
201. எவ்வழி மெய்வழி யென்பவே தாகம
202. அவ்வழி எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம்) மனவாக்கும் கருவிகரணங்களும் காண்பரிதாகிய மெய்ப்பொருளை முன்னோர், மனமுற்றும் ஒடுங்கிய மோனநிலை ஞானவரம்பாய் அகண்ட பேரொளியாய் உணர்ந்திருந்தனர். அவ்வொளி நிலையை எய்துவதற்குப் புறா அக ஒழுக்க முறைகளைப் பற்றிப் பலவாக வகுத்து வழங்கியுள்ளனர். வேதம் – அறிவு கொண்டு மெய்யுணர்வு கொண்டு ஒருவாறு தெரிந்து கொள்ளும் கடவுளான்ம விளகத்தை விரித்துக் கூறுவது. உண்மையில் பிரம்மம் ஒன்றே நித்தியமாய் இருந்து கொண்டு, யாவுமாய்த் தோற்றியுள்ளதால், நாமும் அதுவேயன்றி வேறாயில்லையாம். ஆகையால், நாமே அப் பரப்பிரம்மம் என்ற கருத்தை யுட்கொண்டு, புறநிலை யாவையும் விடுத்து உள்ளொடுங்கி விடுவதே வழியெனக் கூறுகின்றது வேதம். அவ்வேத முடிபொருளைப் பொய்ப் பாவனையால் மட்டும் அடைந்து விடமுடியாது. பதிநிலையை எய்தப் பக்தி வழிபாட்டு ஆகமநெறியிற் சென்று திருவருளைப்பெற்று மல பாசங்களை எல்லாம் அற ஒழித்துத்தான் கடவுணிலையைப் பெற முடியும் என்கின்றனர் சிலர், வேதாகம மார்க்கம், மனிதனைக் கடவுள் நிலைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க துணையாய் வழங்கப்பட்டது உண்மையே ஆதலால்,அந்நெறியே மெய்நெறி எனக் கொள்ளப்பட்டது. அவ் வேதாகம வழியால் கடவுளை அடைவதும் சாத்தியமே. ஆகையால், அதுவே மெய்வழி என்பது தவறல்ல. அந்த வழி இப்போது அருட்பெருஞ்ஜோதிவழியாய்த் திகழ்கின்றதாம். இந்த அருட்பெருஞ்ஜோதி வழியில் மனிதன் கடவுளோடு ( கூடாதே அதுவாகவே) இருக்கும் உண்மை யுணரப்படுவதால் அப்படிக் கடவுள்மயமாய் இருந்துகொண்டு, உலகுக்கு இன்பு செய்துகொண்டு, என்றும் வாழும் வழியாய் இருக்கின்றதாம். இம் மெய்வழி. இங்குக் குறிக்கப்படுகின்றா மெய்வழி ஒன்றே ஒன்றுதான்; வேறுபாடில்லை; ஆனால், அவ்வழி வேதாகம முறையில் மனிதனைப் பதிக்கலப்பில் மறைவுறச் செய்கின்றது. அருட்பெருஞ்ஜோதி முறையால் பதிமயமாய் இருந்துகொண்டு ஆனந்தமாய் வாழச் செய்கின்றதுதான் சிறப்பாகும்.
சத்திய ஜோதியாயுள்ள மெய்ப்பொருள், மனிதனுக்கு எக்காலத்தும் உண்மையே உரைக்கின்றது. மெய்வழியே காட்டுகின்றது. மனிதனோ அபக்குவத்தால் காணும் பொருளும் பயனும் குறைவுடையதாயிருக்க பக்குவகாலத்தில் நிறைபொருள் கண்டடைவது இன்றைய சுத்தசன்மார்க்க அனுபவமாம். உலகெல்லாம் வாழ்க அருட்ஜோதி வழியில்.
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரைவிளக்கம்….