திருவண்ணாமலையில் 7.12.2008 மற்றும் 8.12.2008 ஆகிய நாட்களில் நடைபெற்ற நிகழ்ச்சி.
திருவண்ணாமலையில், சன்மார்க்க மூத்த அன்பர் திரு கலைநம்பி அவர்கள் கிரிவலப் பாதையில் அடி அண்ணாமலை வருணலிங்கம் அருகில் கீழ்க்காணும் கட்டிடங்களைக் கட்டி, அதற்கான திறப்பு விழாவினை மிகச் சிறப்புடன் கொண்டாடினார்.
திரு அருட்பா பீடம்
வள்ளல் பெருமான் திருச் சன்னிதானம்
சன்மார்க்க துவஜஸ்தம்பம்
தர்மசாலை.
7.12.2008 ஞாயிறு
காலையில், மதுரை திரு சுந்தரக் கண்ணன் சன்மார்க்க அன்பர் தலைமையில் அன்பர்கள் கணபதி ஹோமம் செய்து வைத்தனர். ஜோதி திரு விளக்கு ஏற்றப்பட்டது.
ஸ்ரீ ரமணாஸ்ரமம் தவத்திரு V. கணேசன் அவர்கள் ஜீவ ஜோதி திருவிளக்கினை ஏற்றிவைத்தார்.
கருமாரப்பட்டி ஸ்ரீ-ல-ஸ்ரீ வெள்ளையானந்த சுவாமிகள் (வயது 92) அவர்கள் திரு அருட்பா பீடம், திருக்கதவினைத் திறப்பு விழா செய்தார். அவரைப்பற்றி,. திரு கலைநம்பி அவர்கள் தமது உரையில் அவரது இயற்பெயர் வெள்ளைச்சாமி என்பதாகவும், அன்னந் தண்ணி இல்லாமல், இறை நினைவில் கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் அவர் இருந்ததாகவும் அவருக்குத் தற்போது 92 வயதாகிறது எனவும் குறிப்பிட்டார். மேலும் இந்தக் கட்டுமானங்களுக்கு உள்ளூர் அன்பர்களும், குறிப்பாக மலேசியா அன்பர்கள் மற்றும் கேரளா அன்பர்களும் பெரும் உதவி செய்ததாகக் குறிப்பிட்டார். தம்மிடம் இந்த தர்ம ஸ்தாபனங்கள் கட்டுவதற்காகக் கொடுக்கப்பட்ட தொகையினை தாம் உரிய முறையில் செலவழித்து, இங்கே கட்டுமானம் செய்திருப்பதாகத் தெரிவித்தார்.
இந்தக் கட்டுமானம் குறித்த ஆங்கிலச் சாசனத்தினை, சிங்கப்பூர் சன்மார்க்க அன்பர் திரு சிவக்குமார் அவர்களைக் கொண்டு வாசிக்கச் செய்தார்.
இந்த திரு சன்னிதானத்தில், அருட்பெருஞ் ஜோதி திரு விளக்கு இனிமேல் எந் நேரமும் எரிந்து, அன்பர்களுக்கு அருள் பாலிக்கும் எனத் தெரிவித்தார்.
மலேஷியா திருமதி T. ரத்தின சிங்கம், தயவு சகோதரி B.K. உமா, பிரம்ம குமாரிகள் சங்கம் முதலானோர் வந்திருந்து சிறப்பு விழாவில் அலுவலகம் மற்றும் தவ உறைவகம் ஆகியவற்றைத் திறந்து வைத்தனர்.
கல்வெட்டுச் சாசனத்தினை மலேசியா அன்பர் திருமதி பத்மா K.V.C. நாயர் அவர்கள் திறந்து வைத்தார்கள். தவக் குடிலினை மலேசியா பெருந்தகையாளர் திரு K.V.C. நாயர் அவர்கள் திறந்து வைத்தார்கள்,.
இந்த கட்டிடங்கள் கட்டுவதற்கு வாய்ப்பாக நிலத்தினை பூமிதானம் வழங்கியவர்களான கேரள மாநிலம் தெய்வத்திரு நீதி அரசர் P. வேலுப் பிள்ளள, திருமதி B. அம்முக் குட்டி அம்மா ஆகியோரின் திரு உருவப் படம் அங்கு தியான மண்டபத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக, சிங்கப்பூர் திரு சிவக்குமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
வடலூர் தவத்திரு ஊரன் அடிகள் அவர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றினார்.
நாளும் அமுதளிக்கும் தெய்வ அடுப்பினை, (இரட்டையர்களான) மலேசியா சகோதரிகள் (சிறார்கள்) சொர்ணா, சுமத்ரா ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
தவத்திரு தர்மலிங்க சுவாமிகள் மூலம் இசை வடிவம் பெற்ற திரு அருட்பா ஆடியோ சி.டி. வெளியிடப்பட்டது.
8.12.2008 திங்கள்
குடமுழுக்கு புனித நன்னீராட்டு விழா திட்டமிட்டபடி காலை 9.00 மணிக்கு மேல் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நிறைவேறியது.
இரு நாட்களும், மதுரையிலிருந்து சென்றிருந்த அன்பர்கள் – அவர்களில் குறிப்பாக அருட்பா திரு ரெங்கனாதன் மற்றும் திரு ஹரி கோவிந்தன் ஆகியோர், விழா நடைபெற்ற இரு நாட்களும் திரு அருட்பா மழையினைப் பொழிவித்தனர்.
வந்திருந்த சன்மார்க்க அன்பர்கள், அண்டையிலிருந்து வந்திருந்த அன்பர்கள் ஆகியோர் அவ் விசை மழையில் நனைந்து, சுத்த சன்மார்க்கத் தேன் குடித்தவரானார்கள்.
திரு அருட்பா சி.டி.கள், புத்தகங்கள் விற்பனை ஸ்டால் இங்கு இடம் பெற்றிருந்தது.
சத்திய ஞான சபைக் கட்டுமானம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது.
இரு நாட்களும் அன்னதானப் பணி நடைபெற்றது.
ஏராளமான தயாஸ்ரம ஊனமுற்ற, ஆதரவற்ற குழந்தைகள், ஆசிரியர்கள், ஊழியர்கள், திரளான பொதுமக்கள்,. மதுரை, சென்னை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய இடங்களிலிருந்து பல சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்று இவ் விழாவினைச் சிறப்பித்தனர்.
ஜோதிஸ்தலமான திருவண்ணாமலையில், வடலூர் ராமலிங்க சுவாமிகளின் சுத்த சன்மார்க்க நெறி பரப்புவதற்காக திரு அரு. கலை நம்பி அவர்கள் எடுத்துக் கொண்ட பெரு முயற்சியினை அனைவரும் பாராட்டினர். இன்னும் சத்திய தருமச் சாலையினையும் விரைவில் முடித்து, திறப்பு விழா செய்யும்படி அனைவரும் அவரை வாழ்த்திச் சென்றனர்.
Write a comment