வருவார் அழைத்து வாடி ... வடலூர் வட திசைக்கே....வந்தால் பெறலாம் நல்ல வரமே...
பெறவேண்டும் என்ற பேரவாவினால் திரு அருட்பாவினையும், உபதேசப் பகுதிகளையும் இயற்றி
வைத்தார். உயர் ஒழுக்க நெறி கடைப்பிடிப்பதற்கென்றே படைக்கப்பட்ட இந்த மனித உடலை
புனித உடல் ஆக்கிக் கொள்ளும் நால்வகை ஒழுக்கங்களையும் போதித்தார்.
தக்க ஆசிரியர் மூலம் சுத்த சன்மார்க்க உண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள் என்ற
வள்ளற் பெருமானார் சொல்லிய வகையில், திண்டுக்கல் நகரிலே சுவாமி சரவணானந்தா
அவர்களைத் தோற்றுவித்து, அன்பர்களின்மத்தியில் தாம் பாடி வைத்த திரு அருட்பா பாடல்களில்
ஏற்பட்ட சந்தேகங்களை எல்லாம் நிவர்த்தி செய்தார்.
சுத்த சன்மார்க்க காலம் துவங்கி விட்டது. பழைய சன்மார்க்க நெறிகள் ஓய்ந்து விட்டன.
அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்கம் துவங்கி விட்டது. நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் எனப்
பெருமான் சொல்லி, சொல்லிய வண்ணம் இதை எல்லாம் செயல்படுத்தியும் வருகின்றார்.
பிரதோஷ வழிபாடெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருந்த வடலூர் சத்திய ஞான சபையில்,
தக்க சான்றோரை நியமித்து 2007 ம் ஆண்டு முதல் சன்மார்க்க அன்பர்கள் விரும்பிய வண்னம்
ஜோதி தரிசன வழிபாடு மட்டுமே தற்போது காண்பிக்கப் பட்டு வருகின்றது.
உலகெலாம் பரவ என் உள்ளத்திருந்தே அலகிலா ஒளி செய் அருட்பெருஞ்ஜோதி என
அகவல் வரிகளிலே பெருமான் குறிப்பிட்டுச் சென்றார்.
அக நோக்கில் ஆன்ம ஞானிகள் கண்டுணர்ந்து சொன்னதை எல்லாம், விஞ்ஞானிகளின் புற
நோக்கில், ஓரளவு கண்டுபிடித்து மனித சமுதாயம் காண்பதற்குத் தம்மால் ஆன
உதவிகளையும் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கணினிப் பொறி, செய்திகளை எல்லாம் உலகெங்கும் எடுத்துச் செல்கின்றது.
www.vallalar.Org என்ற இணைய தளத்தின் மூலம், ராமநாதபுரம் வள்ளலார் யுனிவெர்சல் மிஷன் ட்ரஸ்ட் நிறுவனர் ஜோதி முருகன் அய்யா, சிங்கப்பூர் சன்மார்க்க அன்பர் திரு சிவக்குமார் அமெரிக்காவில் வசிக்கும் சன்மார்க்க அன்பர் திரு செந்தில் மருதையப்பன் ஆகியோரின் கூட்டு முயற்சியால், வள்ளல் பெருமானின் திரு அருட்பா உலகெங்கிலும் எடுத்துச் செல்லப்பட்டு மனித சமுதாயத்திடையே பெருத்த மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது.
அத்தோடு நின்று விடாமல் அமெரிக்காவில் வசிக்கும் சன்மார்க்க அன்பர் திரு செந்தில் மருதையப்பன் மற்றும் சிங்கப்பூரில் வசிக்கும் சன்மார்க்க அன்பர் திரு சிவக்குமார் ஆகியோர் கடந்த 2008 ஏப்ரல் மாதம் www.vallalarspace.com என்ற புதிய இணைய தளத்தினையும் துவக்கி, (7.2.2009) வரை சுமார் 1,74,000 முறை அந்த இணைய தளத்தினை உலகெங்கும் உள்ள அன்பர்கள் காணும் வகையில் சிறப்புற அமைத்து கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம், உலகின் அனைத்து நாடுகளில் வசிக்கும் சன்மார்க்க நாட்டம் கொண்ட அன்பர்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் சன்மார்க்க செயல்பாடு கொண்ட சங்கங்கள், இணைந்து ஓரணியின் கீழ் வந்து கொண்டுள்ளனர். அதற்கு இந்த இணைய தளங்கள், பெருமளவில் உதவிசெய்து வருகின்றன. இவ் விரு இணைய தளங்களைத் துவக்கி, வள்ளல் பெருமான் சொல்லிச் சென்ற (Universal brotherhood) அகில உலக சகோதரத்துவத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ள அந்த இரு இணைய தளங்களின் டீம் அன்பர்கள் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள் என்பதில் சன்மார்க்க உலகத்தினரிடையே மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
அது ஒரு வகை என்றால், வள்ளற்பெருமானின் திரு அருட்பா பாடல்களை ஆடியோ சி.டி.மூலம், அனைத்து மக்களும் கேட்டு, சுத்த சன்மார்க்க நெறியினைத் தமது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்று, உறுதி பூண்டு, சிங்கப்பூரில் சன்மார்க்க அன்பர் திரு சிவக்குமார் அவர்கள், திரு அருட்பா தெய்வ இசை அமுதம் ப்ராஜக்ட் மூலம் திரு தர்மலிங்க சுவாமிகள் இசை அமைப்பின் பேரில் சன்மார்க்க அன்பர்களின் ஆதரவுடன், ஆடியோ சி.டி.களை வெளியிட்டு வருகின்றார்.
இதுவரை 12 ஆடியோ சி.டி.கள் வெளி வந்து விட்டன. ஆறு திருமுறைகளில், பாதிக்கு மேற்பட்ட திரு அருட்பாக்களின் இசை அமைப்பு முடிந்துள்ளது. இன்னும் அன்பர்களின் ஆதரவினை எதிர்பார்த்து எஞ்சியுள்ள திரு அருட்பாக்களையும் ஓரிரு ஆண்டுக்குள் இசை அமைத்து முடித்து விடவேண்டும் என்ற ஆர்வம் அங்கே மேலோங்கி நிற்கின்றது. வள்ளற் பெருமானின் திரு அருளும், அன்பர்களின் பேராதரவு தான் இதனை நிறைவேற்றி வைக்க வேண்டும்.
திரு அருட்பா இசைக் கச்சேரி கடந்த 4 ஆண்டுகளாகச் சென்னையில் நடந்து வருகின்றது. திருபுவனம் ஆத்மநாதன் என்ற அந்த இசைக் கலைஞர், தனது முயற்சியினால் இதனை சென்னையில் சாதித்துக் காட்டியுள்ளார். வள்ளலார் Org பெளண்டேஷன் மற்றும் வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கம் அதற்குத் துணை நின்றன.
புத்தகக் கண்காட்சிகளில், சென்னையிலும் சரி, கோயம்புத்தூரிலும் சரி வள்ளற் பெருமானாரின் திரு அருட்பா சார்ந்த அருள் நூல்கள் விற்பதற்கெனத் தனி ஸ்டால் நிர்மாணித்து, தூத்துக்குடி சன்மார்க்க அன்பர்கள் மற்றும் கோயம்புத்தூர் தயா ஒளி நிறுவன அன்பர்கள் சாதித்துக் காட்டியுள்ளனர்.
சென்னை உயர்நீதி மன்றத்திலும் வள்ளல் பெருமானின் பெருங்கருணையினால் தீர்ப்புக்கள் சன்மார்க்க உலகினை வியக்க வைக்கும் விதத்தில் வந்து கொண்டிருக்கின்றன.
(1) சத்திய ஞான சபை பூஜகர் மாற்றம்.
(2) பெருமான் காலத்தில் சத்திய ஞான சபை கட்டுவதற்கெனக் கொடுத்த இடங்களின் தற்போதைய நிலையினைக் கண்டு பிடிக்க வருவாய்த் துறைக்கு உத்தரவு.
இதுவும் ஒரு புறம் நடந்து வருகின்றது.
மற்றொரு புறத்தில், ஆங்காங்கே சன்மார்க்க சங்கங்களும், சத்திய ஞான சபைகளும் தமிழ்நாட்டில் புதிது புதிதாகத் தோன்றி, சுத்த சன்மார்க்க நெறி போதித்து வருகின்றன.
1. தஞ்சாவூர் மாதாக்கோட்டையில் ஓய்வு பெற்ற வட்டாட்சியர்.
2. திருவண்ணாமலை (அன்பர் திரு கலைநம்பி)
3. சோளிங்கர் (அன்பர் திரு P. விஜயன்)
4. மதுரை (அன்பர் திருமதி APJ Arul ராமலக்ஷ்மி)
இவை எல்லாம் அதற்கு ஓரிரு சான்றுகள்.
இந்த 2009ஆம் ஆண்டு தைப்பூசம் காண வரும் அன்பர்கள், உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தர உள்ளனர்.
இலங்கை சாவகச் சேரியில் சத்திய ஞானக் கோட்டம் கட்டி, துவக்க விழாவிற்குக் காத்திருக்கும் அன்பர் (சுவிட்சர்லாந்திலிருந்து வருகை ) திரு கேத்தீஸ்வரன் தம்பதியர்.
மலேசியாவிலிருந்து அருட்ஜோதி சன்மார்க்க சங்க அன்பர் டாக்டர் திரு பி. விநாயக மூர்த்தி.
மலேசியாவிலிருந்து திரு தர்மலிங்க சுவாமிகள், சுத்த சன்மார்க்கப் பேச்சாளர்.
திரு கார்த்திகேயன், பெங்களூர்
திரு சதீஷ்குமார், சென்னை.
திரு குமரேசன், காரைக்கால்.
மற்றும் பலர்.
www.vallalarspace.com இணைய தளத்தில் புதிதாக இடம் பெற விழையும் அன்பர்கள், சன்மார்க்க சங்கங்கள், இந்த அரிய வாய்ப்பினைப் பயன் படுத்தி, அவர்களிடம் இதற்கான வழி முறைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், ஏற்கனவே ஸ்பேஸ் டைரக்டரியில் இடம் பெற்ற சன்மார்க்க அன்பர்கள், சங்கங்கள், எவ்வாறு, தமது சங்க நிகழ்வுகளை இடம் பெறச் செய்வது என்பதையும் அவர்கள் தெளிவுற எடுத்துச் சொல்வதற்கும்தான் வடலூருக்கு வருகை தருகின்றனர்.
அடுத்து, வள்ளலார் Org பெளண்டேஷன் நிறுவனம், சென்னையில் திரு அருட்பா சார்ந்த அருள் நூல்களையும், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் திரு அருட்பாவிற்கு எழுதி வெளியிட்டுள்ள விளக்க உரை நூல்கள், தயவுப் பெரு நெறி நூல்கள், திரு அருட்பா ஆடியோ சி.டி விற்பனை முதலானவற்றிற்கென்றே ஒரு விற்பனை மையம் துவக்கவும் உத்தேசித்துள்ளது. அன்பர்களின் பெருவாரியான விருப்பத்தை அது எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. இந்த இணைய தளத்தின் மூலம் அது, வாக்கெடுப்பு நடத்தி வருகின்றது.
வரும் 20.2.2009 வரை, இந்த இணையதளத்தில் , அன்பர்களின் பதிலையும் கருத்தையும் பொறுத்து, அந்த விற்பனை மையம் துவக்குவதைக் கணிக்க வேண்டியுள்ளது. விற்பனை மையம் சென்னையில் துவங்கினால் போதுமான ஆதரவு இருக்குமா என்பதை இனித்தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இன்னும் சொல்வதற்கு என எவ்வளவோ செய்திகள் பெருமளவில் குவிந்துள்ளன. வடலூருக்கு வருகை தரும் அன்பர்கள் மூலம் அவை தெரிய வரும்.
வள்ளல் பெருமானின் பெருங்கருணை, இத்தனை செயல்களையும் இன்னும் பல செயல்களையும் காட்டிக் கூட்டி வைத்து வருகின்றது.
வாருங்கள் வடலூர் வடதிசைக்கு .. வந்தால் இன்னும் பல .. நல்ல வரங்கள் பெறலாமே .. .. ..
Write a comment