Vallalar Universal Mission Orphange Homes
105. சாவாநிலை தந்தது

    1. சாவா நிலையிது தந்தன முனக்கே
    2. ஆவா வெனவருள் அருட்பெருஞ்ஜோதி

    ( உரைவிளக்கம்) முன் 205-வது அடியில், சாமாறு தவிர்த்தது பற்றி விளக்கப்பட்டது. இங்கு அச்சாவா நிலையில் இருக்க வியந்து வரவேற்றுக்கொண்டதாகக் குறிக்கப்படுகின்றதாம்.


    கடவுள் இயற்கை, அழிவற்ற அல்லது நீக்கமில்லாத செயலொடு கூடிய விளக்க நிலையாகும். மனிதப் பிறவி ஏற்றுள்ள ஓர் ஆன்மா உலகியல் அனுபவத்தோடு வாழ்ந்து கொண்டிருத்தல் விளக்க நிலையாகும். உயிர் ஒடுங்க உடலைப் பிரிந்த ஆன்மா வாழ்வற்று விளக்கமற்றுப் போகின்றதாம். இவ்விளக்கமற்ற நிலையே செத்த நிலையாம். எனவே ஆன்மாவுக்குச் சாவாநிலையில்தான் வாழ்வு உண்டே தவிர இறந்தநிலையில் வாழ்வு என்பதில்லையாம். ஆன்மா உடலைவிட்டு எங்கே எப்படியிருந்தாலும், அவ்விருப்பை அதன் வாழ்வாகக் கொள்ளமுடியாது. ஆகையால் பிறவாவரம் பெறுவதால், பிறவாமையுறுவதால் ஒரு பெருமையுமில்லையாம். இறவாமையுற்று வாழ்கின்ற நிலையே பெருமையுடையத்தாம்,


    ஆன்மாவுக்கு அழிவில்லை என்பது உண்மைதான். ஆனால், உடல்கொண்டு மனிதனாய் வாழ்கின்றபோதுதான் ஆன்மா சுக துக்க அனுபவம் கொண்டு விளங்கக் கூடியதாயிருக்கின்றதாம். ஆகையால் இறந்தவன் இறையடி சார்ந்து இன்பநிலையில் விளங்குவதாகக் கொள்வது மயக்கே. இறைநினைப்போடிருந்து உயிரை விட்டவன் அவ்விறைநிலை யுறுவான் என்பது எந்த அளவுக்கு பெருமைப்படக்கூடியதாயிருக்கின்றது என்பதைச் சிந்தித்துப் பார்த்துத் தெளியவேண்டும்.


    இனி சாவா நிலை எய்த முன்னோர் மேற்கொண்ட முறையெல்லாம் சரியானதல்ல என்பது இன்றைய சுத்தசன்மார்க்கத்தால் விளங்குவதாம். தோன்றிய உடல் மறைந்து ஒழிவதுதான் நியதி என்றும், ஆகையால் உடல் வாழ்வு நிலையற்றதே என்றும்கருதிவிட்டு, நிலையான் ஆன்ம இயற்கையுற்று இருப்பதுவே பொருத்தமானது, அந்நிலையே பிறவா இயல்பினது எனவும் கொண்டு தேகத்தை விட்டுவிடுதல் சரியன்று;


    ஆன்ம இயற்கை அழியாமை கொண்டதே. உண்மையில் அவ் ஆன்மா கடவுட் சிற்றுருவேயாம். அணுத்துவமாகிய இந்த ஆன்மாவுக்குள்ளிருந்து இறையருட் பெருஞ்செயலால் பேராற்றல் வெளிப்பட்டு, அவ் ஆன்மாவைச் சூழப் பொருட்சக்தி உருவங்களாயும், கிரியா சக்தி இயக்கங்களாயும், ஞானசக்தி உணர்வுகளாயும், யோகாசக்தி சித்திகளாயும் அருட்சக்தித் திறலாயும் படிப்படியாய்த்தோற்றி விளைவுறுகின்றனவாம். அருட்சக்தித் திறலால் அருள் உண்மை விளங்கும்போது அவ் ஆன்மா அருள் ஞான பக்குவ வடிவங்கொண்டு திகழ்கின்றதாம். அபக்குவத்தில் இவ்வுண்மை சிறிதும் விளங்குவதில்லை. இச் சூழ் மனிதப்பிறப்புருவம் போய்விட்டால், மற்றெந்த உருவம் ஏற்பட்டாலும் இறையனுபவம் விளங்காது. கடவுள் நித்தியமாய் விளங்கிக் கொண்டிருப்பவர். இந்தப் பக்குவ மனிதனில் கண்டுகொள்ளப்படுகின்றார். அப்படிக் கண்டுகொண்டவன், தேகப்பற்றொழித்து, அகமிருந்து அருளியல் வாழ்வில் தழைத்தால், அவன் உள்ளிருந்த அருளின் ஆற்றல் வெளியாகிச் சூழ்வடிவையும், நித்தியானுபவத்தின் பொருட்டு நித்திய ஜோதி வடிவாய் ஆக்கிக்கொள்கின்றாதாம். இந்நிலையே ஒருவன் ஏற்கும் சாவா நிலையாகும். இந்நிலையை அறிந்து அடையாதவரை சூழுரு ஆவதும் அழிவதும் தவிர்க்க முடியாதாம்.


    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன் நிலையை வள்ளலாருக்கு உணர்த்தி, அப்பெருமையுடைய வியன்நிலைக்கே, வரவேற்று வாழ்த்துகின்றாஅர், அடிகளார் தம் மெய்யருள் வியப்பில்,


    “´அண்டப் பரப்பின் திறங்கள் அனைத்தும்

    அறியவேண்டியே

    ஆசைப்பட்டேற் கறிந்து தெரித்தாய்

    அறிவைத் தூண்டியே

    பிண்டத் துயிர்கள் பொருந்தும் வகையும்

    பிண்டந் தன்னையே

    பிரியும் வகையும் பிரியாவகையும்

    தெரித்தாய் பின்னையே”


    என்ற பாவில், பிண்ட தேகத்தில் உயிர்சக்தி விளங்க வருவதும், நீங்கிப் போவதும் , நீங்காது நிலைத்திருப்பதும் ஆகிய உண்மையைக் காட்டிக் கொடுத்துள்ளார். இங்கு ‘ சாவா நிலையிது தந்தனம் உனக்கே” என்று கூறிப் பெருமை அடைகின்றதாம் அருட்பெருஞ்ஜோதி. அழியாத கடவுளான்ம அகநிலையே, அருளாலே அனகமுற விரிந்து சூழுருவையும் சுத்த சுகாந்தவடிவாமாக்கிக் கொண்டு திகழலாகின்றதாம். நித்தியமாய் என்றுமுள்ள கடவுள் , புறவுலகில் வெளிப்பட்டிலங்காது, யாவற்றிலும் அக நின்று ஆண்டுவந்த ஆண்டவர் இப்பொழுது முதல் அகநின்றே அனகமுற்று மனிதவடிவை மன்னி நிதமும் வாழும் உருவாகக் கொண்டு விளங்குகின்றவராகி விட்டுள்ளார். இவ்வனுபவம் வழங்கப்பெற்ற முதல் மனிதர் நம் வள்ளலேயாவர், ஒன்றான கடவுள்தானே தனித்தனி ஒவ்வொரு மனிதனாய் விளங்கலின் , அவரேதான் இந்த அருட்சித்தியுறு ஒவ்வொருவருமாய்த் திகழ்கின்றவராவார். எனவே இச் சாவாநிலை நம் வள்ளல் மூலம் எவ்வுலகத்தெம்மனிதர்க்கும் பெறற்குரியாதாகி விட்டுள்ளதாம்.


    அகவல் உரைவிளக்கம்

    தயாநிதி சரவணானந்தா….