7.3.09 & 8.3.09 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா விக்ரமங்கலம் அருகில் தென்கரை கிராமம்.
வீமலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வள்ளலார் பூச விழா நிகழ்ச்சிகள்.
மதுரையிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உசிலம்பட்டி வட்டத்தைச் சேர்ந்த விக்ரமங்கலம் கிராமம் அமைந்துள்ளது. அதன் அருகே சுமார் 2 கி.மீ தூரத்தில் நாகமலை அடிவாரத்தில் தென்கரை என்ற ஒரு கிராமம் உள்ளது. அதில் வீமலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. வருடா வருடம் இந்த ஆலயத்தில் இதன் நிர்வாகிகள் அனைவரும் கூடி இரண்டு நாட்கள் விழா எடுப்பதையும் அந்த சமயம் அன்னதான நிகழ்வு செய்தும், சன்மார்க்க விளக்கக் கூட்டங்களை நடத்தியும், சுத்த சன்மார்க்க நெறி பரவுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த 7.3.2009 மாலை சுமார் 5.30 மணி அளவில், இந்த ஆலயத்தில், திருமதி மீனாம்பாள் அவர்கள் தலைமையில், திருவடிப் புகழ்ச்சி, அருட்பெருஞ்ஜோதி அகவல், அட்டகம் முதலானவற்றை, அன்பர்கள் பாடினர்.
இங்கு வந்திருந்த பல்வேறு கிராமத்தினைச் சேர்ந்த அன்பர்களை ஒருங்கிணைத்து, வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டீ மற்றும் அருள் ட்ரஸ்ட் நிர்வாகிகள், இரவு சுமார் 7.15 மணி அளவில், தென்கரையை அடுத்த விக்கிரமங்கலம் கிராமத்தில் ஒரு குழுவாகச் சென்று வள்ளலாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளையும், ஜீவகாருண்ய ஒழுக்கத்தை அனைவரும் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் தெருத்தெருவாகச் சென்று வலியுறுத்திப் பேசினர்.
வள்ளலாரின் கொள்கைகள் அடங்கிய ப்ளெக்ஸ் பேனர்கள் சுமார் 20 தயாரிக்கப்பட்டு, அவற்றை, குழுவில் வந்த அனைவரும் தெரு நெடுகிலும் பிடித்துச் சென்று, நெறியைப் பரப்பினர்.
தெரு முனைப் பிரசாரத்தில் திரு ஏ. ராமானுஜம் மற்றும் செல்வி லலிதா மணி ஆகியோர் ஈடுபட்டனர். அனைவரும் புரிந்து கொள்ளும்படியாக எளிமையாக அவர்களுக்கு, ஜீவகாருண்ய ஒழுக்கத்தை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தினை அவர்கள் உணர்த்தினர். இவ்வாறு தொடர்ந்த தெருமுனைப் பிரச்சாரம், இரவு 8.55 வரை நடைபெற்றது.
உடன் வந்திருந்த பள்ளிச் சிறுவர்கள் அனைவரும் சுத்த சன்மார்க்கக் கொள்கைகள் அடங்கிய அச்சிட்ட நோட்டீஸ்கள், மற்றும் வள்ளற் பெருமானாரின் வாழ்க்கைச் சுருக்கம், அவர் தெரிவித்த கொள்கைகள் ஆகியவற்றை வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு வினியோகித்தனர்.
திருவண்ணாமலை திரு பாபு சாது அவர்களின் குழுவிலிருந்து வந்திருந்த அன்பர் திரு பால முருகன் அங்கிருந்து கொண்டுவந்திருந்த வாழ்வும் வாக்கும் என்ற தலைப்பில் ஒரு சிறு புத்தகத்தை, அனைவருக்கும் வினியோகித்தார். வள்ளற் பெருமானின் வாழ்க்கைச் சரிதமும், சில அருட்பா பாடல்களும் அந்த புத்தகத்தில் இடம்பெற்றிருந்தன. பொதுமக்கள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் இந்த புத்தகம் மற்றும் நோட்டீஸ்களைப் பெற்றுச் சென்றனர். மதுரையை அடுத்த ஊமச்சிகுளத்திலிருந்து வந்திருந்த சன்மார்க்க அன்பர் திரு சந்திர மோகன் அனைவர்கள், இப் பணிக்கு மிகவும் ஒத்துழைத்தார். வீமலிங்கேஸ்வரர் கோவிலில் விழா நடத்திய திரு சொக்கலிங்கம் என்ற அன்பரும் அவர் தம் மனைவியார் திருமதி புவனேஸ்வரி ஆகியோரும் இந் நிகழ்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருந்தனர். மதுரையை அடுத்த கே.புதூரிலிருந்து வருகை புரிந்த சன்மார்க்க அன்பர் திரு தர்மலிங்கம் அவரது மனைவியார் சண்முகம், திரு மாயாண்டி (வயது 86), அருள் ட்ரஸ்ட் திரு ராமலிங்கம் ஆகியோர் இந்த தெரு முனைப் பிரச்சாரத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர்.
இந் நேரத்தில் மதுரையிலிருந்து வந்திருந்த மூத்த சன்மார்க்கி ஜோதி சுப்பிரமணியம் (மதுரை உலக மையம்) அவர்கள் அங்கு கூடியிருந்தவர்களுக்கு, சுத்த சன்மார்க்க விளக்கம் கொடுத்தார்.
தெரு முனைப் பிரச்சாரத்திற்கு, விக்கிரமங்கலம் கிராமத்திற்கு சென்றிருந்து, இரவு வீமலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குத் திரும்பிய சன்மார்க்க அன்பர்கள், உணவிற்குப் பின்னும் சத் விசாரத்தில் ஈடுபட்டனர்.
மறு நாள் காலை சுமார் 10.00 மணி அளவில், மதுரை ஜோதி சுப்பிரமணியம் அவர்கள் சன்மார்க்கக் கொடியை ஏற்றினார். அனைத்து சன்மார்க்க அன்பர்களும் சிற்சக்தி துதி (கொடி வணக்கம்) பாடினர். மதுரை சங்கீத ஆசிரியை சங்கீத சிரோமணி திருமதி கோமதி நாராயணன் அவர்கள், திரு அருட்பாவில். திருவடிப் புகழ்ச்சியை மிகவும் உருக்கமாக பாடினார். பின்னர், மதுரை அன்பர் திரு ஹரிகோவிந்தன் அவர்கள் திரு அருட்பாக்களை மிகவும் ராகத்துடன் படித்து, அதற்கு விளக்கமும் கொடுத்தார்.
இந்தக் கோவில் நிர்வாகி பேசுகையில், சுத்த சன்மார்க்க கொள்கைகளில், விக்கிரமங்கலம் மற்றும் சுற்று வட்டாரத்தில் படிக்கும் பள்ளிக் குழந்தைகளையும் இனி ஈடுபடுத்தி அவர்கள் வாழ்வில் அக் கொள்கைகளைப் பின்பற்றி நடக்கும்படி செய்ய உள்ளேன் எனக் கூறினார். அவருக்குப் பின் திரு சரவணன் என்ற மாணவன். திரு அருட்பா பாடல்களை உருக்கமாகப் பாடினான்.
பின்னர் மதுரை தயவு விஜயராமன் என்ற சன்மார்க்க அன்பர், வள்ளற் பெருமானின் கொள்கைகளையும், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் தயவு கொள்கை விளக்கத்தையும், பங்கு கொண்டோர் அனைவரும் எளிதில் தெரிந்து கொள்ளும் விதத்தில் சொற்பொழிவாற்றினார்.
வீமலிங்கேஸ்வரர் ஆலயத்தில், இந்த விதமாக விசேஷம் மற்றும் சன்மார்க்கச் சொற்பொழிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, மதுரை அருள் ட்ரஸ்டி நிருவாகிகள் மற்றும் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் நிர்வாகி ஆகியோர், உசிலம்பட்டியை அடுத்த செட்டிய பட்டியிலிருந்து வந்திருந்த திருமதி அம்மாக்கண்ணு அம்மாள் மற்றும் அவர் அழைத்து வந்திருந்த பள்ளிக் குழந்தைகள் (1) கணேசன் (9ம் வகுப்பு), (2) நந்தினி (9ம் வகுப்பு) (3) வேல்முருகன் (9ம் வகுப்பு) (4) தினேஷ்குமார் (7ம் வகுப்பு) (5) சரவணன் (7ம் வகுப்பு), (6) சரண்யா (7ம் வகுப்பு) (7) மகாலக்ஷ்மி (5ம் வகுப்பு) (8) ராஜ் குமார் (7ம் வகுப்பு), (9) கெளசல்யா (3ம் வகுப்பு) (10) பவித்ரா (6ம் வகுப்பு), மாயாண்டி (75 வயது), கிருஷ்ணமூர்த்தி, சோளவந்தான், மீனாம்பாள், மாரியம்மாள் (திரு நகர்), பத்திரகாளி (திரு நகர்) , இன்னும் பல சன்மார்க்க அன்பர்கள் ஆகியோருடன், விக்கிரமங்கலம் கிராமத்தைத் தாண்டியுள்ள இ.கோவில்பட்டி என்ற கிராமத்தில் தெருமுனைப் பிரச்னை நிமித்தம் சென்றார்.
இ.கோவில்பட்டியில் தெருமுனைப் பிரச்சாரத்தில் ப்ளெக்ஸ் பேனர்களில் வள்ளலாரின் கொள்கைகள் ஏந்திச் செல்லப்பட்டன. அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் திரு அருட்பா ஒரு சில அடங்கிய சிறு புத்தகம், மற்றும் அவரது கொள்கைகள் அடங்கிய துண்டுச் சீட்டுக்கள் ஆகியவற்றை, பள்ளிக் குழந்தைகள் அனைவரும், வீடு வீடாக கொடுத்தனர். அந்த கிராமத்தின் முக்கிய இடங்கள், வீதிகள் ஆகியவற்றில் தெருமுனைப் பிரச்சாரம் மதியம் 12.00 மணிக்குத் துவங்கி, 1.45 வரை நடைபெற்றது.
ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர் திரு சந்திர மோகன் அவர்கள் தமது காரை வைத்து, சன்மார்க்க அன்பர்களை, தென்கரையிலிருந்து இ.கோயில்பட்டிக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டார். அதுபோல், திருவண்ணாமலை திரு பாபு சாது குரூப்பைச் சேர்ந்த திரு பாலமுருகனும், சன்மார்க்க அன்பர்களை, மேற்படி கிராமத்திற்குக் கொண்டு செல்லும் பணியில், தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
மெகா போன் மூலம் வள்ளற் பெருமானாரின் கொள்கைகள், உசிலம்பட்டியை அடுத்த ஏ.கொக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர் திரு ராமசாமி, மற்றும் மதுரை செல்வி லலிதா மணி, மதுரை நாராயணபுரம் திரு ஏ.ராமானுஜம் ஆகியோரால், இ.கோவில்பட்டியில் அனைவரும் அறியும் வண்ணம், முக்கியமாக பொதுமக்கள் கூடும் இடங்கள், ஆலய முகப்புக்கள், பஸ் ஸ்டாண்டு ஆகிய இடங்களிலும், தெருத் தெருவாகவும் விரிவாக விளக்கப்பட்டன. ஜீவகாருண்ய ஒழுக்கம் கடைப்பிடிக்கவேண்டியதன் அவசியமும், கொல்லாமையை வாழ்வில் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியமும், அந்த தெரு முனைப் பிரச்சாரத்தில், வலியுறுத்தப்பட்டது.
பின்னர், அந்தக் கிராமத்திலிருந்து அனைவரும் தென்கரை வீமலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குத் திரும்பி, அங்கு நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
8.3.2009 மாலை 4.00மணி வரை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன. வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி பரப்புவதற்கென்றே இந்த இரு நாள் விழா எடுத்த மதுரை அன்பர் திரு சொக்கலிங்கம் மற்றும் அவரது சகோதரர்கள் நால்வர், மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்.
அவர்கள் தென்கரையில் நடத்திய இந்த இரண்டு நாள் விசேஷம், அதனை அடுத்த விக்கிரமங்கலம் மற்றும் இ.,கோவில்பட்டி ஆகிய கிராமங்களிலும் வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க கொள்கைகள் தெருமுனைப் பிரச்சாரமாக பொதுமக்கள் அறியும் வண்ணம் பரப்புவதற்கு, ஓர் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த ஏரியா முழுவதும் பிரமலைக் கள்ளர் இனத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் அவர்கள் அனைவருமே, வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை, கேட்டனர்.
இந்த வீமலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற இரு நாட்கள் விசேஷத்தில் சுமார் 600 பேர்கள் கலந்து அருள் நலம் பெற்றனர்.
Write a comment