Vallalar Universal Mission Orphange Homes
127. சிற்சித்தியே ஏகம் அனேகம்

( உரைவிளக்கம்) சித்தி என்பது அக மெய்ப்பதியின் நிலையிற் பொருந்தி, அவ்விடத்தேற்ற அருள் ஆற்றலால், புறத்தே வெளிப்படும் அற்புதச் செயலாகக் கண்டோம். கடவுள் உண்மை ஆற்றலை வெளியிடும், அருள் அனுபவச் செயலே அரிய சித்தியாக அறியப் படுவதாம். அந்த ஒன்றான கடவுட் பேரின்ப சித்தியைத்தான் ஒவ்வொருவரும் அடையவேண்டும் என்பதுகடவுட் சித்தமாக இருக்கின்றதாம்.


இங்கு, ஏக சிற்சித்தி என மொழியப்படுவது, ஒன்றான ஒப்புயர்வற்ற மெய்ஞ்ஞானக் கடவுச்சித்தியே ஆகும். ஏகசிற்சித்தி என்பதை விரித்துப் பார்க்கில் விளங்கும் விளக்கம் இதுவாம். ஏகம் – சித்து – சித்தி என மூன்றாக விரிவுபடுத்திப் பொருளாக்கும்போது, ஏகம் – ஒன்றான கடவுள் எனவும், சித்து மெய்யறிவாகிய அனுபவஞானம் எனவும், சித்தி – அனுபவ அடைவு எனவும் காணலாகின்றதால் பரம்பொருளாம் கடவுள் சித்தி அனுபவமே இதுவென அறிவோம். இந்த ஒன்றான கடவுட் பேரின்ப சித்தியே அனுபவப்பட்ட அல்லது இயல் உற வேண்டும் என்பது ஆண்டவர் திருவுள்ளமாம். இப்படி ஒன்றான பேரின்பானுபவம் உண்டாகவேண்டும் என்ற உளம் கொண்ட இறைவன் செயல், எப்படி இந்த அகண்ட வெளிப் பெரும்பிரபஞ்சத்தில் காரியப்பட்டுள்ளது என்பதை ஒருமையோடு ஆய்ந்து நோக்குவோம். அந்த ஏக பரஞ்சோதிக் கடவுளே தன் உண்மையை வெளியாக்கத் தானே தன் அருட்சத்தித்திறனால்,இந்த பெரும் பிரபஞ்சத்தில் எல்லாப் பொருள்களும் எல்ல உயிர்களும், எல்லாத் தோற்றங்களூம், மற்றெல்லாமும் ஆக வெளிப்பட்டு விளங்குகின்றார் எனப்தைத் திருவருளால் இன்று உணர்கின்றோம். இதனால், ஏகமாக இருக்கும் அவரே, அனேகமாக அல்லது பலவாகத் தோன்றி விளங்குகின்றார் எனவும் அறிகின்றோம். ஏகமாகிய கடவுள் நிலை, உள்நிலையாகவே, அகமறைந்துள்ள ஒன்றாகவே இருக்க, புறநிலை, அநேகமாக அனந்த வண்ண பேதத்தோற்றமாகக் காணக்கூடியதாயிருக்கின்றதாம். ஒன்றான கடவுளே இப்படி பலவாகத் தோன்றிக்கொண்டுள்ளார். என்பதைத்தான் இன்று அருட்பெருஞ்ஜோதியால் உணர்த்தப்படுகின்றோம். முன்னோர் கண்டதும் உண்டு இந்த ஏகன், அனேகன் என்ற இரண்டாகிய கடவுள் விளக்க நிலையை, ஆனால் இப்படி விளங்கிக்கொண்டிருப்பது ஏன் என்பது பற்றிய உண்மை இன்றே உள்ளவாறு அறியப்படுகின்றதாம். யாதெனில், அந்த மேலான இறையனுபவ சித்தியை இயலுறச் செய்யத் தான் இப்படி ஒன்று பலவாம் நிலை ஏற்பட்டுள்ளதாம்.


ஒன்றாகிய கடவுள் ஞானானுபவம் உலகில் ஏற்பட்டு விளங்கச் செய்தற்பொருட்டு, அக்கடவுள்தானே அகமிருந்துகொண்டு தன் பேரருட் சத்தியை ஐஞ்சத்தி வண்ணத்தோற்ற மாக வெளிப்படுத்தியுள்ளார். அவ்வைஞ்சத்தியின் விளைவால் , எல்லாப் பொருள்களு, எல்லா இயக்க ஆற்றல்களும், எல்லா அறிவு விளக்கங்களும், எல்லா யோகானுபவங்களும், மேல் அருள் உண்மை விளக்கமும் தோன்றியுள்ளனவாம். ஈற்றிஒலுள்ள அருள் விளக்கத்தால்தான் அந்த ஒன்றான அருட்ஜோதிக் கடவுள், தானே இம்மனிதன் உண்மையாய் இருப்பதையுணர்த்தியும் , இவனால் உணர்ந்துகொள்ளச் செய்து உள்ளார். இப்படித் ‘ தான் ‘ அதுவான உண்மை கண்டுகொண்டு அகமிருந்து அருளாலே அனக வாழ்வு மேற்கொள்ளுகின்ற மனிதன் தான் கடவுட் பேரின்ப சித்தி ஏற்று அருட்பெருஞ் சித்திச் செயலோடு வாழும் பேரனுபவம் அடைகின்றான். இதுதான் ஏகன் அனேகன் ஆகியதன் காரணகாரிய விளக்கமாகும்.


அகவல் உரைவிளக்கம்

சுவாமி சரவணானந்தா….