Vallalar Universal Mission Orphange Homes
116. மாய்ந்தவர் மீட்டும் வருநெறி

116. மாய்ந்தவர் மீட்டும் வருநெறி

231. மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை

232. ஆய்ந்திடென் றுரைத்த அருட்பெருஞ்ஜோதி

(உ-வி) இறந்துபோனவர்கள், புறவுடலை நீத்துவிட்டவர்கள் மறுபடியும் இவ்வுலகில் வருவார்களா என்பது பெரிய கேள்வியாம். இறந்தவர்களின் உடல் புதையுற்றுச் சிதைந்து மண்ணாகியும், அல்லது எரிந்து சாம்பலாகியும் ஒழிந்துபோன பின்னர், எப்படி முன்போல் உருப்பெற்று வரமுடியும்? முடியாதென்பதே பலரும் தரும் பதில், ஆனால் ஒருவகையில் மக்களின் கனவில் மடிந்தொழிந்தவர்களைப் பழைய உருவோடு காணமுடிகின்றது. அதுபோல் மனோவசியமுறையில் இறந்தவர்களை, அவர்களில் ஆவி வடிவில் காணவும், அளவளாவவும் செய்யமுடிகின்றதாம். இதில் எல்லாம் இறந்த்வர்கள் மீண்டும் வருவதில்லை என்பது உண்மை, இதற்கு மேல் திருவருள் விசேடம் பெற்ற மகான்களால் இறந்தவர்களை எழுப்புதலும், இறந்து எரிக்கப்பட்டுச் சாம்பலாய்ப் போனவர்களை மீண்டும் உருப்பெற்று வரச் செய்தலும் கூடுமென்பர். இது எங்கோ , எப்போதோ சிறப்புவகையான் நடைபெற்றதாக அறியப்படுவதேயன்றி, எல்லார்க்கும் ஏற்றதாகக் கொள்ளமுடியாது. இந்நாள் மருத்துவத்துறையில் கூட உயிர் நீத்தவர்களை மறுபடியும் உயிர்பெற்று, சிலகாலம் இருக்கச்செய்ய முடியும் என்ற அளவுக்கு நம்பிக்கையுண்டாக்கியுள்ளனர். முடிவில் இறந்தவர்கள் எல்லாம் எழுப்பப்பட்டு நியாயத் தீர்ப்பு வழங்கப் பெறுவார்கள் என்பது சிலமத வாதிகளின் நம்பிக்கை. இப்படி இறந்தவர்கள் எழுப்பப்படுவதாலோ, எழுந்து முன்போல் வாழ்வில் உழல்வதாலோ பெரும்பயன் ஏதும் உண்டாகாது, மக்கட் பெருக்கமும் வாழ்க்கைப் பிரச்சினையும் ஏற்படும். குழப்பமும், கேடுந்தான் மிகுவதுதிண்ணம்.

நமது வள்ளல் பெற்ற சுத்த சன்மார்க்கம், இறப்பை யொழிப்பதும், நீடூவாழ்விப்பதுமாம். மக்கள் உலகில் தினமும் எத்தனையோ பேர் மாண்டு ஒழிந்துகொண்டாயிருக்கின்றனர். எத்தனையோ பேர் சிசு வடிவில் பிறந்து தோன்றிக்கொண்டே இருக்கின்றனர். மனிதனின் அக ஆன்மவடிவம் நித்தியமானது. அப்படியிருந்தும் அந்த நித்திய ஆன்மாவைச் சூழ உருவாகியுள்ள தேகம் நிலைக்காமல், அழிந்து அழிந்து போய்க்கொண்டேயுள்ளது இப்படி அழிவது ஏன் என்றால் ஒருவன் ஆன்ம இயற்கையாகிய அருள் வாழ்வு அகமிருந்து வாழாததினால்தான் ஆம். அப்படி அகமிருந்து அனக வாழ்வு நடத்துகின்றவனே மேற்கொண்டு இறவாமல் பிறவாமல் நீடு விளங்கக்கூடியவனாகின்றான்.

கடவுள் நியதி, ஆன்மாக்கள் மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்துதான் அருள்வாழ்வு நிலை சேர வேண்டும் என்பது இப்பிறப்பு எடுத்தலின் இரகசியத்தை அறியாது,மேலும் மேலும் தோன்றித் தோன்றி உழன்றுகொண்டே யிருந்தாலும் , மேற்கொண்டு பிறவி எடுக்காமலு இருக்கத் தவஞ் செஹ்ட்யு உடல் நீத்துப் பிறவா நிலையிற் கிடப்பதும் திருவருளானை அல்லவாம். ஆகையால், மாய்ந்தவர் மீண்டும் பிறத்தலே திருவுளச் சம்மதம். இதுதான் மாய்ந்தவை மீட்டும் வருநெறியாக இருக்கிறது. இதனை அருளால் ஆய்ந்து கண்ட உண்மை; மனிதன் மீட்டும் இங்கு பிறப்பிக்கப்படுகின்றது, இறவாமை பெற்று வாழ்வுடன் என்றென்றும் விளங்கற்காகத் தானாம்.

ஆகவே நம் வள்ளல் குறித்த இறந்தவர்களை எழுப்புதல் செத்தவர்களை உயிர் பெற்று எழச்செய்தல், இறந்தார் மீட்டும் வருநெறி என்றல்லவாம்; அகத்தே அருள் ஒளியை எழுப்பிச் செயல்படுத்தி மேல் அருட்ஜோதி வடிவோடு மக்களைச் சுத்த சன்மார்க்கிகளாக அழியாது வாழச் செய்யற்கேயாம். இப்படி எழும் இறவா நிலை பெற்ற சுத்த சுகானந்த வடிவினர்களாக உலகிற்குப் பெருநன்மையே உண்டாம் கீழான, தீர்க்கமுடியாத பிரச்சினைக்கு இடம் ஏற்படாது அஞ்ச வேண்டியதே இல்லை.

அகவல் உரைவிளக்கம்

சுவாமி சரவணானந்தா….