( உரைவிளக்கம்) உலக வாழ்வில் பலவகைச் சித்திகளை முயன்று அடைந்து இன்புறும் மனிதன், முடிவில் உடலை நீத்து, இறந்து, மறைந்துபோய்விடுகின்றான். அந்த இறப்பை உடற்கூட்டினின்று விடுதலைப்பட்டுவிட்டதைக்கூட ஒரு பெருஞ்சித்தியாகவே போற்றிக் கொள்கின்றனர் உலகியலார். இப்படித் தெய்விகத்தன்மையோடு , அற்புதச் சித்தியுடன் வாழ்ந்து விட்டுச் செல்கின்றவன், வீடுபேறு அடைகின்றவனாகவும், முத்தி அடைந்தவனாகவும், பந்த நீக்கம் பெற்றவனாகவும் கருதப்படுவது உலகவழக்கு. இதனால், சித்திகளின் முடிந்த முடிவே தேகப்ந்தம் நீக்கப்பெறுதலாகவும், விடுதலையாம் வீடுபேறாகவும் கொண்டனர். அதாவது, புறத்தான தூலதேகம் பிரிந்து ஒழிவுற, உள்ளிருந்த சூக்கும உடல் கழன்றுவிட , அதற்குள்ளிருந்து, பந்த முற்றுக் கிடந்த ஆன்மாவாகிய காரணதேகம் அக்கட்டொழிந்து விடுதலை பெற்று விளங்குவதாய்க் கொள்ளப்படுவதாம்,. இம் மூன்றாம் தேக வாழ்வு பெறுவதே முத்தி என்று கொண்டனர்.அந்த முத்தி சித்தி பெற்றுவிட்டால் மேற்கொண்டு பந்தப் பிறைச் சூழல் வருவதில்லையாம். அது சரி ஆனால், அப்படி முத்தி பெற்ற ஆன்மாவுக்கு சூழ்தேகம், உயிர் உணர்வு, புலன் விளக்கம் ஒன்றும் இல்லாது போவதால் எந்த ஓர் அனுபவத்திற்கும் இடமில்லையாம், அதனால் வாழ்வும் இல்லை என்பது தெளிவு, ஆதலின் இத்தேக நீக்கத்தை முத்தி என்று கொண்டாடுவது பெருமையன்றே, இதனை விதேகமுத்தி என விளம்பும் மக்கள், இந்நிலை எய்துமுன், தேக பந்தபாசப்பற்றற்று, ஆன்மாவைப் பற்றி நின்று வாழ்ந்து வருகின்றவனை ஜீவன்முத்தன் என்று கூறுகின்றார்கள். இந்த ஜீவன் முத்தன் உடலைவிட்டபின் விதேக ( தேகம் இல்லாத ) முத்தனகி விடுகின்றானாம். இவ்விதக் கூற்றும் கொள்கையும் பயனற்றனவேயாம்.
ஆகவே, ஒருவன் முத்தி முடிவில் உலகைவிட்டு மறைந்து ஒழிந்து போவதால் என்ன பெருமை ? என்ன நன்மை? ஒன்று மில்லையாம். அந்நிலையைக் கடவுள் வாழ்வாகவும் கொள்ள முடியாதே கடவுள் உலகமெல்லாம் விளங்கச் செயல்படுத்திக் கொண்டுள்ளாரே, உள்ளிருந்து ஆளும் அவர், கடமாகிய தன் புறநிலையை விட்டுவிடாது, விளங்கச் செய்து கொண்டல்லவா வாழ்கின்றார், இதனால், கடவுணிலை பெறும் ஒருவன் அகமிருந்து புறத் தேகத்தையும் உடன்கொண்டு வாழ்வதே முறையாம். உடற்பற்றற்று அகநிலை நின்று அனகமாக வாழ்வதுதான் உண்மை விடுதலைக்கு அடையாளம். அதுவே, வீடு , முத்தியாகும். இம்மாதிரியான முத்தி பெற்று உலகில் கடவுள் அருள் விளக்கச் செயலாம் சித்திகள் புரிந்துகொண்டு வாழ்தலே இங்கு முத்தியின் குறிக்கோளாகக் குறிக்கப்பட்டுள்ளதாம்.
“ புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை
அடைவதென் றருளிய அருட்பெருஞ்ஜோதி”
என்றதால், முத்தி அடைவது எதற்காக என்றால், புடையுறு சித்தியின் பொருட்டுதானம். புடையுறு சித்தி என்பது , புறத்தே வெளியில் விளங்கும் கடவுள் ஆற்றல் விளக்கத் திருச்செயலாம். இதனையே நம் பெருமான் பேரின்ப சித்தியோடு கூடிய பெரு வாழ்வாக வழங்கப்பெற்றுள்ளார். இவர் பெற்றுள்ள திரிதேக சித்தி வடிவே மூவா முத்தியுருவாகும். இத் திரிதேக சித்தியுடன் இருந்து கொண்டுதான் இப்பொழுது உலக மக்களை எல்லாம் அவரவர் பரிபாகத்திற்குத் தக, உள்ளும் புறமும் சூழ்ந்து பக்குவம் வருவித்துக்கொண்டுள்ளார்.]
“ சுத்த வடிவும் சுகவவடிவாம் ஓங்கார
நித்த வடிவும் நிறைந்தோங்கும் – சித்தெனுமோர்
ஞானவடிவு மிங்கே, நான் பெற்றேன் எங்கெங்கும்
தானவிளை யாட்டியற்றத் தான்”
என்ற இதனால் அவர் சுத்த பிரணவ ஞானமாம். முத்தேக சித்தி பெற்றிருந்து கொண்டு உலகெங்கணும், தான விளையாட்டு என்னும் முத்தியின்ப வாழ்வு விளைசித்தி செயல் புரிந்து வருகின்றார் என்பது குறிப்பு.
அகவல் உரைவிளக்கம்
தயாநிதி சரவணானந்தா…