்லாடம்பட்டியில் நடத்தும் பள்ளியில் பயிலும் 4 சிறார்களை அனுப்பி, இந்த மாநாட்டில், தொண்டாற்றச் செய்தார். அவரிடம் பணியாற்றும் செக்கானூரணி அன்பர் திரு ராமசாமி அச் சிறுவர்களைக் கண்காணித்து, ஞான தீபம் புத்தகம் முதலான புத்தகங்களை விற்பதற்கு ஸ்டால் போட்டிருந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கீரனூரில் குலபதி திரு குப்புசாமி அய்யா அவர்கள் நடத்தும் சன்மார்க்க குருகுலத்திலிருந்து அன்பர்கள், தினசரி அன்னதானம் அளிக்கும் வேன் சகிதம் வந்திருந்தனர். புத்தக விற்பனைக்கும் அவர்கள், ஸ்டால் போட்டிருந்தனர்.

பெங்களூரிலிருந்து அன்பர் திரு கார்த்திகேயன் (Vallalar Groups founder) தன்னுடன் பல அன்பர்களையும் அழைத்து வந்து, இந் நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்திருந்தார். மேலும், ஒவ்வொரு ஊரிலும், எந்தெந்த நாட்களில் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறுகின்றது,, சத் சங்கமா..தொடர் சொற்பொழிவா..எந்நாட்களில் அது நடைபெறுகின்றது என்ற விவரங்களை எல்லாம், ஒரு (Proforma) குறிப்பேட்டில் வந்திருந்த அன்பர்களிடம் பெற்றுக் கொண்டிருந்தார். அவர் தான் மட்டிலுமல்லாது, பெங்களூரைச் சேர்ந்த அல அன்பர்களையும், இளைய தலைமுறையினரையும் ஒரு கூட்டமாக அழைத்து வந்திருந்து, இம் மாநாட்டு சிறப்பு நிகழ்ச்சிகளைக் காணச் செய்தார்.

திருவண்ணாமலை திரு பாபு சாது மற்றும் அவரது குரூப் அன்பர்கள், வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகள் அடங்கிய ப்ளெக்ஸ் பேனர்கள், விளக்கப் படங்கள் முதலானவற்றை பொதுமக்கள் அறியும் வண்ணம் ஜெயம் திருமண மஹாலில் வைத்திருந்தனர்.

இரவு 7.30 மணி அளவில், புதுச்சேரி மாண்புமிகு முதலமைச்சர் திரு வி. வைத்திலிங்கம் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

வள்ளலாரின் நெறி மிகச் சிறந்த நெறி. தமது அமைச்சரவையில் ஏற்பட்ட பணி (ஒரு சிறப்பு பணி-பட்ஜெட்) காரணமாக, காலையில் தாம் பங்கேற்க வேண்டிய இந்த எழுச்சி மாநாட்டில் தற்போதுதான் பங்கேற்க முடிந்ததையும் அவர் தெரிவித்தார். வள்ளலாரின் நெறியினை அனைவரும் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

அதன் பின்னர், திரு அருட்பா தெய்வ இசை அமுதம் ப்ரொஜெக்ட் செயல்படுத்தி வரும் சிங்கப்பூர் சன்மார்க்க அன்பர் திரு சிவகுமார் அவர்கள், திருவண்ணாமலை காகாஸ்ரம திரு தருமலிங்க ஸ்வாமிகள் மற்றும் இசைக் குழுவினர் அனைவரையும் அழைத்து வந்து மேடையில் திரு அருட்பா பாடல்களைப் பாடச் செய்தார்.

திரு அருட்பாவில் எத்தனை திருமுறைகளுக்கு முற்றிலும் இசை அமைக்கப்பட்டுள்ளது என்பதையும், இன்னும் இசை அமைக்க வேண்டிய பதிகங்கள், மற்றும் திருமுறைகள், இதுவரை செலவிட்ட தொகை மற்றும், திரு அருட்பா அனைத்துத் திருமுறைகளையும் இசை அமைத்து முடிப்பதற்கு இன்னும் தேவைப்படும் தொகை எந்த ஆண்டுக்குள் இந்த திட்டத்தினை முடிப்பதற்கு பிளான் செய்யப்பட்டுள்ளது முதலான எல்லா விபரங்களை அன்பர்களனைவருக்கும் திரு சிவக்குமார் அவர்கள், மேடையில் தெரிவித்தார்.

அவருடன், சென்னையிலிருந்து சன்மார்க்க அன்பர் திரு ராஜ் குமாரும் வந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன எனத் திரும்பிய அன்பர்கள், இசைக் குழுவினர் அனைவரும், திருவண்ணாமலை மற்றும் சென்னையில் இருந்து இசைக் கருவிகளுடன் வந்ததைப் பார்த்ததும், மீண்டும் அரங்கினில் கூடினர்.

கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் இந்த இசைக் கச்சேரி மிகச் சிறப்புற நடைபெற்றது. அனைத்து சன்மார்க்க அன்பர்களும் இந்த இசைக் கச்சேரியினை மிகவும் விரும்பிக் கேட்டனர். திரு தருமலிங்க ஸ்வாமிகள் அவர்கள் தலைமையில், இளைய தலைமுறையினரால், திரு அருட்பா பாடல்கள் பாடப்பட்டதால், அனைவராலும், இந்த இசை நிகழ்ச்சி பாராட்டப்பட்டது. அந்த அரங்கமே வள்ளல் பெருமானின் திரு அருட்பா இசை அமுதத்தினால் நிரம்பியது.

வள்ளல் பெருமானின் தாயார் சின்னம்மையார் பிறந்த ஊரான சின்னக் காவனத்தில் இருந்து பணிபுரியும் சன்மார்க்க சாது திரு ரெகுநாதன் அவர்கள் இந்த எழுச்சி மாநாட்டிற்கு வந்திருந்தார்.சின்னக் காவனம் கிராமத்தில், வள்ளல் பெருமானின் தாயார் சின்னம்மைக்கு, பெரிய அளவில், ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், அம் முயற்சி நல்ல விதத்தில் நிறைவேறுவதற்கு, சன்மார்க்க அன்பர்கள் அனைவரும், தம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதையும் அவர் கேட்டுக் கொண்டார்.


அதன் பின்னர், மதுரை வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டி திரு ஏ.ராமானுஜம், தனது உரையில், வள்ளலார் ஸ்பேஸ் இணைய தளம், வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை உலகெங்கிலும் எடுத்துச் சென்று, பல நாடுகளைச் சார்ந்த அன்பர்களையும் இந் நெறிக்குக் கொண்டு வருவதை தெரிவித்தார். முதலில் வள்ளலார் யுனிவெர்சல் ட்ரஸ்ட் மிஷன் தலைவர், ராமநாதபுரம் திரு ஜோதி முருகன் அய்யா மற்றும் சிங்கப்பூர் சன்மார்க்க அன்பர் திரு சிவகுமார் இருவரும் இணைந்து www.vallalar.org என்ற இணைய தளத்தின் மூலம் திரு அருட்பா மற்றும் உபதேசப் பகுதிகள் மற்றும் சுத்த சன்மார்க்கம் சார்ந்த பல புத்தகங்கள் இவ் விணைய தளத்தில் இடம்பெறச் செய்தனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவக்கப்பட்ட www.vallalarspace.com இணைய தளத்தில், சிங்கப்பூர் சன்மார்க்க அன்பர் திரு சிவகுமார், அமெரிக்காவில் வசிக்கும் சன்மார்க்க அன்பர் திரு செந்தில் மருதையப்பன் ஆகியோரின் பெரு முயற்சியால், சுத்த சன்மார்க்கம் சார்ந்த நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், வீடியோ காட்சிகள், பாடல்கள், போன்ற பல்வேறு செய்திகளை உள்ளடக்கிய ஒரு இணைய தளமாக இது உருவாகி உள்ளது இந்த உலகின் எந்த ஒரு மூலையில் சுத்த சன்மார்க்க நிகழ்ச்சி எந்த நாட்டில், எந்தப் பகுதியில் நடைபெற்றாலும், அதனை இந்த இணைய தளத்தில் இடம் பெறச் செய்து சன்மார்க்க அன்பர்கள் பயன்பெறும் விதத்தில், இவ் விணைய தளம் செயல்படுகின்றது என அவர் சொன்னார். அந்த விதத்தில் கடந்த ஆண்டில், இதே விழுப்புரத்தில் சன்மார்க்க அன்பர் திரு ஜெய அண்ணாமலை அவர்கள் நடத்திய எழுச்சி மாநாடு குறித்த தகவல்கள், மற்றும் திரு ஜெய அண்ணாமலை வள்ளலாரின் சன்மார்க்கக் கருத்துக்களைப் பரப்புவதற்கு இந்த மாநாட்டின் மூலம் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் அந்த இணைய தளத்தில் கடந்த ஆண்டே செய்தியாக வள்ளலார் ஸ்பேஸ் டீம் மெம்பர்கள் இடம்பெறச் செய்ததையும் அவர் தெரிவித்தார்.
பல ஊர்கள், பல நாடுகளில் இயங்கும் சன்மார்க்க இயக்கங்கள் எல்லாம், இந்த இணைய தளத்தில், (Space Directory) யில் இடம் பெற்றுள்ளன என்றார். சான்றாக,. பெங்களூரில் இருந்து இங்கு வந்து கலந்து கொண்டிருக்கும் சன்மார்க்க அன்பர் திரு கார்த்திகேயன் இந்த இணைய தளத்தில் வள்ளலார் குரூப்ஸ் அன்பர்கள் சேர்த்து செய்திகளை வெளியிடுகிறார் என்றார்.
இதுவரை உலகிலுள்ள எல்லா நாடுகளைச் சேர்ந்த அன்பர்களால் இன்று தேதி வரை, 2,48,000 முறை இந்த இணைய தளம் பார்க்கப் பட்டுள்ளது என்றார்.

புதுக் கோட்டை மாவட்டத்தில், சன்மார்க்க சங்கங்கள் 150 உருவாகி உள்ளன. 50 ஆண்டுகளாக, அங்கு சுத்த சன்மார்க்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. சமீபத்தில், 25 ஆண்டுகள் கடந்ததற்கே ஒரு வெள்ளி விழா மலரை அம் மாவட்ட அன்பர்கள் வெளியிட்டுள்ளனர். கிராமங்கள் தோறும் சுத்த சன்மார்க்க இயக்கம் நடத்தி அந்த மாவட்டம், தற்போது இந் நிலையினை அடைந்துள்ளது. அதுபோல், எல்லா மாவட்டங்களிலும், கிராமங்கள் தோறும், வள்ளல் பெருமானைப் பற்றிய எழுச்சி பேரணி நடக்க வேண்டும். எல்லா கிராமங்களிலும், எல்லா யூனியன்களிலும், எல்லாத் தாலுகாக்களிலும், எல்லா மாவட்டங்களிலும், வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி பரவுவதற்கு, அன்பர் திரு ஜெய அண்ணாமலை போல பல ஜெய அண்ணாமலைகள் உருவாக வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

முதல் நாள் நிகழ்ச்சிகள் அனைத்தும், இத்துடன் மிகச் சிறப்பாக நிறைவேறின. .

இரண்டாம் நாளான 9,8.2009 அன்றும் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டபடி எல்லா நிகழ்ச்சிகளும் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தன.

இரண்டு நாட்களிலும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர்கள் பெருவாரியாகக் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் 7.8.2009 இரவு முதலே, அதனை அடுத்த 8.8.09, 9.8.09 ஆகிய நாட்களிலும், இந்த எழுச்சி மாநாடு நடத்திய திரு ஜெய அண்ணாமலை மற்றும் அவருடன் சார்ந்த அன்பர்கள், சிறப்பான உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அன்னம் பாலிப்புப் பணி மிகச் சிறப்பாக நடத்தப் பட்டது. பொதுமக்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள், சன்மார்க்க அன்பர்கள் என, சுமார் 10,000 நபர்கள், சுத்த சன்மார்க்க எழுச்சி மாநாட்டினாலும், அன்னம் பாலிப்பினாலும் நன்கு பயனடைந்தார்கள்.

மேடையில் பேசிய அனைவரும், வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியினைப் பரப்புவதற்கு என இந்த பெரும் முயற்சியினை மேற்கொண்ட எழுச்சி மாநாட்டுத் தலைவர் திரு ஜெய அண்ணாமலையின் முயற்சிக்கும் அவரது செயல்பாட்டுக்கும் பாராட்டுத் தெரிவித்தனர்.


8.8.09, 9.8.09-2 நாட்கள் விழுப்புரத்தில் நடைபெற்ற சுத்த சன்மார்க்க எழுச்சி மாநாடு குறிப்புகள்.

8.8.09, 9.8.09-2 நாட்கள் விழுப்புரத்தில் நடைபெற்ற சுத்த சன்மார்க்க எழுச்சி மாநாடு குறிப்புகள்.

jayaprathipa
Karunaimigu Ramanujam sir,
Thanks for ur full informations about vilupuram sanmarga conference.
Monday, August 17, 2009 at 05:30 am by jayaprathipa