Vallalar Universal Mission Trust   ramnad......
225. எண்டர முடியா திலங்கிய பற்பல 226. அண்டமு நிறைந்தொளிர் அருட்பெருஞ்ஜோதி

113. எண்ணிலா அண்டநிறை ஒளி


225. எண்டர முடியா திலங்கிய பற்பல

226. அண்டமு நிறைந்தொளிர் அருட்பெருஞ்ஜோதி


( உரைவிளக்கம்) அருட்பெருஞ்ஜோதியின் நிறை விளக்கம் இங்கு குறிக்கப்படுகின்றதாம். உலகம் அறிந்துள்ள எந்த ஒளியும் நம் அருட்பெருஞ்ஜோதி அல்ல என்று அறியவேண்டும். சிறியதும் பெரியதும், தோற்றியும் தோற்றாமலும் , உள்ள ஒளி எதற்கும் மேம்பட்டதாய் அளப்பரிய அகண்ட பெருவெளி முற்றும் இடையீடின்றி நிறைந்ததாய் அளப்பரிய அகண்ட பெருவெளி முற்றும் இடையீடின்றி நிறைந்ததாய் , எல்லாம் செய்ய வல்லதாய், சத்துசித்து ஆனந்தவண்ணமாய் , சகல பொருள்களையும், உயிர்களையும், ஆற்றல்களையும் தோற்றுவித்து ஆண்டுகொண்டுள்ளதாய், நிறையருளுக்கே அனுபவப்படுவதாய் இருக்கும் ஒன்றே அருட்பெருஞ்ஜோதியாக அறியப்படும்.


அகண்டவெளியின் விரிநிலையளவு இவ்வளவு பெரியது என்று மனத்தால் எண்ணிப்பார்க்கவே முடியாதபோது வாக்கால் சொல்லுவதும், எழுத்தால் எழுதிக்காட்டுஅதும் எப்படி முடியும்? முடியாது, முடியவே முடியாது. இப்படியுள்ள பெரு வெளியில் எத்தனை கோடி அண்டங்கள் உள்ளனவென்பதும்தெரியாது. வெகுவெகு தொலைவிலிருந்து ஒளிவிடுகின்ற நட்சத்திரஜோதி அண்டங்களின் இருப்பை இந்நிலவுலகிலிருந்து ஒருவன் மிகச் சக்திவாய்ந்த தொலைநோக்காடி ( telescope) கொண்டு காணக்கூடும். அவ் ஒளி அண்டம் இரண்டாயிரம் ஒளி வருட தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதாவது அந்த அண்ட கோளம் வீசும் ஒளி இங்கு வந்து புலனாவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகும். இதனால் அக்கோளம் அவ்விடத்தில் இல்லாது அழிந்து போய் விட்டாலும், பின்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் வரை கூட அது அங்கிருந்து ஒளிர்வதாகவே தெரிந்துகொண்டிருக்கும். இதுபோல், அவ்வளவு தொலைவில் ஏதேனும் ஓர் ஒளி அண்டம் புதிதாக இன்று தோன்றி விளங்கினாலும் நமக்குப் புலனாக இன்னும் ஈராயிரம் ஆண்டுகள் பிடிக்கும், ஆகவே, உண்மையில் அகண்டவெளியில் ஒளிர்கின்ற அண்டகோடிகள் இத்தனை என்று உள்ளபடி கணித்துக்கூற முடியாதாம், இதனால்தான் அப்படி “ எண் தரமுடியாது இலங்கிய பற்பல அண்டம்” என்று குறித்துள்ளார். இவ்வளவு அண்டகோடிகளின் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்கிக் கொண்டிருப்பது நமது அருட்பெருஞ்ஜோதியாகும். அகண்ட பெருவெளிமுற்றும் பரிபூரணநிறைவாய் என்றென்றும் நிறைந்து விளங்கிக்கொண்டிருக்கின்ற அருட்பெருஞ்ஜோதியே அவ் எண்ணரிய ஜோதி கோளங்களை எல்லாம் தோற்றுவித்தும், விளக்கம் செய்துகொண்டும், பழையனவற்றை அழித்துப் புதியனவற்றை ஆக்கி விளங்கச் செய்துகொண்டும் உள்ளதாம் . இப்படியாக என்றுமுள்ள அருட்பெருஞ்ஜோதியின் பெருமையையே ஈண்டு சுட்டிக் காட்டியுள்ளார் நம் வள்ளலார்.


அகவல் உரைவிளக்கம்

சுவாமி சரவணானந்தா…..