பசிப்பிணி நீக்கலே தலையாய அறம்
உடம்போடு கூடிய உயிர்கள் எல்லாவற்றிற்கும் பொதுவாய் அமைந்தது பசியாகும். இது உயிர்கள் கருவாகத் தோன்றிய காலத்திலிருந்து உடலின் வளர்ச்சி நிகழ்கின்ற காலம் வரைக்கும், உட்கொண்ட உணவினைப் பக்குவப்படுத்திச் செரிக்கச் செயும் தீயாக விளங்குகிறது. உடலுக்குத் தரவேண்டிய உணவு உரிய காலத்தில் தரப்பெறாத நிலையில் வயிற்றின் உள்ளே இருந்து இப்பசித் தீ மூண்டெழுகிறது. உயிர்களின் கருவி கரணங்களைத் தளர்ச்சியுறச் செய்தல் இத்தீயின் செயலாகத் திகழ்கின்றது. எனவே உடம்பொடு கூடிய உயிர்கள் இத்தகைய பசித்தீத் தணிய உரிய காலத்தில் உணவினை உட்கொள்ளுதல் இன்றியமையாததாயிற்று. இத்தகைய உணவினைப் பெற இயலாத மக்கள் பசியால் வருந்திய பொழுது அவர்களுக்கு வேண்டிய உணவினைக் கொடுத்தவர்கள், அவர்தம் உடம்போடு உயிரை நிலைத்திருக்கச் செய்தமையால், அவர்கள் உயிர் கொடுத்தவராகவெ மதித்துப் போற்றப் பெறுகிறார்கள்.
“ நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்”
என்ற இப்புறநானூற்றுப் பாடலில் உணவினை முதலாகக் கொண்ட இவ்வுடம்புக்கு உணவு வழங்கியவரே உயிர் வழங்கியவர் என்று குடபுலவியனார் பாடக் காணலாம்.
வறியவர்கள் பசியால் வருந்துகின்ற பொழுது பொருளுடையசெல்வந்தர்கள் அவர்களூக்கு வேண்டிய உணவினை வழங்கி அவர்தம் பசித்தீயைத் தணித்தல் வேண்டும். அதுதான் வாழ்வியல் அறமாகும். இந்த அறம் தான் பொருள் சேர்த்தவர்களின் பொருளைச் சேமித்துவைக்கும் நிதிக் களஞ்சியமாக விளங்குகின்றது.
“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி
என்று திருவள்ளுவர் விளக்கியுள்ளமை காணலாம். அதுமட்டுமின்றி, உணவு உண்ணப் புகுவோர், தம்மையடுத்த ஏழை எளியவர்களின் பசித்ததீத் தணியத் தம்மிடத்துள்ள உணவுப்பொருள்களைப் பகுத்தளித்து உண்ணுதல் வேண்டும். அவ்வாறு வறியவர்க்குப் பகுத்தளித்து எஞ்சியதை உண்பாரைப் ‘ பசி ‘ என்று சொல்லப்படும் தீய நோய் தீண்டுதல் இல்லை.
“ பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது”
என்ற குறளால் வள்ளுவர் இக்கருத்தை தெளிவுபடுத்துகிறார்.
அருள் அறத்தை வலியுறுத்த வந்த இராமலிங்க அடிகளார், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் உள்ளம் நைந்து வாடினார். பசியினால் இளைப்புற்று வீடு தோறும் இரந்து பிச்சையேற்றும் பசிநோய் தணியப் பெறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உள்ளம் வெதும்பினார். நீங்காத நோயால் வருந்துவோரைக் கண்டு வருந்தினார் இரந்து உண்ண மனமின்றி நெஞ்சிளைத்த ஏழைகளைக் கண்டு இளைப்புற்றார்.
“ வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தே
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்
நேருறக் கண்டுளந்துடித்தேன்
ஈடின் மானிகளா ஏழைகளா நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்:
என்பது இக்கருத்தைத் தெளிவாக்கும். அத்துடன் நேரில் காணாத போதும்கூட உலகில் ஏழைமக்கள் பசியால் வருந்துகிறார்கள் என நண்பர்கள் சொல்லக் கேட்டபோதெல்லாம் உள்ளம் பகீரெனத் துடித்தார்.
“ எட்டாரும் பொருளே திருச்சிற்றம்பலத்தே
இலகிய இறைவனே உலகில்
பட்டினி யுற்றோர் பசித்தனர் களையால்
பரிதவிக்கின்றன ரென்றே
ஒட்டிய பிறராற் கேட்ட போதெல்லாம்
உளம் பகீரென நடுக்குற்றேன்
இட்ட இவ்வுலகிற் பசியெனில் எந்தாய்
என்னுளம் நடுங்குவ தியல்பே”
என்று தன்னியல்பைக் குறிப்பிடுகின்றார் அடிகள் அதுபோல்
“ மண்ணுலகதிலே உயிர்கள் தாம் வருந்தும்
வருத்தத்தை ஒரு சிறி தெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்
கணமுநான் சகித்திட மாட்டேன்
என்றும்
“ உள்ளலேன் உடையார் உண்ணவும் வறியார்
உறுபசி உழந்துவெந்துயரால்
வள்ளலே நெஞ்சம் வருந்தவும் படுமோ
மற்றிதை நினைத்திடுந் தோறும்
எள்ளலேன் உள்ளம் எரிகின்ற துடம்பு
எரிகின்ற தென் செய்வேன் அந்தோ
கொள்ளலேன் உணவும் தரிக்கிலேன் இந்தக்
குறையெலாம் தவிர்த்தருள் எந்தாய்
என்னும் வரிகளால் உலகத்து உயிர்களின் வருத்தங்கண்டு இனியொரு கணமும் சகித்திட முடியாதெனத் துடிக்கிறார். உடையார், வறியார், என்று பிரிவுபட்ட மனித சமுதாயம் கண்டு தன் உள்ளமும் உடலும் எரிகிதென்று தெரிவிக்கின்றார். அத்துடன் நிற்கவில்லை அடிகள் இவற்றையெல்லாம் தவிர்த்தருள் என்றும் இறைவனை வேண்டிக் கொள்கிறார். அடிகளின் இவ்வெண்ணங்கள் உலக உயிர்களின் மீது அவர் கொண்ட கருணையின் நிலைக்குத் தக்க சான்று பகர்வதாகும்.
தொடரும்…