Vallalar Universal Mission Trust   ramnad......
பரோபகாரம்

பரோபகாரம்


மனிதன் , உலகத்து உயிர்களுக்குள் எல்லாம் இறைவன் இருப்பதை அறிந்து அன்புகாட்டி வாழலாம். அவ்வாறு வாழத் தொடங்கிவிட்டால் தனக்கென்று எந்த எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்காக வாழத்தொடங்குவான். பிரதிபாலன் பாராது, தன்னலம் கருதாது மற்றவர்களுக்காக அவன் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொள்ளும் இந்நிலையையே வள்ளலார் பரோபகாரம் என்று குறிப்பிடுகின்றார் எனக் கருதலாம். ஆன்ம நேய ஒருமைப்பாட்டுணர்வு இங்குதான் வெளிப்படுகின்றது. பரோபாகரச் செயலால் மட்டுமே அருள் வாழ்வினைப் பெற முடியும். அதற்காகவே இந்த உலகியல் வாழ்விலும், உடல் மீதும் பற்று வைத்து வாழவேண்டும் என்பதை இராமலிங்க அடிகள் வலியுறுத்தியுள்ளார். இதனையே,


“பரோபகார மென்பது யாது? தேகத்தாலும் கரணத்தாலும் இந்திரியத்தாலும் திரவியத்தாலும் ஆன்மாக்களுக்கு உபகரித்தல், திரவியம் நேராபட்சத்தில் , திரிகரண சுத்தியால் ஆன்மநேய சம்பந்தமான தயா விசாரத்தோடு எல்லாச் சீவர்களினது வாட்டத்தைக் குறித்தும் பிரார்த்தித்தல்”


என்று குறிப்பிட்டுள்ளார்.


எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்

தம்முயிர்போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவரா உதவுகின்றார் யாவர்

அவர் உளந்தான் சுத்த

சித்துருவா எம்பெருமான் நடம்புரியும் இடம் என நான்

தெரிந்தேன் அந்த

வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என் சிந்தை

மிகவிழைந்ததாலோ”

இதுபோன்ற பல பாடல்களீல், உயிர் இரக்கம் உடையவர்களிடத்தில் இறைவன் குடி கொண்டுள்ளான் என்று இராமலிங்க அடிகள் குறிப்பிடக் காணலாம்.