DAEIOU - தயவு
சென்னையில் திரு அருட்பா இசை விழா - 18.12.2008 - இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்.

சென்னையில் திரு அருட்பா இசை விழா
நடத்தியவர் திருபுவனம் ஆத்மநாதன்.
18.12.2008 - இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்
இரண்டாம் நாளாக 18.12.2008 அன்று சென்னை டி.நகரில் உள்ள வடக்கு உஸ்மான் சாலை, நிர்.100, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மண்டபத்தில் நிகழ்ச்சிகள் மாலை 4.00 மணிக்குத் துவங்கின.
புதுச்சேரியைச் சேர்ந்த அருட்பா அரசி திருமதி அன்னபூரணி, எம். ஏ அவர்கள் திரு அருட்பா, இசை மழையினைப் பொழிந்தார். அத்துடன் விடவில்லை அவ்ர். இடை இடையே தாம் பாடும் திரு அருட்பா பாடல்களுக்கு உரிய பொருளினையும், வள்ளல் பெருமான், மனித குலம் மேம்பாடடைவதற்காக பாடி வைத்த இந்த திரு அருட்பாக்களீன் உண்மைப் பொருளினையும் கோடிட்டுக் காட்டிக் காட்டி, ஒவ்வொரு பாடலையும் பாடினார். அனைவரும் அவ் விளக்கத்தையும், அதனைத் தொடர்ந்து, அவர் பாடிய திரு அருட்பா பாடல்களையும் மிகவும் ரசித்துக் கேட்டனர்.
திரு அருட்பா பாடல்களில் இவ்வளவு பொருள் பொதிந்துள்ளதா என்பதை வியந்தவாறே வந்திருந்தோர் அனைவரும் திரு அருட்பா இசையினை எண்ணத்தால் உண்ணத் துவங்கினர்.
பின்னர், திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள், விழாவிற்கு வருகை தந்தோர் அனைவரையும் வரவேற்றார்.
பத்மஷ்ரீ டாக்டர் சீர்காழி சிவ சிதம்பரம் அவர்கள் தமது கணீர்க் குரலில், பக்க வாத்திய இசையுடன் கலந்து திரு அருட்பாத் தேன் அமுதினை அரங்கினுள்ளோருக்கும், வேடிக்கை பார்க்க வந்து, மெய்ம் மறந்து இந்த இசையினை சாலையிலேயே கேட்டுக் கொண்டிருந்தோரும் ரசிக்கும் வண்ணம் பாடினார்.
அவரது தந்தையார் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள், 40 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த “அருட்பெருஞ்ஜோதி” என்ற திரைப் படத்திலே பாடிய “தாயிலாரென” என்ற பாடலுக்கு மிக அருமையாக, ராக ஆலாபனைகளைக் கலந்து அனைவருக்கும் ஊட்டினார். தாம் பாடி முடித்தபின்னர், தனி ஆவர்த்தனம் செய்த இசைக் கலைஞர்களையும், தாம் பாடிய பாடலின் நுணுக்கங்களும், உருக்கமும் கலந்து வரும் வரை விடவில்லை. தமது எதிர் பார்ப்பின்படி அவர்களை,வேலை வாங்கி வள்ளல் பெருமானின் பாத்திரத்துக்கு ஆளானார்.
அருவமாக, சீர்காழி கோவிந்தராஜனும் அந்த இசை அரங்கினுள் வந்திருந்து, திரு அருட்பா இசை விழா ஆயிற்றே ! தனது தமயன் இசைக்குத்தான் சிறப்பு சேர்க்கின்றானா ? அல்லது வள்ளல் பெருமானின் திரு அருட்பாவிற்கு சிறப்பு சேர்க்கின்றானா என்றதை நோக்கிய போது, வள்ளல் பெருமானே வந்து சிவ சிதம்பரத்தின் பாடல்களை அமுதாக ஊட்டுவதற்குத் துணை புரிந்ததைப் பார்த்து,. பெருமானின் திரு அருளுக்கு நன்றி சொல்லிச் சென்றார்.
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் என அனைவரும் பாராட்டியதை அவர் அந்த அரங்கிற்கு அருவமாக வந்திருந்து, உணர்ந்து சென்றார். பக்திப் பாடல்களுக்காக தான் செய்த பணியினை தனது மகன் சிவ சிதம்பரமும் தொடர்ந்து செய்வதைப் பார்த்து சீர்காழி கோவிந்தராஜன் அவ்ர்கள் மனம் பூரித்தார் அவர் என்றால் அது மிகையாகாது.
திரு. கே.வி.கிரிதர், I.R.S அவர்கள், இயக்குநர், தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர்., இசை விழா நிகழ்ச்சியினைப் பாராட்டிப் பேசிவிட்டுச் சென்றார்.
திரு சுப்புராமன், தலைவர், பன்னாட்டு சன்மார்க்க சங்கம், சென்னை.
திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் மனித குல மேம்பாட்டுக்காகப் பாடி வைத்த திரு அருட்பாப் பாடல்களை, திருபுவனம் ஆத்மநாதன் இசை விழாவாக வருடந்தோறும் எடுத்து, பெருமை சேர்க்கின்றார். அவரது பணி, வரக்கூடிய ஆண்டுகளிலும் தொடர வேண்டும் என்று அவரது கடும் முயற்சிகளைப் பாராட்டினார்.
வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்க செயலாளர் திரு பி.கே.சிவராமன்
, வள்ளல் பெருமான் பிறந்தது மருதூர், வாழ்ந்தது சென்னையில் வள்ளல் பெருமானுக்கு மிகவும் பிடித்தது சிதம்பரம். அவர் கையெழுத்திடும்போது சிதம்பரம் இராமலிங்கம் என்று கையெழுத்திட்டிருப்பதிலிருந்து இதனை அறியலாம். பிடித்தது சிதம்பரம் – சிவ சிதம்பரம் – அதனால்தானோ என்னவோ இங்கு இந்த இசை விழாவில் சீர்காழி சிவ சிதம்பரம் அவர்கள் கலந்து கொண்டு, திரு அருட்பா பாடல்களை மிகவும் உருக்கமுடன் பாடினார்.
ஆத்மா அவரை அழைத்து வந்து இவ் விழாவில் பங்கேற்கச் செய்தது. ஆத்மாவாகிய திருபுவனம் ஆத்மநாதனே இந்தச் சிறப்பினைச் செய்தார். விழா மேடையிலோ திண்டுக்கல் மாவட்ட சன்மார்க்க சங்கச் செயலர், திரு மேடா நித்தியயனந்தம் அவர்கள் உள்ளார். மேடையில் – மேடா அவர்கள் உள்ளார். ஆனந்தக் கடலில் – நித்திய ஆனந்தத்தில் திரு அருட்பா பாடல்களைக் கேட்டு அவர் ஆழ்ந்துள்ளார். இசைக் கலைஞர்கள், வள்ளலாரின் திரு அருட்பாக்களைப் பாடும்போது, புதுப்புது உருப்படிகளாகச் செய்து, கேட்போராகிய நம்மைக் கிறங்க அடிக்கின்றனர். அருட்பா அமுதத்தில் மூழ்க வைத்து விடுகின்றனர்.
தேன் படிக்கும் அமுதாம் உன் திருப்பாட்டை நான் படிக்குந் தோறும் .. .. ..
ஒருதரம் படிக்கின் … .. என்றெல்லாம் வள்ளற்பெருமான் பாடி வைத்துள்ளார்.
அதனைப் படித்தல், நெஞ்சம் மகிழும், நெகிழும் உருகும், பின்னர் கரையும் கலக்கும் உடலோடு உயிரோடு. அத்தகைய சிறப்புக்கள் கொண்டவை வள்ளற் பெருமானின் திரு அருட்பாக்கள்.
இரக்க சிந்தனை இல்லாமல், யாரும் வள்ளலாரின் திரு அருட்பாவினைப் பாடி விட முடியாது. இம் முயற்சியில், வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கமும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. கட்ந்த ஆண்டு முதலில் கலந்து கொண்டும், திருபுவனம் ஆத்மநாதன் அவர்களுக்கு ஊக்கம் தந்தது. தலைவர் திரு சுப்புராமன் அவர்கள் ஊக்கம் தந்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் இதனை நடத்த வேண்டும்
அதனை அடுத்து, இந்த ஆண்டும் அவர், தீவிர ;முயற்சி மேற்கொண்டு, இந்த இசை விழாவினை தருமமிகு சென்னையில் திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள் எடுத்துள்ளார். அவ்ரது சீரிய முயற்சி, மிகவும் பாராட்டுதற்குரியது.
பன்னாட்டு சன்மார்க்க சங்கத்தின் தலைவர் திரு சுப்புராமன் ஐயா அவர்கள் வள்ளல் பெருமான் மீது தீராக் காதல் கொண்டு, அவர் நினைத்த்தை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என சதா செயலாற்றிக் கொண்டிருக்கின்றார்.
வள்ளுவர் கோட்டம் சென்னையில் கட்டியுள்ளது போல, “வள்ளலார் கோட்டம்” எழுப்ப வேண்டும் என அவர் எண்ணங் கொண்டார். வடலூரை ஞான பூமியாக ஆக்க வேண்டும். அதற்கென சென்னையிலேயே மிகச் சிறந்த கட்டிடக் கலை நிபுணரான திரு வேணுகோபால் என்பவர் மூலம் வரைபடம் தயார் செய்து அரசுத்துறையில் உயர் மட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
வள்ளல் பெருமான் சென்னையில் 33 வருடங்கள் வாழ்ந்தவர். வள்ளலார் வாழ்க்கை வரலாற்றினை மெகா சீரியல் எடுக்கும் பணியில் டைரக்டர் திரு கே.ஆர். அவர்கள் ஈடுபட்டுள்ளார். கங்கை அமரன் போன்ற இசை மேதைகள் திரு அருட்பிரகாச வள்ளலாரின் திரு அருட்பா பாடல்களை இசை அமைத்துத் தருவதற்கு உதவுவேன் என ஒப்புக் கொண்டுள்ளனர். திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள் செல்வத்தைக் காட்டிலும் மனிதர்களையும், அன்பையும் சம்பாதித்து வைத்துள்ளார்.
பள்ளிகளில் பயிலும் மாணவச் செல்வங்களிடையே ஒழுக்கக் கல்வியை போதிப்பதற்கான முயற்சியினை, அரசுக்கு தெரிவித்து, அதனை 11வது ஐந்தாண்டுத் திட்தத்தில் செயல்படுத்த அரசினை வலியுறுத்தி வருகிறது. அவர்களுக்கு, இளமையிலேயே, இந்த ஒழுக்கக் கல்வியினைக் கற்றுக் கொடுக்காவிடில், அவர்கள் நாளடைவில், தீவரவாதிகளாகக் கூட மாறலாம். அவ் வழிக்கெல்லாம் சென்று விடாமல் அவர்களை சரியான பாதைக்கு இட்டுச் செல்வது, வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி ஒன்றுதான். அவரது கொள்கைகள் – பசி போக்குதல் அன்பு காட்டுதல் மனித குலத்துக்குத் தொண்டு செய்தல் முதலானவை ஆகும். இந்த ஒழுக்கத்தினை சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். இசை மூலமாகவோ, இயல் மூலமாகவோ, குழந்தைகளால், நாடகம் மூலமாகவோ வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறிகள், அனைவரையும் சென்றடைய வேண்டும்,.
நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் தன் வார்த்தை ..
சத்தியவான் வார்த்தைஇது நான் உரைத்தேன் கண்டாய் …
இந்தப் பன்னாட்டு சன்மார்க்க சங்கம் எடுத்து வரும் முயற்சிகளின் மூலம் சென்னையில் வள்ளலார் கோட்டம் கட்டப்படுவது உறுதி என்று கூறினார்.
திரு ஆத்மநாதனுக்கு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பரிபூரண் அருள் கிட்டும். வாழ்வில் அவர் மென்மேலும் நல்ல உயர் நிலைகளைப் பெறுவார்.
திருபுவனம் ஆத்மநாதன்:
திரு அருட்பாவினைப் பாடுவதென்பது, எல்லோருக்கும் இயலாது. வள்ளற் பெருமானின் அருள் இருந்தால் மட்டுமே, திரு அருட்பா பாடல்களுக்கு இசை வடிவம் கொடுக்க முடியும். பாட முடியும். அந்த வகையில் பெருமான்,. தம்மிடம் காட்டும் அளப்பரிய அன்பிற்கு வாழ்த்தி வணங்கினார். இசை விழாவில் வெளியிடப்பட்ட ஆடியோ கேசட்டுகளை, விழாவில் நிகழ்ச்சி நடத்தியவர்கள், பேசியவர்கள் ஆகியோருக்கு வழங்கினார்.
மேடா நித்தியானந்தம், மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர், திண்டுக்கல்
திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள், ஒருவராகவே (One man show) இந்த இசை விழாவினை, திரு அருட்பிரகாச வள்ளலாரின் திரு அருட்பாவிற்காக எடுத்துள்ளார் என்பதே இந்த நாளின் சிறப்பு ஆகும்.
இதனை வருடந்தோறும் சென்னையில் எடுத்து வருகின்றார். இது 4-வது வருடம் ஆகும். அவரை வாழ்த்துவது என்பது என்ன.. எல்லாம் ஒன்றே .. அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பிரிவு - அதன் விளைவாக - ஆத்மநாதனாக இங்கே செயல் பட்டு வருகின்றது. இது அண்டமெல்லாம் விரிந்து பரவ வேண்டும். ஆன்ம நேயம் வளர வேண்டும். தற்போதெல்லாம் மனித நேயத்தையே காண முடியவில்லை. இது போன்று பல நிகழ்ச்சிகளை தனது சொந்த முயற்சியில் மேற்கொள்ளும் ஆத்மநாதனுக்கு வள்ளல் பெருமானின் பரிபூரண ஆசி என்றென்றும் உண்டு.
ஜோதி அய்யா அவர்கள்.
வள்ளல் பெருமானின் திரு அருட்பாவினையும், சுத்த சன்மார்க்கக் கருத்துக்களையும், அருட்பாவின் இசையை எங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் திரு ஆத்மநாதன் செய்து வருகின்றார். திண்டுக்கல்லில் சன்மார்க்கக் கொடி உண்டு. அங்கு தயவு குடி கொண்டுள்ளது. அங்கு அது நிலை கொண்டுள்ளது.
வள்ளல் பெருமான் பாடி வைத்த திருவடிப் புகழ்ச்சியில் இன் தொண்டர் பசியறக் கச்சூரும் ……...என வரும்.
திண்டுக்கல்லில் நடமாடும் அன்னசாலையினை திரு மேடா நித்தியானந்தம் அவர்கள் நடத்தி வருகின்றார். அது வெகு சிறப்பு.
வடலூரில் நவரத்ன இசை விழா 9 பேர் கொண்ட குழுவின் மூலம் இயங்குகின்றது. சீர்காழி சிவ சிதம்பரம் அவர்களும் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளார். இது போன்ற நிகழ்வுகள் தழைக்க வேண்டும். சுத்த சன்மார்க்கம் எங்கும் பரவ வேண்டும்.
திரு கே.வி.எஸ். மருது மோகன், சென்னை.
எனது ஆசான் திருபுவனம் ஆத்மநாதன் ஆவார். நான் அவரிடம் இசை பயின்றவன். பசும்பொன் தேவர் பெருமகனுக்கும் வள்ளலாருக்கும் உள்ள ஒற்றுமை குறித்து நான் மேடையிலே ஒரு முறை பேசினேன்.
எப்படி., ஒரு சாது வள்ளல் பெருமானின் தாயார் சின்னம்மையாரின் வீட்டிற்கு வந்து திரு நீறு கொடுத்து கரு உருவாகியதோ, அதே போல், பசும்பொன் தேவர் திருமகனாரின் வீட்டிலும், அவர் பிறப்பு குறித்த தகவல். அவர் இங்கு பிறப்பார் என்ற தகவல் கனவின் மூலம் வெளிப்பட்டது. அக் கனவில் சாது திரு நீறு கொடுத்து விட்டு செல்கின்றார். இந்த நிலையத்தின் சொத்தினை நிர்வகிக்கும் திரு குழந்தைச்சாமித் தேவர் அவர்களைக் கேட்டபோது, அவ்விதம் வந்தது வள்ளல் பெருமான் என்றார்.
வள்ளலார் விளக்கின் மூலம் ஞானம் பெற்றார். அதே போல் பசும்பொன் தேவர் திருமகனாரும் பள்ளியில் பயிலும் போதே அது போன்ற ஒரு நிலையினைப்பெற்றார்.
வள்ளலார் பாடிய திரு அருட்பாவினைத் தொகுக்கும்போது, ஒரு சில பகுதிகள் அவரது உறவினர்களிடம் கைவசம் இருந்து அவர்கள் கொடுக்கவில்லை. தைப் பூச விழாவின் போது, முன்னாள் முதல்வர் திரு ஓமந்தூரார் அவர்கள் தேவர் திருமகனாரிடம் இது குறித்து தமது வருத்தத்தைத் தெரிவித்தார்.
தேவர் திருமகனார், இது குறித்து மேடையிலேயே அறிவித்தார். கைவசம் உள்ள திரு அருட்பாக்களைக் கொண்டு வந்து (உறவினர்கள்) கொடுத்து விடுங்கள். இல்லை என்றால், வள்ளல் பெருமான் பாடிய அந்த திரு அருட்பா பாடல்களை நானே பாடி விடுவேன். கூட்டத்தில் யாரும் பதில் சொல்லவில்லை.
உடனே தேவர் பெருமகனார் வள்ளல் பெருமான் இயற்றிய பாடல்களை அங்கேயே பாடிவிட்டார். அவர் அப் பாடல்களைப் பார்த்ததில்லை. ஆனால் திருவருள் வலத்தாலே பாடி விட்டார். எப்படி வள்ளல் பெருமான் பாடிய திரு அருட்பாக்கள் தேவர் திருமகனாரால் பாடப்பட்டன என்பது, கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மிகவும் வியப்பு. அனைவரும், வள்ளல் பெருமானே, தேவர் திருமகனார் உருவில் வந்து இங்கு பேசி, விட்டார் எனக் கருதினர்.
கூட்டத்தில் இருந்த வள்ளல் பெருமானின் உறவினர்கள், ஓடிவந்து, தேவர் திருமகனாரின் காலில் விழுந்து, - தாம் வைத்திருந்த – இது வரை அச்சிடப்படாத, திரு அருட்பாக்களைக் கொடுத்தனர். அப்படிப்பட்ட மகான் பசும்பொன் தேவர் திருமகனார் அவர்கள் ஆவார்.
தேவர் பெருமகனாரின் வழக்கு தொடுக்கப்பட்டு அவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் சார்பில் வாதாடிய புதுக்கோட்டை கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்கள், அவருக்கு ஒரு நாற்காலி போட்டு விசாரிக்கும்படி கோர்ட்டாரிடம் முறையிட்டார். அவர் குற்றவாளி அல்ல. ஒரு M.P. என்பதைச் சொல்லி நாற்காலி போடச் சொன்னனர். கோர்ட்டாருக்கு தேவர் பெருமகனார் வள்ளல் பெருமானைப் போல் காட்சியளித்தார். விசாரணை முடிவில், தேவர் பெருமகனார், குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டார்.
திரு ராமானுஜம், வடலூர்.
சென்னையை வள்ளல் பெருமான் குறிப்பிடும்போது தருமமிகு சென்னை என அடைமொழியிட்டுச் சொல்லியுள்ளார். இங்கு நிறைய அன்பர்கள் அன்னதானம் முதலான தருமம் செய்கின்றனர் .பத்ம ஷ்ரீ சீர்காழி சிவ சிதம்பரம் அவர்கள், கட்டணம் ஏதும் வாங்காமலேயே வடலூருக்கு வந்து திரு அருட்பா பாடல்களை வருடந் தோறும் பாடி வருகின்றார். அவர் பாட வரும் நாள் என்றால் கிட்டத்தட்ட 20,000 பார்வையாளர்கள் திரு அருட்பா இசைக் கச்சேரிக்கு நிச்சயம். வடலூரில் 20 ஆண்டுகளுக்கு முன்பேய திரு அருட்பா இசைச் சங்கம் துவக்கப்பட்டது.
திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள் தனது சொந்த முயற்சியில், 60 மாணவர்களை பஸ்ஸில் வடலூருக்கு அழைத்துவந்து, அதன் சிறப்புக்களையும் வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினையும் எடுத்துரைத்தார். இங்கு நடத்தப்படும் திரு அருட்பா நடன நிகழ்ச்சி வடலூரிலும் இசை விழாவில் பங்கு பெற வேண்டும் என்ற கோரிக்கையினை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
திரு R, ஆறுமுகம், I.P.S.,, (D.I.G. of Police, Idol Wing) சென்னை.
நான் காவல் துறறயில் பணிபுரிகின்றேன். நான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபடுபவன். இசைப் பயிற்சியில் திருபுவனம் அவர்கள் நிறைய மாணாக்கர்களை உருவாக்கியவர். மிகவும் கஷ்டப்பட்டு சென்னையிலும் சரி வேறு இடங்களிலும் சரி – விழாக்கள் எடுப்பவர்.
வள்ளலாரைப் பற்றி,. நான் பொள்ளாச்சியில் படிக்கும் காலத்தில் தெரிந்து கொண்டேன். பொள்ளாச்சி அருட்செல்வர் திரு மகாலிங்கம் அவர்கள் கலந்து கொள்ளும் வள்ளலார் நிகழ்ச்சிகளின் மூலம் வள்ளலாரிடம் எனக்கு ஒரு தனி ஈடுபாடு ஏற்பட்டது. அவரையே வள்ளலாராகக் கருதினேன். படிப்பு முடிந்து, எனக்கு, பொள்ளாச்சியிலேயே காவல் துறை அஸிஸ்டண்ட் கமிஷனர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அனாதைக் குழந்தைகள் தான் இன்றைய நாட்டின் வெடிகுண்டுகள். சமீபத்தில் நடந்த பாம்பே நிகழ்ச்சி இதற்கு ஒரு சான்றாக அமைந்து விட்டது. அமைதி ஏற்படுவதற்கும் வ்ள்ளலாரின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதற்காகவும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தர்மபுரியில் கல்லூரியில் ஒரு விழா. அருட்பெருஞ்ஜோதி பற்றியும், வள்ளலாரின் நெறி குறித்தும் அங்கு உரையாற்றினேன். கேட்பதற்கு அங்கு யாரும் இல்லை.
திருச்சியில் ஒரு திருடன் இருந்தான். அவன் 9 தடவை திருடி விட்டான். 10-வது தடவை பிடிபட்டான். அவனிடம் விசாரித்ததில் தனக்குத் திருமணம் செய்து வைத்தால் இந்த திருட்டுத் தொழிலைக் கைவிட்டு விடுவதாகத் தெரிவித்தான். 7 பவுன் நகை போட்டு, அவனுக்கே எங்களது முயற்சியில் திருமணம் செய்து வைத்தோம்.
மறு நாள் காலையில், அவனது மனைவி வந்து, அவன். தனக்குப் போட்டிருந்த நகையைத் திருடிச் சென்று விட்டான் என்று மனுக் கொடுத்தாள். அடுத்த நாளே அவனைப் பிடித்து விட்டோம். ஏன் இவ்வாறு நகையைத் திருடிச் சென்றாய் என்று கேட்டேன். அவன் சொன்னான்.
நான் இதுவரை செய்தது திருட்டுத் தொழில்தான். திருமணமான இரவில் எனக்குத் தெரிந்தது, என் மனைவி அணிந்திருந்த நகைதான். பழக்க தோஷத்தால், அதனைத் திருடி விட்டேன். இந்தாருங்கள் என்று தான் திருடிச் சென்ற நகையை ஒப்படைத்தான்.
கலப்படமில்லாத ஒழுக்கம் – கொள்கை – கோட்பாடுகளை வள்ளல் பெருமான் சொன்னார். பொய் சொல்லக் கூடாது என்றார். சின்ன வேடம்பட்டி என்ற ஒரு கிராமத்தில் ஒரு கல்யாண மண்டபம். சரியான கூட்டம் வேறு. எல்லோரும் பத்திரிக்கையைத் திருப்பிப் பாருங்கள் என்றேன். சாப்பாடு .. அப்பளம் .. பாயாசத்துடன் .. போடப்படும் என அச்சிட்டுள்ளதைப் பாருங்கள். பசிக்கு உணவளிக்க வேண்டும்.
வள்ளல் பெருமான் ..வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றவர். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணவேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தினை போதித்தவர்.
இந்த இசை விழாவில் சாப்பாடு போடாதது ஒரு குறைதான். அரங்கத்தினுள் திரு ராதாகிருஷ்ணன் ஐயா போன்ற தனவான்கள் எல்லாம் அமர்ந்திருக்கின்றார்கள். இவ்வித குறை இந்த இசை விழாவில் ஏற்பட விடலாமா ? என்றவுடன்……,.
திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் வந்து, வடலூரில் தைப்பூசத்திற்கு 3 நாளையிலும் நான் உணவளிக்கின்றேன். அதே போல், சென்னையில் இனிமேல் நடைபெறும் திரு அருட்பா இசை விழாவில் உணவளிக்கும் பங்கினை நானே ஏற்கின்றேன் என அறிவித்தார்.
அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மின்சார பல்பைக் கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கு அமெரிக்காவில், உயரமான சிலை உள்ளது. அங்கு வருடத்தில் 1 நாள் மட்டும் அரை விநாடி மின்சாரம் நிறுத்தப்படும். அதன் அருகில் விவேகானந்தரின் சிலை உள்ளது. அதில் Light of Asia எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
எல்லாமே அருட்பெருஞ்ஜோதிதான். எனவே வள்ளற் பெருமானின் கொள்கையை அனைவரும் கடைப்பிடியுங்கள். நாங்கள் – காவல் துறையில் - வள்ளலாரின் கொள்கைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம்.
அவரது உரைக்குப் பின், திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள், அனைவருக்கும் நன்றி கூறினார்.
அடுத்து நடக்கவிருக்கும் திரு அருட்பா இசையுடன் பரத நாட்டிய நிகழ்ச்சியினை அனைவரும் கண்டு களிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
அதன் பின்னர்,. சுமார் 15 மாணவியர் கலந்து கொண்ட திரு அருட்பா நடன நாட்டிய நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தது.
அவர்கள் அனைவரும் கீழ்க்கண்ட நாட்டியப் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற மாணவிகள்.
Tmt. Padma, B.A.,
Jaya Sathvika Natyalaya,
A1, Bagirathi Apartments, ‘
41/85, Lake view Road,
West Mambalam, Chennai 600 033,
Phone 2489 2633
Cell: 98403 27466.
மிக அருமையாக திரு அருட்பாக்களுக்கு நடனம் ஆடினர். வள்ளலார் ஆகவும், சிவ பெருமானாகவும் அவரை வணங்கும் பக்தர்களாகவும் அவர்கள் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நடனம் ஆடி, அரங்கத்தினுள் அமர்ந்திருந்த அனைவரையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தினர்.
இது நல்ல தருணம்
வருவார் அழைத்து வாடி
அருட்ஜோதி தெய்வன் எனை
சத்தியவான் வார்த்தை இது ..
இவை எல்லாம் அவர்களது நடனத்தில் இடம்பெற்ற ஒரு சில திரு அருட்பா பாடல்கள்.
இவ்விதமாக திரு அருட்பபவிற்கு நடனம் ஆடி, அம் மாணவியரும் அவரது பெற்றோரும், இந் நாட்டிய நிகழ்ச்சியினை இங்கு நடத்துவதற்கு பேருதவியாக இருந்த அந்த நாட்டியாலயா குழுவினரும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளினைப் பெற்றனர்.
அவர்களையும் அவர்களை, இந்த அளவிற்குப் பயிற்சி கொடுத்து நடனம் ஆட வைத்த ஜய சாத்விகா நாட்டியாலயா நிறுவனத்தின் டைரக்டர் நட்டுவாங்க கலைமணி. நாட்டிய கல சரஸ்வதி, திருமதி பத்மா, பி.ஏ அவர்களையும் பாராட்டி, வள்ளலார் பன்னாட்டு சங்கத் தலைவர் திரு சுப்புராமன், செயலாளர் டாக்டர் திரு சிவராமன், வடலூர் ராமானுஜம் முதலானோர் பேசினர். அடுத்து திண்டுக்கல்லில் நடக்கவிருக்கும் விழாவிற்கு இந்த மாணவியர் அனைவரும் வந்து திரு அருட்பா இசை நடனம் நடத்திக் கொடுக்க வேண்டும் என திரு சுப்புராமன் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
அதே பொல், வடலூர் திரு ராமானுஜம் அவர்கள் பேசும்போது, வடலூரில் நடைபெறவிருக்கும் இசை விழாவில், இந்த மாணவியர் அனைவரும் வந்து திரு அருட்பா நாட்டிய நிகழ்ச்சியினை நடத்திக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இவ் விழாவிற்கு, தாம்பரத்தினை அடுத்த படப்பை என்ற இடத்தில் சன்மார்க்க சங்கம் மற்றும் கல்விக் கூடம் நடத்தி வரும் திரு பாலகிருஷ்ணன் அவர்களும் (99625 69966) தமது பள்ளியில் பயிலும் குழந்தைகளுடன் கலந்து கொண்டார். விழா முழுவதும் குழந்தைகளும் திரு அருட்பாவின் சாற்றினைக் கேட்டுச் சென்றனர். உங்களது வாழ்விலும், வள்ளல் பெருமான் வகுத்துத் தந்த இந்த திரு அருட்பாவின் சாரத்தினை – சுத்த சன்மார்க்க நெறியினை - நீங்கள் அனைவரும் கடைப் பிடித்து வாழவேண்டும் என்பதற்காகத்தான் இந்த இசை விழாவிற்கு உங்களை அழைத்து வந்துள்ளேன் என அவர், தம்முடன் வந்திருந்த சிறார்களுக்கெல்லாம் அவ்வப்போது சொல்லிக் கொண்டே இருந்தார். மிக ஆர்வத்துடன் பள்ளிக் குழந்தைகள் திரு அருட்பா இசை மழையின் மூலம் பயின்று கொண்டிருந்தனர்.
இந்த விதத்தில் மிகச் சிறப்பாக,. திரு அருட்பா 2ஆம் நாள் விழா நடந்தேறியது.