DAEIOU - தயவு
திருவண்ணாமலைக்கு வேண்டியது - ஊரன் அடிகளார் பதிப்பு திரு அருட்பா 6 திருமுறைகள்.

திருவண்ணாமலைக்குத் தேவை - ஊரன் அடிகளார் பதிப்பித்த திரு அருட்பா. (6 திருமுறைகளும்)
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை அறியாதார் யாவருளர் ?
அவரது திரு அருளைப் பெறவேண்டுமென்று திருவண்ணா மலையையே கிரி வலம் வந்து பெளர்ணமி தோறும், மாதா மாதம், வணங்குவோர்தான், எத்தனை லட்சம் பேர் ?
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரின் அருளும், கார்த்திகை தீபம் மட்டும் தான், அங்கு வரும் பக்தர்கள் அறிந்தது.
வள்ளல் பெருமானின் அருட்பெருஞ்ஜோதியை அவர்கள் அறிய வேண்டாமா ?
அவர் போதித்த சுத்த சன்மார்க்க நெறியினை அனைவருக்கும் பரப்ப வேண்டாமா ?
அதற்கு .. அந்தப் பணியில் ஈடுபட .. இதோ நான் இருக்கின்றேன் .. என கங்கணம் கட்டிக் கொண்டு களமிறங்கியவர்தான் அந்த ஊரைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர் திரு கலைநம்பி அவர்கள்.
கடந்த 22.8.2006ஆம் நாளில் கிரிவலம் வரும் பாதை அருகே பூமி பூஜையுடன் இந்தப் பணியினை திரு கலைநம்பி அவர்கள் ஆரம்பித்தார்.
அச் சமயம் ராமநாதபுரம் வள்ளலார் யுனிவெர்சல் மிஷன் ட்ரஸ்ட்- பொறுப்பாளர் திரு ஜோதிமுருகன் அய்யா அவர்கள் அந் நிகழ்ச்சியில் அவருடன். தோளோடு தோள் நின்றார்.
தருமச்சாலை, தவக்குடில் கொடிமரம் ஸ்தாபனம், அலுவலகம், அருட்பா பீடம், உணவுக் களஞ்சியம் திறத்தல் முதலானவற்றிற்கான ஏற்பாடுகள், கட்டுமானம் முதலானவைகளை கடந்த 2 ஆண்டுகளாக அவர் மேற்கொண்டு, முடித்து வைத்து 2008 டிசம்பர் 10 தேதிக்குள், விழா காண உள்ளார்.
அனைத்தும் சரிதான்.
அவர். 4.11.2008 அன்று தொலைபேசி மூலம், இந்த விழாவிற்கு ஊரன் அடிகள் அவர்கள் பதிப்பித்த திரு அருட்பா 6 திருமுறைகளும் வேண்டியுள்ளது என்றார்.
திரு ஊரன் அடிகளிடமே நேரில் சென்று வடலூரில் கேட்டபோது, தம்மிடம் இருக்கும் பிரதியில் தாம் குறிப்புக்கள் எழுதி வைத்திருப்பதாகவும். அது தவிர, வேறு பிரதிகள் தம்மிடம் கிடையாது எனவும் அவர் தெரிவித்துவிட்டாராம்.
இந்த விளம்பரத்தினைக் காணும் சன்மார்க்க சங்கங்கள், சன்மார்க்க அன்பர்கள், திரு கலைநம்பி அவர்களின் கோரிக்கையை ஏற்று, தம்மிடம் உள்ள ஊரன் அடிகளார் பதிப்பித்த திரு அருட்பா (6 திருமுறைகள்) அவருக்கு அனுப்பி வைத்தால் இந்த வைபவத்தை இன்னும் சிறப்பாகச் செய்து முடிப்பதாக அவர் உள்ளார்.
அவை அங்கேயே இடம்பெறச் செய்வதற்காகவே திரு கலைநம்பி அவர்கள் கேட்கின்றார்.
கருணை உள்ளம் படைத்த சன்மார்க்க அன்பர்கள். சன்மார்க்க சங்கத்தவர்கள், தம்மிடம் இருக்கும் ஊரன் அடிகள் பதிப்பித்த 6 திருமுறைகள் திரு அருட்பாவினை அவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதுவே இங்கு வைக்கப்படும் கோரிக்கையாகும்.