Vallalar Universal Mission Orphange Homes
217. காட்டிய வுலகெலாங் கருணையாற் சித்தியின் 218. ஆட்டியல் புரியும் அருட்பெருஞ்ஜோதி

109. உலகம் கருணைச் சித்திச் செயல்


217. காட்டிய வுலகெலாங் கருணையாற் சித்தியின்

218. ஆட்டியல் புரியும் அருட்பெருஞ்ஜோதி


( உரைவிளக்கம்) கண்ணுக்குத்ட் தோற்றி விளங்குகின்ற உலகம் முழுமையானதல்ல. ஒரு சிறு பகுதியே இப்பகுதிஉலகையே மிகப்பெரியதாக முதலில் நினைக்கின்றோம். உலகைச் சுற்றிச் சென்று பார்க்கும்போது , முன்னர் கண்டிருந்தது, அற்பமென உணர்கின்றோம். இம்மாதிரியான உலகம் பல இருப்பதை மனத்தறிவால் காணும் தருணம் உலகங்களில் விரிவுநிலை ஒருவாறு கற்பனை செய்துகொள்ள முடிகின்றது. இதற்குமேலாகத் திருவருளை அல்லது கடவுகருணையையே கண்ணாகக்கொண்டு காண்கின்ற சமயம் எண்ணடங்கா உலகங்கள் உள்ளனவாக அறிகின்றோம்.


“ நாதா சிறியேன் நாய்க்கும் கடையேன்

முற்றும் கண்டதே

நானோ கண்டேன் எந்தாய் கருணை

நாட்டங் கண்டதே”


என்ற அருள் வியப்பு மொழியால் தெளிவாம். மேலும், அண்ட கோடி முழுதும் காணும் கண்கள் எய்தியதாகவும் கூறப்படுகின்றது. எத்தனைகோடி உலகங்கள் உண்டோ அத்தனையும் நம் பதியின் பெருங்கருணையால் ஆளப்படுகின்றன என்பது உண்மையாம்.


அண்ட கோள் உலகங்களிலே, விண்மணியாம் ஞாயிற்றிலும், அது போன்ற விண்மீன்களாம் பெருஞ்ஜோதி கோளங்களிலும் , மக்களினம் வாழற்காகா; கிரக கோளங்களிலும் பிற நீங்கலாக, இந் நிலவுலகத்தும், இது போன்ற மண்ணுலகங்கள் பலவற்றிலும் மனித இனம் தோன்றித் தோன்றிப் பண்பாடடைந்துகொண்டே இருக்கின்றதாம். இம் மக்களவாழ் நிலவுலகங்களையே உலகங்களாகக் கொள்ளுவோம். இவ்வுலகங்களில்தான் மக்கள் வழி கடவுட்கருணையின் சித்திச் செயல் வெளியாகின்றதாம். கருணையாற் செய்யும் சித்திச்செயல் ஆக்கலாதி ஐந்தொழில் ஆகும். இதுவே அருட்பெரும்பதியின் திருநடனத் திருச்செயல் என்ப. இக் கருணைச்சக்த்தியால் பெற வேண்டியது பேரின்ப சித்திப் பெரு வாழ்வேயாகும். அது வல்லால், இஷ்ட்காமியார்த்தமாகத் தந்திரமந்திர வகையால் பெறப்படும் கருணை எச்சணி, அற்பசித்திகளை வழங்கி அழியத்தான் செய்யும்.


நமது அருட்பெருஞ்ஜோதி ஆனந்தநடனபதி, சத்திய ஞானம் விளங்கும் மக்கள் உள்ளச் சபையில் எழுந்தருளி, தனிப் பெருங்கருணைச்செயல் விளங்க விளங்குகின்றது உண்மையாம். இப்படி எத்தனையோ கோடி காலமாக, எத்தனையோ கோடி அக அம்பலத்தில் இருந்துகொண்டு, அருள் ஐந்தொழில் நடனம் புரிந்து வருகின்றாரோ நமது அம்பலத்தரசர்! அருள் ஞான ஏக தேசக் காட்சியால் எத்தனையோபேர் இதுவரை இப்பதியைக் கண்டும், பலவாகிய அற்புதசித்திகளைப் பெற்றும் பெரும் களிப்பில் ஆழ்ந்துபோய் இருக்கக்கூடு ம் ஆனால் இவ்வுலகில் நம் வள்ளல் உள்ளத்தில் கண்டுகொள்ளப் பெற்ற அருட்பெருஞ்ஜோதிக்காட்சி, தனிப்பெருங்கருணையால், இவரைத் தன்மயமாய் உள் விளங்கச்செய்ததோடு, இந்த அனுபவம் கெடாதிருந்து கொண்டு வாழவும், பெருங்கருணைச் சித்தாடல் புரிந்து உலகினரை எல்லாம்பக்குவம் வருவித்து வாழ்விக்கவும் செய்து விட்டுள்ளதாம். கருணைச்சித்தியின் பெருஞ்செயல் இதுவாகும்.


தனிப்பெருங்கருணையால் கடவுள்மயமாகி வாழுகின்ற பேரின்ப சித்தியைப் பெற்ற முதல்வர் நமது திருவருட்பிரகாசரே எனத் திருவருளால் உணர்த்தப்பெறுகின்றோம். இச் சுத்த நெறிகிகு, இதனால் பெற்ற மரணமில்லாப் பெருவாழ்வுக்கு இவரே முதல்வர் என்பதற்கு அகச்சான்று அருட்பாவில் பல உள. இதற்கு முன், வேறு யாராவது, எவ்வுலகத்திலாவது இச்சித்திநிலை எய்திருக்கக்கூடுமா என்றால் , எய்திருக்கவே முடியாது என்று திட்டவட்டமாகக் கூறலாம். ஏனெனில், ஒன்றான கடவுளே எவ்வுலகத் தெவ்வெவருள்ளும் இருந்து தன் அருள் ஏகதேசத்தால் அவரவர்களாகத் தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றதை இன்று தெளிவாகக் காண்கின்றோம்.இக்காட்சி யனுபவம் புதியதல்ல, முன்பே பலருக்கும் ஏற்பட்ட ஒன்றாகும். இக்காட்சியோடு அதிற்கலந்து மறைவதுவே முடிவாகவும் இருந்தது இதுவரை. இதனால்தான் இதுகாறும் மனிதனுக்கு மரணமில்லா வாழ்வு ஏற்படாமல் போயிற்றாம். பூரண அருள் முன்பு வெளியாகி ஒருவனை வாழ்த்தி வாழ்வித்திருந்தால் அப்போது முதல் அருட் சந்நிதியுறுவோர்க்கு உண்மை விளங்கியும், அடைந்தும் அனுபவம் ஏற்பட்டும் இருக்கத் தடையில்லை, அப்படி முன் அனுபவம் ஒன்று இல்லாததால் இவர்க்கே இந்நிலை கிடைக்கப்பெற்றுள்ளதால், இவரே இப் புதுநெறியில் அருட்பெரும்பதியின் முதற்பிள்ளை என்பது தெளிவு. “ எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்’ என்றும் எவ்வுலகத் தெவ்வெவர்க்கும் இவர் பெற்ற பேரின்ப வாழ்வைப் பெறுவித்தல் வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கின்றதால் உண்மை தெளிவாம். இதனால், அருளாளன் பெருஞ்செயல், கருணைசித்தியின் செயலாக வள்ளல் மூலம் வெளியாகி விளங்குவதை உலகமெல்லாம் கண்டுகொள்ளும் இனி…

அகவல் உரைவிளக்கம்

சுவாமி சரவணானந்தா….தொடரும்…