Vallalar Universal Mission Orphange Homes
. இறைவனும் மதமும்

111. இறைவனும் மதமும்



221. எம்மத மெம்மிறை என்ப வுயிர்த்திரள்

222. அம்மத மென்றருள் அருட்பெருஞ்ஜோதி


( உரைவிளக்கம்) இங்கு உயிர்த்திரள் என்றது, உலக மக்களினத்தையே குறிப்பதாம். மக்கள் இறையுண்மையை அறியாத போதே வாழ்வில் நேரும் தீமைகளைப் போக்கவும் நன்மைகளைப் பெறவும் தமக்கு மேற்பட்ட ஒருவனின் துணையை நாடினர். அந்த ஒருவன் கூட நிலைத்து விளங்காது போனபின் , அழியாத ஒன்றை, எல்லாம் வல்ல ஆற்றல் கொண்ட ஒன்றைத் துணைவனாகக் கொள்ளக் கருதினர். அப்படிப்பட்ட ஒன்றே இறை (எங்கும் நிலைத்து இருப்பது) எனக் கொண்டனர் அறிவிற் சிறந்தோர். அவ் அறிஞன் கண்ட இறைவனை எவ்வடிவிலும் இருப்பதாக எண்ணிச் சிலபல வடிவப் பொருள்களை, அடையாளச் சின்னங்களை, விக்கிரக வடிவங்களை ஆக்கிக்கொண்டு அவற்றின் முன் வேண்டியும், தொழுதும், துதித்தும், ஓரளவு பயன் அடிஅடைந்து வந்தனர் பலர், ஒன்றான இறையுண்மை விளங்காத காரணத்தால் பல தெய்வக் கருத்தும், பன்மதக் கொள்கையும் எங்கும் பரவினவாம்.


உண்மையில் இறை பரம்பொருள் ஒன்றே, அதனைத் தொல்காப்பிய காலத்திற்கு முன்பே கந்தழியாம் பெருஞ்ஜோதியாகக் கண்டிருந்தனர். அவ்விறை யனுபவம் பெறுவதற்குக் கொடிநிலை, வள்ளி என்னும் இருவகை வழிபாட்டைக் கொண்டனர். பிற்காலத்தில் அந்த இறைஜோதி உண்மையும், வழிபாட்டு உண்மையும் அறியப்படாதுபோய், கற்பனா கடவுட் கொள்கைபரவினதாம். இதனால் உண்மை முற்றும் ஆழ்ந்து புதைந்து போய்விட்டதாம். இத்தருணம் அருட்பெருஞ்ஜோதி ஞானம் வெளிப்பட்டுள்ளதால், அருட்பெருஞ்ஜோதியையே ஒன்றான கடவுளாக அறியப்படுகின்றது. மேலும் மதம் என்பது, அருளே என அறிந்து வழிபட்டு அடைவதற்கான வழிவகை செய்தலே எனவும் அறியலாகின்றது. அருட்பெருஞ்ஜோதியாம் கடவுளை அறிந்தபோதே, அதன் அருளே அதனை அறிந்து வழிபட்டு அடையும்நெறியாகவும் அறிகின்றோம். ஆக, இன்று நம் இறைவன், அருட்பெருஞ்ஜோதியாகவும், அவ் இறைவனின் உண்மை மதம் அருளேயாகவும் தெளிவுறக் கண்டு கொள்ளுகின்றோம்.


ஒவ்வொருவரும் எம் தெய்வம் எம் தெய்வம் என்று கூறிக்கொள்கின்ற எத்தெய்வத்திற்கும் அகமிருந்து அது அதுவாய் விரிந்து விளங்குகின்றது நம் அருட்பெருஞ்ஜோதியே என்பது உண்மையாம். இதுபோலவே ஒவ்வொருவரும் எம் மதம், எம் மார்க்கம் என்று போற்றிக்கொள்வதற்கு அடிப்படையாயுள்ளது சுத்த அருளே என்வும் தெரிந்து கொள்கின்றோம். “ அம் மதம் என்ற அருள் அருட்பெருஞ்ஜோதி” என்ற இரண்டாம் அடியை ஆழ்ந்துநோக்கின் உண்மை அறிந்து கொள்ளலாம். அம்மதம் என்றா அருள், அதாவது அருளாவது அம்மதமேயாம். மேலும் விரிக்கிற் காண்பது;’ அம் என்பது அ – உ – ம் என்ரா ஓமின் அடிமுடி அல்லது தலைகடைப் பூட்டுண்மை கொண்டதாய் அறிவோம். ஓமின் பொருளே அருளாதலின் , அதுவே இந்த அம் முக்கும் கொள்ளலாகின்றது. ஆகவே, அம் மதம் அருளேஎன்பது உண்மை. இதனை உணர்ந்திடுவண்ணம் அம்மதம் என்ற அருள் என ஓதியுள்ளார் நம் பெருமாள். ஆதலின் அருளால் அருட்பெருஞ்ஜோதியைச் சூழ்வோம்.


அகவல் உரைவிளக்கம்

சுவாமி சரவணானந்தா….