Vallalar Universal Mission Trust   ramnad......
126.சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம்

( உரைவிளக்கம்) முன்பு ஓரிடத்தில் சித்தி என்பதற்கு, அருந்திறலால் செய்துமுடிக்கும் செயலெனக் குறிக்கப்பட்டது. இந்தச் சித்திச் செயல், கர்ம, யோக, ஞான சாதனைகளால் பெற்றபோது ஏற்பட்ட அனுபவம் மனிதனைப் புறநிலையிலிருந்து வாழத்தான் வகை செய்திருந்ததாம். ஆகவே அவ்வனுவபம் உலகில் வெளிப்பட விளங்கியும், பலரால் மதித்தும் கொண்டாடப் பெற்றிருந்ததில் வியப்பில்லை. ஆனால் , அச் சித்தி அனுபவத்தால் மனிதன் திருவருளைப் பூரணமாகப் பெற்று அருளியற்செயலொடு என்றும் திகழ வைப்பதாய் இல்லாதது பெருங்குறையாம்.


இங்கு பேசப்படுகின்ற சித்தியனுபவம் அகமாகிய அருட்ஜோதி நிலையினின்று வெளிப்படுவதாய் இருப்பதால் மிகச் சிறப்புடையதாய் உள்ளதென அறியப்படும். அவ்வனுபவத்தின் ஆற்றல் அருட்பெருஞ்ஜோதியின் சார்புடையதாய் இருக்கின்றதாம். ஆதலின் , அதன் ஆற்றலை அளவிட்டுக் கூறுதல் அசாத்தியம். முத்திநிலையால் அருள் உண்மை இதுவென அறிந்து கொள்ளப்பட்டது. அறிந்து அந்நிலையிற் பொருந்தி நிற்கவும் முடிகின்றது. அப்படி நின்றதொடு முடிகின்றதில்லை மனிதனின் குறிக்கோளும் கடவுளின் ஆணையும் “ கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்றபடி அந்நிலையில் நின்று விடாது மேற்கொண்டு , அக அருள் ஆற்றல் வெளிப்பட செயல்புரிந்து கொண்டிருத்தல் வேண்டும் என்பது திருவுள்ளமாம் . ஆகவே முத்திநிலை பெற்றவன், அருட்சித்தியுடன் , அருட்சித்தி யனுபவத்துடன் இங்கு வாழ்ந்துவரல் வேண்டும் என்பதாம்.


முன்பு சத் விசாரத்தால் ஏறிநின்ற இரண்டரையாம் நிலையில், தன், தூல சூக்கும தேகங்களையும் காரண ஆன்ம வடிவையும் திருவருளின் சேர்ப்பால் சுத்த பிரணவ ஞான தேக நிலையாகக் கண்டிருக்கின்றான் சன்மார்க்கி, ஆன்மக் கடவுள் நிலையில், முன் இரண்டரை விசார சாதனையில் விளங்கி நிற்பதாம்; பின் இரண்டரை விசார சாதனையில் விளங்கி நிற்பதாம்; பின் இரண்டரை; பரோபகார தயா சித்திச் செயல் அனுபவத்தில் வாழ்வதாம். அருட்பெருஞ்சித்தியோடு வாழ்கின்றதே இந்த சுத்த முத்தனின் நித்திய இயல்பாகும். இந்த அருட்சித்தியின் திறல் இதுவெனக் காண்கின்றோம்.


பிறவிடங்களில், முன்னிரண்டரை நாழிகை, பின் இரண்டரை நாழிகை, எனவும்., இரண்டரைக் கடிகை எனவும், முன்பாட்டுக் காலை, பின் பாட்டுக் காலை எனவும் குறிப்பிட்டதெல்லாம் விசார சாதனா நிலையும், மேல்சாத்தியனுபவ வாழ்வு நிலையும் குறிப்பன வாகவே உணர்த்தப்படுகின்றோம். ஆகவே பேரின்ப சித்திப் பெருவாழ்வு கொண்டு உலகில் வாழ்கின்ற அருட்பிரகாசர் இன்று முத்தி வடிவில், முத்தேக சித்தியுருவில் , இச் சித்தியையே திருவிளையாட்டுச் செயலாகப் புரிந்து கொண்டுள்ளார் என அறியலாகும்.


முத்தியின் மற்றொரு அரிய விளக்கம் இதுவாம்; ஒருத்தி, இருத்தி, முத்தி என விளங்கு ஆன்மாவின் முடியா முடிவாகிய ஆனந்த வாழ்க்கை நிலையைத் திருவருளால் கண்டு அடைய உள்ளோம்; தனித் தலமைப் பதியை, ஒருவனாம் பரமான்மா வாய்க் கொள்ளும்போது, அப்பதிக்குரிய சதியாகிய ஜீவான்மவை ஒருத்தியாகக் கொள்கின்றோம். இந்த ஆன்மா மனித வடிவேற்ரு தன்னை அறிந்து, அன் ஆன்ம அருஞ்சத்தியால் அற்புதச் செயல் பல புரிந்து நிற்கும் நிலை இரண்டாவதாக இருக்கின்றது. அடுத்து திருவருள் நிறைவால் ஆன்மாவானது அருள் ஒளியால் சூழுடலையே சுத்த வடிவமாக ஆக்கிக்கொண்டு பேரின்பசித்திச் செயலோடு விளங்கலாகின்றதாம். இதுதான் ஓர் ஆன்மாவின் நித்திய இன்பமாம். ஆனந்த வடிவமாக்கும். கரண வடிவாய் உள்ள ஆன்ம நிலையே ஒருத்திநிலையாம். சூக்கும சக்திச்செயலாம் சித்தி நிலையே இருத்தி நிலை ( இதனால் இருத்தி என்ற சொல் சித்தி என்ற பொருளில் விளங்குவதாம்_) மேல், ஆன்மாவின் கடவுள் அருளியில் உண்மை விரிந்து ) பருவுடலையும் சுத்த வடிவாக்கிக் கொண்டு விளங்கும்போது, அது அவ் வான்மாவுக்கு முத்தி நிலையாக இருக்கின்றதாம்.. ஆகவே, முத்தி என்பது ஓர் ஆன்மாவின் பேரின்பானுபவ சித்திச் செய்லோடு விளங்கும் நித்தியானந்த வாழ்வுநிலையே என்பது தான் உண்மை,


முன்னோர் அறிவால் அறிந்துகொண்டது, முத்திநிலையே முடிவென்பது, ஆனால் இப்போது அருளால் அனுபவத்திற் கொள்ளப்படுகின்ற முத்திநிலை நின்று அருல் ஆற்றலால் ஆனந்த சித்தியோடு வாழ்கின்றதே மனிதப் பிறப்பின் முடிந்த குறிகோளாய் இருக்கின்றதாம். இந்த அழியா இன்பம் அருளி வாழ்விக்கின்ற அருட்பெருஞ்ஜோதியின் பேராற்றல் பெருந்திறல்தான் என்னே என்னே!!


அருட்பெருஞ்ஜோதி அகவல் உரைவிளக்கம்


தயாநிதி சரவணானந்தா…..