அருள் ட்ரஸ்டின் மூன்றாவது மாதாந்திரக் கூட்டம்
இடம் – தெற்கு வாசல் பள்ளிவாசல் சாமி ஆசாரி சந்து, மதுரை நகர்.
நாள் – 17.5.2008
நேரம் – மாலை 6.00 மணி
17.5.2008ந் தேதியன்று, அருள் ட்ரஸ்டின் மூன்றாவது மாதாந்திரக் கூட்டம் மாலை 6.00 மணிக்குத் துவங்கியது.
வருகை தந்த சன்மார்க்க அன்பர்கள் வள்ளல் பெருமானின் திரு அருட்பா பாடல்களை மனமுருகிப் பாடினார்கள். இப் பாடல்களின் உருக்கம், அருகிலுள்ள குடியிருப்புகளிலிருந்த அன்பர்களைப் பெருமளவில் வரவழைத்தது.
நிறுவனர் திரு முரளிதரன், மதுரை.
இவர், தனது உரையில், வள்ளல் பெருமானின் திருவருட்பா பாடல்களில், அவர், இறைவனால் ஆட்கொள்ளப் பட்ட பாடல்கள், தமது நிலைகளை பாடிய அனுபவ மாலை பாடல்கள் என்றும், மனித தரத்தில், ஆண்டவரிடம், கோரிக்கையாக தெரிவிக்கப்படும் பாடல்கள் என்றும் பல்வேறு பாடல்கள் பாடிச் சென்றுள்ளார் என்றும், அவற்றில், சன்மார்க்க ஒழுக்கத்திற்கு வந்து, சன்மார்க்கம் பயிலும் அன்பர்கள் பாட வேண்டிய பாடல்களை தனியே தொகுத்து அதனை தனிப்பகுதியாக அன்பர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், இப் பணியை, தயவு விஜயராமன் அவர்களை செய்து தரும்படி கேட்டுக் கொண்டார்.
அருள் ட்ரஸ்ட் துவங்கி மூன்று மாதங்கள் ஆகின்றன என்றும், தற்போது, மேட்டுக் குப்பத்தில், ஜீவ காருண்யத் தொண்டு புரிவதற்கும், தூர தொலைவிலிருந்து வடலூர், மேட்டுக் குப்பம் ஆகிய இடங்களுக்கு வரும் அன்பர்கள் தங்கிச் செல்வதற்கும் வாய்ப்பாக, ஒரு மனையிடம் வாங்கப் பட்டுள்ளதென்று தெரிவித்தார். அதேபோல் மதுரை மாவட்டம். வாடிப்பட்டி, தாலுகா, குட்லாடம்பட்டி என்ற சுற்றுலாத் தலத்தில், வள்ளல் பெருமானின் கருணையினால், அருள் ட்ரஸ்டுக்காக, மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த மின்வாரியத்தில் பணிபுரியும் புகழேந்தி என்ற அன்பர் சுமார் 56 சென்ட் நிலத்தை இனாமாகக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அவ் விடத்தை ஒட்டி, ஏற்கனவே, ராமகிருஷ்ணாஸ்ரமம், புத்த பீடம், சித்த வித்யார்த்தி சாஸ்வதானந்தா ஆகியோரின் குடில்கள் ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறினார். மேற்படி இடத்தில் மூலிகைச் செடிகள் பயிரிடுவதற்காகவும், மின் இணைப்பு பெறவும், போர் (Bore well) கிணறு போடுவதற்கும், நல்ல முறையில், சன்மார்க்க அன்பர்கள், தியானப் பயிற்சி செய்வதற்கும், கட்டிடம் கட்டி, அந்த இடத்தை மேம்படுத்த வேண்டியுள்ளதெனவும், அதற்கு, அன்பர்கள் பொருளாகவோ, நன்கொடை மூலமாகவோ, உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மதுரையம்பதியின் அருகிலுள்ள கிராமங்களிலுள்ள சிறு தெய்வ வழிபாடியற்றும் கோவில்களில் - குறிப்பாக மதுரையை ஒட்டி அமைந்துள்ள பாண்டி கோவில் போன்ற இடங்களில், மக்கள் தெய்வங்களின் பெயரால், ஆடு, கோழி போன்றவற்றைக் கொல்வதை தடுப்பதற்கு சன்மார்க்க சங்க அன்பர்கள் அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இவ்விதமான செயல்பாடுகள், அரசு நடத்திய புகைப்படக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்ததாக, கூட்டத்தில் கலந்து கொண்ட சன்மார்க்க அன்பர் லலிதாமணி அவர்களும் தெரிவித்தார்.
வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்ப, www.vallalarspace.com துவங்கப் பட்டுள்ளது என்றும், அதன் செயல்பாட்டினை அனைவரும் அறிந்து, சுத்த சன்மார்க்க வழியினைத் தத்தமது வாழ்வில் கடைப்பிடித்து, காலந் தாழ்த்தாமல், ஆன்ம லாபம் அடைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதே கருத்தினை இக் கூட்டத்தில் கலந்து கொண்ட நாராயணபுரத்தைச் சேர்ந்த அன்பர் ராமானுஜம் அவர்களும் வலியுறுத்தி, இந்த இணைய தளத்தில், சேர்வதற்கு ஆர்வமுள்ளவர்கள் யாரேனும் இருப்பின், அவர்களுக்கும் தகவலைத் தெரிவித்து, அவர்கள் செய்யும் சுத்த சன்மார்க்கப் பணிகளை இடம் பெறச் செய்வதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டுமென, கலந்து கொண்ட அன்பர்களைக் கேட்டுக் கொண்டார்.
வரவிருக்கும் 28.6.2008 மற்றும் 29.6.2008 ஆகிய நாட்களில், மலேசியாவில் சன்மார்க்க மாநாடு நடைபெற இருப்பதாகவும், ஆர்வமுள்ள அன்பர்கள் அதில் கலந்து கொள்ளலாமென்றும் திரு முரளீதரன், தெரிவித்தார்.
திரு தயவு விஜயராமன், சன்மார்க்க அன்பர். மதுரை.
வள்ளற் பெருமான் அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவலில், வாரத்தில் உள்ள ஒவ்வொரு நாளிற்கும், சிறப்பாக வேண்டுதல் செய்ய வேண்டிய (தாயே, தந்தையே, அருள் கடலே, மகா மணி மந்திரமே, அருட்குருவே, அருட்பொன்னே, அருள் நிதியே, அருள் விளக்கு, மற்றும் அருட்சுடர்) அகவல் வரிகளைத் தாம் தொகுத்துள்ளதாகவும், அதனை அன்பர்கள் கடைப்பிடிக்குமாறும் தெரிவித்தார். தவிரவும், வடலூரிலே, மதுரை அன்பர்களுக்கென தனி கட்டிடம் ஒன்று கட்டப்படவில்லை என்ற குறை நெடுநாளாக உள்ளது எனத் தெரிவித்து, இக் குறையினைப் போக்குவதற்கு, சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் ஒத்துழைத்து, இடம் வாங்கி, கட்டிடம் கட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
திரு இளங்கோ, சன்மார்க்க அன்பர், மதுரை.
திருஅருட்பாவில், வள்ளல் பெருமானார் அருள் அனுபவ நிலையடைந்த பின், யாத்துள்ள ஆறாம் திருமுறைப் பாடல்களை, ஒவ்வொரும் சன்மார்க்க அன்பரும், தமது வேண்டுதலில் படித்து, வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் நூல்களில், வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகள் – நன்கு விளக்கப்பட்டுள்ளதால், அவர்கள் இயற்றிய நூல்களின் ஒரு தொகுப்பு, அன்பர்கள் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை தெளிவாக அறிந்து கொள்வதற்கு வசதியாக - அருள் ட்ரஸ்டில் வாங்கி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தாம் “இறைச்சி இறைவனுக்கு சம்மதமா ? – புலால் உண்பது சரியா ? ஜீவகாருண்யமே இறை வீட்டின் திறவுகோல் ! – என்னும் தலைப்பு கொண்ட புத்தகம் வெளியிட்டிருப்பதை தெரிவித்து, பல்வேறு அறிஞர்கள், தெரிவித்த கருத்துக்களை இப் புத்தகத்தில் தொகுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், கடவுள் உண்மை (God and Truth) என்ற தலைப்பில் மற்றும் ஒரு புத்தகம் வெளியிடவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இறுதியில் அன்பர்களுக்கு, அன்னம் பாலித்தபின் கூட்டம் இரவு 9.45 மணியளவில் முடிவடைந்தது.
கலந்து கொண்ட அன்பர்களின் விவரம்
1) திரு ராமசாமி, செக்கானூரணி, உசிலம்பட்டி தாலுகா.
2) திரு சந்திர மோகன், ஊமச்சிகுளம், மதுரை வடக்கு தாலுகா.
3) திரு தர்மலிங்கம், மதுரை
4) அன்னாரது துணைவியார் திருமதி ஷண்முகவள்ளி
5) திருமதி மீனாம்பாள், ரயில்வே காலனி, மதுரை
6) செல்வி லலிதாமணி, ரயில்வே காலனி, மதுரை
7) திரு சொக்கலிங்கம், தெற்கு வாசல், மதுரை.
8) அன்னாரது துணைவியார் திருமதி புவனேஸ்வரி
9) திரு தாயுமானவர், மதுரை.
10)திரு ராமானுஜம், நாராயணபுரம். மதுரை வடக்கு தாலுகா.
11)திரு தயவு விஜயராமன், மதுரை.
12)திரு இளங்கோ, மதுரை (தனது மகளுடன் கலந்து கொண்டார்).
மற்றும் பல அன்பர்கள் இக் கூட்டத்தில் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.
Write a comment