Vallalar Universal Mission Orphange Homes
108. திருநெறிப் பொருளியல்

108. திருநெறிப் பொருளியல்


215. தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல்

216. ஆசறத் தெரித்த அருட்பெருஞ்ஜோதி


( உரைவிளக்கம்) திருநெறி யெனத் தமிழில், தமிழ் மரபில் வழங்கப் படுவது கடவுள் உண்மை விளக்கச் சன்மார்க்க முறையாகும். திருநெறிப் பொருளியல் என்பது கடவுள் அனுபவ விளக்கமாகும். இதனால் இத் திருநெறிப் பொருளியல் என்பதற்கு முன், தேசுறத் திகழ்திரு என்ற இயல் அனுபவக் குறிப்புச் சொற்களை தொடர் அடைமொழியாக நிறுத்தப் பெற்றுள்ளதாம் இனி இவ்வடியின் விரிபொருள் விளக்கத்தைக் காண்போம்.


திரு என்பதைத் தனியொரு சொல்லாகவும், அடையாகவும் கொள்ளுகின்றனர். இதற்குப் பொருள் இலக்கி, செல்வம், பொன், அழகு, நல்வினை, கண்டாரால் விரும்பப்படும் தனை முதலியனவாம். இப் பொருள் விளக்கமெல்லாம் புற ஆய்விற்கண்டனவாம். அகமாகிய உண்மை விளக்கம் காண்பாம். இவ் ஈரழுத்தொரு மொழியை உயிரும் மெய்யுமாய்ப் பகுத்துப் பார்க்கும் போது ( திரு ) த் + இ, ர்+உ என விளங்கும். இதி த் – ஆகிய தகரமெய், ஏழாவது மெய்ந்நிலை எழுத்துரு சிவரூப, தகராகாச வடிவமாகும். இத்துடன் கூடிய இகரம் அருட்பிரணவமாம் சிவசக்தியாய் முத்தன்மையால் மூன்றாம் உயிராய் நின்று திகழ்வதாம். இப்படியுள்ள அருட்சிவமாம் கடவுள் உண்மை அக அனுபவத்தில் துவாதசாந்தமாம் பன்னிரண்டாவது நிலையில் ஒளிமயமாய் நிலவுகின்றாதாம். இது குறிக்கவே , ர் என்னும் 12-வது மெய்ந்நிலை எழுத்து உருத்திர பீஜமாகக் கூறப்படுவதாம். இக் கடவுட்ஜோதியின் இயலும் செயலும் ஐமை ஐந்தியல் விளக்கத்தோடு, அருள் ஐந்தொழிற் செயலோடு திகழ்வதைச் சுட்ட இந்த உகரம் ஐந்தாம் உயிரெழுத்தாய்க் கூட்டப்பெற்றுள்ளதாம். ஆகவே இத் திருவால் பெறப்படுகின்ற உண்மை விளக்கம் யாதெனில், பரமாகாசப் பரம்பொருளான கடவுள்,நம் ஆறாதாரங்கடந்த ஏழாவதாகிய நிராதாரமாம் ஆயிரம் இதழ் கமல மலர் மிசை அருள் முத்தன்மை யொடு எழுந்தருளி, துவாத சாந்த அனுபவத்தில் வெளிப்பட்டு, ஐவண்ணசக்தி சித்தி விளங்கும் அருளின்பப் பெருவாழ்வை வழங்குவதாயிருக்கின்றதாம். இவ்வகப்பொருள் முன்னெறிகளால் பெறப்படவில்லையாம். சுத்த சன்மார்க்கத்தில் விளங்கும் இத்திருவின் அனுபவப்பொருளே ஈண்டு திருநெறிப் பொருளியல் ஆகப் புகலப்படுகின்றது. இதனால் அடையப்பெருகின்றது எதுவோ அதனை ஒருவாறு சுட்டிட நிறுத்தப்பெற்ற அடைமொழித் தொடரே தேசுறத்திகழ்தரு என்பதாம். தேசு என்றால் தெய்வ ஜோதியாம். திருநெறிப் பொருளியல் மூலம் பெறப்படுவது தெய்வஜோதி இன்பவடிவமாகும்.


அருட்பெருஞ்ஜோதியின் தனிப்பெருங்கருளையால் நம் வள்ளற்பெருமான் தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியலை முற்றும் ஆசற, குற்றம் குறையின்றி அருள் உணர்வில் நன்கு தெரிவிக்கப்பெற்றார். தெரித்தல் என்றால், தெளிவுபட அறிவித்து விளங்கச்செய்தலாம்.


சைவ தெய்வத் தோத்திரமாகப் பெறப்பட்டுள்ள மூவர் அடங்கன்முறையாம் தேவாரத்தைத் திருநெறியாகத் தமிழ் என்கின்றனர். அத் தேவாரத் தெய்வ தயா விளக்கத் தோத்திர முறையால் பெறப்படும் சிவானந்த அனுபவம், தேஜோன்மயமான சிவஜோதியில் இன்பலாகிரியில் மூழ்கி ஒழியச்செய்வதாயிருக்கின்றதாம். தெய்வநெறியத் தமிழ் அந்த அளவு விளக்கததையும் அனுபவத்தையும்தான் அன்று வழங்கிநின்றது. காரணம் மனித உள்ளம் அந்த அளவு பக்குவநிலைதான் அன்று அடைந்திருந்ததாம். சிவபரத்துண்மையை உள்ளதளியிற் கண்ட சித்தர்கள், அப் பரநிலையைப் பிறரும் கண்டடைய உருவாக்கித் தந்த மொழியே சொற்பொருள் அவ்வளவில் விளங்கியது திருவருட் செயலே. இன்றோ அதே திருநெறி ( யத் தமிழின்) பொருளியல் திருவருளின் பெருஞ்செயலால் நிறையுண்மை விளக்கம் ஆசற வழங்கிடப் பெற்ற்ப் பேரின்பமுறுகின்றோம்.


அகவல் உரைவிளக்கம்

சுவாமி சரவணானந்தா…