வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கம்
சூலை குன்மம் குஷ்டம் முதலிய தீராத வியாதிகளால் வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரித்தார்களானால் அந்தசீவகாருண்ய அனுசரிப்பே நல்ல மருந்தாக அந்த வியாதிகளை நிவர்த்தி செய்து விசேஷ செளக்கியத்தை உண்டு பண்ணும் என்பது உண்மை.
பலநாள் சந்ததி இல்லாமல் பல பல விரதங்களைச் செய்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்தஏழைகளது பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால் அந்தச் சீவகாருணிய அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டு பண்ணும் என்பது உண்மை.
அற்பவயதென்று குறிப்பினால் அறிந்து கொண்டு இறந்து போவதற்கு அஞ்சி விசாரப்படுகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி, பசித்த ஏழைகளுக்குப் பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருணிய அனுசரிப்பு தீர்க்காயுளை உண்டு பண்ணும்.
கல்வி, அறிவு, செல்வம், முதலியவைகளைக் குறித்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பர்களானால், அந்தச் சீவகாருணிய அனுசரிப்பு கல்வி அறிவு செல்வம் போகம் முதலானவைகளை உண்டு பண்ணும் என்பது உண்மை.
பசித்தவர்களுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாகக் கொண்ட சீவகாருணியமுள்ள சமுசாரிகளுக்குக்
கோடையில் வெயிலும் வருத்தாது
மண்ணும் சூடு செய்யாது
பெருமழை பெருங்காற்று பெரும்பனி – பேரிடி ., பெருநெருப்பு முதலிய உற்பதங்களும் துன்பம் செய்விக்க மாட்டா.
விடூசிகை – விஷக்காற்று – விஷசுரம் முதலியை அசாத்தியப் பிணிகளும் உண்டாகா.
ஆற்று வெள்ளத்தாலும் கள்ளர்களாலும் விரோதிகளாலும் கலக்கப்படார்கள்.
அரசர்களாலும் தெய்வங்களாலும் அவமதிக்கப்படார்கள்
விளைநிலத்தில் பிரயாசையில்லாமலே விளைவு
மேன்மேலும் உண்டாகும்
வியாபாரத்தில் தடையில்லாமல் லாபங்களும்
உத்தியோகத்தில் கெடுதியில்லாத மேன்மையும் உண்டாகும்.
சுற்றங்களாலும் அடிமைகளாலும் சூழபொபடுவார்கள்.
துஷ்ட மிருகங்களாலும் – துஷ்ட ஜந்துக்களாலும் –துஷ்ட பசாசுகளாலும் – துஷ்ட தெய்வங்களாலும் பயஞ் செய்யப்படார்கள்.
எப்படிப்பட்ட ஆபத்துக்களும் அஜாக்கிரதையினாலும் ஊழ்வகையினாலும் சத்தியமாக வாராது.
வள்ளலார்
ஜீவகாருணிய ஒழுக்க நூலில் கூறியது.