
199. தேவியுற் றொளிர்தரு திருவுரு வுடனென
200. தாவியிற் கலந்தொளிர் அருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம்) ஆவி என்பது, தூலதேகம் அல்லது பருவுடற்கு உள் விளங்கு உயிர் வடிவமாம். ஆன்ம அணுவினின்று உயிர் ஆற்றல் தோற்றிப் புறத் தேகத்தை ஆக்கிக் கொள்ளும்போது இடையிலுறும் அனுபவ ஊடகப்பொருளாக ( medium) இருக்கின்றது. இந்த ஆவி வடிவம் சுருங்கவும், விரியவும், அருஞ்செயல் சில புரியவும், தூல உடலுக்குட் பெருகி நின்று , புறவுடல் நீக்கமாகிய இறப்புக்குப் பின், அவ்வடிவு போன்றா ஆவியுருவமாகவே வெளியாகி உலவிக்கொண்டிருப்பதாம். இந்த ஆவி வடிவம் ஒருசிலருக்குப் புலனாவதும், ஒரு சிலரின் உட்புகுந்து அனோரைத் தன் வண்ணமாய்ச் சிலகாலம் விளங்அக்ச் செய்து பின்னர் நீங்கிவிடுவதும் உண்டாம். இவ்வாவி வடிவங்களை ( ghost) தெய்வீகத் தன்மை கொண்டனவாகவும், தெய்வமாகவும் கருதிப் போற்றி வழிபட்டுச் சிற்சில பயன் அடைந்துவிட்டு, அருளியற் கடவுளுண்மையை உள்ள படி அறிந்து அடையாது வீண் போய்விடக்கூடாது.
அருட்பெருஞ்ஜோதிக் கடவுள் உண்மை கொண்ட ஆன்ம சிற்றணுவை அருளாற் கண்டுகொள்ளாது, புறக்கண்களுக்குத் தோற்றியும் தோற்றாத ஆவி வடிவத்தையும், தோற்ற முடியாத ஆன்ம ஜோதிக் கடவுள் உண்மை வடிவத்தையும் பலரும் பலப் பலவாகக் கற்பனை செய்து கொண்டும், பாவித்துக்கொண்டும் பயனுறாது போய்க் கொண்டுள்ளனர். தேக வடிவத்தையே பெரிதும் மதித்து, மனிதனெனக் கொண்டு, பிறப்பையும், இறப்பையும் , வாழ்வையும், வரலாற்றையும் ஆய்ந்து ஏற்கின்றவர் பலர், முன் பின் பிறப்புகள் இல்லை எனக் கூறிக்கொண்டு இருக்கின்றவர் பலர், வினைவழி வந்து வந்து சூழ்கின்ற பிறவிகளை எல்லாம் திருவருளால் நீக்கிக்கொண்டு , கடவுட் கலப்பில் மேற்பிறவி ஒன்றும் எடாதிருத்தலே திருவுள்ளம் என எண்ணுகின்றவர் பலர், சித்த மார்க்கத்தால் உள்ளுடம்பின் ஆற்றலைப் பெருக்கிக்கொண்டு, அற்புத சித்திகள் பல புரிந்து அகமகிழ்ந்து இருக்கின்ற அற்புத சித்தர் பலாராவர்.இவர்களெல்லாம் தமது ஒன்றான உண்மையாம் அருட்பெருஞ்ஜோதிக் கடவுள் விளக்கத்தை உள்ளது உள்ளப்டி அறியாதவர்களேயாவர்.
அருட்பெருஞ்ஜோதிக் கடவுள் ஒருவரே உண்மையில் உள்ளவர். அந்தக் கடவுளின் சக்தி அல்லது தேவி என்பது, எல்லாம் வல்ல தயவு அல்லது அருள் ஆகும். அந்த அருள் ஒளிக் கடவுள் எங்கும் இருந்தாலும் கூடப் பக்குவ மனிதனின் ஆன்ம அகமிருந்து , அனகமுற விரிந்துஆவி வடிவிலும், புற மேனியிலும் நிறைந்து, பிரிவறக் கலந்து நின்று விளங்கும்போதுதான் பேரின்ப வாழ்வுப் பெரும்பயன் உண்டாகின்றதாம். ஒருவரே ஆன கடவுள் எங்கும் பூரணமாய் இருப்பதால், எந்த ஒரு ஆன்மாவில் வெளிப்பட்டு விளங்குகின்றாரோ அவ் ஆன்ம மனிதன் ஒருவனே, அந்த ஒன்றான கடவுளாய் , தானே அந்த ஒன்றாய் எங்கெங்கும் இருந்து கொண்டு பலராய்த் திகழ்கின்றதாகவும் அறிகின்றான். அருள் ஒளியாம் தேவி உள்நின்று விரியும்போது அதனை சூழ்ந்துள்ள உயிருடம்பில் நிறைந்து அச் சூழ்வடிவைச் சுத்த சுகானந்த வடிவமாக விளங்கச் செய்து விடுகின்றதாம். இங்கு, திருவுரு என்றது, புற வடிவம், இது சுத்த பொன்மயமாய்த் திகழ்வது இப்படி இந்த அசுத்த அநித்திய வடிவம், சுத்த நித்திய வடிவமாக மாறிடும் தருணம் இடைநின்ற ஆவி வடிவிலும், அருள் ஒளி நிரம்பியதால், அதுவே அருட்ஜோதி வடிவமாக , பிரணவ தேகமாக விளங்குவதாம். நம் இராமலிங்க அடிகளாரின் ஆன்ம அணுவில் விளங்கி நின்ற அருட்பெருஞ்ஜோதிக் கடவுட் சக்தி, ஆவி வடிவிற்கலந்த சமயம் அது ( அந்த ஆவியுருவம்) தான் அருவுருவ சித்தி அருட்பிரகாசவடிவமாய் ஆகிவிட்டதாம். இந்த அருட்பிரகாச நிலை நின்றுதான் அகமிருக்கும் சிற்சபையையும், புறஞ்சூழ்ந்துள்ள பொற்சபையையும் தமக்குச் சொந்தமாய்க் கொண்டு விளங்குகின்றது உண்மையாம்.
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரைவிளக்கம்