119. முத்திறல் வடிவமும் முன்னியாங் கெய்தல்
237. முத்திறல் வடிவமும் முன்னியாங் கெய்துறும்
238. அத்திறல் எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம்) மக்கள் பெற்றுள்ள உடல், நல் வளர்ச்சியாலும், பயிற்சியாலும், யோகசாதனைகளாலும் வலிமைமிக்கதாய், பிணியற்றதாய் நீண்டகாலம் வாழ்வதாய்ச் செய்துகொள்ளக்கூடும். ஆனால், இம்மாதிரிப் பிற முயற்சிகலால் மேலான சுத்த சுகாதானந்த வாழ்வு பெற்று நீடு வாழமுடியாது. அது திருவருளால்தான் பெறமுடியும், அத்திருவருளால் கிடைக்கப்பெறும் ஆற்றல் மிக்க வடிவம் மூன்றுவிதமானதாம். அதுதான் முத்திறல் வடிவு என்கிறார் சுத்த, பிரணவ, ஞான தேகம் முத்தன்மை கொண்டதுவாம். சாதாரண மனிதனில், தூல, சூக்கும, காரண தேகங்களாக உள்ளனவே அருட்பக்குவத்தில் மேற்படி சுத்த, பிரணவ ஞான தேகமாய் விளங்கும் . இத்திரிதேகம் , முத்தனி வடிவம் கொண்டு மூன்றாய் விளங்குவ தல்ல. ஒன்றுக்குள் கூடி ஒரே வடிவாய்த் திகழ்வதாகும்., இவை ஒன்றுகூடியே முழுமையாய் விளங்கும் போதுதான் வாழ்வும், அருளனுபவமும் பெறமுடியும்.
இங்கு குறிக்கப்படும் முத்திறல் வடிவம் பற்றிச் சற்று விரிக்கலாம். முத்தேகம், சுத்த தேகம், பிரணவதேகம், ஞானதேகமாம், திருவருளின் சேர்க்கையால் புறவுடம்பு அழிபடும் தன்மை மாறிச் சுத்த பொன்போல் திகழும், இது புறத்தே உருவாய் விளங்குவது. இதனுடைய ஆற்றல், அழியாததும், அற்புதச் செயல் புரிவதுமாம். அடுத்து, உள்விளங்கும் சூக்கும உடம்பே அதிக ஆற்றல் கொண்டதாய் எங்கும் சென்று வருவதாயுள்ளதாம். இது அருவுருவமாகும். ஈற்றிலுள்ள ஞானதேகம் மெய்ப்பொருளையுணரும் ஆற்றலும் கொண்டதாய்க் கட்புலனாகா அருவடிவாயும் உள்ளதாம். இது அகமிருந்து யாவையும் அறிவது. இம்முத்தேக சித்தியைப் பெறுவதே முத்தியாம். இம் முத்தேக சித்தியைப் பெறுவதே முத்தியாம். இம் முத்தேக சித்தியுடன் வாழ்வதே மூவா முத்தியின்ப வாழ்வாகும். ஈதல்லாது, புறவுடலை மண்ணில் கிடத்திவிட்டுச் சென்ற ஆன்மாவுக்கு வாழ்வில்லை. அது முத்தி அடைந்ததாகக் கூறிக்கொள்ளுவது உண்மையல்ல. அருள் ஆற்றால் கொண்ட திரிதேக சித்தி பெற்று அழியாது விளங்கும் சுத்த சன்மார்க்கி மேறுகொண்டு தன் அற்புதச் சித்தித் திறனால், உலகில் மக்களைப் பக்குவப்படுத்தி இன்பநிலைக்கு ஏற்றுவான்.
வள்ளல் பெற்ற அருளின் ஆற்றல் சொல்லுந் தரமன்று. எண்ணிய எண்ணியாங் கெய்துவர். எண்ணியர் திண்ணியர் ஆகப்பெறின் என்பதில் திண்ணியர், அருட்பேராற்றல், படைத்தவரேயன்றி தேக மனோகரண, அறிவுத்திண்மை கொண்டவர் அல்லராம். எண்ணியது எண்ணியபடி நினைத்தது நினைத்த வண்ணம் செய்துமுடிக்கும் அருள் ஆற்றலைத்தான் இங்கு வேண்டுகின்றார், வேண்டியது, வேண்டியர்க்கு உடனுக்குடன் அவ்வாற்றலையும், வழங்கப்பெறுகின்றார். அத்திறல் எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி என்கின்றதில், அருளும்படி வேண்டுகையும், அவ்வேண்டுகை நிறைவேற்றப்பட்டதை, தான் அதனை அருளப்பெறுகின்றதையும் குறிப்பதாய் உணர்க்கின்றோம்.
தயவு சரவணானாந்தா,
அகவல் உரைவிளக்கம்…