DAEIOU - தயவு
26.7.2009 திண்டுக்கல் பொன்னகரம் அருட்பெருஞ்ஜோதி தயவு ஆலயத்தில் மாதப் பூச விழா.

திண்டுக்கல் பொன்னகரம் அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லப் பூச விழா
விரோதி ஆண்டு ஆடித் திங்கள் 10ம் நாள் 26.7.2009 ஞாயிற்றுக் கிழமை.
திண்டுக்கல் நகரிலே அவதரித்த மகான் தயாநிதி சரவணானந்த சுவாமிகள்ஆவார். வள்ளற் பெருமானாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை அடியொற்றி, சுவாமி சரவணானந்தா அவர்கள் 60க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். உபதேசப் பகுதியில் வள்ளல் பெருமான் தம்மை ஏறாத நிலை மேலேற்றி விட்டதுதயவுஎனக் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில், தயவுப் பாக்கள், தயா விளக்க மாலை, தயவுப்பெருநெறி, தயவுக்குறள் என்ற பல உரைநடை நூல்களும் பல பாக்களும் யாத்துள்ளார்கள். சுவாமி அவர்களுக்கு, மேட்டுக் குப்பத்திலே, வள்ளற் பெருமானின் காட்சி, அவர்களது இளம் வயதிலேயே கிடைத்துள்ளது.
அவர்கள் தமது 96 வயதில் சித்தி பெற்றார்கள். திண்டுக்கல் நகரில் நத்தம் சாலையில் உள்ள பொன்னகரம் என்ற இடத்தில், “சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ் ஜோதி தயவு இல்லம்கடந்த 2003ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
மாதந்தோறும் பூச நாளை ஒட்டிய ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று பொன்னகரம் அருட்பெருஞ் ஜோதி தயவு இல்லத்தில் சன்மார்க்க அன்பர்கள் திரளாகக் கலந்து கொண்டு, அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை வழிபாடு செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த தயவு இல்லத்தை திண்டுக்கல் தயவு நூல் அறக்கட்டளையினை நடத்தி வரும் அன்பர் திருஎஸ்.ஆர். ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர், அன்பர்களின் உதவியோடு பராமரித்தும், ஏழைகளுக்குப் பசியாற்றுவித்தல் பணியையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், மாதப்பூச நாளினை ஒட்டி, கடந்த 26.7.2009 ந்தேதி ஞாயிற்றுக் கிழமை இந்த தயவு ஆலயத்தில் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது.
காலை 10.00 மணி – கொடி வணக்கம்
காலை 10.20 மணி
திருவடிப் புகழ்ச்சி, அருட்பெருஞ் ஜோதி அகவல், அட்டகம் மற்றும் சுவாமி சரவணானந்தரின் சற்குரு வணக்கப் பாடல்கள் பாடப்பட்டன.
பகல் 12.15 மணி
உலகில் உள்ள அனைத்து ஆன்மாக்களின் நலனுக்காகவும் தயா தியானம் நடைபெற்றது.
இதனை அடுத்து திண்டுக்கல் சுவாமி சரவணானந்தரின் அணுக்கத் தொண்டர் தயவு வே.விசுவநாதன் அவர்கள் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். சிறப்புச் சொற்பொழிவும் ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது.
இந்த ஆடி மாதப் பூச விழாவானது எல்லாம் செயவல்ல தனித்தலைமைப் பெரும்பதி அருட்பெருஞ்ஜோதி தயவு அம்பலம் விளங்கும் அற்புதக் கடவுளின் தனிப்பபெருங்கருணையினாலும், திரிதேக சித்தி பெற்ற திருவருட் பிரகாச வள்ளற் பெருமானின் திருவருளாசியினாலும், நம் தயவு சத்திய ஞான ராஜ மகா குரு தயாப் பிரகாசர் தயாநிதி தயவுத் தந்தை தயவுக்குரு தயவுத் தெய்வம், தயவு சத்திய ஞான கோட்டத் தலைவர், தயாபெருஞ் ஜோதி தனிப்பெருந்தயவு வடிவான சமரச சுத்த சன்மார்க்க சத்திய மெய்ஞ்ஞான தயாசித்தர் சுவாமி சரவணானந்த பரமான்மபதி திண்டுக்கல் பொன்னகர அனககுரு மகானின் திருவருள் தயவு வல்லபத்தாலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
மேலும் இந்த ஆடி மாதத்தில்தான் சுத்த சன்மார்க்க உலகத்தில், தமிழ் ஞான சித்தர்கள் தீர்க்க தரிசனமாகக் கண்டிருந்த ஓர் அதி அற்புத நாள். எல்லாம் வல்ல இயற்கை பெருஞ் சித்துச் செயல்கள் ஒட்டு மொத்தமாக பரிபூர்ணமாக எங்கும் வெளிப்பட்ட நாள். அனைத்து சித்த மகா புருஷர்களின் தினம். வள்ளற் பெருமான் திரிதேக சித்தி பெற்ற 1874ம் ஆண்டிலிருந்து 69 ஆண்டுகளுக்குப்பின், அதாவது வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற 1823ம் ஆண்டிலிருந்து 120வது ஆண்டில், கலியுகம் முடிந்து சுத்த சன்மார்க்க காலம் தோன்றிய நாள். கர்ம சித்தர் காலம் முடிந்து ஞான சித்தர் காலம் தோன்றிய நாள். அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரும் அருட்பிரகாச வள்ளலாரும் இரண்டற்ற ஒன்றாக இருந்து, ஒரு அதிபக்குவப்பட்ட திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் சிரநடு சிற்றம்பலத்தின்கண், சுத்த சன்மார்க்க இயற்கை கொள்கை விளக்கமாக தயவு உதயமான நாள்.
அதே நேரத்தில் அனைத்து பக்குவப்பட்ட ஆன்மாக்களிலும், வள்ளலாரின் திரிதேக சித்தி உண்மை ஒரு “தயவு” ஆக பதிவான நாள். நம் திண்டுக்கல் சுவாமிகள் தயாஞானம் பெற்ற நாள். மாபிரபஞ்சத்தின் மையப் புள்ளியும் சிற்பிரபஞ்சமாம் நம் பிண்ட தேகத்தின் சிரநடு சிற்றம்பல மையப் புள்ளியும் ஒன்று சேர்ந்த நாள். அண்டத்திலே குரு, சூரியன், சந்திரன் ஆகிய மூன்றும், “முப்பொருளும் ஒன்றதென்பார் வெண்ணிலலவே – மூன்றும் ஒன்றாய் முடிந்த தென்ன வெண்ணிலாவே” என்ற வள்ளலாரின் வாக்குப்படி. மேற்படி மூன்றும் ஒன்றாகி கடக நடுப் பூசத்தில் ஒரே புள்ளியில், பாகையில், டிகிரியில், பாதத்தில், ஒரு ‘தயவு’ ஆக வெளிப்பட்ட நாள். ஆம். அதுதான் சுபானு ஆண்டு ஆடித் திங்கள் 17ம் நாள்,. 1.8.1943ம் நாள். அன்று ஆடி அமாவாசை தினமாக இருந்தது. இந்த 2009ம் ஆண்டில் ஆடி அமாவாசை தினம் 21.7.2009ல் வந்திருக்கின்றது.
இதனை அடுத்து 22.7.2009ல், வடலூர் மாத பூச நாள். இப்படிப்பட்ட அனுபவங்களை எல்லாம் ஈட்டிக் கொண்டு இன்றைய தினத்திலே இந்த பொன்னகரத்தில் அனகமாக ஆடி அமாவாசை பூச விழாவினை மிக ஆழ்ந்த நிலையில் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். இந்தக் காலம் ஒரு தயவுப் பொற்காலம். உலகமெல்லாம், எல்லாம் வல்ல இயற்கைப் பெருந்தயவுச் செயல்கள் அனகமகக, எங்கும் எதிலும் எவரிலும் தொடர்ந்து வெளிப்படும். இந்த ஒப்பற்ற ஒரு தயவைப் பற்றி எல்லோரும் தெரிந்து கொள்வார்கள் என்றார்.
இதன் பின்னர் தயவுத்திரு பி. மோகன் அவர்களால், வள்ளலார் அருளிய பேருபதேசம் வாசிக்கப்பட்டது.
அடுத்ததாக, தயவுத் திரு பொன் சங்கர் அவர்கள், சுவாமிகள் அருளிய அருட்பெருஞ் ஜோதி அகவல் உரைவிளக்கத்திலிருந்து 13 மற்றும் 14ம் வரிகளுக்கான உரை விளக்கத்தினை வாசித்து அனைவருக்கும் விளக்கி கூறினார்.
மதுரை வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் ட்ரஸ்டி திரு ஏ.ராமானுஜம் தமது உரையில், வள்ளலார் ஸ்பேஸ் இணைய தளத்தின் மூலம், சுவாமிகளின் பல நூல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன என்றார். அவையாவன:
1) அருட்பெருஞ் ஜோதி அகவல்.
2) அட்டகம்
3) பரமான்மபதி
4) அருட்பிரகாசம்
5) தயவு
6) தயவுப் பாக்கள்
7) ஞான சரியை
8) தற்சுதந்திரமின்மை
9) தயவுக் குறள்
10)தைப்பூச வெளியீடுகள்
11)திருப்பள்ளி எழுச்சி
12)நாளந்தாதி
சுவாமிகள் இயற்றி அருளிய எந்த நூலை எடுத்துக் கொண்டாலும், அதனை ஆழ்ந்து படித்துப் பொருள் கொண்டால், 10 பக்கங்களிலேயே சுத்த சன்மார்க்க உண்மைக் கருத்துக்களைத் தெரிந்து கொள்ளலாம் என்றார். மேலும், இந்த மாதப் பூச பெருவிழாவிற்கு வருகை தரும் அன்பர் ஒவ்வொருவரும், சுவாமிகளின் நூல்களைப் பெற்றுச் செல்ல வேண்டும் எனவும், ஏற்கனவே, சில புத்தகங்கள் இருந்தால், சுவாமிகளின் ஏனைய அருள் நூல்களை வாங்கிப் பயன் பெற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
தினமும் www.vallalarspace.com இணைய தளத்தின் மூலம் அருட்பெருஞ் ஜோதி அகவல் (2 வரிகளுக்கான உரைவிளக்கம்) தயவுக் குறள் (1 குறளுக்கன விளக்கம்). நாளந்தாதி முதலான நூல்கள், வெளியிடப்படுவதால், மலேசிய நாட்டில் பணிபுரியும் சுங்கை பெடானி, டாக்டர் திரு பி. விநாயக மூர்த்தி அவர்கள், தாம், தினந்தோறும், சுவாமிகள் எழுதி வெளியிடப்படும் இந் நூல்களை இணைய தளத்தில் படித்துவிட்டுத்தான் தமது அலுவலகத்திற்குச் செல்வேன் என்று இ.மெயில்மூலம் செய்தி கொடுத்திருந்தார் என்பதையும், அவர் சுத்த சன்மார்க்கத்தில் எவ்வளவு ஆழ்ந்திருந்தால், இவ்வளவு ஈடுபாட்டுடன் படித்த பின், அலுவலக வேலைகளைத் தொடர்வேன் எனச் சொல்வார் என்பதை அன்பர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
புதுக் கோட்டை மாவட்டத்தில், கிட்டத்தட்ட 150 சன்மார்க்க சங்கங்கள் உள்ளன என்றும், 25 ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடும் விதத்தில், அந்த மாவட்ட அன்பர்கள், வெள்ளி விழா மலர் வெளியிட்டிருப்பதை அவர், அன்பர்கள் மத்தியில் காட்டினார். இது போன்று மாவட்டந்தோறும், எழுச்சி மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்றார்.
மேலும், ஸ்ரீலங்காவில், சண்டை முடிவுற்றுவிட்டதால், வெகு விரைவில், சாவகச் சேரி சத்திய ஞான கோட்டம் துவக்கப்படலாம் என்ற யூகம் உள்ளதால், அன்பர்கள் அனைவரும், இலங்கை செல்வதற்கு வாய்ப்பாக, பாஸ்போர்ட் எடுத்து வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். திரு கேத்தீஸ்வரன் அவர்கள், இந்தியாவிலிருந்து, சன்மார்க்க அன்பர்கள் பெருவாரியாக, சாவகச்சேரி சத்திய ஞான கோட்டம் துவக்க விழாவில் பங்கேற்க வேண்டும் என பேராவல் கொண்டுள்ள விபரத்தையும் அவர் நினைவு கூர்ந்தார்.
சிவகங்கையில் மெளன சித்தர் அருள் பீடத்தில், அங்கு உள்ள அன்பர்கள் திரு காளிதாஸ் வகையறாவினர் மூலம், சத்திய ஞான சபை துவங்கப்பட்டுள்ளதை அவர் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டத்தில், மானாமதுரை வட்டத்தில் உள்ள மூங்கில் ஊரணி என்ற கிராமத்தில், தமது கடைசிச் சகோதரி திருமதி ஜெய வள்ளி நாயகம், ஒரு சத்திய ஞான சபை கட்டி வருவதாகவும், கூடிய விரைவில் அது திறப்பு விழா காண இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சுவாமி அவர்கள் திருமதி வள்ளியின்பால் கொண்டிருந்த அன்பினையும் அவர் எடுத்துரைத்தார்.
வரும் ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில், விழுப்புரத்தில், சன்மார்க்க அன்பர் ஆன்மநேயன் திரு ஜெய அண்ணாமலை அவர்கள், சுத்த சன்மார்க்க எழுச்சி மாநாடு போட்டிருப்பதையும், வாய்ப்பு உள்ள அன்பர்கள் அம் மாநாட்டில் கலந்து கொள்ளும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.
மதுரை மாவட்டத்தினைப் பொறுத்த மட்டில், சுற்றிலும் உள்ள கிராமங்களில் வள்ளற் பெருமானின் கொள்கை விளக்கக் கூட்டங்களின் மூலம், அதனைப் பரப்பி வருவதாக சொன்னார். இதே போன்று, திண்டுக்கல் மாவட்டத்திலும், கிராமங்கள் தோறும் அன்பர்கள், சுத்த சன்மார்க்கப் பிரசாரத்தினைத் துவங்கி, நல்ல முறையில் அது பரவுவதற்குத் துணை புரிய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இந்த மாதப் பூச நாள் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
அடுத்த மாதப் பூச விழா இந்த அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் 16.8.2009 ஞாயிற்றுக் கிழமை நடைபெற இருப்பதாகவும், மற்றும் இந்த மாதத்தில் நடைபெற இருக்கின்ற சன்மார்க்க நிகழ்வுகளைப் பற்றியும் தயவுத் திரு வே. அருணகிரி அவர்கள் அறிவித்தார்.
இதன் பின் அருட்பெருஞ்ஜோதி தயவுப் பிரார்த்தனை தயவுத்திரு எம். ராமலிங்கம் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. அடுத்து ஜோதி வழிபாடு மற்றும் விண்ணப்பம் சொல்லப்பட்டது.
இக் கூட்டத்தில் சுமார் 120 சன்மார்க்க அன்பர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திண்டுக்கல் தயவுத் திரு எஸ். விஸ்வநாதன் – தயாவதி குடும்பத்தினர் மற்றும் நாகல் நகர் தயவுத்திரு எல். குருமூர்த்தி ஜோதி குடும்பத்தினர் மற்றும் சின்னாளப்பட்டி ஹரிஹரன் குடும்பத்தினர் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டோருக்கு அன்னமளிப்பு உபயம் செய்து அன்பர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கும் பசியாற்றுவித்தல் பணியினை நிறைவேற்றினர்.
விழா அதன் பின் இனிது முடிவடைந்தது.
P Sujatha
கருணைமிகு ராமனுஜம் அய்யா,
பொன்னகரம் தயவு இல்லத்தை பற்றிய செய்திகளை வெளிஇடுவதற்கு நன்றி.
திருவருளால் பொன்னகரத்தில் நடைபெறும் அதிகமான சன்மார்க்க நிகழ்வுகளை நானும் அறிந்து கொள்ள வைத்ததற்கு நன்றி.நல்ல சன்மார்க்க அன்பர்களையும் அறிந்து கொண்டு வருகிறேன்.வள்ளலார் கருணையுடன்,அருள்ஜோதி சுஜாதா.
Wednesday, August 12, 2009 at 03:41 am by P Sujatha