திண்டுக்கல் தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்களின் மூன்றாம் ஆண்டு
மகா குருபூஜை நிகழ்ச்சித் தொகுப்பு.
இடம் – அருட்பெருஞ்ஜோதி தயவு ஆலயம், பொன்னகரம், திண்டுக்கல்.
4.4.2009 சனிக்கிழமை (மாலை 6.30 மணி)
தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்களின் மூன்றாம் ஆண்டு மகா குருபூஜை நிகழ்ச்சிகள் 5.4.2009 ந்தேதி ஞாயிற்றுக் கிழமை எனக் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், அதற்கு முதலாம் நாளான 4.4.2009 சனிக்கிழமை அன்று மாலை சுமார் 6.30 மணி அளவில், கோயம்புத்தூர் ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் நிறுவனத் தலைவர் திரு ராம்தாஸ் மற்றும் அவருடன் அவரது நிறுவனத்தில் பணிபுரியும் தயா சன்மார்க்க அன்பர்கள் திரளான அளவில் கலந்து கொண்டு, திருவருட்பா இசைக் கச்சேரியினை, பொன்னகரத்தில் நிகழ்த்தினர்.
கடந்த ஆண்டும், சுவாமிகளின் 2ஆம் ஆண்டு குருபூஜை நாளுக்கு முன் நாளில் அந்நிறுவனத்தின் அன்பர்களில் பெரும்பாலோர், இங்கு வந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சன்னதியின் முன்னும், சுவாமி சரவணானந்தா அவர்களின் நினைவாகவும் இசை விழாவே நடத்தியது, மிகவும் குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் சன்மார்க்க சீலர்கள் அனைவரும் அந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தது, மிகவும் அருமையான ஒரு நிகழ்வு ஆகும்.
இந்த ஆண்டிலும், அதே பணியினை, தயாவொளி இயக்கத்தைச் சேர்ந்த அன்பர்கள், தமது கடமையாகவும், பிற அன்பர்களுக்கு, திரு அருட்பாவின் மேன்மையும், அதனை இசை வடிவில் உளமுருக எவ்வகையில் பாடலாம் என்றதை உணர்த்தும் வகையிலும் அவர்கள் பாடினர்.
4.4.2009 அன்று கலந்து கொண்டவர்கள் பெயர்கள் முதலிய விபரம்.
திரு ராம்தாஸ், ஸ்ரீராம் கார்த்திக் பாலிமர்ஸ் நிறுவனர்.
திருமதி ஸ்வர்ண லதா, நிறுவனரின் மனைவியார்.
திரு சிவக்குமார், சரவணம்பட்டி.
திருமதி தமிழரசி, அவரது மனைவியார், சரவணம்பட்டி.
திரு பிரபாகரன், மசக்காளிபாளையம், கோயம்புத்தூர்
செல்வி மீனா, கோயம்பத்தூர்.
திரு ராமச்சந்திரன், கோயம்புத்தூர்.
திரு அன்பு, கோயம்புத்தூர் (மிருதங்க வித்வான்)
திரு சாம்ராட் (கீ போர்டு வாசிப்பவர்)
ரமேஷ், கோயம்பத்தூர்
ஜெயசீலன், கோயம்புத்தூர்.
இவர்கள் அனைவரும் திருவருட்பாக்களை மிகுந்த ஆன்மக் குழைவுடனும், அருமையான இசையுடனும் மேற்காணும் சந்நதியில் வாசித்தனர்.
அதனைக் காண, திண்டுக்கல் ஜூவல்லரி நிறுவனர், திரு மேடா நித்தியானந்தம், பாளையங்கோட்டை டாக்டர் லக்ஷ்மையா குடும்பத்தினர் மற்றும் மதுரை நாராயணபுரம் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் ட்ரஸ்டி திரு ஏ.ராமானுஜம், திண்டுக்கல் விசுவநாதன் மற்றும் பல சன்மார்க்க அன்பர்கள் வருகை புரிந்திருந்தனர்.
திருவருட்பாவினை, தமது நிறுவனத்தின் அன்பர்கள் அனைவருடனும் வந்து அருட்பெருஞ்ஜோதி தயவு ஆலயத்தின் முன் பாடிப் பரவசப்படுத்தியமைக்கு, அந் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அன்பர்கள் அனைவரும் பாராட்டுத் தெரிவித்தனர்.
5.4.2009 (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.00 மணி.
5.4.2009 அன்று காலை, பாளையங்கோட்டை தயவுத்திரு Dr. லக்ஷ்மையா அவர்கள் சுத்த சன்மார்க்கக் கொடியினை ஏற்றி வைத்தார். திரளான அன்பர்கள் அவ் விசேஷத்தில் கலந்து கொண்டு, திருவருட்பாவில் சிற்சக்தி துதி வாசித்தனர்.
பின்னர் தயவுப் பாக்கள் அதனை அடுத்து, திருவடிப்புகழ்ச்சி, அருட்பெருஞ்ஜோதி அகவல், அட்டகம் முதலானவை சன்மார்க்க அன்பர்களால் பாடப்பட்டன. சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் வருவதை எதிர்பார்த்து, அதுவரை திரு அருட்பா இசை மழையை வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் நிறுவனர் திரு ஏ.ராமானுஜம் மற்றும் திண்டுக்கல் விஸ்வநாதன் ஆகியோர் பாடினர்.
சுமார் 10.00 மணி அளவில் விழா நிகழ்ச்சிகள் துவங்கின.
திண்டுக்கல் சன்மார்க்கப் பெரியவர் திரு N.V.G.B. இராஜாராம் அவர்கள் தலைமை ஏற்று இவ் விழாவினை நடத்தினார். அவர் தமது உரையில் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்.
சுவாமிகள் திண்டுக்கல்லிலே அவதரித்ததே நமக்கெல்லாம் பெருமை. ஒரு புண்ணிய ஆத்மா அவர். அவர் வாழ்ந்த காலத்தில், நாமெல்லாம், இங்கு வசித்து, அவருடன் பழகியுள்ளோம். சிறுவயது முதலே அவர், தமது வாழ்க்கையினை, அருள் நெறியாகவே மாற்றிக் கொண்டார். அக ஆய்விலேயே தம்மை சுவாமிகள் ஈடுபடுத்திக் கொண்டார். இங்கு இருந்த சபாபதி சுவாமிகளிடம் குருகுல வாசம் கற்றார். பின்னர் சுவாமிகள், 1930ஆம் ஆண்டு வடலூரில் ஜோதி தரிசனம் கண்டு, அங்கேயே தங்கி பின்னர், மேட்டுக்குப்பத்திலும் தங்கியிருந்தார். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளினைப் பெற்றார்.
அவர் ஏழு நிலைகளைக் கடந்தவர். அப்படிப்பட்ட ஞானிகளால்தான் அருட்பெருஞ்ஜோதி அகவல் போன்ற அருள் நூல்களுக்கு அருள் உரை எழுத முடியும். மற்ற யாராலும் சாதாரணமாக எழுதி விட முடியாது. இதனை பொள்ளாச்சி அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்களே கூறியுள்ளார். 798 நாட்கள் ஒவ்வொரு நாளும் 2 வரிகளுக்கு உரை எழுதி, எழுதி சுவாமிகள் தம்மிடம் வைத்திருந்தார். அருட்செல்வர் திரு நா. மகாலிங்கம் அவர்கள், இங்கு அடிக்கடி வந்து போகும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். சுவாமிகளையும் அவர் அடிக்கடி சந்திப்பார். அப்படி வந்த போது, ஒரு நாள் சுவாமிகளிடம் அருட்பெருஞ்ஜோதி அகவலுக்கு உரை எழுதியது குறித்து விசாரித்த போது, சுவாமிகள் தாம் எழுதி வைத்திருந்த அகவல் உரை விளக்கம், 4 பைண்டு நோட்டுப் புத்தகங்களை, உடனே எடுத்து அவரிடம் கொடுத்தார். அதனை அருட்செல்வர் அச்சிட்டு சன்மார்க்க உலகம் முழுதும் பயன்பெறும் விதத்தில் வெளியிட்டார். சுவாமிகள் சுத்த சன்மார்க்க அனுபவம் பெற்றவர். தவ வாழ்க்கை வாழ்ந்தவர். நிறைய நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். 7 திரைகளைக் கடந்து, தத்துவத்திரை, மற்றும் விஷயத் திரைகளைக் கடந்தவர்கள் தான், இறைவன் ஆக முடியும். சுவாமிகள், அந் நிலை அடைந்தவர். இதற்கெல்லாம், இறைவனின் அருள் வேண்டும்.
மற்றெல்லா உயிர்களுக்காக நான் வாழ வேண்டும் எனச் சொல்லி, அதன்படி, வாழ்ந்து காட்டியவர் சுவாமிகள். இந்திரிய, கரண, ஜீவ, ஆன்ம ஒழுக்கங்களைத் தவறாமல் கடைப்பிடித்து, ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும் மேற்கொண்டால், சுத்த பிரணவ, ஞான தேகத்தை எல்லவரும் அடையலாம். 84 லட்சம் சர அசர பேத உயிர்களுக்குப் பின், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெருங்கருணையினால் கிடைத்த இந்த மானிடப் பிறப்பினை வைத்துக் கொண்டு, இறை அருளைப் பெற முயற்சிக்காது, ஒரு வினாடியாவது காலந்தாழ்த்தலாமா ? சத் விசாரம் செய்து இறைவனின் உண்மை நிலையினை அறிந்து, அதனை வாழ்விலும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். சுத்த சன்மார்க்க நெறி, இந்த நாடு முழுவதும், இந்த உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பரவி, மனித குலம் திருவருட்பிரகாச வள்ளற் பெருமான் வகுத்துத் தந்த இறவாப் பெரு நிலலயினை அடைய வேண்டும்.
இதே திண்டுக்கல்லிலே, மலையடிவாரத்திலும், சுத்த சன்மார்க்கக் கூட்டங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. நல்ல பெருவாரியான அன்பர்கள் அங்கு வந்து கூடி, சுத்த சன்மார்க்க சான்றோர் பெருமக்களின் சொற்பொழிவுகளைக் கேட்டு, தமது வாழ்வில், நல்ல முன்னேற்றம் பெற்று வருகின்றனர். அதேபோல், இங்கு, சுவாமி சரவணானந்தா அவர்களின் அருட்பெருஞ்ஜோதி தயவு ஆலயத்திலும், வாராந்திரமாகவும், மாதாந்திரமாகவும், இன்று நடைபெறுவது போன்று, வருடாந்திர விழா நாட்களிலும், சன்மார்க்கச் சொற்பொழிவுகள் நடந்து சுத்த சன்மார்க்க விளக்கங்கள் அனைத்து மக்களுக்கும் கிடைத்து வருகின்றது. இது மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று. அதற்கு வழி வகுத்தவர், நமது சுவாமிகள். அதனை திரு S.R. ராமலிங்கம் குடும்பத்தினர், நல்ல முறையில் தொடர்ந்து செய்து வருகின்றனர். இது போன்ற நிகழ்ச்சிகளில், இன்னும் பல அன்பர்களும் வந்து இந் நெறியினைப் பயின்று வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் பெற்று, ஆண்டவரின் அருளுக்கு ஆளாக வேண்டும்.
திண்டுக்கல் திரு S.S. சிவராம் அவர்கள், இந்த விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த அன்பர்களை வரவேற்று, தனது உரையில் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்.
சுவாமி சரவணானந்தா அவர்கள் தயவை உயிர்மூச்சாகக் கொண்டார். மனித குலத்திடையே நிலவி வந்த அஞ்ஞானத்தை அகற்றி, மெய்ஞ்ஞானத்தைப் போதித்தார். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை எளிய முறையில் அடைய முடியும் என வள்ளற் பெருமானார் சொல்லிச் சென்றார். அதனை தயவுப் பெரு நெறியினைக் கடைப்பிடிப்பதன் மூலம் வெகு எளிதாக அடையலாம் என்று தக்க வழி வகுத்துத் தந்தவர் நமது தயாநிதி சுவாமி அவர்கள். ஒரு நிகழ்ச்சியில் ஒரு பத்திரிக்கை ஆசிரியர் சுவாமிகளைச் சந்திதார். அவர், சுவாமி, தாங்கள், இத்தனை ஆண்டுகளாக என்ன கண்டீர்கள் என்றார். சுவாமிகளோ, இந்த வீட்டைப் பொன்னாக்க முடியும். ஆனால் அது பெரிதல்ல. இந்த மனித குலம் வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கத்துக்கு வரவேண்டும். அதற்கு தயவு பெரு நெறியினைக் கடைப்பிடிக்க வேண்டும் எனச் சொன்னார்கள். சுவாமிகள் சொல்லிச் சென்றது போல, அனைவருமே, தயவுப் பெருநெறியினைத் தமது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். அதன் மூலம், மேலேற வேண்டும்.
திரு ஏ.ராமானுஜம், மேனேஜிங் ட்ரஸ்டி, வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன். மதுரை.
திண்டுக்கல் பல வகைகளில் பெயர் பெற்றது. திண்டுக்கல் பூட்டுக்குப் பெயர் பெற்றது. ஒரு கால கட்டம் வரை, வாக்காளர் பட்டியல் (Electoral Roll) அச்சிடும் பணியின் மூலம், பெயர் பெற்றது. இந்த தமிழ் நாட்டிலுள்ள அனைத்துத் தொகுதியின் வாக்காளர் பட்டியலும் இங்கே வந்து நடேசர் பிரஸில் அச்சிடுவது வழக்கம். அதன் மூலம் இங்கு வரும்போதுதான் தயாநிதி சுவாமிகளை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவரது அருள் விளக்கம் அன்றே கிடைத்தது. அதன் மூலம் தயவுப்பெரு நெறி பயிலும் வாய்ப்புக் கிட்டிற்று.
வள்ளல் பெருமான், மருதூரில் அவதரித்தவர். சுத்த சன்மார்க்க நெறியினை உலகிற்குப் பரப்பியவர். அவர் பாடிய திரு அருட்பா பாடல்களில், முக்கியமான பல பாக்களுக்கு, நமது திண்டுக்கல் சுவாமி அவர்கள் உரை வெளியிட்டார்கள். ஆன்ம நிலையில் இருந்து ஒருவர் பாடியதற்கு, ஆன்ம நிலையில் இருந்து ஒருவர் விளக்கம் கொடுத்தார் என்றால், அவரை யார் என உணர்வது, இங்கு வந்திருக்கும் அனைவரின் கடமை ஆகும். அவ்விதமாக தயவுப் பெரு நெறியினை வகுத்துத் தந்த வள்ளல், இங்கே திண்டுக்கல்லில் உதித்து, இன்றும் அனக வாழ்வு மூலம் நம்மை எல்லாம் வழி நடத்திக் கொண்டுள்ளார்.
திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் திரு அருட்பாக்கள், உரைநடைப் பகுதிகள் மற்றும் உள்ள நூல்களை, www.vallalar.org இணைய தளத்தின் மூலம், உலகெங்கும் பரவச் செய்தார், ராமநாதபுரம் வள்ளலார் யுனிவெர்சல் மிஷன் ட்ரஸ்ட் நிறுவனர் திரு ஜோதி முருகன் அய்யா அவர்கள். அவர், சுவாமிகளின் தயவு பெரு நெறி பரப்பும் நூல்களை, சுமந்து சென்று, பல இடங்களிலும் விற்கும் பணியினை தமது சிரமேற்கொண்டது, இந்த சன்மார்க்க உலகமே அறியும்.
திண்டுக்கல் நகரில் உதித்து, தற்போது, அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அன்பர் திரு செந்தில் மருதையப்பன் அவர்கள், வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினை இணைய தளத்தின் மூலம் (www.vallalarspace.com) இந்த உலகெல்லாம் பரப்பும் பணியினை மேற்கொண்டுள்ளார். தமக்கு வள்ளற் பெருமானின் உணர்த்தியதன் விளைவாக அவர் இந்தச் சிறப்பான பணியினை மேற்கொண்டுள்ளார்.
|
1.
|
இணைய தளம் துவக்கப்பட்ட மாதம்
|
ஏப்ரல், 2008
|
|
2.
|
5.4.2009 வரை இந்த இணைய தளத்தினைப் பார்த்து சுத்த சன்மார்க்க அருள் நலம் பெற்றவர்கள்
|
2,17,000.
|
|
3.
|
மகாமந்திரம் எப்படி கேட்பது ?
|
அதற்கென தனியே வசதி செய்யப்பட்டுள்ளது.
|
|
4.
|
அடுத்து வரவிருக்கும் நிகழ்ச்சிகளை எப்படி அறிவது ?
|
அதற்கென ஒரு பகுதி ஒதுக்கப்பட்டு, ஒரு மாதத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
|
|
4.
|
வெளி நாட்டினர் இதனை எப்படி அறிந்து கொள்கின்றனர்.
|
பல்வேறு நாடுகளில் பேசப்படும் 25 மொழிகளில் திரு அருட்பா மற்றும் அதனைச் சார்ந்த செய்திகளை இந்த இணைய தளத்தின் மூலம் காண்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
|
|
5.
|
ஏனையோர் இந்த இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளனரா ?
|
ஒதுக்கீடு செய்யப்படும் நபர்களுக்குரிய பெயர் விவரங்களுடன் ஸ்பேஸ் டைரக்டரி உள்ளது.
|
|
6.
|
வெளி நாட்டினர் இந்த இணைய தளத்தில் இடம் பெறலாமா ?
|
ரஷ்யா, இலங்கை, சிங்கப்பூர், அமெரிக்கா, ப்ரான்ஸ், மலேயா, மியான்மர் (பர்மா) போன்ற மற்ற நாட்டினர் எல்லாம் இந்த இணைய தளத்தின் மூலம், தமது நாடுகளில் நிகழும் செய்திகளைத் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு, இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற நாட்டினர், இந்த இணைய தளத்தின் மூலம் நல்ல பலன் பெற்று, சுத்த சன்மார்க்க நெறியினைத் தீவிரமாக பிற நாட்டினர் எல்லாம், கடைப்பிடித்து வருகின்றனர். உதாரணமாக, ரஷ்ய நாட்டில் வட பகுதியில் உள்ள செய்ண்ட் பீட்டர்ஸ்பர்க் (St. Petersburg) என்ற நகரில் வள்ளலாரின் நெறிகள், அந்த Monestery யில் வாழும் 40 குருமார்கள் மூலம், ரஷ்யாவில் தெற்குப் பகுதிகளில் தற்போது பரப்பப் பட்டு வருகின்றது. அந்த குருமார்களில் நால்வர், கடந்த 29.1.2009, 30.1.2009 அன்று வடலூர் வருகை புரிந்தனர். வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் ட்ரஸ்டி திரு ஏ.ராமானுஜம், மற்றும் மேட்டுக் குப்பத்தில் வசிக்கும் சன்மார்க்க அன்பர் திரு. அருள்திருஞான சம்பந்தம் ஆகியோர், அவர்களுக்கு, சுத்த சன்மார்க்க நெறியின் சிறப்பினை எடுத்துச் சொல்லியுள்ளனர். வடலூர், மேட்டுக் குப்பம் ஆகிய இடங்களை எல்லாம் அவர்கள் தரிசித்துச் சென்றனர். பிள்ளைச் சிறு விண்ணப்பத்தை ரஷ்ய மொழியில் வெளியிட்டுள்ளனர். அதனை அடுத்து, வள்ளற் பெருமானுக்கு 8 மீட்டர் (25 அடி உயரத்தில்) செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் சிலை வைத்து, சன்மார்க்கம் ரஷ்யாவில் பரவுவதற்கு அருந்தொண்டாற்றி வருகின்றனர்.
|
|
7.
|
திரு அருட்பாவினை எவ்வாறு பெறுவது ?
|
சிங்கப்பூரில் உள்ள சன்மார்க்க அன்பர் திரு சிவக்குமார் மூலம், திரு அருட்பா தெய்வ இசை அமுதம் ப்ரொஜெக்ட் இயங்கி வருகின்றது. அதன் மூலம் திரு அருட்பாவில் உள்ள பாடல்கள் ஆடியோ சி.டி.யாக வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுவரை 12 ஆடியோ சி.டி.கள் வெளி வந்துள்ளன. இதுவரை பலரும் இந்த பணியினை மேற்கொண்டு பாதியில் விட்டுச் சென்றுவிட்டனர். ஆனால் இந்த இசை அமுதம் ப்ரொஜெக்ட் மூலம் அதனை முடிப்பது என கங்கணம் கட்டிக் கொண்டு திரு தருமலிங்க ஸ்வாமிகளின் இசை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. மிகக் குறைந்த விலையில் இதனை இந்த இசை அமுதம் ப்ரொஜெக்ட் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா நிகழ்ச்சியிலும், அந்த ஆடியோ சி.டி.கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
|
|
8.
|
எவ்வகையில் செய்திகள் வெளியிடப்படுகின்றன ?
|
தமிழிலும், ஆங்கிலத்திலும் இந்த உலகத்தின் எந்த மூலை முடுக்கில் சுத்த சன்மார்க்க செய்திகள் நிகழ்ந்தாலும், அவை எல்லாம் இந்த இணைய தளத்தில் வெளியிடப்படுகின்றன.
|
|
9.
|
ஆடியோ பாடல்கள், பேச்சுக்கள், வீடியோ காட்சிகள், நிகழ்ச்சிகள் முதலானவை இடம் பெற்றுள்ளனவா ?
|
எல்லா பகுதிகளிலும் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஆடியோ, வீடியோ மூலம் இந்த இணைய தளத்தின் மூலம் வெளியிடப்பட்டு, அகில உலகெங்கும் காணும் வசதி செய்யப்பட்டுள்ளது.
|
|
10.
|
திரு அருட்பா, உபதேசப் பகுதிகள் இந்த இணைய தளத்தின் மூலம் பெறலாமா ?
|
திரு அருட்பா, உபதேசப் பகுதி மற்றும் விண்ணப்பங்கள் முதலானவை, www.vallalar.org இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சன்மார்க்க அன்பர்கள் பயன் பெறும் விதத்தில் இலவசமாக டெளன்லோடு செய்து கொள்ளலாம்.
|
|
11.
|
திரு அருட்பா பாடல்களை குறிப்பிட்டு தேடும் வசதி உள்ளதா ?
|
அருட்பா பாடலின் முதல் வார்த்தை அல்லது அந்த பாடல் இடம்பெற்றுள்ள பதிகம் டைப் செய்தால், உடனே அதனை நாம் காணும் வகையில் இந்த இணைய தளத்தில் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
|
|
12.
|
சுத்த சன்மார்க்க நெறியில் ஏற்படும் சந்தேகங்களை எவ்வாறு நிவர்த்தி செய்வது ?
|
இதற்கென டிஸ்கஷன் போரம் (discussion forum) பகுதி துவக்கப்பட்டு, கேட்கப்படும் கேள்விகளுக்கு, மூத்த சன்மார்க்க அன்பர்கள் மூலம் சந்தேக நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.
|
|
13.
|
சுவாமி சரவணானந்தா அவர்களின் நூலகள் இந்த இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளனவா ?
|
ஆம். இதுவரை, சுவாமி சரவணானந்தா என்ற தலைப்பில் கீழ்க்காணும் நூல்கள் (முழுமையாகவோ பகுதியாகவோ) வெளியிடப்பட்டுள்ளன.
1) அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம்
2) அட்டகம்
3) தமிழகமும் தெய்வத் தத்துவமும்
4) நாளந்தாதி
5) தற்சுதந்திரமின்மை
6) அருட்பெருஞ்ஜோதி அகவல் (ஆங்கில உரை)
7) தயா விளக்க மாலை
8) தயவுக் குறள்
9) அருட்பெருஞ்ஜோதி தயவு
10) சத்திய ஞான குரு பூஜா மலர்
11) தயவுப் பாக்கள் முதலானவை.
|
|
14.
|
இந்த இணைய தளத்தில் இடம் பெற என்ன செய்ய வேண்டும். ?
|
சுத்த சன்மார்க்கத்தில் தமக்கு உள்ள ஈடுபாடு, செயல்பாடுகளை விளக்கி, நேரடியாக வள்ளலார் ஸ்பேஸ் டீமிற்கு விண்ணப்பித்தால், பரிசீலனைக்குப் பின் உடனே அனுமதி கிடைக்கும்.
|
வாழ்நாளில் தமக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பு, திண்டுக்கல் தயாநிதி சரவணானந்த சுவாமிகளையும், ராமநாதபுரம் ஜோதி முருகன் அய்யாவினையும் சந்தித்ததுதான் என்று திரு செந்தில் மருதையப்பன் அவர்கள் தெரிவித்து, இந்த சன்மார்க்கப் பணிகளை, அமெரிக்காவிலிருந்து, முழு முனைப்புடன் செயல்படுத்தி, உலகிலுள்ள அனைத்து நாடுகள் முழுவதும் வள்ளற் பெருமானின் நெறி பரவுவதற்கு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றார்.
அதேபோன்று சிங்கப்பூரில் வசிக்கும் அன்பர் திரு சிவக்குமார் அவர்கள் திரு அருட்பா தெய்வ இசை அமுதம் ப்ரொஜெக்ட் துவக்கி, திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் பாடிய அனைத்து திரு அருட்பாக்களையும் இசை வடிவில் ஆடியோ சி.டி.யாக்கி, கொடுத்து வரும் பணியினைத் திறம்படச் செய்து வருகின்றார். பல்வேறு கால கட்டங்களில், இதற்கு முன்னர், பல்வேறு அன்பர்களால் துவக்கப்பட்ட இப் பணி, ஏற்பட்ட இடையூறுகளால் தடைபட்டு வந்துள்ளதை சன்மார்க்க உலகம் நன்கு அறியும்.
ஆனால், 2012-ம் ஆண்டிற்குள் திரு அருட்பா ஆறு திருமுறைகளிலும் உள்ள திரு அருட்பாக்களுக்கு இசை வடிவம் கொடுத்து ஆடியோ சி.டி.வடிவில் வெளியிட்டு இந்தப் பணியினை நிறைவு செய்வது என்ற விதத்தில் சிங்கப்பூர் சிவக்குமார் அவர்கள் செயல்பட்டு வருகின்றார்.
மேலும், மதுரையில் இயங்கும் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன், அங்கு இயங்கி வரும் அருள் ட்ரஸ்ட் அன்பர் திரு முரளீதரன், செல்வி லலிதா மணி மற்றும் அன்பர்களை இணைத்துக் கொண்டு, கிரரமங்களில், சுத்த சன்மார்க்கம் பரப்பும் பணியினை மேற்கொண்டு வருகின்றது.
வீதிகளில், வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி, சுவாமிகளின் தயவுப் பெரு நெறியினை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில், இது வரை, கீழ்க்கண்ட கிராமங்களிலும், கல்லூரியிலும் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளது. அங்கெல்லாம் பிரச்சாரம் மற்றும் வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி அடங்கிய புத்தகங்கள், திரு அருட்பாவில் பாடல்கள் முதலானவற்றை கொடுத்து சுத்த சன்மார்க்கம் பரவுவதற்கு தனது பங்கினை ஆற்றி வருகின்றது.
28.2.2009 - குட்லாடம்பட்டி.(வாடிப்பட்டி தாலுகா)
7.3.2009 தென்கரை (உசிலம்பட்டி தாலுகா)
7.3.2009 விக்கிரமங்கலம் (உசிலம்பட்டி தாலுகா)
7.3.2009 இ.கோவில்பட்டி (உசிலம்பட்டி தாலுகா)
15.3.2009 சிந்தாமணி (மதுரை தாலுகா)
14.3.2009 திருநகர் சுமதி கேட்டரிங் காலேஜ்.(மதுரை தாலுகா)
29.3.2009 செட்டியபட்டி (உசிலம்பட்டி தாலுகா)
இன்னும் பல்வேறு கிராமங்களிலும், சுத்த சன்மார்க்க அன்பர்களை அழைத்துக் கொண்டு, தெருக்கள் தோறும் சுத்த சன்மார்க்க நெறியினைப் பரப்பும் பணியினை, வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மேற்கொள்ள உள்ளது.
திரு மேடா நித்தியானந்தம் அவர்கள், திண்டுக்கல்.
உலகம் முழுவதும், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி மற்றும் தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்களின் தயவுப் பெருநெறி பரவுவதற்கு, www.vallalarspace.com இணைய தளம் மிகப் பெருந் தொண்டாற்றி வருகிறது. சுவாமிகள் திண்டுக்கல்லில் உதித்தது மிகவும் சிறப்பு. அதே போல், இந்த இணைய தளமும், திண்டுக்கல் நகரைச் சேர்ந்த ஒரு அன்பரால், அமெரிக்காவிலிருந்து இயக்கப்படுவது, நமது திண்டுக்கல்லுக்கு மிகவும் பெருமையான விஷயமாகும்.
இந்த நேரத்தில் நான் வருத்தப்பட்டு ஒரு செய்தி சொல்வேன். சுவாமிகள் எழுதி, அச்சிட்டு வெளியிடப்படாத நூல்களில், நானே இரண்டு, மூன்று நூல்களை வெளியிட்டுள்ளேன். ஆனால், இன்னும் அச்சிட்டு வெளியிடப்படாத நூல்களை தயவு நூல் அறக்கட்டளை, முழுவதுமாக வெளியிட வேண்டும். இதுவே எனது கோரிக்கை.
திரு S.S.மோகன்ராம், திண்டுக்கல்.
மனித குலத்துக்கு ஒரு நல்லது நடக்க வேண்டுமென்றால், தயா ஒழுக்கம் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கு , முக்கிய காரண கர்த்தாவாக இருப்பது தாய்மார்கள் தான். ஏனெனில் அவர்கள் செய்து கொடுக்கும் உணவின் மூலம்தான், தயவு எண்ணங்கள் உதயமாகும். எனவே, அனைத்துத் தாய்மார்களும், சைவ ஆகார வகைகளைத் தேர்வு செய்து, தமது குடும்பத்தாருக்கு அமுதூட்டி, தயவு எண்ணங்கள் உதயமாவதற்கு தாம் காரண காரியஸ்தர் ஆக இருக்க வேண்டும்.
திரு ராமலிங்கம், திண்டுக்கல்.
சுவாமிகளை நினைத்தாலே, நல்லது நடக்கும். தயா விசாரத்தோடு, நான் ஒரு நாள் இரவு நினைத்தேன். என்ன ஆச்சரியம் ! நான் நினைத்தது நடந்தது. நினைத்ததை நடத்திக் கொடுப்பவர் நமது தயாநிதி சுவாமி அவர்கள். எனவே அன்பர்கள் அனைவரும், தயாவொழுக்க நெறி பூண்டு ஒழுகி, நான் பெற்ற இன்பத்தை, அனைவரும் அடைய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
இந் நிலையில், ஏ.ராமானுஜம், கீழ்க்கண்ட செய்திகளைச் சொன்னார்.
சன்மார்க்கத்தில் சாதித்து வருபவர்களைப் பற்றிச் சொன்னார். திண்டுக்கல் மாநகரில், உள்ள அன்பர்கள் அனைவருமே ஒவ்வொரு வகையில் சாதனை புரிந்து வருகின்றீர்கள். யாரையும் குறைத்துச் சொல்ல இயலாது. ஆனால், கீழ்க்கண்ட நபர்களைப் பற்றி, இந்த தருணத்தில், சுவாமிகளின் சன்னதியில் சொல்லியே ஆக வேண்டும்.
1) திரு கலியுக வரதன் – சென்னையில், ஜனவரி மாதம் 8.1.2009 முதல் 18.1.2009 வரை சுவாமிகளின் தயவு நூல்களுக்கும், திருஅருட்பா ஆடியோ சி.டி.விற்பதற்கும், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி பரவுவதற்குமாக, ரூ.25.000/- வரை செலவழித்து, புத்தக ஸ்டால் அமைத்து, சன்மார்க்கம் பரவுவதற்கு மிக்க உதவி செய்துள்ளார். அவரது ஒரு சாதனையாளர். இதற்கு, மதுரை அன்பர் ஞானதீபம் பத்திரிக்கை ஆசிரியரும், அருள் ட்ரஸ்ட் நிறுவனருமான, திரு முரளீதரன் மற்றும் சென்னை அன்பர் திரு கோசல ராமன் ஆகியோரும் முன்னின்று முதலில் நடத்திக் காட்டினர். அதனைத் தொடர்ந்து, சென்னை வில்லிவாக்கம் அன்பர் திரு பாலகிருஷ்ணன், மேட்டுக் குப்பம் அன்பர் திரு சேதுராமன், மதுரை மாவட்ட சன்மார்க்க சங்க தலைவர் திரு T.R. ஜவஹர்லால், வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டி திரு ஏ.ராமானுஜம் ஆகியோர் துணை நின்று, அந்த ஸ்டாலை நடத்தினர். இது சென்னையில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றது. சுத்த சன்மார்க்க நெறி சென்னையில் பரவுவதற்கு இது மிகவும் உதவிகரமாக இருந்தது. அங்கு வந்த அன்பர்கள் இந்த ஸ்டால் முடிவடைந்த பின், எங்கு, சென்று திரு அருட்பா ஆடியோ சி.டி. மற்றும் திரு அருட்பா சார்ந்த சுத்தசன்மார்க்க நூல்கள் பெறுவது என்று கேட்டனர். வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் நிறுவனர், பரங்கி மலையில் (St.Thomas Mount area) ஆடியோ சி.டி.கள் மற்றும் திருஅருட்பா புத்தகங்கள் கிடைப்பதற்கு உரிய ஏற்பாட்டினனச் செய்துள்ளார்.. தேவைப்படும் அன்பர்கள் 94440 79924 என்ற செல் மூலம் தொடர்பு கொண்டு அதனைப் பெறலாம்.
2) திரு ராம்தாஸ், ஸ்ரீராம் கார்த்திக் பாலிமர்ஸ் நிறுவனர், கோயம்புத்தூர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கோயம்புத்தூர் காந்திபுரம் பஸ் ஸ்டாண்டு எதிரில் புத்தகக் கண்காட்சி நடைபெற்ற போது, தயா ஒளி இயக்கத்தின் மூலம், திரு சாய்கணேஷ், (கோயம்புத்தூர்) மசக்காளி பாளையம் அன்பர் திரு பிரபாகரன், திரு ராம்தாஸ் திரு சிவக்குமார், அவரது மனைவியார் திருமதி தமிழ்ச் செல்வி ஆகியோர் இணைந்து, சுவாமிகளின் தயவு நூல்கள் விற்பனைக்கு என தனி ஸ்டால் பிடித்து தயவுப் பெரு நெறி பரவ உதவினார்கள். திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி கோயம்புத்தூர் மற்றும் அதனைச் சுற்றியும் உள்ள பல மாவட்டங்களிலும் பரவுவதற்கும் இது ஒரு முக்கிய காரணமாக இருந்தது. மதுரை வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டியும், தனது துணைவியாருடன், அந்த புத்தக ஸ்டாலில் இருந்து பணி புரிந்தார்.
3) திரு குமரேசன், காரைக்கால்,
இவர் பணி புரிவது காரைக்கால் ஏரியாவில் ஒரு கல்லூரியில். (Faculty of Management Studies, Assistant Place Officer) பணி புரிகின்றார். சுவாமிகளின் நூல்களில் உள்ள அறிவுரைகளின் பேரில் உண்மை குரு அகம் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் என்பதை தெளிவாக உணர்ந்த பின்னர், சுத்த சன்மார்க்க நெறி பரவுவதற்கு, தமது கல்லூரியில் பயிலும் 450 மாணவ, மாணவியரின் இ.மெயில் I.D.களைப் பெற்று அனுப்பி, www.vallalarspace.com இணைய தளம் வெளியிடும் செய்திகளை, இவர்கள் அனைவருக்கும் அனுப்புங்கள். இவர்கள் மாணவப் பருவத்திலிருந்தே சுத்த சன்மார்க்கப் பயிற்சி பெறட்டும் என்ற விதத்தில், திரு குமரேசன் தமது பணியினைச் சிறப்புற ஆற்றியுள்ளார். சமீபத்தில் பிப்ரவரி மாடம் வடலூருக்கு தைப்பூச விழாவிற்கு, தமது குடும்பத்தாருடனும், தன்னுடன் பணி புரியும் சக ஊழியர் சுமார் 15 நபர்களுடனும் வந்திருந்து சன்மார்க்கம் பரவுவதற்கு உதவிகரமாக இருந்தார். இணைய தளத்தில் சன்மார்க்கம் பற்றி, இவரும் தமது கருத்துக்களைத் தொகுத்து எழுதி வருகின்றார்.
4) திருபுவனம் திரு ஜி. ஆத்மநாதன், சென்னை.
கடந்த 4 ஆண்டுகளாக சென்னையில் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் திரு அருட்பாக்கள் பாடுவதற்கென டிசம்பர் மாதத்தில் ஒரு இசை விழா எடுத்து, இசைக் கலைஞர்களைக் கொண்டு திரு அருட்பாவினைப் பாட வைத்து, சன்மார்க்கத்தைப் பரப்பி வருகின்றார். கடந்த 2007ஆம் ஆண்டு, திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்திலும், 2008ஆம் ஆண்டில் டி.நகரில் வடக்கு உஸ்மான் ரோடில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமண மண்டபத்திலும் இசை விழா நடத்திக் காட்டியவர். வருடந்தோறும் சித்ரா பெளர்ணமி நாளில் திரு அருட்பா இசை விழாவினை, இந்த மாநிலத்தின் ஏதாவதொரு மாவட்டத்தில் நடத்தி, சன்மார்க்கம் பரப்ப உறுதுணையாக உள்ளார்.
5) திரு கண்ணப்பன் (2 கண்கள் இல்லாதவர்), சென்னை.
இவர், திரு அருட்பா தெய்வ இசை அமுதம் மூலம் வெளியிடப்படும் ஆடியோ சி.டி..களைப் பெறுவதில் முதல் நபராக உள்ளார். இவரது மனைவியாரும் இரு கண்களும் இல்லாதவர். சென்னையில் திரு கண்ணப்பன் ஒரு நிறுவனத்தில் பணி புரிகின்றார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர், இவருக்கு கிட்டத்தட்ட 110 திரு அருட்பா ஆடியோ சி.டி.கள் அனுப்பி விற்பனை செய்யக் கேட்டுக் கொண்டதன் பேரில், ஒரே வாரத்தில் விற்று, சாதனை படைத்த தகைமையாளர்.
6) திரு செந்தில் மருதையப்பன், திண்டுக்கல் (இருப்பு) நியூ ஜெர்ஸி, அமெரிக்கா.
www.vallalarspace.com இணைய தளத்தைத் துவக்கி, உலகின் பெரும்பாலான நாடுகளை, ஒருங்கிணைக்கும் பணியினைச் செய்து வருகின்றார். பல நாடுகளில், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் வகுத்த சுத்த சன்மார்க்க நெறி மற்றும் திண்டுக்கல் சுவாமிகளின் தயவுப் பெரு நெறியினைப் பரவுவதற்கு முக்கியமான காரணமாக உள்ளார்.
7) திரு சிவக்குமார், பொள்ளாச்சி, (இருப்பு) சிங்கப்பூர்.
திரு அருட்பா தெய்வ இசை அமுதம் ப்ரொஜெக்ட் என்ற ஒரு சிறந்த பணியினை மேற்கொண்டு, திருவண்ணாமலை திரு தருமலிங்க சுவாமிகள் மற்றும் அவர்கள் மூலம் ஏராளமான இசைக் கலைஞர்கள் வாயிலாக, திரு அருட்பாக்கள் பலவற்றை ஆடியோ சி.டி.யில் வெளிக் கொண்டு வரும் பணியில் தம்மை கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளவர். 2012ஆம் ஆண்டிற்குள் 6 திரு அருட்பா திருமுறைகளிலும் உள்ள பாடல்களுக்கு இசை வடிவம் கொடுத்து,. ஆடியோ சி.டி.யாக வெளிக் கொண்டு வருவதில் முனைப்புடன் செயல்பட்டு வருபவர்.
எனவே மேற்குறிக்கப்பட்ட அனைவரும் சுத்த சன்மார்க்க உலகில் சாதனை படைத்து வருகின்றனர். சுவாமிகள் மற்றும் திருஅருட்பிரகாச வள்ளற் பெருமானின் ஆசிகளுக்குரியவர்கள்.
திரு கலியுக வரதன், செயலாளர், சன்மார்க்க சங்கம், தூத்துக்குடி.
கடந்த ஆண்டு, பாபநாசத்தில் சன்மார்க்க வாழ்வியல் நடத்தப்பட்டது. அடுத்ததாக, சென்னையில் புத்தக விழாவில் தனியே ஒரு புத்தக ஸ்டால் எடுக்கப்பட்டது. அடுத்து வரவிருக்கும் வருடங்களிலும், சுவாமிகளின் தயவுப் பெரு நெறியினைப் பரப்பும் நூல்களுக்கும், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி குறித்த நூல்கள் விற்பனை செய்வதற்கென்றே, தனித்தனியே ஸ்டால்கள் போட்டு, சுத்த சன்மார்க்கத்தைப் பரப்ப வேண்டும். திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதியுள்ள அனைத்து நூல்களும் வெளிக் கொணரப்பட வேண்டும். அதன் மூலம் தயவுப் பெரு நெறி எல்லா இடங்களுக்கும் பரவ வேண்டும்.
திரு பாண்டுரெங்கன். முதன்மைக் கல்வி அலுவலர், மதுரை.
தயவு குறித்து திண்டுக்கல் சுவாமிகளிடம் தான் நான் தெரிந்து கொண்டேன். முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியேற்றவுடன் நான் சுவாமிகளிடம் ஆசீர்வாதம் பெற்று பொறுப்பேற்றேன். திண்டுக்கல்லில்தான் தயவு விளங்குகின்றது. கேட்பவர்கள்,. நடப்பவர்கள் எல்லோரும் தயவு என்ற வார்த்தையினை பேசக் கேட்டிருக்கின்றேன். அதனன வாழ்விலும் கடைப்பிடிப்பவர்களும், திண்டுக்கல்லில் உள்ளனர். சுவாமிகள் ஒரு ஞானி ஆவார். சுத்த சன்மார்க்க ஆற்றல். திண்டுக்கல்லில் நிரம்பி உள்ளது. தயவு என்றால் ஜீவஹிம்சை செய்யாதிருத்தல் எனவும் மற்றும் பல பொருள்கள் உள்ளன. வள்ளற் பெருமான், குரூரமாகப் பார்க்கக் கூடாது என்றார். கை படைக்கப்பட்டதே, எடுத்தல் கொடுத்தலாதிகளுக்குத்தான் என்று சொல்லியுள்ளார். ஜீவ ஒழுக்கம் கடைப்பிடித்து, தயவு இரக்கம், கருணை முதலானவற்றை விகற்பமின்றி நாம் வாழ்வில் கடைப்பிடித்து வரவேண்டும். சுவாமிகள் அனைத்தும் நிரம்பியவர். மனித சமுதாயம் ஜாதியினால் பிளவு படக்கூடாது. ஜாதி, சமய, மத, ஆசாரங்களால் யாரையும் நாம் காணக் கூடாது என்றவர். பிற மதத்தைச் சார்ந்தவர்களை,. தூஷணை பண்ணக்கூடாது. திண்டுக்கல்லில் தயவு நெறியில் ஏழை எளிய மக்களுக்கு நல்ல ஜீவகாருண்யத்துடன் அன்னமளிக்கின்றீர்கள். ஏன் ஏழை எளிய மக்களுக்கு உணவளிக்க வேண்டும் என வள்ளற்பெருமான் வலியுறுத்திச் சென்றார் ? தயவை விருத்தி செய்வது, உணவளிப்பது ஆகும். அதற்குத் தடையாக உள்ள ஜாதி, சமய, மத மாச்சரியங்களைத் தாண்டி நாம் வரவேண்டும். தயவின் வெளிப்பாடு இருந்தால் எல்லாவிதமான கஷ்டங்களையும் அதுவே தீர்க்கும். தீவிரமாகக் கடைப்பிடித்தால், நரை திரை விழாது, நடந்தால் நிழல் விழாது. எனவே நல்ல தயவாளர்களிடையே நாம் பழக வேண்டும். கூட்டுப் பிரார்த்தனைக்கு மிகவும் வலிமை உண்டு. அனைவரும் அருட்பெருஞ் ஜோதிஆண்டவர் முன் அமர்ந்து, மனதை சிற்சபையின் கண் செலுத்தி, கூட்டுப் பிரார்த்தனை செய்து, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும்.
திரு ராம்தாஸ், ஸ்ரீராம் கார்த்திக் பாலிமர்ஸ் நிறுவனர், கோயம்புத்தூர்.
1985ஆம் ஆண்டிலிருந்தே சுவாமிகளிடம் நான் நன்கு பழகி வந்தேன். சுத்த சன்மார்க்கத்தில் எனக்கு ஏற்படும் சந்தேகங்களை சுவாமிகளிடம் கேட்டுத் தெளிவு பெற்றேன். அதுவே எனக்குள் ஒரு மன மாற்றத்தை ஏற்படுத்தியது. வாழ்வில் கஷ்டம் வந்தால், ஊழ்வினை, விதிப் பயன் என்கின்றோம். அது தவறு. சுத்த சன்மார்க்கத்தில், தயவு தான் விதியை நிர்ணயிப்பது. அதுதான் இந்த உலகினை இயக்குகின்றது. தயவின்மையால், விதி சூழ்ந்து, துன்பம் கொடுக்கின்றது. கோவிலுக்குச் சென்று புற வழிபாடியற்றுகின்றோம். நமக்கு ஏற்படும் துன்பம் போகவில்லை. நமது அகத்திலிருக்கும் அருள் ஆண்டவரிடம் நாம் வேண்டிக் கொள்ளவேண்டும். அறிவியல் வாழ்வு, அருளியல் வாழ்வு வாழவும் வேண்டும். அனைவரும் சுத்த சன்மார்க்க நெறியினை கடைப்பிடிக்க வேண்டும். தயவு பிரணவத்தின் உட்பொருள் ஆகும். அருளியல் செயல்பாடு வேண்டும். தயவு நெறியினைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் தீவிரவாதம் போன்ற நிகழ்வுகள் எல்லாம் ஒழியும். அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம், தயவுக் கனியாக உள்ளது. ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் 3 பகுதிகள் வள்ளற் பெருமான் காலத்தில் வெளியிடப்பட்டது. அதன் எஞ்சிய பகுதிதான் தயவு ஆகும். தயவு ஆன்ம சிற்சபையில் ஒளிர்வது. தயவிலே இருந்து வருவதுதான் சத்+சித்+ஆனந்தம் ஆகும். நமக்குத் தெரியாமல் ஆணவ மலம் மறைப்பாக உள்ளது. மனித குலம் படைக்கப்பட்டது created to get Deathlessness. மனங்களை வெல்ல வேண்டும். அக நிலையில்தான் சுத்த சன்மார்க்க விளக்கம் உள்ளது. ஆன்மாவே நான் என்பதை அனைவரும் முதலில் உணர வேண்டும்.
சுத்த சன்மார்க்க நெறியில் ஞானத்திலே சரியை துவங்குகின்றது. எனவே பெருமான் ஞான சரியைப் பாக்களைப் பாடிஅருளினார். அருளில் தான் எல்லாம் இருக்கின்றது. 3 உடம்புகள் உள்ளன. ஆன்மாதான் இறைவன். காரண உடல். மனித உடலில் ஒரு பகுதி இறைவன் மறு பகுதி மனிதன் இரண்டரை நிலை இதுவே ஆகும். ஜீவகாருண்ய ஒழுக்கமும் ஒருமையும் சேர்ந்திருந்தால்தான் தயவு அனுபவம் சித்திக்கும். அது பக்குவ ஜீவர்களுக்கே விளங்கும். விசாரம் செய்வதுதான் முயற்சி அளிக்கும்.
கோயம்புத்தூரில் Peoples for Animal என்ற ஒரு இயக்கம் நடைபெற்று வருகின்றது. இறைவனின் படைப்பில், நாய், குதிரை, ஆடு முதலான இவை எல்லாம் உணவில்லாது மிகவும் துன்புறுகின்றான. திருமதி கல்பனா வாசுதேவன் மற்றும் மசக்காளி பாளையம் அன்பர் திரு பிரபாகரன், ராம்தாள் ஆகியோர் இணைந்து, கால்நடை வதை தடுப்புச் சங்கத்தினைத் திறம்பட நடத்தி வருகின்றோம். கால்நடைகள் தங்குவதற்கென்றே 1 ஏக்கர் நிலத்தை, ஒரு சன்மார்க்கி கொடுத்தார். அவர் ஒரு டிரைவராகப் பணி புரிகின்றார். அடிபட்ட கால்நடைகளை இங்கு கொண்டுவந்து பசியாற்றி, நோய் நீக்கும் பணியினைப்புரிந்து வருகின்றோம்.
கோயம்புத்தூரில் தயா ஒளி இயக்கம் நிறுவி, அதனைத் தொடர்ந்து நடத்தி வருகின்றோம். அந்த இயக்கத்தைப் பார்த்து, அருகில் உள்ளோரெல்லாம், சைவநெறியைக் கடைப்பிடிக்கின்றனர். எங்களது நிறுவனத்தில் ஆண்டு தோறும் சுத்த சன்மார்க்க தயவு நெறி பரப்புவதற்கு விழா எடுக்கின்றோம். எங்களது ஊழியர்கள் அனைவரும் சுத்த சன்மார்க்கத்திற்கு வந்து விட்டார்கள்.
திரு S.S. மோகன்ராம், திண்டுக்கல்.
திண்டுக்கல்லில் சுவாமிகளின் தயவு நெறி நன்கு பரவி வருகின்றது. வள்ளற் பெருமானின் திரு அருட்பாக்கள் பாடுதலுக் கென்றே, அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளையின் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக, மாணவச் செல்வங்களுக்கிடையே, போட்டி வைத்து, அவர்களை, சுத்த சன்மார்க்க நெறியிற் செலுத்துவதில் முனைப்பான நடவடிக்கை எடுக்கின்றோம். கடந்த போட்டியில் 595 மாணவச் செல்வங்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். மதிப்பிற்குரிய மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் திரு பாண்டு ரெங்கன் அவர்கள்தான் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்குப் பரிசு வழங்கி ஊக்கு வித்தார். தற்போதெல்லாம், எங்களது வீடுகளில் நடைபெறும் எந்த விசேஷமாயினும் சரி…அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்வதை நாங்கள் எல்லோரும் வழக்கமாகக் கொண்டுள்ளோம்.
திரு ஏ.ராமானுஜம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாடி மனைப்பட்டி கிராமம், ஒரு சுத்த சன்மார்க்க நெறி தீவிரமாகக் கடைப்பிடிக்கும் கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் கோழி, ஆடு வளர்ப்பது கிடையாது. குளங்கள் வற்றிவிட்டால், அதில் உள்ள மீன்களை யாரும் பிடிப்பது கிடையாது. பயிர்கள் வளரும்போது, பூச்சி பிடித்தால், அதனை ஒழிக்க மருந்து அடிக்கும் வழக்கம் கிடையாது. அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தின் முதல் எழுத்து “அ” அகும். எனவே, பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் ‘அ’ என ஆரம்பிக்கும் எழுத்துடனான பெயர்கள் வைக்கப்படுகின்றன. கடந்த 50 ஆண்டுகளாக, இந்த கிராமம், சுத்த சன்மார்க்க நெறியினை நல்ல முறையில் செயல்படுத்தி வருகின்றது.
திரு தயவு விஜயராமன், மதுரை.
மனிதனும் இறைவனும் இரண்டும் ஒன்றினுள் ஒன்றாக உள்ளனர். சுவாமிகள் ஒன்று மூன்றான உண்மை என்ற நூலில் பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். தயாபெருஞ்ஜோதியே மனிதனுக்குள் சென்று திரிதேக சித்தி நிலை அடைய உதவுகின்றது. மனிதன்,. இயற்கை உண்மை, இயற்கை விளக்கம் இயற்கை வாழ்வு வாழப் படைக்கப்பட்டவன். சுவாமிகள் இந் நிலையினை 1.8.1943 அன்றே உணர்த்தப் பெற்றார். தமது 96 வயது வரை மனித குலம் மேம்பட சுவாமிகள் அரும்பாடு பட்டார். தயவுப் பெரு நெறி பரவுவதற்கு பல நூல்களை எழுதி வெளியிட்டார். தம்மிடம் வருவோற்கெல்லாம் அருள் விளக்கத்தை தயவின் மூலமாகப் பெருவதை விளக்கினார். 69-ன் சிறப்பினை உணர்த்தினார். 1943ஆம் ஆண்டில் சுவாமிகள் அவதரித்தார். அத்துடன் 69-ஐ சேர்த்தால், 2012ஆம் ஆண்டு வரப் பெறுகின்றது. இது சுவாமிகளின் உண்மை அனுபவத்தை உலகம் உணரும் காலம் ஆகும். வள்ளற் பெருமானும், திண்டுக்கல் சுவாமிகளும், தம்மைக் காட்டிக் கொள்ள விரும்பியதில்லை. அவர்கள் இறைவனின் உண்மையின மனித குலம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை எடுத்துச் சொல்ல இவ்வுலகில் அவதரித்தவர்கள். தயவுக் குறளில் சுவாமிகள் அரிய பெரிய கருத்துக்களை எல்லாம் வெளியிட்டுள்ளார்கள். 3 ஜீவகாருண்ய ஒழுக்கங்கள் வள்ளற் பெருமான் காலத்தில் வெளியாயின. சுவாமிகளின் தயவுப் பாக்கள், தயவுக் குறள் முதலானவை, ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் 4, 5. 6, 7 ஆகிய பகுதிகள் ஆகும். தயவுக்குறளையும், தயவுப் பாக்களையும் திரு அருட்பாவின் 7வது திருமுறையாக வைக்க வேண்டும். அனக வாழ்வின் சிறப்பினை சுவாமிகள் சொல்லிச் சென்றவர். மனித குலம் மேம்பட வேண்டும் என்பதற்காக அவற்றைக் கவிதைகளாக்கித் தந்தவர். சுவாமிகள் எழுதிய சத்திய ஞான சபைத் தத்துவ விளக்கம் என்னை 17 வயதிலேயே ஈர்த்தது. உண்மை விளக்கம் அதன் மூலம் எனக்குக் கிடைத்தது. 1973ஆம் ஆண்டில் சுவாமிகளுக்கு விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதினேன். அவர்களும் எனக்கு உடனே பதில் எழுதினார்கள். எந்தக் கடிதம் எழுதினாலும், சுவாமிகளிடம் இருந்து 3 நாட்களுக்குள் அதற்கு பதில் வந்து விடும். இது போன்று உண்மை விளக்கம் கேட்டு எழுதிய பல கடிதங்களுக்கு, சுவாமிகள் எழுதிய விளக்கங்கள் என்னிடம் உள்ளன. அனைவரையும் ஒன்றாகக் காணுங்கள். அகத்திலே கேளுங்கள்.
தயவுப் பெரு நெறி, சுத்த சன்மார்க்கத்தின் உச்ச நிலை அடைய வைப்பது. ஏனைய நெறிகள் இதுபோன்று உண்மை ஏதும் சொல்பவை அல்ல.
சுவாமிகள் வாழ்ந்த இடத்தை, நினைவிடமாக மாற்ற வேண்டும். அவர்கள் இயற்றிய நூல்கள் அனைத்தும் அச்சடித்து அன்பர்கள் மத்தியில் செல்ல வேண்டும். இது குறித்து ஒரு குழு அமைத்து, முடிவெடுக்க வேண்டும். எல்லாச் செயல்களையும், இறைவனின் செயல்களாகக் கருத வேண்டும். வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியே, நாமே இறைவனை நமக்குள்ளேயே உணர வேண்டும் என்பதுதான். திரிதேக சித்தி பெறுவதற்கு, இதனை உணர்ந்து அனுபவிப்பதுதான் சரியான வழிமுறையாகும். இறைவன் நமக்குள்ளேயே உள்ளார் என்ற உண்மையை அறியாதது ஆணவம் நம்மிடம் உள்ளதை வெளிப்படுத்துகின்றது. இந்த அறியாமையை அகற்றி, அனுபவம் பெற வேண்டும். இதற்கு வள்ளற் பெருமானின் வாழ்வே சான்று. கொல்லா நெறியே குருவருள் நெறி. அதன் மூலம் அருளை எவரும் பெறலாம். கருணை நன் முயற்சி தான் தேவை.
திரு விஸ்வநாதன், திண்டுக்கல்.
சுவாமிகள் சுத்த சன்மார்க்க மரபில் உதித்தவர். பொன்னகரத்தில் அருட்பெருஞ்ஜோதி தயவு ஆலயம் 1.3.2003 அன்று துவக்கப்பட்டது. 3 என்பது மிகச் சிறந்த கணக்கு ஆகும். த – ய – வு மூன்றினுள் நின்றனன். 3 ஆண்டுகளை இது குறிக்கக் கூடியது. 6.4.2006 அன்று பூச நாளில் சுவாமிகள் சித்தி பெற்றார்கள். 5.4.2009 வரை 3 ஆண்டுகள் முடிவடைகின்றன. 1927ஆம் ஆண்டு, தயாநிதி சுவாமிகள், சபாபதி சுவாமிகளுடன் சேர்ந்தார். 30 ஆண்டுகளைச் சேர்த்தால் 1959ல் சபாபதி சுவாமிகள் சித்தி அடைந்தார். நமது தயாநிதி சுவாமிகள், தமது குருவான சபாபதி சுவாமிகளுக்கு, 1989-ம் ஆண்டு வரை அதாவது 30 ஆண்டுகள் வரை குருபூஜை எடுத்தவர். அத்துடன் தயவு அம்பலமாக விட்டது. சுவாமிகளை தயாப் பிரகாசர் ஆக்கி விட்டது. வள்ளற் பெருமானின் அனுபவம், சுவாமிகளிடம் சேர்ந்து விட்டது. அது, அகத்திலிருந்து விரிகின்றது. தயவு ஒளி விளக்கு ஒரு நிறைவினைக் குறிக்கின்றது. ஏசுநாதர்,. 2 ½ நாளில் நிறைவடைந்தார். சுவாமிகள் 96 ஆண்டில் சித்தி பெற்றார். அத்துடன் 4 ஆண்டுகள் சேர்த்தால் 2010 ஆகின்றது. சதா நிலை அடைந்த ஆண்டாக இது உதயமாக உள்ளது. வரும் 2012 ஆம் ஆண்டில் சுத்த சன்மார்க்கத்தில் மிக முக்கியமான வருடமாகப் பரிணமிக்கப் போகின்றது. எனவே, அனைவரும் சுவாமிகள் சொல்லிச் சென்ற தயவுப் பெரு நெறியினைக் கடைப்பிடித்து, அனக வாழ்வு வாழ வேண்டும்.
இதன் பின், திண்டுக்கல் திரு S.R. ராமலிங்கம் தயவு ஜோதி ஆராதனை செய்தார்.
இவ் விழாவில் தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலுமிருந்து பல அன்பர்கள் பங்கு பெற்றனர்.
திண்டுக்கல் மற்றும் பல்வேறு இடங்களிலும் இருந்து, சுமார் 700 அன்பர்கள் பங்கேற்று அருள் நலம் பெற்றனர். அன்பர்களுக்கும், ஏழை எளியோர்க்கும், அன்னமளிப்புப் பணி பின்னர் நிறைவேறியது.
Write a comment