DAEIOU - தயவு
தென் ஆப்பிரிக்காவில் சுத்த சன்மார்க்கக் கொள்கை பரப்பும் திரு ஆழ்வார்.

தென் ஆப்பிரிக்காவில் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கொள்கை பரப்பும் பணியில் திரு ஆழ்வார்.

சென்னை பல்லாவரத்தைச் சேர்நதவர் திரு ஆழ்வார் (வயது 70). அவர். தாயுமானவரின் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

வள்ளல் பெருமானின் சுத்த சனமார்க்கக் கொள்கையின்பால் பின்னர் ஈர்க்கப் பட்டார்.

சென்னையில் பல சங்கங்களில் பிரசங்கம் செய்து வந்தார். தியானம், யோகா முதலானவைகளையும் அவர் அன்பர்களிடையே சொல்லிக் கொடுத்து வந்தார்.

தென் ஆப்பிரிக்காவில் வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை பரப்புவதற்கு சரியான நபர் தேடிக் கொண்டிருந்த போது, திரு ஆழ்வார் அவர்கள் தமிழில் சொல்லிக் கொடுக்கும் திறமை, திரு அருட்பாவில் ஈடுபாடு முதலான தகுதிகள் படைத்ததைக் கணக்கில் கொண்டு 1995 ஆம் ஆண்டு, அவர் அங்கு அழைத்துச் செல்லப் பட்டார்.

அங்குள்ள அன்பர்களுக்கு திரு அருட்பா மற்றும் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளைப் பரப்பும் பணியில், அவர் கடந்த 13 ஆண்டுகள் ஈடுபட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ரிச்சர்ஸ் பே (Richards Bay) எனும் இடத்தில் அவர் இப் பணியில் ஈடுபட்டுள்ளார். திரு ஆழ்வார் அவர்கள் பயிற்றுவிக்கும் வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களைக் கேட்டு, இந்த உயரிய நெறியினைப் பலரும் தற்போது பின்பற்றி வருகின்றனர்.

ரிச்சர்ஸ் பே-என்ற இடத்தினைச் சுற்றி மேலும் சுமார் 6 இடங்களிலும் சுத்த சன்மார்க்கக் கிளைகள் துவங்குவதற்கு இவர் காரணமாக இருந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரிலிருந்து இவர் பணி புரியும் இடம் சுமார் 300 கி.மீ தூரம் இருக்கும். முதலில் 5 ஆண்டுக் காலம் வரை இதனை ஒரு தொண்டாக அவர் ஆற்றி வந்தார்.

பின்னர் அவரது குடும்ப சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, தற்போது அங்குள்ள அன்பர்கள் தரும் ஊதியத்தைக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்.

ஓரிரு நாட்களில், அவர், சென்னைக்கு வருகை புரிந்து பின்னர் வடலூருக்கும் வருகை தர உள்ளார்.

அவரது இத்தகைய சீரிய பணிக்கு சன்மார்க்க உலகம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

(சென்னை, வண்ணாரப் பேட்டையில் வசிக்கும் அவரது மகன் திரு கோடீஸ்வரன் அளித்த தகவல்கள் இவை.)

(அவரது தொடர்பு எண். 94443 85790)