பாண்டிச்சேரி மாநிலத்தில் - கம்பளிக்காரன் குப்பம் - ஒரு சுத்த சன்மார்க்க கிராமம்.
பாண்டிச்சேரி-தமிழ்நாடு மாநிலங்கள் சேரும் ஒரு இடத்தில் அமைந்ததுதான் கம்பளிகாரன்குப்பம் என்ற கிராமம்.
இந்த கிராமத்தில் என்ன சிறப்பு என்கிறீர்களா ? இது ஒரு சுத்த சன்மார்க்கம் கடைப்பிடிக்கும் கிராமம்.
எந்த விதத்தில் ? இந்த கிராமத்தில் தொலைக்காட்சிப் பெட்டி வீடுகளில் கிடையாது (No T.V) கறிக்கடை கிடையாது (No slaughter house).
தொலைக் காட்சிப் பெட்டி இருந்தால் மனம் அலைக் கழியும். அதன் முன் அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது, நமது இயல்பு நிலை மாறி நாம் அதன் வசம் ஆகிவிடுகிறோம். கண் வழி உட்புகுந்து, மனத்தினுள் புகுந்து நமது இயற்கையான சத்துவ குணத்தையே கெடுத்து விடுகிறது.
கறிக்கடை வைத்தால், புலால் உண்ணும் கொடூரச் செயல் ஏற்பட்டு விடும். அதன் மூலம் வள்ளல் பெருமானின் நெறியான கொலை, புலை தவிர்க்கும் நிலையிலிருந்து பிறழ்ந்து விடுவோம். எனவே, கறிக்கடை இந்த கிராமத்தில் கிடையாது.
அனைவரும் சுத்த சன்மார்க்க விதிகளைக் கடைப்பிடித்து வாழ்கின்றனர்.
வள்ளல் பெருமான் பாண்டிச்சேரி மாநிலத்தில் பல இடங்களுக்குச் சென்றுள்ளார். அவர் மூலம் சுத்த சன்மார்க்க நெறி அந்த மாநிலத்தில் பரவியது. அதனை தீவிரமாக கடைப்பிடிக்கும் ஒரு கிராமமாக இந்த கிராமம் உள்ளது என்பது மிகவும் பாராட்டுதற்குரிய ஒரு விஷயமாகும்.
இந்த கிராமம், பாண்டிச்சேரி மாநிலத்தில் மணக்குப்பத்துக்கு தெற்கே, அபிசேகபாக்கத்திற்கு மேற்கே குடியிருப்பு பாளையத்திற்கு வடக்கே கல்மண்டபம், வடுகுப்பத்துக்கு கிழக்கே அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் திரு அருட்பா இசை விழா நடத்துவதற்காக திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள் சென்றிருந்த போது இந்த கிராமத்தின் சிறப்பினை அறிந்து அது குறித்து சொன்ன தகவல்தான் இங்கு இடம் பெற்றுள்ளது.
இது போன்ற ஒரு முழுமையான சுத்த சன்மார்க்க விதிகள் கடைப்பிடிக்கும், புதுக்கோட்டை மாவட்டம் வாடிமனைப்பட்டி என்ற கிராமம் உள்ளது. அது குறித்த தகவல் ஏற்கனவே இந்த இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.