- சத்தியமாஞ் சிவ சத்தியை யீந்தெனக்
- கத்திறல் வளர்க்கும் அருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம்) சத்தியம் என்பது சத்தாம் பரம்பொருளின் இயல் விளக்கமே. அச் சத்துப் பொருள்தான் இன்று அருட்பெருஞ்ஜோதியாகக் கண்டு கொள்ளப்பட்டுள்ளதாம். இச் ஜோதியையே சிவமாகக் கண்டிருந்தனர் ஆன்றோர். சி. என்பது ஜோதியாகவும் வ. என்பது அருளாகவும் இருக்கின்றன. இதனால் சிகர ஜோதிநிலை நின்று வகர அருள் உண்மை காண முயன்றபோது; அவ்வருள் ஏகதேச அனுபவமே ஏற்பட்டதாம். ஆனால் இப்போது அருள் நிலை நின்று பெருஞ்ஜோதியின் நிறையனுபவம் பெறக்கூடியுள்ளதாம். நமது அடிகளார் முதலில் சத் விசார மேற்கொண்டது சிவநெறியினின்றேயாம். அந்த விசாரத்தால் கண்ட சிவ பரம்பொருள் ஒன்றே இவ் அகண்ட பேருலகுயிர்ப் பொருள்கள் யாவுக்கும் தனித்தலைமைப் பெரும்பதி என்பதையுணர்த்தப் பெற்றார். அந்தப் பெரும்பதியினுடைய அருளாற்றலால் கண்டதுதான் சத்தியமெய்ப்பொருள். வேறுவிதமாகக் கூறினால், அந்தப் பேரருளே சிவ சக்தியாகவும் , சத்தியமாகவும் உள்ளதாம். சிவம் ஈந்த சத்தியப்பொருள் , அகமிருந்து பெருகி அருட்பெருக்கால் அருட்பெருஞ்ஜோதியாக விசாரமுடிவில் விளங்குகின்றதாம்.
உலகமெல்லாம் நிறைந்துள்ள பரம்பொருள் ஒன்றே சத்தியமாம். அதுவே சிவமாம். அச்சிவம் இரண்டற்ற ஒன்றாக அத்துவிதமாக உள்ளதாம். சிவமும் சத்தியும், ஜோதியும் அருளும், சர்க்கரையும் அதன் இன்சுவையும்போல் பிரித்துக் காண்டற்கில்லாததாம். இந்தக் கடவுளர் அத்துவித நிலை சத்தியமாக இருக்கின்றது அனுபவம். இதுதான், “ அத்துவிதம் சத்தியம்” என மொழியப்படுகின்றது. இது நம் அருட்பெருஞ்ஜோதியாம். இந்த அத்துவிதமான அருட்பெருஞ்ஜோதியின் உண்மையை அறியாதார, உலகை அனந்த வண்ண பேதத் தோற்றமாகத்தான் காண்பார்கள். அத்துவித உண்மையை உணர்ந்தவர்களோ ஒன்றான அருட்பெருஞ்ஜோதியே யாவுமாய் விளங்குகின்றதாய்க் கண்டு, அருளால் அன்புசெய்து இன்புற்று இருப்பார்கள். அருட்பெருஞ்ஜோதியின் பேராற்றல்தான் அதனை எங்கும் கண்டு கொள்ளச்செய்ததோடு அழியா இன்பில் வாழ்வும் செய்துள்ளது நம் வள்ளலை. அவர் சிவசக்தியால் கண்டது அருட்பெருஞ்ஜோதி. அந்த அருட்பெருஞ்ஜோதியால் பெற்றது அருட்பிரகாச ஆனந்த நித்திய வாழ்வு. ஆகையால், இனி உலகம் எல்லாம் அருட்பெருஞ்ஜோதியால் நித்தியானந்த வாழ்வு பெற வேண்டியதே அருள் ஆணையாகும், மாறாக அவர் சென்ற சிவநெறியையே பின்பற்றிச் சென்று உய்யக் கருதுவது எவர்க்கும் இயலாத ஒன்றாகும். ஏனெனில், கருவிலே சிவச்சார்பு கொண்ட அவர் எவ்வளவு வருந்தி முயன்று அருட்பெரு நிலைக்க்கு ஏறியுள்ளார்? அப்படிச் சாதாரணமக்களால் முடியாது என்பது உண்மையாகும். ஆகவே, அவர் வழங்கினது கொண்டு வாழ்வு பெறுவதுதான் யாவருக்கும் எளிதில் பயந்தருவதாம்.
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரைவிளக்கம்.