DAEIOU - தயவு
17.12.2008 அன்று சென்னை T. நகரில் திரு அருட்பா இசை மழை

17.12.2008 அன்று சென்னை T. நகரில் திரு அருட்பா இசை மழை
சங்கீத் சாகர் கல்சுரல் டிரஸ்ட், ராசராசன் கல்வி பண்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் மூலம் திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள் 17.12.2008 முதல் 21.12.2008 ஆகிய 5 நாட்கள், சென்னையில் அபிபுல்லா சாலையில், உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மண்டபத்தில் 4ஆம் ஆண்டு இசை விழாவினை நடத்தக் கருதி, அதற்கான முன்னேற்பாட்டினைச் செய்திருந்தார்.
இதில் சிறப்பு என்னவெனில், பல்வேறு கான சபைகள் உள்ள சென்னை மாநகரில், டிசம்பர் என்றாலே சங்கீதக் கச்சேரிகள் களை கட்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், வள்ளல் பெருமான் இயற்றிய திருஅருட்பா பாடல்களை பாடுவதற்கு, எந்த கான சபாவும் முன் வரவில்லை. ஆனால், திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள், வருடந்தோறும் வள்ளல் பெருமான் பாடிவைத்த திரு அருட்பாக்களைப் பாடுவதற்கென்றே இசை விழா எடுக்க வேண்டும் என முடிவெடுத்து அதனை கடந்த 4 ஆண்டுகளாகச் செய்ல படுத்தியும் வருகின்றார். அதன் பிரகாராம், நடப்பு ஆண்டில், 17.12.2008 முதல் 19.12.2008 ஆகிய 3 நாட்களில், திரு அருட்பா மட்டும் பாடுவதற்கெனவே ஒரு இசை விழா எடுக்க வேண்டும் என அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
அவரது முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில். VallalarOrg Foundation தனது ஆதரவினைத் தந்தது. சிங்கப்பூரில் வசிக்கும் திரு சிவக்குமார் அவர்கள், இன்னிசையேந்தல் திருபுவனம் ஆத்மநாதன் அவர்களுக்கு தனது ஆதரவினைத் தெரிவித்தார். அதற்கான உதவிகளையும் அவர் செய்தார்.
www.VallalarSpace.com இயக்கி வரும் U.S.A.வில் வசிக்கும் திரு செந்தில் மருதையப்பன் அவர்கள், வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்கள் பொதிந்த திரு அருட்பா இசை விழா நிகழ்ச்சிகள், இணைய தளத்தின் மூலம், உலகெங்கும் பரவட்டும். அதன்மூலம், சென்னையில் எடுக்கப்படும் விழாவிற்கு, தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களிலிருந்தும், ஏனைய மாநிலங்கள் உள்ள சன்மார்க்க சங்கங்களிலும் இருந்தும், .. ஏன் உலகளாவிய அளவில் மொழி மதம் நாடு இனம் கடந்து சுத்த சன்மார்க்கக் கருத்துக்கள், மனித சமுதாயத்திற்குச் சென்றடைய வேண்டும்…அவர்கள் அனைவரும் வள்ளல் பெருமான் வகுத்த நெறியில் வரவேண்டும் என்ற சீரிய முயற்சியில், வள்ளலார்ஸ்பேஸ் இணைய தளத்தின் மூலம், இச் செய்தியினை கடந்த 20நாட்களுக்கு முன்பிருந்தே பரப்பிக் கொண்டிருந்தார்.
அதன் பிரகாரம், முதல் நாள் விழா 17.12.2008 அன்று மாலை சுமார் 4.30 மணி அளவில் துவங்கியது.
17.12.2008 மாலை 4.30 மணி அளவில் திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள், தாமே, தமது இசைக் குழுவினருடன் திரு அருட்பா பாடல்களை, அமுத கானமாக பாடி, அரங்கத்தை நிரப்பினார். வந்திருந்த சுத்த சன்மார்க்கிகளும் மற்றும் பொதுமக்களும், அவர் பாடிய திரு அருட்பா பாடல்களை மிகவும் ரசித்துக் கேட்டு மெய் மறந்தனர்.
விழா நிகழ்ச்சிகள், சுமார் 6.45 மணி அளவில் துவங்கியது.
திருபுவனம் திரு ஆத்மநாதன் --
தமது அழைப்பின் பேரில், இந்த திருஅருட்பா இசை விழாவிற்கு வந்து சிறப்புச் செய்த அனைவரையும் வரவேற்றார்.
ஒருவன் இசை பாடுவது என்பது சாதாரண விஷயம். எல்லோரும் எல்லாவற்றையும் பாடி விடலாம். ஆனால் ஒருவன் திருஅருட்பா பாடுவது என்றால் அது பெறற்கரிய பேறு என்றார்.
அதற்கெல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திரு அருளும், வள்ளல் பெருமானின் ஆசியும் வேண்டும். எல்லோருக்கும் அந்த வாய்ப்பு அமைந்து விடாது. அதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
அந்த வகையில், தான் பல பாடல்களுக்கு இசை மேடைகளில் கச்சேரி செய்து வந்தாலும், ஒரு பெறலரிய பேறாக திருவருட் பிரகாச ராமலிங்க அடிகளார் அவர்கள் இயற்றிய திரு அருட்பாவினைப் பாடுவதைக் கருதுகின்றேன் என்றார். தமது வாழ்நாளில் இந்தத் தொண்டினை ஆற்றுவதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தமக்கு ஆசி வழங்கியுள்ள திருவருளின் திறத்தை அவர் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது - வயலின் சக்ரவர்த்தி பத்மஷ்ரீ குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களுக்கும் - இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்படும் திரு அருட்பா ஆடியோ சி.டி.க்கு இசை அமைத்த பழம்பெரும் இசை அமைப்பாளர் திரு T.R. பாப்பா ஆகியோர் இருவருக்கும் நினைவு கூறும் முகத்தான் என்பதத மிகவும் உணர்ச்சி பொங்க திரு ஆத்மநாதன் அவர்கள் தெரிவித்தார்,
தலைமை உரை ஆற்றிய பன்னாட்டு சங்கத் தலைவர் -
திரு சுப்புராமன், தமது உரையில் கீழ்க்கண்டவற்றைத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு திருவல்லிக்கேணியில் பாரதியார் இல்லத்தில் இதே டிசம்பர் மாதத்தில் இந்த இசை விழாவினை திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள் நடத்தினார். அப்போதே நான் கேட்டுக் கொண்டேன். சென்னையில், வள்ளல் பெருமானின் திரு அருட்பா இசைவிழாவினை, வருடந்தோறும் நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். அதன்படி, இந்த 2008ஆம் ஆண்டிலும் திருப்புவனம் ஆத்மநாதன் அவர்கள் இன்று இந்த திருஅருட்பா இசை விழாவினை, நடத்திக் கொண்டுள்ளார்.
வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கத்தின் செயல்பாடுகளை, அவர் விவரித்தார். சன்மார்க்க சங்கங்கள், இந்த உலகத்தில் உள்ள பல நாடுகளிலும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ளன. அவர்கள் எல்லோரும் அன்னதானம் போன்ற சிறப்புப் பணியினை ஏற்று, ஏழை எளிய மக்களின் பசிப்பிணியினைப் போக்கி வருகின்றனர். எங்களது கடமையாக நாங்கள் எடுத்துக் கொண்டுள்ளது என்னவெனில் வடலூர்ப் பெருவெளியில், கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையினை மாற்ற வேண்டும். வடலூரினை, ஒரு ஞான பூமியாக மாற்ற வேண்டும் என்ற முயற்சியினை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். தொடர் நடவடிக்கைகளையும், நாங்கள் எங்களது சங்கத்தின் மூலம் எடுத்துக் கொண்டிருக்கின்றோம். ஒரு மாஸ்டர் பிளான் தயார் செய்து அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளோம். வள்ளல் பெருமான் காலத்தில் அந்த வடலூர்ப் பெருவெளியில் என்னென்ன ஸ்தாபிக்க வேண்டும் என நினைத்தாரோ அதனை எல்லாம் அங்கே நிறுவ வேண்டும் என்ற விதத்தில், இந்த மாஸ்டர் பிளானில், ஒவ்வொன்றிற்கும் இடம் ஒதுக்கி உள்ளோம்.

தமிழ்நாட்டில் தற்போது நீங்கள் அறிவீர்கள். வெஸ்டர்ன் கல்ச்சர் (Western culture) பெருவாரியாகப் பரவி விட்டது. பள்ளி கல்லூரிகளில், ஒழுக்கமின்மை தற்போது நிலவுவதை நீங்கள் எல்லோரும் அறிந்து கொண்டிருப்பீர்கள். மாணவ மாணவியர்களுக்கு, வள்ளல் பெருமான் கருதிய ஒழுக்கக் கல்வியினை போதிப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அதற்கான syllabus நிர்ணயித்து பள்ளியில் முதல் வகுப்பு முதல் கல்லூரியில் வரை போதிக்கப்பட வேண்டும் என பாடத் திட்டத்தினை வகுக்க வேண்டும் என்ற விதத்தில் அரசை வலியுறுத்தி வருகின்றோம். நாளைய சந்ததிகள் நல்ல ஒழுக்கத்துடன் உருவாக வேண்டும் என்பதற்கான எங்களது முயற்சியே இதுவாகும். சன்மார்க்கவாதிகள், அரசியலிலும் பங்கு பெற வேண்டும். அதற்கு, அனைத்து சன்மார்க்க சங்கங்களும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.
சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைந்தது போல, வள்ளலார் கோட்டம் ஒன்று கட்டி, அதன் மூலமாகவும் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி அனைவரிடத்திலும் பரவுவதற்கான முயற்சியினை மேற்கொண்டுள்ளோம். அரசிடம் இதற்கான கோரிக்கையையும் வைத்துள்ளோம்.
நமது நாட்டிலும் சரி, உலகளாவிய அளவிலும், சரி தற்போது நடந்து வரும் வன்முறை மாறி வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியின் மூலம் அமைதிச் சூழ்நிலை உருவாக வேண்டும். அதற்கான முயற்சியினை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். இங்கே இந்த விழா மேடையில் அமர்ந்திருக்கும் வள்ளலாரின் திருஅருட்பா இசையினை அனைவரும் அறிந்து கொள்ளத்தக்க முயற்சியினை தாமும் மேற்கொள்ள வேண்டும்.
பின்னர் பழம்பெரும் இசை அமைப்பாளர் திரு T.R. பாப்பா அவர்களது இசை அமைப்பில் திருபுவனம் திரு ஆத்மநாதன் அவர்கள் பாடிய 25 திரு அருட்பா பாடல்கள் அடங்கிய ஆடியோ சி.டி. வெளியிடப்பட்டது.
திரு P. ராதாகிருஷ்ணன், தலைவர், அருட்பா இசைச் சங்கம், வடலூர்.
திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள், திருவருட்பா இசை விழாவினை வருடந்தோறும் சென்னையில் எடுக்க வேண்டும் என்ற விதத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படுத்தியும் வருகின்றார். அவரது பணி வருடந்தோறும் தொடர வேண்டும் எனப் பாராட்டுகின்றேன்.
இதன் பின் பேசிய திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள், திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் சென்னையை சேர்ந்தவராக இருந்தாலும், பூச நாட்கள் தோறும் அன்னதானப்பணியினை மேற்கொண்டு ஏழைகளில் பசிப் பிணியினை வடலூரில் போக்கி வருகின்றார் எனத் தெரிவித்தார்.
நீதியரசர் திரு S. இராஜேஸ்வரன் அவர்கள், சென்னை உயர்நீதி மன்றம்.
வள்ளல் பெருமானின் திருஅருட்பா இசை விழாவினை இங்கே நடத்தி வரும் திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள், எனது உறவினர். அது ஒரு புறமிருந்தாலும், அவர், வள்ளல் பெருமானின் திரு அருட்பாவினை அனைவரும் அறிய வேண்டும், அதன் மூலம் சுத்த சன்மார்க்கக் கருத்துக்கள், இந்த நாட்டி, நன்கு வேரூன்ற வேண்டும் என்ற முறையில் வருடந்தோறும் இந்த இசை விழாவினை மேற்கொண்டு வருகின்றார். அதற்காக நாம் அனைவரும் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். குறிப்பாக அவரை நாம்தான் வளர்க்க வேண்டும்.
இசை மன அழுத்தத்தைப் போக்குகின்றது. கோபத்தைக் குறைக்கின்றது நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளது. இசையின் மூலம் இறைவனை அடையலாம் என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கின்றோம். சாதாரண இசைக்கே இந்த மகத்துவம் உண்டென்றால், வள்ளல் பெருமான் பாடிய திரு அருட்பாவிற்கு, உலகர் அனைவரையும் திருத்தி, சுத்த சன்மார்க்கத்திற்கு வரவழைக்கும் மிகுந்த சக்தி உண்டு.
முன்னர், திரு தண்டபானி தேசிகர் அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. 1951ஆம் ஆண்டில் “ஓர் இரவு” என்ற திரைப்படத்திற்கு “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா” என்ற பாடலை மிகச் சிறந்த முறையில் அமைத்திருந்தார். அந்தப்பாடலினை எல்லாம் இன்று கேட்டாலும் நமக்குள்ளேயே ஒரு இன்பம் பிறக்கும். ஒரு புதுத் தெம்பு பிறக்கும் ..
தாவரங்கள் கூட இசையினால் வளர்கின்றன என்று கண்டு விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள்.
கரு உருவான நாளிலிருந்தே வயிற்றில் வளரும் குழந்தைகள் இசையால் ஈர்க்கப்படுகின்றன. கருவிலிருந்த ஒரு குழந்தைக்கு வழக்கமாக இசையினை கேட்கும் வாய்ப்பினை அதன் பெற்றோர்கள், கொடுத்தனர். அதாவது, ரெகுலராக, அந்தக் கருவுற்ற தாயார், இசை கேட்பது வழக்கம். அவர் மூலம், கருவில் இருந்த அந்த குழந்தையும் இசையினைக் கேட்டு வந்தது. ஒரு நாள், பாடல் போடவில்லை. பாடல் கேட்கும் போது அமைதியாக இருக்கும் - வயிற்றில் இருந்த அந்தக் குழந்தை - அங்குமிங்கும் அசைவு கொடுத்து தனது ஆதங்கத்தை வெளியிட்டது. என்னடா வயிற்றுக்குள்ளேயே ஒரு புரட்சி என அந்தத் தாய் நினைத்தார். . பின்னர் வழக்கமாகப் போடப்படும் இசையினைக் கேட்க விட்டதும், அந்தக் கரு அமைதியாயிற்று.
இசைக்கு உள்ள மகத்துவத்தினை இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவரும் அறியலாம்.
வள்ளலார் திரு அருட்பாவின் மூலம் மனித குலம் திருந்துவதற்கும் - தன் போன்ற இறவாப் பெரு நிலையினை மனிதராய்ப் பிறந்த (Deathlessness) அனைவருமே அடைய வேண்டும் என்ற நோக்கில், உபதேசங்களைச் சொல்லியுள்ளார்.
சாதாரணமாக, யாரும் உபதேசம் கூறி விடமுடியாது. ஒரு உபதேசம் சொல்வதென்றால் அது ஒரு நல்ல நெஞ்சிலிருந்து வரவேண்டும். வள்ளல் பெருமான் மனித நேயம் மிக்கவர். அவரது பாடலினை ஏன் இன்று வரை நாம் கேட்கின்றோம். உபதேசங்களை ஏன் கேட்கின்றோம் ? அவர், ஒழுக்கமாக - தனி மனித ஒழுக்கத்தினை தமது வாழ்க்கையின் மூலம் - அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற விதத்தில் வாழ்ந்து காட்டியவர் என்பதால்தான்.
வான் கலந்த மாணிக்க வாசகத்தை .. நான் கலந்து பாடுங்கால்…நற்கருப்பஞ் சாற்றினிலே ..
பெற்ற தாய் தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறுந்தாய் மக மறந்தாலும் ..
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் …
இவ்வாறெல்லாம் வள்ளல் பெருமான் மிகவும் அருமையான பாடல்களை திரு அருட்பாவில் பாடி வைத்துள்ளார்.
அவர் பாடிய திரு அருட்பாக்களில், மனித நேயத்திற்கு சான்றாக பலப்பல பாடல்கள் உள்ளன.அந்த அருட்பாக் கடலில், ஒரு பாட்டு --
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் ..
பசியினால் வீடுதோறிரந்தும் பசியறாதயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்…
வள்ளலார் உண்மை வாழ்க்கை வாழ்வதற்கு அருமையான தத்துவங்களைச் சொல்லிச் சென்றுள்ளார்.
அவரது கொள்கைகள் வருமாறு –
கடவுள் ஒருவரே
அவர் அருட்பெருஞ்ஜோதியாக உள்ளார்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும்.
நாம் அனைவரும் ஆன்ம நேயத்தினால் சகோதரர்கள். (Universal brotherhood)
சாதி மதம் ஒன்றும் இல்லை.
உண்மை அன்பினால் எவரிடமும் பழக வேண்டும்.
எவ்வுயிரையும் கொல்லக் கூடாது.
புலால் உண்ணக் கூடாது.
இந்த இடத்தில் ஒரு கதை உங்களனைவருக்கும் சொல்வேன்.
ஒருபன்றியும் ஒரு பசுவும் பேசிக் கொண்டனவாம்.
பன்றி பசுவினைப் பார்த்துக் கேட்டது .. நான் எங்கு சென்றாலும் மனிதர்கள் என்னைக் கல்லால் அடிக்கின்றார்கள். ஆனால் பசுவான நீ எங்கு சென்றாலும், உன்னை மக்கள் அனைவரும் வணங்குகின்றார்கள். ஏன் என்பதே எனக்குத் தெரியவில்லை என்றதாம்.
அதற்கு அந்தப் பசு, நீ இறந்த மாமிச உணவினை உண்கிறாய். ஆனால், நானோ அனைவருக்கும் பாலைக் கொடுத்து உதவுகின்றேன். அதுவும் இந்த வாழ்நாளிலேயே பாலை வழங்குகின்றேன். எனவேதான் என்னை அனைவரும் வணங்குகின்றனர் என்றது. இதிலிருந்து உணர வேண்டிய ஒன்று என்னவெனில், நாம் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே.
நான் சார்ந்த சட்டத் துறையில் தற்போதெல்லாம், வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றதே என சக நண்பர்கள், வழக்குறைஞர்கள் வருந்துகின்றார்கள். பொதுமக்கள் சட்டத்தினையும், அதன் மூலம் பாதுகாப்பு கிடைக்கின்றது என்ற அடிப்படையிலும்தான் நீதிமன்றங்களை நாடுகின்றனர். எனவே வழக்குகள் அதிகரிப்பது ஒரு வகையில் மகிழ்ச்சி தரும் விஷயம். வழக்குகள் அதிகரிக்கின்றனவே என்று கவலைப் படக் கூடாது.
குடும்ப நல நீதி மன்றங்கள் இங்கே உள்ளன. அங்கு வழக்குகளின் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து வருகின்றது. திருமணம் செய்துகொண்டவர்கள் தமது மனோ பாவத்தில் வேறுபட்டு, இந்த நீதி மன்றங்களை நாடுவதால், வழக்குகளின் எண்ணிக்கை நாளொரு மேனியும் பொழுது வண்ணமாக - அதிகரித்து வருகின்றது. இதுதான் கவலைப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயமாகும். இந் நிலை உடனடியாக மாற வேண்டும்.
அனைவரும் மனதை ஒருமுகப் படுத்தப் பழக வேண்டும். பெரியோர்களைமதிக்க வேண்டும். இளைய தலை முறையினர். மனம் போன போக்கில் நடக்கக் கூடாது.
மனித குல சமுதாயம் நல்ல மாற்றம் காண வேண்டுமெனில். இது போன்ற சன்மார்க்கம் சார்ந்த அமைப்புகள் பல விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும். அதன் மூலம் மக்களுக்குச் சேவைசெய்ய வேண்டும். அவற்றை எல்லாம் கேட்டு, இந்த மனித சமுதாயம் மாற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
சுவாமி பத்மேந்திரா, நாகர்கோவில்.
வேலூர் மாவட்டத்தில் ஒருநிகழ்ச்சியிலே கலந்து கொள்வதற்காக வந்த நான். திரு அருட்பா இசை விழா நடைபெறுகின்றது, வருகை தர வேண்டும் என்று பன்னாட்டு சங்கத் தலைவர் திரு சுப்புராமன் அவர்கள் கேட்டுக் கொண்டதால் இங்கே வந்து, இந்த நிகழ்ச்சியில் இன்று பங்கு கொள்கின்றேன்.
சற்குருநாதா சற்குருநாதா .. சன்மார்க்கசங்கம் தழைக்க அருள் தாதா..
சற்குருநாதா சற்குருநாதா .. சன்மார்க்க இசைச் சங்கம் தழைக்க அருள் தாதா ..என்பேன்.
கடந்த ஆண்டும் இதே போன்று திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள் நடத்திய திரு அருட்பா இசை விழாவில் ஒரு நீதியரசர் கலந்து கொண்டார். அதே போன்றும் இந்த ஆண்டிலும் நீதி அரசர் திரு S. இராஜேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார்கள்.
வரும் 2010 ஆம் ஆண்டில் சன்மார்க்கம் சார்ந்த ஒரு பெரிய சிறப்பான நிகழ்ச்சி நடத்துவதாக உள்ளோம் அதற்கு இந்த இசை மேடையிலே இருக்கும் .. குறிப்பாக .. திரு கங்கை அமரன் இசை அமைப்பாளர் அவர்கள்.. திரு அருட்பா பாடல்களைப் பாடி எங்களுக்கு உதவ வேண்டும்.
மற்றெல்லா இசைக்கும், திரு அருட்பா இசைக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. என்னவெனில் திரு அருட்பாவினை பாடினால் மரணமிலாப் பெருவாழ்வு சித்திக்கும். மற்ற எதிலும் இந்த சிறப்பு கிடையாது. எனவே மக்கள் சமுதாயம். திரு அருட்பாவினைக் கற்று, சுத்த சன்மார்க்க வழியில் நின்று மரணமிலாப் பெருவாழ்வினை அடைய வேண்டும். வருடந்தோறும், திருபுவனம் ஆத்ம நாதன் அவர்கள், திருஅருட்பாவிற்கு இசை விழா எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
இடையில் பேசிய திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள், இந் நிகழ்ச்சி நடைபெறுவதற்கும் திரு அருட்பா இசை வடிவம் பெற்றதற்கும் சிங்கப்பூரில் வசிக்கும் திரு சிவக்குமார் அவர்கள், VallalarOrg Foundation அமைப்பின் மூலமாக பெரிய உதவிகளை எல்லாம் செய்துள்ளார். அவர்களின் உதவிக்கு மிக்க நன்றி என்றார்.
அடுத்து மதுரையில் இருந்து வருகை தந்து பேசிய திரு மூக்கையாத் தேவர் அவர்களின் அறக்கட்டளையிலிருந்து வந்த பொருளாளர் .
திரு அருட்பா இசை நடத்தும் ஆத்ம நாதன் .. ஆத்ம நாதனல்ல .. ஆவர் .. ஒரு ஆத்ம நாதம் .. ஆகும். குன்னக்குடி வைத்ய நாதன் அவர்களின் சிஷ்யர் அவர். வள்ளலார் அவர்கள் சொன்ன பசித்திரு தனித்திரு விழித்திரு என்பதை அவர்க கடைப்பிடிப்பவர் என்றார்.
திரு கங்கை அமரன் அவர்கள், இசை அமைப்பாளர்.
எல்லாம் செயல் கூடும் என்னாணை அம்பலத்தே .. என்ற தொகையறாவுடன் தமது பேச்சினை அவர் தொடர்ந்தார். அவரது சொற்பொழிவு வருமாறு..
மறைந்த குன்னக்குடி வைத்திய நாதன் அவர்கள், ஒரு மாய வித்தைக் காரர். இசையிலே ஒரு மாய வித்தைக் காரர். அவரிடம் நானும் சிஷ்யனாக இருந்துள்ளேன். அதுபோல் திரு புவனம் ஆத்மநாதனும் சிஷ்யனாக இருந்துள்ளார். கர்நாடக இசையில் கரைகடந்தவர் .
அதேபோல் மறைந்த மாபெரும் இசைக் கலைஞர் திரு T.R. பாப்பா அவர்களிடம் நான் கிடார் வாசித்தவன். அவர் மூலம். திரு அருட்பா பாடல்கள், இசை வடிவம் பெற்று இன்று இசை ஆல்பம் வெளியிடப்படுகின்றது.
குன்னக்குடி வைத்திய நாதன் அவர்களும். T.R.பாப்பா அவர்களும் வயலின் வித்வான்கள் ஆவர். இருவரிடமும் நான் பணிபுரியும் வாய்ப்பினைப் பெற்றவன்.
இசை ஆனதுஅனைவரையும் சந்தோஷப் படுத்துவது ஆகும். அதனைப் பாடும் நாங்கள் பாக்கியவான்கள். இசையினை எங்களுக்குப் பிச்சை போட்ட . அந்த இறைவனுக்கு .. எங்களது நன்றி. .. வரவிருக்கும் 2010 ஆம் ஆண்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் எனது பங்களிப்பு என்னவோஅதனை வள்ளல் பெருமானுக்காக .. நான் தவறாமல் நிறைவேற்றுவேன். எந்த வகையில் இசை ஆல்பம் வெளியிட வேண்டும் என நீங்கள் விருப்பம் தெரிவிக்கின்றீர்களோ.. அந்த வகையில் நான் என்னாலான உதவிகளை மனப்பூர்வமாக செய்வேன்.
1952ஆம் ஆண்டில், சித்ரா என்ற பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. திரு G. ராமநாதன் அவர்கள் பாரதியார் பாடிய பல பாடல்களுக்கு இசை மூலம் உயிர் கொடுத்தார்.
இப்போதெல்லாம் சங்கீதம் .. என்றால் வெறும் சப்தம்தான் மிஞ்சுகிறது. கட்டுரை போன்று உள்ளது. என்ன சொல்கின்றார்கள் அந்த பாடலில் என்பதே கேட்பது இல்லை.
வள்ளலார் அவர்கள் விரும்பியதுபோல வடலூர் மாற வேண்டும். அதனை மாற்றுவதற்கு, வள்ளலார் பன்னாட்டு சங்கம் எடுத்து வரும் பெரும் நடவடிக்கைகள் எல்லாம் மிகச் சிறப்பானவையாக உள்ளன. இங்கு கலந்து கொண்டதன் மூலம் நானும் இனிமேல் திரு அருட்பா இசை ஆல்பம் வெளியிடுவேன் எனக் கறிக் கொள்கின்றேன்.
திரு அருட்பாவினை சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் மிகவும் விரும்பும் வண்ணம் இசை அமமத்துப் பாடி வரும் மழையூர் சதாசிவம் அவர்களும், இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
திரு பால ரமணி அவர்கள், நிகழ்ச்சி நிர்வாகி, சென்னைத் தொலைக் காட்சி நிலையம்.
நான் வசித்த வந்த ஊரிலிருந்து வடலூர் 7 கி.மீ தூரம்தான். வள்ளலாருக்கும் எனக்கும் உள்ள அருகாமையினைத் தான் நான் இவ்வாறு குறிப்பிடுகின்றேன். திரு அருட்பிரகாச வள்ளலார். இந்த உலகத்தினைச் சிந்தித்தார். உலகில் வாழும் அனைத்து ஜீவ ராசிகளையும் பற்றி சிந்தித்தார்.
சேக்கிழார் .. உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்… என்றார்.
கம்பன் .. உலகம் யாவையும் தாமுளவாக்கலும் நிலைபெறுத்தலும்..என்றார்.
இவ் விருவரும் உலகினை முன்னிறுத்தி தமது பாக்களைத் துவங்கினர்.
ஆனால் வள்ளுவப் பெருந்தகை ..அவர்களிலிருந்து மாறுபட்டு .. இப்படிப் பாடினார்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
இவ்வாறு ஞானிகள், அறிஞர்கள் எல்லாம் உலகினைப் பற்றியே சிந்தித்தவர்கள். எந்த ஒரு ஆத்மா உலகைப்பற்றியும் அதில் வாழும் ஜீவ ராசிகளைப் பற்றி சிந்திக்கின்றதோ. அவர்கள் தமதுகாலத்துக்குப் பின்னரும் உயிர் வாழ்கின்றனர் ..
இதற்குச் சான்று .. வள்ளல் பெருமானே ஆகும்.
அவர் பாடிய
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் .. என்ற திரு அருட்பா பாடலைப் பார்த்தால் அவர் எதற்கெல்லாம் அன்பு செய்ய அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் திரு அருளை வேண்டியுள்ளார் என்பது புரியும்,.
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்.
ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும். .. என்றார்.
தேட்டிலே மிகுந்த சென்னையில் …
இறக்கவும் ஆசை இல்லை எந்தாய் .. என திரு அருட்பா பாடினார்.
ஜாதியும் மதமும் பொய் பொய்யே என்று முழக்கமிட்டவர் வள்ளல் பெருமான்.
அவர் பாடிய திரு அருட்பா பாடல்களுக்கு இங்கே விழா எடுக்கப்படுவது மிகுந்த சிறப்பு., இப் பணி தொடர வேண்டும். அதன் மூலம் சீரழிந்து கொண்டிருக்கும் இந்தமனித குலம் உயர்வடைய வேண்டும்.
திருமதி A. அன்னபூரணி அவர்கள் நன்றியுரை கூற, இந்த இசைவிழா இனிதே நிறைவு பெற்றது.
பின்னணிப் பாடகியான எல்.ஆர்.ஈஸ்வரி அம்மையார் அவர்கள், தமது இனிய இசை நாதத்தின் மூலம், பங்கு கொண்டிருந்த அனைவரையும் திரு அருட்பாவின் கருத்துக்களில் ஆழ்ந்து செல்ல வழி வகுத்தார். அனைவரும் திரு அருட்பா பாடல்களை அவரது இசையின் மூலம் ரசித்துக் கேட்டனர்.
வள்ளலார் தெய்வ இசை அமுதம் மூலம் வடிவமைக்கப்பட்ட 10 விதமான ஆடியோ சி.டி.கள், விழாவின் நுழைவாயிலில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. இவ் விற்பனைப் பொறுப்பினை சென்னையை அடுத்த பாடிய நல்லூர் சுத்த சன்மார்க்க சங்கத்தின் பொருளாளர் திரு ஜெகநாதன் அவர் மேற்கொண்டு சிறப்பாகச் செய்தார். அவருடன் மதுரையிலிருந்து சென்ற தயவு அன்பரும் அப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
சென்னனயில் எண்ணிலடங்கா சமரச சுத்த சன்மார்க்க சங்கங்கள் இருந்தும், www.vallalarspace.com இணைய தளத்தின் மூலம் - அனைவரும் நன்கு அறியும் வண்ணம் கடந்த 3 வாரங்களுக்கு முன்பே செய்திகள் வெளியிடப்பட்டும் ஏனோ தெரியவில்லை ..யாருமே வரவில்லல என்பது ஒரு வருந்தத் தக்க விஷயம் ஆகும்.
திரு அருட்பா பாடல்களுக்கென எடுக்கப்பட்ட இந்த இசை விழாவில் அரங்கம் நிரம்பி வழிந்தது. தெருவில் போவோர் வருவோரெல்லாம் நின்று கேட்டு ரசித்து கேட்டுச் சென்றது காண்டற்கு அரிய ஒரு காட்சியாக அமைந்தது.
இதுபோன்ற திரு அருட்பா இசை நிகழ்ச்சிகள் நாள் தோறும் நடைபெற வேண்டும் என மனதால் அவர்கள் வேண்டிக் கொண்டே சென்றது, அவர்களே முகத்தினனப் பார்த்தவுடனேயே தெரிந்தது.