DAEIOU - தயவு
ஆந்திர மாநிலம் சித்தூரில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளாட்சி.
ஆந்திர மாநிலம் சித்தூரில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளாட்சி.
தெலுங்கு மொழியில் திரு அருட்பா புத்தகம் வெளியிடப்பட்ட தகவல்.
காஞ்சீபுரம் அஷோக் நகரில் திரு அருட்பிரகாச வள்ளலாரின் தெய்வ நிலைய தைப் பூச விழா 22.2.2009 அன்று நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, அந்த சங்கத்தின் நிர்வாகிகள் மிகவும் விரிவான முறையில் செய்திருந்தனர். கிட்டத்தட்ட 600 அன்பர்கள் இந்த விழாவில் பங்கேற்று அருள் நலம் பெற்றனர்.
சன்மார்க்க மூத்த அன்பர்கள் திரு மு.பாலசுப்ரமணியம் (சென்னை), உயிர் உறவு திரு சங்கரய்யா(சென்னை), வைத்தியர் திரு வேதாசலம், திருவொற்றியூர் முதலானோர் அங்கு சுத்த சன்மார்க்க விளக்கம் மற்றும் திரு அருட்பா குறித்த சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
அதனைக் காட்டிலும், அன்று மதியம் 2.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை மழையூர் சதாசிவம் அவர்களின் திரு அருட்பா கச்சேரியினைக் கேட்க, பிற மாவட்டங்களிலும் இருந்து சன்மார்க்க அன்பர்கள் வந்து கலந்து கொண்டது ஒரு விசேஷமான செய்தி. அருட்பாவே அந்த ஆலயத்தில் மழையாகப் பொழிந்து அனனவரையும் பரவசப் படுத்தியது.
அந்த விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க, ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர்கள் 10 பேர் வந்திருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, தாங்கள் தமிழ் நாட்டில் நடைபெறும் இந்த விழாவிற்கு, 4-வது முறையாக வருகின்றோம். இங்கு வந்து கலந்து கொள்வதில் எங்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கின்றது. இதுபோன்ற விழாக்களில் நாங்கள் கலந்து கொள்வதன் மூலம் எங்களுக்கு அவர்கள் அடைந்த அருள் அனுபவங்கள் தெரிய வருகின்றன. நாங்களும் இத்தகைய அருள் அனுபவம் அடைவதற்கு இவை பெரிதும் துணை புரிகின்றன என்றனர்.
அந்த விழாவில், தலைமை ஏற்று வழி நடத்திக் கூட்டி வந்திருந்த அன்பர் திரு ஹாங்காங் குப்புசாமி என்பவர் பேசினார். சித்தூரில் 2 சன்மார்க்க சங்கங்களில் இருந்து தாம் அனைவரும் வந்து இங்கு கலந்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியைப் பற்றி நாங்கள் 1990 ஆம் ஆண்டு கேள்விப் பட்டோம். அன்றிலிருந்து, புலால் மறுத்தோம். குடும்பங்கள் அனைவருமே சைவம் ஆகிவிட்டோம். எந்த வியாதியும் எங்களைப் பற்றுவதில்லை. உணவுப் பழக்கம் வள்ளற் பெருமான் சொன்னதைக் கடைப்பிடித்ததால், சர்க்கரை நோய் போன இடம் தெரியவில்லை.
நாங்கள், வள்ளற் பெருமானின் கொள்கைகளைப் பரப்புவதற்கு, ஞானசபை கட்டி சன்மார்க்க விழா நடத்த இருந்தோம். அப்போது அந்த ஏரியாவில் கார்ப்பரேஷன் தண்ணீர் சப்ளை கிடையாது. விழா வைத்து விட்டோமே. தண்ணீர்த் தேவைக்கு எங்கு செல்வது என ஆதங்கப்பட்டு, வள்ளற் பெருமானிடம் வேண்டி நின்றோம். திடீரென எதிர்பார்க்காத அதிசயம் நடந்தது. தண்ணீர் அந்த விசேஷத்திற்கு வந்தது. எல்லாம் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருட் செயலே என எண்ணினோம்.
நண்பர் ஒருவருக்கு உண்ட உணவு நஞ்சாக மாறியது (food poison). அருட் பெருஞ்ஜோதி மகா மந்திரம் 3 நாட்களுக்கு சன்மார்க்க அன்பர்களால் ஜெபிக்கப்பட்டு, நண்பர் நலம் பெற்றெழ வேண்டிக் கோரிக்கை தெரிவிக்கப்பட்டது. அன்பர்கள் அனைவரும் உளமுருக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டி நின்றோம். நண்பர், மூன்று நாட்கள் கழித்து, பூரண நலம் பெற்றெழுந்தார். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் ஆற்றலை எங்ஙனம் சொல்வது என்று வியந்தோம்.
யாரையும் அவர் கைவிட மாட்டார். அவரிடம் பரிபூரண நம்பிக்கை மட்டும் வைத்தால் போதும்.
இங்கு வந்துள்ள அன்பர்கள் சார்ந்துள்ள சங்கங்களின் பெயர் விபரம்.
சங்கங்களின் பெயர்.
1) பாலாஜி காலனி, சித்தூர்
2) ஜீவகாருண்ய சங்கம், சர்ச் தெரு, சித்தூர்.
ஜீவகாருண்ய சங்கம் அமைந்துள்ள தெருவிற்கு பெயரே அன்னதான சாலை என வைத்துள்ளனர். மிகவும் பழமை வாய்ந்தது. அதனை தற்போது துரை முருகன் என்பவர் நடத்தி வருகின்றார்.
அவ் விழாவில் பங்கேற்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சித்தூர் நகரைச் சேர்ந்தவர்களின் பெயர் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
1) ஹாங்காங் குப்புசாமி
2) பி. ராமலிங்கம்,
3) எஸ். சுந்தரம்
4) எம். பழனி
5) எம். கிருஷ்ணன்
6) சி. பழனி
7) பி. சந்திர சேகர்.
8) பி. மணி
9) தனபாக்கியம் (பெண்)
10) பத்மாவதி (பெண்)
அவர்கள் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் இயற்றிய நூலில் குறிப்பாக, கீழ்க்காணும் பகுதிகளை தெலுங்கு மொழியில் மாற்றி, புத்தகம் வெளியிட்டுள்ளனர்.
1) திருப்பள்ளி எழுச்சி
2) திருவடிப் புகழ்ச்சி
3) மகாதேவ மாலை
4) அருட்பெருஞ்ஜோதி அகவல்
5) அட்டகம்
6) சிவயோக நிலை
7) மருத்துவம் (மூலிகை)
8) அருட்பா பாடல்கள் 30.
காஞ்சீபுரத்திலிருந்து அவர்களது சங்கம் சுமார் 160 கி.மீ தூரத்தில் உள்ளது.
இந்த சங்கங்களுக்கு, காஞ்சீபுரத்திலிருந்து அன்பர் திரு குமார காளத்தி – சுமார் 55 வயதானவர். (செல். 97895 84151) அவர், அங்கு கடந்த 2 ஆண்டுகளாகச் சென்று மாதம் ஒரு முறை சன்மார்க்க வகுப்பு நடத்தி வருகின்றார். அவர் கடந்த 16 ஆண்டுகளாக துறவு நிலை பூண்டு செயல்பட்டு வருகின்றார்.
அந்த சன்மார்க்க வகுப்பில் வள்ளலாரின் உரை நடை, தியானம் மற்றும் மருத்துவம் குறித்து போதிக்கப் படுகின்றது.
அந்த சித்தூர் சன்மார்க்க சங்கங்களில், வார வழிபாடும் தவறாமல் நடைபெறுகின்றது. ஆண்களும் பெண்களும் சுமார் 60 பேர் வரை இந்த வார வழிபாட்டில் கலந்து கொண்டு, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்கின்றனர்.
இதில் இன்னும் மிகச் சிறப்பு என அன்பர் திரு குமார காளத்தி அவர்கள் சொன்ன தகவல்.
வாரம் 1 நாள், தொழு நோயாளிகள் உள்ள ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று, இந்த சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்த அன்பர்கள் அன்னதானம் செய்து வருகின்றனர். இதற்கு அந்த ஏரியாவைச் சேர்ந்த பழனி, மற்றும் ஆட்டோ டிரைவர் திரு கிருஷ்ணன் ஆகியோர் உதவி செய்து வருகின்றனர்.
இவர்கள் சுத்த சன்மார்க்கத்தைப் பயின்று எந்தெந்த விதத்தில் எல்லாம் தயவுச் செயலைச் செயல்படுத்தி வருகின்றனர். கேட்பதற்கே மிகவும் சந்தோஷம் தரும் நிகழ்ச்சி இதுவாகும்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், இந்த அன்பர்களின் பணி தொய்வுறாது தொடர்ந்து நடக்க நல்லருள் பாலிக்க வேண்டுவோமாக.