Vallalar Universal Mission Orphange Homes
128. அன்பருக்காம் இவ்வின்ப சித்தி

( உரைவிளக்கம்)


கடவுள் இன்பசித்தி ஒன்றே ஒன்றுதான். உண்மையான, அழிவில்லாத, இயற்கை இறை இன்பமாக இருக்கின்றதாம். இதுவே, நித்தியானந்தம், சச்சிதானந்தம் ஆகும். இந்த இன்பம், மெய்யன்பருக்கே அனுபவப்படுஅதாயிருக்கின்றதாம். அன்பில்லாத வன்பருக்கு அல்லது கடினசித்தி வன்நெஞ்சருக்கு, உண்மை இன்பம் விளங்காது. மெய்யின்பம் இன்னதென்றே புரியாது. ஐம்பொறிவாயில் துய்க்கின்ற விடயசுமகாம் புலன் மயக்க உணர்ச்சியையே இன்பமாகக் கருதி விரும்பிக்கொள்ளுகின்றனர். இந்தப் புற இன்பம், பலப்பலவாகத் தோற்றி, மக்கள் மனதை மயக்கிக் கவர்ந்து, தம் வசம் கெட்டு அழிவுறச் செய்து விடுகின்றதாம். உலகம், கடவுளின் புறவண்ணம் என்பதை மெய்யாகவே யுணர்ந்தால் எங்கும் எதிலும் இறை இன்பக் காட்சியே விளங்கும். “ பொறியுறு ஆன்ம தற்போதமும் போயிட பின்னர்தான், அறிவுரு அனைத்தும் ஆனந்தமாயிடும்’’ என்பது அருளனுபவம்.


கடவுள் அகமிருந்து அருளால் விரிந்து பலவாகத் தோற்றலின், எங்கும் அவர் காட்சியைக் காணலாகும். அக்கடவுள் சச்சிதானந்தமாய் இருத்தலின், அந்த ஆனந்தத்தின் சிறு சிறு கூறுகளே புறத்தில் இறை அழகிடைத் தோன்றி மிளிர்கின்ற தாம். புறந்தோன்றும் இன்ப எழில் எல்லாம் பொங்கி எழுந்து மங்கியழிவதாய் இருப்பதை உள்ளபடி அறிந்து கொண்டால், அதனிடத்து அதிகப்பற்றுதல் உண்டாகாது. அந்த பொங்கெழிலுக்குக் காரணமாய் கடவுள் ஒளியே மன்னெழிலாய் உளங்கொண்டு , தயாவாழ்வு வாழ்ந்து வந்தால், அவ்வக இன்பம் பெருகி நிறைவுற்றிலங்கும். புலன்களும், புறக்கட்சிகளும் இல்லையானால் அகப்புற நிறை உண்மை காணமுடியாது. அகத்தில் இன்பானுபவமே பெறமுடியாது.


இயல் இன்பம் அக நிறைவில் அனுபவப்படுவது; அயல் இன்பம் பொறிபுலனின் தோற்றிக் கெடுவது; புற இன்பம் பெற எவ்வளவோ முயற்சி மேற்கொண்டு அடைந்தும், அது நிலைககது அழிந்து போகின்றது; அப்போது இன்பம் துன்பமாகத்தோற்றி வெறுப்பை யுண்டாக்கிவிடுகின்றதாம். அப்படிப் பலகால் அனுபவித்தபின், உண்மை இன்பம் பற்றியும், அதனைப் பெறும் வழிபற்றியும் அடையவிரும்பி முயலும்போது , உலக வாழ்வில் வேண்டுதல் வேண்டாமை அற்று ஆருயிர்க்கு அன்பு செய்வதால் ஏற்படும் அக நிறைவில் மெய்யின்பம் தோற்றிச் சிறிது சிறிதாக விளைவு கொள்ளுகின்றதாம். அன்பினால், பிறர்க்கு அன்பு செய்து உயிர் விளக்கம் உண்டு பண்ணுவதால் ஏற்படுகின்ற இன்ப உணர்ச்சியே மெய்யானதாக இருக்கின்றதாம். அந்த அன்பன் சத்விசாரத்தால் உள்ளொளியைக் கண்டடைந்து, அந்நிலை நின்று இன்பானுபவத்தைப் பெருக்கிக் கொண்டு வர அருட்பூரணத்தால் பேரின்ப சித்தி பெருவாழ்வும் அடைய முடிகின்றதாம்.


ஒன்றான கடவுல் நிறை இன்ப ஜோதியாய் எங்கணும் நிரம்பி யுள்ளீடாய் இருந்து கொண்டு, யாவையும் பலவாகிய இயற்கை இன்பத் தோற்றங்களாய், உலகம் எங்கும்வெளிப்படுத்திக்கொண்டே யிருக்கின்றார். மெய்யன்பு உடையார்க்குக் கடவுளின் அகப்புற இன்ப நிலையே விளங்குவதாய் இருக்கின்றன. இவ்வன்பர்களுக்குத்தான் மெய்யின்பானுபவம் சித்திக்கின்றது. இவ்வன்பர்களுக்குத்தான் மெய்யின்பானுபவம் சித்திக்கின்றது. அது ஏகமாக உள்விளைவு கொள்ளுவது. மெய்யன்பில்லா அபக்குவர்கள் புறவுலகிற் புலனின்ப வேட்கையால் பலவாகிய இன்பத்தையே நாடி அடைந்தும் முடிவில் துன்புற்று அழிகின்றனர். அப்படிப் புற அனுபவம் திருவருளால்தான் ஏற்படுகின்றாதாம். ஏனெனில், ஒருவனைப் பரிபாகப் பக்குவநிலை அடையச் செய்ய, பலவாகிய பொய் இன்பத்தில் பெற்று நீங்கி, ஒன்றாகிய மெய்யின்பத்தில் திட நம்பிக்கையும் பற்றும் ஏற்படவே அந்த இன்பநிலையும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறதாம்.


ஏனவே உண்மையான இன்ப சித்தியின் இயல் ஏகமாயும் அனேகமாயும் இருப்பதை அன்பு நிரம்பியவர்கள் கண்டு கொள்ளவே வெளிப்படுத்துகின்றதாய் அறியப்படுகின்றதாம். இவ்வுண்மையே அருட்பெருஞ்ஜோதிபதி அருட்பிரகாசர்க்கு அருளியுள்ளதாய் இங்கு அறிவிக்கப்படுகின்றோம்.


அகவல் உரைவிளக்கம்

தயாநிதி சரவணானந்தா….