Vallalar Universal Mission Trust   ramnad......
மனத்தெளிவும் திடமும்..107


213 . மயர்ந்திடேல் சிறிது மனந்தளர்ந் தஞ்சேல்

214. அயர்ந்திடேல் என்றருள் அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) இங்கு மயர்ந்திடேல் என்பது மனத்தெளிவறல், அல்லது மயங்கி நிற்றல் என்றும், அயர்ந்திடேல் என்பது நினைவுச் சோர்வுற்று மறத்தல் என்றும் பொருள்படுவனவாம். அறியாமையாலும், கவலையாலும், துன்பத்தாலும், ஏலாமையாலும் மனத்தின்கண் இருள்சூழ்ந்திட, தெளிவின்மையும் மயங்கி நிற்றலும் ஏற்படுகின்றன. மனம் தளர்ச்சியுறுகின்றது. அச்சம் நேருகின்றது. இந்நிலையில் நினைவு ஒரு நிலையில் நிற்காது தடுமாறுகின்றதாம். இத்தடுமாற்றத்தால் மறதி யுண்டாகின்றது. இவ்வளவையும் மாற்றி அசைவிலா அருட்ஜோதி தீபம்போல் விளங்கச் செய்யவல்லது நம் அருட்பெருஞ்ஜோதி சக்தி.

மனம் சலியாது மணியொளியாய் நிற்கும் இடம், புருவ மத்திய லலாடமாம்., அம் மனோன்மணி பீடத்து நிலவாது, கீழ் நிலை இதயத்தானத்தில் இருந்து மயர்ச்சியும், அயர்ச்சியும் அடைகின்றதாம். இவற்றாலேதான் உயிரும் உடம்பும் மிகுதியாகப் பாதிக்கப்படுகின்றன. இந்த இதயத்தில் இரத்த ஓட்டமும், உயிர்த்துடிப்பும், கரண இந்திரிய உணர்ச்சியும் பாதிக்கப்படுவதால்தான் எல்லாக்கேடும் விளைகின்றனவாம். “ தனக்குவமை யில்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது” என்பதும் உண்மையே, திருவருட்சக்தித்துணையால் மனம் கவலையற்று சலியாதிருத்தல் கூடும், ஆனால் இந்த இதய பீடத்தில் மனம் ஒன்றிச் சலியாநிலை யுறும்போது பொறியுடம்பின் செயலும் , புலன் உணர்வும் ஒடுங்கிநிற்க நேரும். ஆகையால், புறச்செயலில் ஈடுபடமுடியாதுபோம். ஆகையால், மனம் செயலற்றுப்போகாது. எப்போதும் செயலோடு விளங்கவும் , அதேநேரத்தில் மயர்வும், அயர்வும் அடையாது வாழ்வில் உயர்வு பெற்று விளங்கவும் வேண்டி மேலிடத்துச் சேர்க்கை பெறுதல் திருவருளானையாம். புருவத்திடை நிற்கும் ஒருமை மனம், தலைநடு ஒளியில் ஒன்று அதுவாகும் போது அருள் ஒளியாய் விளங்குகின்றதாம். இந்த இடத்தில் அருட்ஜோதியே மனத்தைத் தன்மயமாக்கிக் கொண்டு அத்துவிதமாய் விளங்குவதாம்.

மேற்படி மேனிலையில்தான் தன் உணர்வு அருள் ஒளியாகி, அருட்ஜோதியில் அத்துவிதமாய் விளங்கிக்கொண்டு இருக்கின்றார் நம் பெருமான். இந்நிலையில்தான் அந்த அருட்ஜோதிபதி இவர்க்கு, அயர்ந்திடேல் சிறிதும், மனந்தளர்ந்தஞ்சேல், மயர்ந்திடேல் என்றெல்லாம் கூறி அருள்பாலிக்கின்றதாம். இப்படி அருட்ஜோதிமயமாய் இருந்து கொண்டு வாழும் வள்ளலின் கரணேந்திரிய உயிருடம்பு முழுவதும் அருள் ஒளியால் விளங்க நேர்ந்து விடுவதால், எவ்வகையிலும் சிறிதும் பாதிக்கப்படாது, பயம், கவலை, துன்பம், சோர்வு, மரணம்கூட இல்லாது வாழக்கூடியவராகி விடுதல் சாத்தியமாகின்றதாம். எல்லார்க்கும் பொதுவில் விளங்குகின்றா இந்த அருட்பெருஞ்ஜோதிபதி தம்பால் உறுவோர்க்கு இப்படி மனத்தெளிவும் திடமும் வழங்கி வாழ்விக்க உள்ளார் என்பது உண்மையாம். ஆதலின் உறுவோம் அருட்பெருஞ்ஜோதி உள்ள அம்பலத்திற்கு.

அகவல் உரைவிளக்கம்

தயாநிதி சரவணானந்தா..