DAEIOU - தயவு
வள்ளல் பெருமான் சென்று வந்த வேட்டவலம்.

வேட்டவலம் பயணம்.
வள்ளல் பெருமான் வேட்டவலம் சென்று அங்கே ஜமீந்தார் அவர்களின் மனைவியாருக்குப் பிடித்திருந்த பிரம்ம ராக்ஷஸப் பேயை விரட்டி, நோயை குணமாக்கியது சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் அறிந்த ஒன்றே.
வேட்டவலம் ஜமீந்தாருக்குச் சொந்தமான இடத்தினை வடலூர்ப் பெருவெளிக்கு என, ஜமீந்தார் அவர்களும் வள்ளல் பெருமானின் காலத்திலேயே நிலம் ஒதுக்கிக் கொடுத்துள்ளார்கள். அதில்தான் சத்திய ஞான சபை பெருமானின் மேற்பார்வையில் கட்டப்பட்டுள்ளது.
அந்த வேட்டவலத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரில் உள்ள ஒரு சந்தில் சன்மார்க்க சங்கம் இயங்கி வருகின்றது. அதனை ஆறுமுகம் என்பவர் நடத்தி வருகின்றார். சங்கம் தனிக் கட்டிடத்தில் இயங்கி வருகின்றது. தினந்தோறும் மாலை நேரங்களில் திறந்து வழிபாடு, வந்தனைகள் செய்யப்படுவதாக அங்கு சென்றபோது அருகில் உள்ள அன்பர்கள் தெரிவித்தனர்.
இந்த சன்மார்க்க சங்கத்தின் கொடி மரத்திற்கான மேடையினை, வேட்டவலம் ஜமீந்தார் அவர்கள் திறந்து வைத்துள்ளார்கள்.
இதே ஊரில், மற்றொரு சன்மார்க்க அன்பர் திரு சுப்பிரமணிய பாரதி என்பவரும் தனது வீட்டின் அருகில் ஒரு சங்கம் நடத்தி வருகின்றார் என அவ் வூரினைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க வேட்டவலம் ஜமீந்தார் வீடு குன்றின் அடி வாரத்தில் உள்ளது. . சுற்றிலும் காம்பவுண்டு கட்டப்பட்ட வீடு. இங்குதான் வள்ளல் பெருமான் வந்து சென்றதாக வரலாற்றில் சொல்லப்படுகின்றது. இதனை அடுத்து பெண்கள் உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது
அவர்கள் ஜமீந்தாரின் வீட்டின் பின்புறம் உள்ள ஒரு கிணற்றில் திருநீறு போட்டதால், கிணற்று நீர் நந்நீராக மாறிய ஒரு செய்தியும் அங்கு சென்றபோது தெரிவிக்கப்பட்டது.
ஜமீந்தார் அவர்களின் வீட்டின் பின்புறம் உள்ள குன்றுப் பகுதியில் நவாப் காலத்தில் கட்டப்பட்ட “மனோன்மணி அம்மன்” கோவில் உள்ளது. இங்கு 10 நாட்கள் விசேஷம் நடத்தப்படும் எனவும் அருகில் விசாரித்ததில் தெரிய வந்தது.
ஜமீந்தார் அவர்கள் முகாம் சென்றதால் வேறு எந்தத் தகவலும் அங்கு சேகரிக்க இயலவில்லை.
இந்த கிராமம் திருவண்ணாமலையிலிருந்து சுமார் 18 கி.மீ தூரத்தில் உள்ளது.