Vallalar Universal Mission Trust   ramnad......
122. யோக சித்திகள் அருள்வது.

122. யோக சித்திகள் அருள்வது.


243. யோகசித்திகள் வகை யுறுபல கோடியும்

244. ஆகவென் றெனக்கருள் அருட்பெருஞ்ஜோதி



( உரைவிளக்கம்) முன், கரும தேகப் புற உடலின் பெரு முயற்சியால் பெறப்பட்ட சித்திகளினும் சிறந்தது இந்த யோக சித்தி வகை இது சுக்குமமாகிய பிரணவதேக நிலையினின்று வெளிப்படுவதாம். இந்த யோகசித்தி விளக்கமும் அறிவும் இன்றைய மக்களுக்குப் புரிந்துகொள்ளக் கூடாதனவாயுள்ளன. தத்துவ விளக்கக் கலைகளும், வேதாகமக் கலைகளும், யோக சாதனாமுறைகளும் அறிந்து ஏற்கக் கூடாதனவாய் உள்ளனவாம். ஆதலின் அந்த யோகானுபவ சித்திகளை எல்லாம் நம்பவும், அறியவும், அடையவும், முடிகின்றதில்லையாம்.


கர்மசித்தியில் உலகம் மயங்கிக் கிடக்கின்றது. அதனைப் பெற்றுச் சிறு இன்பத்தில் திளைக்கவும் முடிகின்றது. இதுபோல் யோகசித்தியில் பெரும் பற்று உண்டாகவில்லை. இப்பொழுது ஓரளவு கல்விப் பாடத்திட்டத்தில் யோகமுறை புகுத்தப்பட்டு வருகின்றது. கலையறிவு வளர்வதோடு குறிப்பிட்ட யோகசாதனா முறையால், உடல் , உயிர் , மன உணர்வு, திடமுற்று நலம்பெற உதவக்கூடும் என்று கருதுகின்றனர். ஆனால் அடிப்படையில் தயவொழுக்கமும் சத்விசாரமும் , பரோபகரச் செயலும், ஏற்படவில்லையானால் இந்த யோகப் பயிற்சிகளால் பெருநல வாழ்வு சித்திக்காது.


திருவருளாலே யோகசித்தி வகைகளையும், அவற்றின் பயன்களையும் தெரிந்து கொள்ள விழைந்தபோது அவ்வருளே யாவையும் அவர்க்கு வழங்க வாழ்வித்ததாம். இவ்வருளாலே யுண்டானயோகானுபவச் சித்திச் செயல்களை உள்ளபடி உணர்ந்து கொள்ளாத, ஓரளவு யோகசாதனா பயிற்சியுடைய அன்பர்கள், நம் வள்ளலாரின், பிரமதண்டிகா யோக சித்திநிலை குறித்தும் நவகண்ட யோகநிலை குறித்தும், வாத சித்தி குறித்தும், அஷ்டமா சித்திச்செயல்கள் குறித்தும் பெரிதும் போற்றி, அவ்வழியிற்சென்று சித்தி பெறா விரும்புகின்றார்கள். வள்ள உள்ளம் யோக சித்தியை உலகுக்கு ஆணைசெய்ய வில்லை. அருட்பெருங் கடவுள் இவர்க்கு யோகசித்திகளை எல்லாம் ஏவல்புரியச் செய்தார். அருளுக்கு எல்லாம் செயல்கூடும் என்ற உண்மையை வெளிப்படுத்தவே ஓர் ஒரு யோக சித்திச் செயல்கள் இவர் மூலம் அங்கங்கு வெளியாக்கப்பட்டனவாம்.


யோகசித்திகள் பலவும் நம் அடிகளார்க்கு அனுபவப்படும் படி அருள் செய்து விட்டிருந்ததுதான் “ யோகசித்தி வகைகள் உறுபல கோடியும் ஆக என்று எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி, என ஓதப்பெற்றுள்ளதாம். ஆதலின், அருள்நிலை பெறுவோர்க்கு எல்லா யோகசித்தி வகைகளும், தாமே வந்துசேர்ந்து வாழ்வில் விளங்கும் என்பதை மெய்யாக உணர்ந்து அருள்வழியில் முன்னேற வேண்டும்.


அருட்பெருஞ்ஜோதி அகவல் உரைவிளக்கம்

தயவு சரவணானந்தா