Vallalar Universal Mission Orphange Homes
123. ஞானசித்தி யருளல்

( உரைவிளக்கம்)முன்னிரு சித்திகளினும் மிக்கதாய் விளங்குவது இந்த ஞானசித்தி, சரிபாதி நான்கு நிலை கடந்து மேற்போந்த ஞானாசிரியர்கள் அகத்தில் உண்மை கண்டு, அதிற் பற்று கொண்டு விளங்கி நிற்பர். இச்சையும் வெறுப்புமில்லாது பொதுநோக்கோடு சூழ்நர்க்குப் பக்குவநிலைக்கொப்ப ஞானோபதேசம் செய்து உள்ளொளியின் சித்திச் செயல் வெளிப்பட விளங்குவர். கரும சித்தன் புறத்துணைப் பொருள்களால் இறந்தவனை எழுப்புதல் கூடும். யோகியோ உள்வளர் ஆன்மசத்தி கொண்டு இறந்து சிதைந்து போய் எலும்பாயும், சாம்பலாயும், கிடக்கும் ஒருவனையும் உயிருடம்போடு எழுப்பிடச் செய்தல் கூடும். இந்த ஞான சித்தியால், இறந்து மறைந்து பலகால மானவர்களையும் வருவித்து உயிர்த்து எழச்செய்தல் கூடுமாம். இந்த ஞான சித்தி நிலை பெற்றோர் சித்திவகைகள் 688 கோடியுண்டென நவில்வர் என்பது வள்ளல் வாசகம்.


மேற்படி ஞானசித்தியின் வகையும், தொகையும் விரிவும் எவ்வளவு உண்டோ அவ்வளவையும் சிறிதும் குறை கேடு மின்றி வழங்குவது நம் அருட்பெருஞ்ஜோதியாம். இந்த ஞான சித்திகளை எல்லாம் உலகம் இன்று அறிகின்றதில்லை. கற்பனையாகவும், கதைகளாகவும், பெரியோர்கள் கூறியிருப்பதைக்கொண்டு ஒரு அளவுக்குத் தெரியவரும். ஆனால் அவற்றை அடையப் பெருமுயற்சி செய்துகொண்டு காலத்தை வீணாக்கிவிடக்கூடாது. எல்லாம் செயல்கூடும் அருட்பெருஞ்ஜோதியைக் கண்டு அடைந்து வாழ முனைவதுதான் நம் கடமையாகக் கொள்ளுவோமானால் நமக்கு எக்குறைவும் நேராது. வேண்டியதெல்லாம் திருவுளப்படி நமக்கு வழங்கி வாழ்விப்பார். எச்சித்தியும் அவரது உள்ளப்படி உலகுக்கு உதவ நம்மூலம் வருவதாயின் வரட்டும். அதன் பெருமை அவர்க்கேயாம் அவரது அருட்பெருஞ்சித்தியால் உலகெல்லாம் சுத்த நெறிக்கு வருவிக்கப்படட்டும். அருட்பெருஞ்செயலுக்கு நம்மைக் கருவியாக்கிக்கொண்டு அவருடனிருந்து வாழ்வோமாக.


அருட்பெருஞ்ஜோதி அகவல்உரை விளக்கம்

சுவாமி சரவணானந்தா……