மெய் ஞானத்தை அடையும் வழி
பகுதி-23
சன்மார்க்க வழிபாட்டு முறைகள்
ஒரு வழிபாடு என்றால் முதலில் யாரை வழிபடுகிறோமோ அவரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கு தக்கவாறு வழிபடுமிடத்தில் ஆசனம் அலங்கரித்து அவரை அதில் அமர்த்தி வழிபட வேண்டும்.
நாம் சுத்த சன்மார்க்க வழிபாட்டு முறையை தெரிந்து கொள்ளுமுன் அருட்பெருஞ்ஜோதியரின் ஆசனம் அமைக்கக் கூடியச் திருச்சபையை எப்படி அலங்கரிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்
அருட்பெருஞ்ஜோதியரின் ஆசனம் அமைத்து திருச்சபையில் அலங்கரிக்க வேண்டிய இடம் நமது ஆழ்மனது. அந்த ஆழ்மனதில் செல்ல இறைவனுக்கு பிடிக்காத தேவையற்ற தவறான எண்ணங்களையும், நம்பிக்கைகளையும், துடைத்து விட்டு அந்த இடத்தை புனித படுத்த வேண்டும்.
மேலும் சுத்த சன்மார்க்கிகளுக்கு சாதனம் மற்றும் சின்னம், வெளிப்பாடு என்ற அனைத்தும் கருணையே என அனைவரும் அறிவார்கள்.
ஆனால் சமயங்கள் அப்படிப்பட்டவை அல்ல. ஒவ்வொரு சமயத்திற்கும் சாதனம், சின்னம், வெளிப்பாடு என்று தனித்தனியாக இருக்கும். வழிபாடு தெய்வம் என்று ஒரு ஆன்மாவிற்கு தகுதியளிக்கப்பட்டிருக்கும். அந்த சமயத்தை பின்பற்றுபவர் அனைவரும் தமது சமயத்தை உயர்ந்ததென்றும் மற்ற சமயங்கள் தாழ்ந்ததென்றும், தம் சமய சாதனங்களும் சின்னங்களும் மிக உயர்ந்தவை என்றும் அவற்றிற்கு மிக்க மரியாதை அளிக்க வேண்டும் என்றும், இதை ஏற்றுக்கொள்ளாதவர்களை எந்த அளவுக்கு கடுமையாக தண்டிக்கிறோமோ அந்த அளவுக்கு அந்த சமயதேவர் உறுதுணையாக இருந்து அருள்புரிவார் என்றும் பரிபூரணமாக நம்புவதே எல்லா சமய வாதிகளின் நம்பிக்கையாக வெளிப்பாடாக உள்ளது.
சுத்த சன்மார்க்கத்தை பொறுத்தவரை பல காலக்கட்டங்களில் பல்வேறு அருளாளர்கள் வார்த்தையாக பயன்படுத்தினார்களேயன்றி வள்ளல் பெருமானைப் போல் தாமே கடைபிடித்து அதன் மூலம் அருள் சக்தியை வெளிப்படுத்தி சுத்த சன்மார்க்க இலக்கணம் வகுக்கவில்லை. வள்ளல் பெருமான் அதை சாதித்து தானே அருட்பெருஞ்ஜோதியராய் மாறினார். எந்த ஒரு செயலையும் மேற்கொள்ளும்போது அது பலமுறை பரிசோதனை செய்து வெற்றிபெற்ற பின்னர், விளைவுகளையும் அதை அடையும் வழிமுறைகளையும் மட்டும் தமக்கு பின் வருபவர்களுக்குஅனைவரும் எடுத்துக் கூறுவார்கள்.
அதனால்தான் ரிஷி மூலம் நதி மூலம் பார்க்க கூடாது என்பார்கள். ஆனால் வள்ளல் பெருமான் வெற்றி பெரும் தருணத்தில் அவருடன் இருந்தவர்கள் மிகவும் அன்புத் தொல்லை செய்து அவருடைய ஆரம்ப கால முயற்சியிலிருந்து அனைத்தையும் வெளிப்படுத்தச் செய்து வள்ளல் பெருமானை தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார்கள். அதன் விவரம் இங்கு விவரித்தால் இந்த கட்டுரையின் நோக்கில் தொய்வு ஏற்படும் எனவே அதன் விவரம் பிறகு பார்ப்போம்.
இங்கு கூற வந்தது யாதெனில் சுத்த சன்மார்க்க வழிப்பாட்டுக்கு சபையை அலங்கரிக்க வேண்டும் என்பது எப்படி என்ற ஆய்வை பற்றியதாகும்.
வள்ளல் பெருமான் தாம் இறை மீது கொண்ட பக்தியை சைவ சமயத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிப்படுத்தினார். அதில் வெற்றி பெற இயலாது என்பதை இறைவன் அருளால் தெரிந்துக்கொண்டு சுத்த சன்மார்க்க நெறியில் ஆட்பட்டு வெற்றிக் கண்டார். அவரது சீடர்களின் வற்புறுத்தலால் அவற்றின் இரண்டு தன்மைகளையும் அனைவரின் பார்வைக்கு சமர்ப்பித்தார்.
நாம் ஒரு பொருளை வாங்க கடைக்கு சென்றால் அங்குள்ள கடைக்காரர் இரண்டு விதமான பொருட்களை கடையில் வைத்துள்ளார். இரண்டு பற்றியும் விளக்கம் கேட்கும் போது இரண்டைப் பற்றியும் விவரிப்பார். அதில் ஒரு பொருளானது எல்லா கடைகளிலும் கிடைப்பது அதன் குறைகளை மறைக்கப்பட்டு அனைவராலும் ஏகபோகமாக விளம்பரங்களோடு பிறர்க்கு விற்பனை செய்ய படுவது, மற்றொரு பொருளானது மிக நேர்த்தியானது இதற்கு மேலான பொருள் இல்லை என்ற தன்மை உடையது, அது இந்த கடையை தவிர எங்கும் கிடைக்காதது, கடைக்காரர் இரண்டு பொருட்களையும் காண்பித்து விளம்பரமுள்ள குறைகள் அடங்கிய பொருளுக்கு உத்திரவாதம் இல்லை என்றும் எந்த குறையும் இல்லாத நேர்த்தியான பொருளுக்கு நல்ல உத்திரவாதத்தையும் வழங்கி நம்மை தெளிவு படுத்தி நம் எண்ணத்திற்கு ஏற்ப பொருளை விற்பனை செய்கிறார். கடைக்காரருக்கு இரண்டு பொருளை பற்றி நன்கு தெரிந்திருப்பதால் ஒப்பாய்வு செய்து அதில் நல்ல பொருளை பற்றிக் கூறி வாங்கும்படி செய்கிறார்.
சாதாரண வீட்டு உபயோக பொருளுக்கு இந்த விளக்கம் பெறுகின்ற நாம் இந்த பிறவியின் தன்மையே நிர்னயிக்கும் வழிபாட்டு முறைக்கு எந்த விளக்கமும் பெறுவதில்லை.
வாங்குகின்ற மக்களும் அவசர யுகத்தில் விவரம் கேட்பதில்லை விற்பனையாளராக கூறிக்கொள்ளும் அன்பர்களும் விளம்பர வாசகங்களையே மக்கள் மத்தியில் மனப்பாடமாக ஒப்புவித்து தம் கடமையை முடித்ததாக திருப்தி கொள்கின்றனர்.
வள்ளல்பெருமான் சைவ சமய வழிப்பாடு முறைகளையும் சாதனங்களையும், சின்னங்களையும் வெளிபாடுகளையும் சமயத்தேவரையும் நன்கறிந்தவர்.
சுத்த சன்மார்க்க வழிபாட்டுமுறைகளையும், சாதனங்களையும்,சின்னங்களையும், வெளிப்பாடுகளையும் நிர்ணயித்தவர்.
இரண்டையும் ந்ம்முன் மற்றவர்களின் அன்புத்தொல்லையால் வைத்துவிட்டார். இரண்டில் எது முழுமையான சுத்தசன்மார்க்கத்தை நமக்கு வழங்கும் என நாமே தேர்ந்தெடுக்கும் காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம்.
கடந்த அத்தியாயத்தில் சைவ சமய சாதனங்களான லிங்க வழிப்பாட்டையும்,ஸ்தல புராணங்களையும் பற்றி கூறுவதின் மூலம் ஆழ்மனதில் சமயத்திலுள்ள சாதனங்களை விலக்கும் சுத்த சன்மார்க்க தன்மையை பதிந்தோம்.
தற்போது சைவசமயச்சின்னமான திருநீறு என்றும் சமயவதிகளால் மதிப்பளிக்கப்படும் சமயச்சின்னத்தின் தன்மையும் வரலாற்று நிலையயும் ஆய்வு செய்து பின்னர் அதைபற்றிய வள்ளல்பெருமானின் சமய ரீதியான கருத்தையும் சன்மார்க்க ரீதியான மாற்றுக்கருத்தையும் ஆய்வு செய்து அது எந்த வகையில் சுத்த சன்மார்க்கத்திற்கு
புறம்பானது என்பதையும், சன்மார்க்கிகளுக்கு உள்ள குழப்பத்தை தவிர்க்கும் பொருட்டு எடுத்தியம்புவோம்.
திருநீறு என்பது பண்டைய காலத்தில் சிவ வழிப்பாட்டை பல்வேறு வகையில் மேற்கொண்ட காளாமுகர்களாலும், காபாலிகர்களாலும் சிவச்சின்ன்மாக அங்கீகரிக்கப்பட்டு உடல் முழுக்கப் பூசப்பட்டது.
ஒரு சாதாரண மனிதன் எப்பொழுது இறைவனை நினைக்கிறான் என்றால், தனக்கு வியாதி என்று வரும் போதும் குடும்பத்திலும் வாழ்க்கையிலும் பிரச்சினைகள் வரும்போதும் நினைக்கிறான். எனவே சமயவாதிகள் பண்டைய காலத்திலும் சரி தற்போதும் சரி தமது சமயத்தை பின்பற்றினால் வியாதிகள் குணமாகும் என்ற ஒரு கருத்தை முன் வைத்து தான் சமயப் பிரச்சாரம் செய்கிறாரகள்.
சித்தர்கள் மனிதனுக்கு ஏற்படும் வியாதிகள் 4448 என்றார்கள், அவற்றில் உயிர்ப்பிணி 48 என்றும் உடல் பிணி 4400 என்று வகுத்தார்கள். அதில் 48 வகையான உயிர்ப்பிணியை போக்கினால் 4400 வகையான உடல் பிணிகளும் கட்டுபட்டு சரியாகி விடும் என்ற கருத்தை வலியுறுத்தினார்கள். 48 உயிர்ப்பிணிகளிலும், 39 உயிர்ப்பிணிகள் முன்கர்மவினையால் மனதிலுள்ள துர்க்குணங்களால் உருவாகுபவை. 9 உயிர்ப்பிணிகள் இந்த இப்பிறவியில் பிறருக்கு ஏற்படுத்திய பாவத்தின் செயலால் ஏற்படுபவை என அறிக.
எனவே இந்த இப்பிறவியில் பாவம் செய்யாது துர்க்குணங்களை விலக்கினாலே, எந்த பிணியும் அணுகாது என்பது சன்மார்க்க கொள்கை. இதுவே உண்மையான வெளிப்பாடு.
மேலும் பண்டைய சமயவாதிகள் மருந்துகளையே சமயச் சின்னங்களாக உருவாக்கினாகள். சித்தர்களால் உருவாக்கப்படும் பஸ்பம் (சாம்பல்) அனைத்தும் திருநீறு என்ற ஒரே பெயரால் வழங்கப்பட்டு சைவ சமயம் தழைக்க சாதனமாகியது. தத்துவ விளக்கமாக அனைவரும் இறுதியில் ஒரு பிடி சாம்பலாகத்தான் வேண்டும் என்பதை நினைவில் கொள்வதே சிவ வழிபாடு செய்யும் எங்கள் கொள்கை எனவே அதையே நாங்கள் எங்கள் சமயச்சின்னமாக ஏற்றுக் கொள்கிறோம் என்றார்கள்.
சித்தர்களால் உருவாக்கப்பட்ட சூரணங்களும் செந்தூரங்களும் மருந்தாக பயனபட்டு திருநாமம் என்ற பெயரால் வைணவ சின்னமாக அங்கீரிக்கப்பட்டு வைணவம் தழைக்க சாதனமாகியது. தத்துவ விளக்கமாக மன்னாதி மன்னரும் கடைசியில் மண்ணாகத்தான் போக வேண்டும் என்பதை மனதில் நிறுத்தவே நாங்கள் திருநாமத்தை முன்வைத்து விஷ்ணு வழிபாடு செய்கிறோம் என்றார்கள்.
இந்த நிலையில் பண்டைய காலத்தில் சுடுகாட்டு சாம்பலையே திருநீறாக அணிந்தார்கள் அதில் ஒரு முக்கியமான மருத்துவ குணம் உள்ளது. அதாவது மனிதனின் மூளையில் ஏற்படும் உய்ர்ப்பிணிகளை நீக்குவதில் அது ஒருவகை மருந்தாக செயல்பட்டது.அதையே சித்தர்கள் செய்முறை மூலமாக சிறந்த மருந்தாக உருவாக்கினார்கள்.
சிவ வழிப்பாட்டில் பைரவ வணக்கம் என்பது ஒரு சிறந்த வழிப்பாடாக உள்ளது. ஆனால் திருநீறை வணங்குவதைத்தான் பைரவ வணக்கமாக உருவாக்கினார்கள். அதாவது ஒரு பைரவருடன் ஒரு நாய் இருப்பது போல் சித்தரித்து வழிப்பாடு செய்யப்படுகிறது. உண்மையில் சித்தர்களால் சுடுகாட்டு சாம்பலில் உருவாக்கப்படும் சிறந்த பஸ்பம் என்பது பண்டைய சிவ வழிபாட்டுக்காரர்களால் சமயசின்னமாக அணியப்பட்ட திருநீறு ஒரு சிறந்த யோகியின் மண்டை ஓட்டையும் நாயின் மண்டை ஓட்டையும் சேர்த்து தயாரிக்கப்பட்ட பஸ்பமாகும். அந்த பஸ்பத்தின் பெயர் "பேரண்ட பஸ்பம்". எந்த அளவு உயர்ந்த யோகியின் மண்டை ஓட்டால் தயாரிக்கப்பட்டதோ அந்த அளவு சக்தி வாய்ந்ததாக கருதப்பட்டது. இன்னும் சொல்லப் போனால் கடந்த சில வருடங்களாக சாதரணமாக இறந்து போன சாதாரண மனிதனின் மண்டையோட்டை பயன்படுத்தி அரசாங்க நிறுவனமே இதை தயாரித்து வந்தது. தற்போது அந்த பஸ்பம் தயாரிப்பதை தமிழ்நாடு அரசாங்கம் தடை செய்து விட்டது.
மேலும் பண்டைய காலத்தில் தன்னுடைய தத்துவங்களை எதிர்க்கின்ற எதிரிகளை அழித்து அவர்களின் சாம்பலை அணிவது சிறந்த கல்வி வீரமாக கருதப்பட்டது. எப்படி புலியை வேட்டையாடி அதன் பல்லை கழுத்தில் அணிவது ஒரு வீரனுக்கு அழகாக கருதப்பட்டதோ அப்படியே ஒரு சமய குருவுக்கு எதிரியின் மண்டையோட்டு பஸ்பமும், மண்டையோடும் அழகு சாதனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மருத்துவ ரீதியாகவும், உபாயத்தன்மையிலும், வாதுப்போரிலும் சிவவழிப்பாட்டுக்காரர்களால் வெற்றிக் கொள்ளப்பட்ட சமண, பௌத்த யோகிகளின் மண்டையோட்டு பஸ்பம் சிவ வழிப்பாட்டுக்காரர்களின் உடலை அரசர்களின் உதவியுடன் அலங்கரித்தது என்றால் அது மிகையல்ல.
ஆதிசங்கரர் அவதாரம் ஏற்படுவதற்கு முன்பு வாழ்ந்த அத்தனை சிவவழிப்பாட்டுக்காரர்களும் பெரும்பாலும் இதையே பின்பற்றினார்கள். நாயன்மார்களும் இதற்கு விதிவிலக்கல்ல. திருவாலங்காட்டிலும், மதுரையிலும் கழுவிலேற்றப்பட்ட சமணத்துறவிகளின் ஆன்மாக்கள் இதற்கு சாட்சி கூறும். கழுவிலேற்றப்பட்ட மனிதர்களின் உயிர் பிரிந்த உடன் தலைகள் வெட்டப்பட்டு உடல்கள் அப்படியே கழுகுகளுக்கு உணவாக்கப்படும். தலைகள் யார் பொருட்டு வெட்டப் பட்டதோ அவருக்கு காணிக்கையாக்கப்படும்.
ஆதிசங்கரர் உருவான பின்புதான் திருநீற்றின் தன்மை மாறியது, மூலிகைகள், சமித்துக்கள், பழவகைகள், உயர்ந்த வகை பட்டு துணிகள் ஆகியவைகளால் யாகங்கள் செய்யப்பட்டு கிரியைகள் மூலம் உருவான சாம்பலானது சமயசின்னமாக அங்கீகரிக்கப்பட்டது. மந்திரங்கள் மூலமும், மூலிகைகள் மூலமும் சமயத்தை பரப்பினால் போதுமானது என சமயவாதிகள் தமது செயல்பாடுகளை கட்டுப்படுத்திக் கொண்டார்கள்.
பின்னர் பொதுமக்களால் தயாரிக்கப்பட்ட திருநீறானது இன்னும் சாத்வீக தன்மை கொண்டதாக மாறியது. மார்கழிமாதத்தில் பசுக்களால் உருவான சாணமானது சுத்தமாக சேகரிக்கப்பட்டு காலையில் வீட்டு வாயிலில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு செய்து பிறகு உருண்டைகளாக மாற்றப்பட்டு காயவைக்கப்பட்டது. பின்னர் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி அன்று இரவில் வீட்டு வாயிலில் சுத்தம் செய்து அந்த சாண உருண்டைகள் தீயிட்டு பஸ்பமாக்கப்பட்டது. தீயிடும் போது பஞ்சாட்சர மந்திரம் பயன்படுத்தப்பட்டு,அந்த தீயை மகா ஜோதியாக சிவ ரூபமாக காணும் நிலை இருந்தது. அந்த திருநீறு வாசனை திரவியங்கள் கலந்து பய பக்தியுடன் பொது மக்களால் அணியப்பட்டு வந்தது.
தற்போதுள்ள திருநீறு வியாபாரிகளின் லாபத்தை அடிப்படையாக கொண்டது. அதன் தன்மை எத்தகையது, அது எந்த பொருட்களால் ஆனது என்பதற்கு அந்த வியாபாரிகளின் மனசாட்சியும், அதை சமயசின்னமாக அங்கீகரிக்கும் சமயவாதிகள், வழிபடு தெய்வங்கள் ஆகியவர்களே சாட்சியாகும்.
இங்கு கூறியுள்ள கருத்துக்களே சமய சின்னமான திருநீறின் சுருக்கமான வரலாறு ஆகும். இந்த கருத்தை இதைவிட சுருக்கமாக கூறுவது இயலாதது. இன்னும் விளக்கமாக விவரிப்பது சன்மார்க்கிகளுக்கு பயனளிக்காதது.
இந்த வரலாற்று தன்மை எந்த அளவில் வள்ளல் பெருமானால் இருவேறு மாறுப்பட்ட கருத்துக்களை உருவாக்கி,
இறுதியாக சன்மார்க்கத்திற்கு திருநீறு புறம்பானது என்ற எண்ணத்தை உருவாக்கியது என்பது ஓரளவு நன்றாகவே சன்மார்க்க அன்பர்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறோம்.
அடுத்ததாக வள்ளல் பெருமானின் திருநீறு சம்பந்தமான கருத்துக்கள் அடுத்த பகுதியில்
ஆய்வு செய்து சமர்ப்பிக்கப்படும்.
(தொடரும்)
அடுத்த பகுதி அடுத்த வாரம்
Email : mahamandhirapeedam@yahoo.com
mahamandhirapeedam@gmail.com
jyothimaindhan@gmail.com
Cell: 9942062598,
04172-275071.
3 Comments
Thank you for this. We expecting more and more from you Ayya. Thank you. Valli.
Thank u Very much for your message.I and my Friends were read ur Message.Really Good Message.By,Nagercoil Aruljothi Sanmarga Students.
உங்களின் சன்மார்க்க பணிகளுக்கு என்னுடைய பணிவான வணக்கம்.
திருநீறு பற்றிய உங்களின் செய்திகளுக்கு நன்றி.திருநீறு என்பது சுத்த சன்மார்கத்தை பொறுத்த வரை கருணை பண்பை தான் குறிக்கும்.
சுத்த சன்மார்க்க அன்பர்கள் உண்மையான திருநீறு விளக்கத்தை தன்னுள்
கண்டவர்கள்.அப்படி பட்ட அன்பர்கள் வெளியில் திருநீறு அணிவதை விரும்புவது இல்லை.ஒரு ஜீவன் கஷ்ட பட்டால் சுத்த சன்மார்க்க ஞானிகள் ஆன்ம உருக்கத்தினால் உதவி செய்ய முற்படுவார்கள்.ஒரு ஜீவன் கஷ்ட படும் போது
அவர்களிடம் இருக்கும் கருணை துணை புரிகிறது.சைவ பெரியோர்கள்
கருணையோடு திருநீறை நல்ல காரியங்களுக்காக பயன்படுத்தினார்கள்.அந்த பெரியோர்களின் கருணை அவர்கள் பயன்படுத்திய திருநீறுக்கு வலிமையை கொடுத்தது.வெளியில் அணிந்து கொள்ளும் திருநீறுக்கு வலிமை கருணையால் தான் கிடைக்கிறது.