Vallalar Universal Mission Trust   ramnad......
125.முத்தி என்பது சாதனை நிலை

(உரைவிளக்கம்) முத்தி என்பது இன்னது என இங்கு தெளிவாக்கப்படுகின்றது. சுத்த சன்மார்க்கத்தில் முத்திநிலை முடிவில் பெறுவதல்ல. முதலில் சுத்த சத் விசாரத்தால் கண்டு கொள்ளப்படுவதாம். கண்டு, தான் அந்நிலையிற்றானே இருப்பதகவும் அறிந்து கொள்ளப்படுகின்றதுமாம். தான் அதுவாம் அனுபவம் பெற்றுக்கொண்டு விளங்கற்கே பயிலப்படுவது சாதனையாம். ஏதும் சாதனையின்றிச் சாத்தியமாகிய அனுபவம் பெறுவது முடியாதாம். மேலும் மனிதன், எத்தனையோ பிறவியில் , எவ்வளவோ காலமாகத் தன்னை உடல் வடிவினனாகவே கருதி அவ்வுணர்வோடு உலகில் வாழ்ந்ஹ்டு வந்திருப்பவன் இப்பொழுது தன்னை அக்கடவுளான்ம வடிவிலிருந்து வாழ்கின்றவனாக அறிந்து தன்னை அக்கடவுளான்ம வடிவிலிருந்து வாழ்கின்றவனாக அறிந்து கொண்டு உலகிடை விளங்கச் செய்வதற்கு எவ்வளவு தீவிர முயற்சியும், , பயிற்சியும் வேண்டியிருக்கின்றன இதற்கே, உள்ளொளிநிலை நிற்றற்குச் சாதனை இடையறாது செய்து பழக வேண்டும். சாதனையின் முடிவில் உறும் நிலையே விசாரமுடிவாம். வி – ஆகிய அருள் ஒளியைச் சார்ந்து ஒன்றியதே விசாரம் என்பதின்மெய்ப்பொருளாக இன்று அறிகிறோம்.


மேற்படி விசாரநிலையில் அழுந்திப் போய்விடக்கூடாது. முன்னோர் அங்ஙனம் உள்ளாழ்ந்து மூழ்கிப்போய்விட்டதால் அந்நிலையில் ஒடுங்கி யொழியத்தான் முடிந்தது. அது, மூவா ( அழியாத) நிலையாக இருந்தும் , வாழா, அனுபவம் விளங்காக் குறைபட்ட நிலையாக உள்ளதாம். ஆகையால், அப்படி ஒடுங்கிப் போகாது, அதுவாகிச் சார்ந்து கலந்து விளங்குவதுவே சாத்தியானுபவ முத்தி நிலையாக வுள்ளதாம். ஆகவே, பழையதான முன்னெறி முடிவுக்கும், புதுமையான சுத்த சன்மார்க்கமாகியிஅ இந்நெறி முடிவுக்கும் பெரிய நிலை வேறுபாடுள்ளதாம். முன்னெறிப்படி, தூல, சூக்கும, காரண, அல்லது கன்ம, மாயா, ஆணவமாம் திரிநிலை கடந்து மறையுறுவது வாழ்வற்ற நிலையாம். முத்தி முடிவு இன்று குறைவுடைத்தாய் அறியலாகின்றது. இன்றைய சுத்த நெறிப்படி, இருநிலை கடந்து மூன்றாம் நிலையில் நாமும் கடவுளும், கடவுளான்ம வடிவாயிருப்பதை யோர்ந்து நிற்கின்றோம். அம்மேனிலையிலுள்ள கடவுளான்ம சொரூபம், ஆண்பாதி பெண்பாதியான உமையொருபாகன் போன்றுள்ளதாய்க் கொண்டு, ஆன்மாவின், ஆணவம், கடவுளின் அருள் ஒளியால், நீக்கமும், ஆக்கமும் அடைவதாயுள்ளதாம். இந்த விசாரநிலையில், கன்மம், மாயை, ஆணவம் ½ ஆக இரண்டரையளவில் விளங்குகின்ற சன்மார்க்கி முத்திநிலை நிற்கின்றவனாயுள்ளான். இவனுக்கு ஆணவமாகிய, தான் அவ் ஆன்மா என்ற உணர்வு அறிவு இருக்கிறவரை, அது உண்மை அறியா அறிவாயிருப்பதாம். அவ் ஆன்ம அணு, அருட்பெருஞ்ஜோதிக் கடவுட் சிற்றுருவே என்று அருளால் அறிகின்றபோது, அது தான் என்றா தற்போத உணர்வு நீங்கி, அது அருட்பதி என்ற அருள்ஞான அறிவு விளங்குகின்றதாம். ஆகவே விசார முடிவில் நிற்கும் பக்குவி அருள் ஒளி வடிவினனாய்த் திகழ்கின்றான். அப்போது, அவனது சூக்கும, தூல தேகநிலை அருட்ஜோதி சுத்த வடிவாய்த் திகழ்வதாய் அறியப்படுவதாம். எனவே இச் சுத்த சாதகன் தன்னை அருட்ஜோதி முத்தி நிலையில் திகழ்கின்றவனாய் உணர்கின்றான். இது குறித்தே இங்கு முத்தி என்பது முன்னுறு சாதனை நிலை என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளதம. சாதனை நிறைவேறி சாத்தியநிலையில் வாழ உள்ளவனே இந்த முத்தன். இவன் வெற்றுச் சம்பிரதாயத்தையொட்டிக் கூறப்படும் ஜீவன் முத்தன் அல்லன். அருள்ஞான அனுபவத்துடன் விளங்கும் ஞானசித்தனே யாவான்.


பழய ஜீவன்முத்தன் பொய்ப்பாவனையால் தன்னை அகக் கடவுட் சொரூபியாகக் கருதிக்கொண்டும். புறப்புலன் வாழ்வில் ஒட்டியும் ஓட்டாதவன்போல் வாழ்ந்து கொண்டு இருந்து ஆயுள் முடிவில் உடலை விட்டு, விதேக முத்தன் என்ற பெயர்பெற்று விடுகின்றான். அப்படியல்ல நம்ஞான சித்த சுத்த சன்மார்க்க உண்மை முத்தன். இவன் அகநிலையில் அருள் ஒளி உணர்வினனாய் இருந்து,அருள் அனுபவம் ஓங்க, உலகில் அன்புச் செயலோடு வாழ்ந்து வருகின்றான். காலத்தே அக ஜோதி பெருகி அனக நிறைவு பெற்றுப் புறவுடலையும் அருட்ஜோதி வடிவாக ஆக்கிக்கொண்டு அழியாது விளங்கவல்லவனாகி விடுகின்றான். இந்த அழியா அருட்ஜோதி வடிவையே உண்மையில் விதேகமாகக் கொள்ளலாம். யாதெனில் , வி – என்ற எழுத்து , வ் – என்னும் அருள் வடிவ மெய்யுருவாயும், இ – என்றது அருட்பிரணவ உயிர்சத்தி எழுத்தாயும் கூடிய ஒன்றாய் இருத்தலின் ( வ்+ இ) – வி என்பது அருள் விளக்கச் செயலோடு கூடிய அழியா அருள் உருவாய்க் கொள்ளலாகின்றதாம்.


இம் முத்திநிலை பெற்று வாழும் சுத்த சன்மார்க்கி , அருட்பெருஞ்சித்தியுடன் திகழுதல் சாத்தியமாகின்றதாம். இதனையே மேல்வரு ஈரடிகளில் குறிக்கப்படுகின்றதாம்.


அகவல் உரைவிளக்கம்

தயாநிதி சரவணானந்தா….